Posted in Desopakari

Christianity : