இப்படியெல்லாமா ஈஸ்டர் கொண்டாடுவாங்க !
உயிர்ப்புப் பெருவிழா உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகின்ற ஒரு விழா. இறைமகன் இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடுகின்ற விழா. ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் வீடுகளில் சிறப்பு உணவுகளும் என இந்த விழா களைகட்டும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விழாவை மக்கள் பல்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள்.
பல இடங்களில் ஈஸ்டர் எக் எனப்படும் முட்டை வடிவ சாக்லேட்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பல வர்ண முட்டை சாக்லேட்களை பிள்ளைகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதும், பெரியவர்கள் பிள்ளைகளுக்கு பரிசளிப்பதும் என இந்த ஈஸ்டர் எக் பரம்பரியம் தொடர்கிறது. ஜெர்மனி, அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலம். முட்டை என்பது புத்துயிருக்கு அடையாளமாகவும், புதிய பிறப்பின் அடையாளமாகவும் இருப்பதால் இந்த ஈஸ்டர் முட்டை, இயேசு எனும் மனிதர் புது பிறப்பு எடுத்த விழாவை கொண்டாடுவதோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அதே போல நமக்கு இறைமகன் இயேசு தருகின்ற புது வாழ்க்கையையும் இது சுட்டுகிறது.
ஈஸ்டரை ஒட்டி பெரிய பேரணிகள் நடத்துவது பல நாடுகளில் வழக்கம். போர்ச்சுக்கல், மெக்ஸிகோ பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் நடக்கின்ற பேரணிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இயேசுவின் பாடுகளை விவரிக்கின்ற காட்சிகளும் உயிர்ப்பை விவரிக்கின்ற காட்சிகளும் புனித வாரம் முழுக்க பேரணியாக நடத்தப்படும்.
ஈஸ்டர் பாஸ்கெட் என்பது பல நாடுகளில் நிலவி வருகின்ற ஒரு பாரம்பரியமாகும். ஒரு கூடை நிறைய இனிப்புகள், விளையாட்டுகள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை உயிர்ப்பு அன்று காலையில் பிள்ளைகளுக்கு பரிசளிப்பார்கள். சில இடங்களில் இந்த பரிசுகளை ஒளித்து வைத்துவிட்டு பிள்ளைகளாக தேடி கண்டுபிடிக்க சொல்லுவார்கள். இந்த கிறிஸ்மஸ் பாஸ்கெட் விளையாட்டும் பரிசளிப்பும் மிகவும் பிரபலம்.
ஈஸ்ட்ரை வரவேற்கும் விதமாக இரவில் பெரிய நெருப்பு கொளுத்தி மகிழ்வது இன்னொரு பாரம்பரியமாகும் இது பின்லாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் மிகவும் பிரபலம். நள்ளிரவில் கொழுந்துவிட்டெரியும் நெருப்புடன் இந்த கொண்டாட்டங்கள் நடக்கும்.
நெதர்லாந்து போலந்து போன்ற நாடுகளில் ஈஸ்டர் என்பது மலர்களால் வீடுகளை அலங்கரிப்பதில் சிறப்பிடம் பெறுகிறது. முழுக்க முழுக்க அழகிய வண்ண வண்ண மலர்களால் வீடுகளை அலங்கரித்து வசீகரமாக மாற்றுவார்கள்.
செக் குடியரசு நாடுகளில் ஆண்கள் பெண்களை மரக் கிளைகளை வைத்து செல்லமாய் அடிப்பார்கள். அது ஒரு பாரம்பரியம். இப்படிச் செய்வது உடல் நலத்தையும் வளமையையும் கொண்டுவரும் என அவர்கள் நம்புகிறார்கள். நம்ம ஊர் ஹோலி பண்டிகையில் கலர் பூசி விளையாடுவது போல என வைத்துக் கொள்ளலாம்.
சில பகுதிகளில் குறிப்பாக ஸ்லோவாக்கியா ஹங்கேரி போன்ற இடங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் தண்ணீரை வீசி எறிந்தும், கோப்பைகளில் தண்ணீரை அள்ளி அள்ளி இன்னொருவர் மேல் ஊற்றியும் இந்த நாளை கொண்டாட்டமாய்க் கொண்டாடுவார்கள். தண்ணீர் நம்மைப் புதுப்பிக்கும், தூய்மைப்படுத்தும். ஈஸ்டர் விழாவும் அப்படியே என்பதை இது குறிப்பால் உணர்த்துகிறது.
ஈஸ்டர் தாவல் எனப்படுவது ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள செகண்ட் தீவுகளில் நடக்கின்ற ஒரு விளையாட்டாகும். பெரிய நெருப்பு வளர்ந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பின் மேலாகத் தாவி, அந்தப் பக்கம் செல்வார்கள். இப்படிச் செய்வது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என் அவர்கள் நம்புகிறார்கள்
ஈஸ்டர் பன்னி அதாவது மிஸ்டர் முயல் பல நாடுகளில் பிரசித்தி பெற்றது குறிப்பாக அமெரிக்க ஜெர்மன் போன்ற இடங்களில் இது மிகவும் பிரபலம். ஈஸ்டர் முயல் பிள்ளைகளுக்கு ஈஸ்டர் முட்டைகளையும் இனிப்புகளையும் கொண்டு வரும் ! முயல் போன்ற மாறுவேடமிட்டு நடக்கின்ற ஓட்டப் பந்தயமும் பிரபலமான ஒரு விளையாட்டு.
ஈஸ்டர் முட்டைகளை பெரிய உயரமான இடத்திலிருந்து கீழே போட்டு அது உடைந்து சிதறாமல் இருந்தால் நல்ல அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்ற ஒரு வழக்கம் சில இடங்களில் இருக்கிறது. இது தவிரவும் பல விதமான கொண்டாட்டங்களை ஈஸ்டர் நாட்களில் மக்கள் நடத்துகிறார்கள்.
இவற்றில் பல விஷயங்கள் கமர்ஷியல் விஷயங்களாகவே இருக்கின்றன. இயேசுவின் உயிர்ப்பு நமது மீட்புக்கான அழைப்பு, நாம் பாவத்திலிருந்து மனம் திரும்பி அவரிடம் சேரவேண்டும். அவர் வழியில் நடக்கவேண்டும் என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்வதே உண்மையான நிலையான கொண்டாட்டமாகும் !