ஒரு நாள் மாலைப் பொழுது, தாவீது குளித்து விட்டுத் தன்னுடைய அரண்மனையின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். மெல்லிய குளிர்ந்த காற்று அவருடை ஈர மேனியைத் தொட்டுச் செல்ல மிகவும் உற்சாகமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது அரண்மனைக்கு அருகே இருந்த ஒரு வீட்டருகே ஒரு இளம் பெண் குளித்துக் கொண்டிருப்பதைத் தாவீது பார்த்தார். அவளுடைய கொள்ளை அழகு தாவீதை மொத்தமாய்க் கொள்ளையடித்து விட்டது. இனிமையான மாலை வேளையும், சுகமான காற்றும் கொடுக்கும் உற்சாகத்தோடு அந்தப் பெண்ணும் சேர்ந்து கொண்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தாவீது தனக்குள் மோக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, வைத்த கண் வாங்காமல் அந்தப் பெண் குளிப்பதையே பார்த்துக் கொண்டே நின்றார். அவரால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
உடனே தன்னுடையை பணியாளனை அழைத்தார்.
‘சொல்லுங்கள் அரசே….’, பணியாளன் ஒருவன் ஓடி வந்து பவ்யமானான்.
‘அதோ அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் யார் என்று தெரியுமா ?’ மன்னன் கேட்டான்.
‘தெரியும் மன்னா … அவள் எலியாவின் மகள் பத்சேபா’ பணியாளன் சொன்னான்.
‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை என் அந்தப் புரத்துக்கு வரச் சொல்’ மன்னன் ஆணையிட்டான்.
‘அப்படியே ஆகட்டும் மன்னா…. ஆனால்…..’ பணியாளன் இழுத்தான்
‘என்ன ஆனால்…. ‘ தாவீது திரும்பினார்.
‘அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இப்போது அவள் உரியா என்பவருடைய மனைவி.’, பணியாளன் சொன்னான்.
‘நான் விரும்பும் பெண் யாருடைய மனைவியாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இன்று அவள் என்னோடு மஞ்சத்தில் படுக்கவேண்டும்’ தாவீது அழுத்தமாய்ச் சொல்ல பணியாளன் அகன்றான்.
அரசனின் கட்டளைக்கு மறுபேச்சு ஏது ? பத்சேபா அரண்மனை அந்தப் புரத்துக்கு வரவழைக்கப் பட்டாள். அங்கே தாவீது அவளுடன் உறவு கொண்டார். மன்னனின் ஆசைக்கு மறுப்புச் சொல்ல இயலாத பத்சாபா உடைந்த மனதோடு ஏதும் பேசாமல் தன்னுடைய இல்லம் சென்றாள். பத்சேபாவின் கணவன் உரியா யோவாபு என்னும் படைத்தலைவனின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தான். அரசின் மேலும், அரசர் மேலும் மிகவும் மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார் அவர்.
தாவீதுக்கு பத்சேபா மேல் இருந்த காமம் குறையவில்லை. அவளை எப்படியாவது முழுமையாக அடைந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். உரியா உயிருடன் இருக்கும் வரைக்கும் தன்னால் அவளை முழுமையாக அடைய முடியாது என்று நினைத்த மன்னன்,
காலையில் யோவாபுவிற்கு ஒரு மடல் எழுதினார். அதை உரியாவின் கையிலேயே கொடுத்து யோபாவுவிடம் கொடுக்கச் சொன்னார்.
உரியா அதை அப்படியே யோபாவுவின் கைகளில் கொடுத்தான்.
யோபாவு அதை வாசித்துப் பார்த்தார். ‘ யோபாவு…. போரில் உரியா சாக வேண்டும். எனவே அவனை எதிரிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் அனுப்பு. அவனை எதிரிகள் கொல்லட்டும்’. மன்னரின் தகவலை யோபாவு வாசித்து முடித்து நிமிர்ந்து பார்த்தார். அங்கே ஒன்றும் அறியாமல் பணிவுடன் உரியா நின்றுகொண்டிருந்தான்.
அமலேக்கியரோடு போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
தாவீதின் படை மீண்டும் அமலேக்கியரை அழிப்பதற்காகப் புறப்பட்டது. யோபாவு தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டார். ‘உரியா சாகவேண்டும்’ மன்னன் தனக்கிட்டிருந்த ஆணை அவனுடைய மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.
எல்லோரும் அமலேக்கியரின் நகரை சற்றுத் தொலைவிலிருந்தே தாக்கிக் கொண்டிருந்தார்கள்
யோபாவு உரியாவை அழைத்தான்.
‘உரியா…. நாம் போர் வியூகத்தைச் சற்று மாற்றுகிறோம்’ யோபாவு சொன்னார்.
‘சொல்லுங்கள்… கடைபிடிக்கிறேன்’ உரியா பணிவானான்.
‘நீ உன்னுடன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு நகரின் மதில் சுவரை நெருங்க வேண்டும்…. நெருங்கி அங்கிருக்கும் அமலேக்கியரை அழிக்கவேண்டும்… ‘யோபாவு சொன்னான்.
‘மதில் சுவரின் மேல் எதிரிகள் இருக்கக் கூடும். இந்த வியூகம் நமக்குத் தான் ஆபத்தாய் முடியும்’ உரியா கூறினான்.
‘கவலைப்படாதே. நீ மதில் சுவரை நெருங்கும் போது அவர்கள் உங்களைத் தாக்குவதற்காகத் தலையைத் தூக்குவார்கள். அப்போது நாங்கள் அவர்களை இங்கிருந்தே வீழ்த்துவோம்’ யோபாவு சொன்னான்.
யோபாவுவின் விளக்கத்தில் திருப்தியடைந்த உரியா மகிழ்ச்சியுடன் தன்னுடன் சில வீரர்களையும் கூட்டிக் கொண்டு மதில்சுவரை நோக்கிப் புறப்பட்டான். நகர மதில் சுவரை நெருங்குகையில், மதில் சுவரின் மேல் காத்திருந்த அமலேக்கியர்கள் மதில்சுவரின் மீதிருந்து கற்களை உருட்டி விட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்த்திருக்காத உரியாவின் படை விலக நேரம் கிடைக்காமல் நசுங்கி அழிந்தது. அதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் யோவாபு.
கணவன் இறந்த செய்தி பத்சேபாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் கதறி அழுதார். தாவீது உள்ளுக்குள் மகிழ்ந்தார். அவர் பணியாளர்களை அழைத்து ‘உரியாவின் மனைவியை இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார்.
பத்சேபா கலங்கிய விழிகளோடு தாவீது மன்னனின் முன்னிலையில் வந்து நின்றாள்.
தாவீது அவளிடம் ‘பத்சேபா… கவலைப்படாதே. உரியாவின் மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது. இனிமேல் உன்னைக் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது. எனவே… இனிமேல் நீ எனக்கு மனைவியாகி என் அந்தப்புரத்தில் இரு’ என்றார். பத்சேபா மறுத்துப் பேசும் உரிமையற்றவள். மன்னனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டாள். தாவீதின் மனைவியாகி அவருடன் வாழ்ந்து ஒரு மகனுக்கும் தாயானாள்.
தாவீதின் இந்தச் செயலைக் கண்ட கடவுள் கோபம் கொண்டார். அவர் நாத்தான் என்னும் இறைவாக்கினரை தாவீதின் அரண்மனைக்கு அனுப்பினார்.
நாத்தான் தாவீது மன்னனின் முன் வந்து நின்றார்.
‘அரசே வணக்கம்…. நீங்கள் நீடூழி வாழவேண்டும்’ நாத்தான் வாழ்த்தினான்.
தாவீது மகிழ்ந்தார். ‘சொல்லுங்கள் நாத்தான்… தங்கள் வருகையின் நோக்கம் என்னவோ ?’ தாவீது கேட்டார்.
‘அரசே நான் ஒரு வழக்கோடு வந்திருக்கிறேன்… ‘ நாத்தான் சொன்னான்.
‘வழக்கோடு வருவது தானே உங்கள் வழக்கம். சொல்லுங்கள். உங்கள் வழக்கு எதுவானாலும் தீர்த்து வைப்பேன்’ தாவீது உறுதியளித்தார்.
‘அரசே… ஒரு நகரில் ஒரு செல்வந்தனும், ஒரு வறியவனும் வாழ்ந்து வந்தார்கள். செல்வந்தனிடம் ஆயிரக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் நிறைந்திருந்தன. அவனுக்குத் தேவையென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் அவர் கேட்பதையெல்லாம் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் அந்த ஏழையிடமோ ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டுமே இருந்தது. அதை அவன் மிகவும் அன்பாக நேசித்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை தன்னுடன் அணைத்துக் கொண்டு, தான் உண்ணும் உணவில் முதல் தரமானதை அதற்கும் அளித்து அதனோடு விளையாடி மகிழ்ந்திருந்தான். அந்த ஆட்டுக்குட்டியும் தன் எஜமானனிடம் ஒரு நண்பனைப் போல மிகவும் அன்புடன் இருந்தது… ஒரு நாள் அந்த செல்வந்தனைத் தேடி ஒரு விருந்தாளி வந்தான். அந்த செல்வந்தனோ, தன்னுடைய மந்தைகளை விட்டு விட்டு, அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்துக் கொன்று சமைத்து விட்டான்….’ நாத்தான் நிறுத்தினார்.
தாவீதின் கண்களில் கோபம் கொப்பளித்தது. ‘என்னுடைய ஆட்சியில் இத்தனை பெரிய அயோக்கியன் ஒருவன் இருக்கிறானா ? யாரவன் ? இப்போதே வெட்டிக் கொன்று விடுகிறேன்… ‘ தாவீது சினந்தான்.
‘அது நீர் தான் மன்னா….’ நாத்தான் அரசனின் முன் நேராக நின்று கொண்டு தன்னுடைய ஆட்காட்டி விரலை தாவீதின் முகத்துக்கு நேராக நீட்டினார்.
தாவீது திடுக்கிட்டார். ‘ என்ன… நானா ? நான் எப்போது அப்படி நடந்து கொண்டேன்’ தாவீது கேட்டார்.
‘புரியவில்லையா மன்னா ? உமக்கு எத்தனையோ மனைவிகள் இருக்க, ஒரு ஏழை உரியாவின் மனைவியை நீ கவர்ந்து கொள்ளவில்லையா ? அவனை சதித்திட்டம் தீட்டிக் கொன்று விடவில்லையா ? …’ நாத்தான் தொடர்ந்தார்.
தாவீது திகைத்துப் போய் நின்றார்.
‘உம்முடைய இந்த செயலினால் கடவுள் மிகவும் கோபமடைந்து விட்டார். உன் மீது அவர் எத்தனை அன்பு வைத்திருந்தார். நீ நடத்திய அனைத்து போர்களிலும் வென்றாயே ! உன் வேண்டுதல்கள் ஏதும் நிராகரிக்கப் படவில்லையே ! ஒரு ஆடு மேய்ப்பவன் என்னும் நிலையிலிருந்து அரசன் என்னும் இருக்கைக்கு உன்னை அழைத்து வந்தது அவர் தானே… அவருக்கு எதிராய் நடந்து கொண்டிருக்கிறாயே… தவறில்லையா ?’ நாத்தான் தைரியமாய் பேசினார்.
தாவீது தம்முடைய தவறை உணர்ந்தார். உடனே மண்டியிட்டு அழுதார். ‘கடவுளே… என்னுடைய அறிவீனத்தினாலும், பலவீனத்தினாலும் தவறிழைத்து விட்டேன் என்னை மன்னியும்’ என்று கதறினார்.
தாவீது மனம் திருந்தியதை அறிந்த கடவுள் நாத்தான் வழியாக தாவீதிடம் மீண்டும் பேசினார்.
‘அரசே… கடவுள் இன்னும் உங்களை மிகவும் அன்பு செய்கிறார். ஆனால் நீர் செய்த தவறுக்குத் தண்டனையாக உமக்கும் பத்சேபாவுக்கும் பிறக்கும் முதல் மகன் இறந்து போவான்’.
இந்த வார்த்தைகளைக் கேட்ட தாவீது இன்னும் அதிகமாக வருந்தினான். தன் தவறினால் பத்சேபாவும் வருத்தப் படுவாளே என்றெண்ணி அழுதார்.
பத்சேபாவின் பிரசவ காலம் நெருங்கியது. தாவீது தொடர்ந்து ஆண்டவரிடம் தன் மகனை மீட்குமாறு வேண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் கடவுளின் தீர்ப்பு மாறவில்லை.
குழந்தை பிறந்தது ! பிறந்த மறுதினமே நோய்வாய்ப் பட்டது ! ஏழாம் நாளில் இறந்துபோனது.
தாவீது மனம் திருந்தினார். இனிமேல் தவறு செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார். கடவுளும் அவரை ஆசீர்வதித்து அவருக்கு இரண்டாவதாய் ஒரு மகனைக் கொடுத்தார். அந்தக் குழந்தைதான் ஞானத்தின் இருப்பிடமாய் பிற்காலத்தில் விளங்கிய சாலமோன்.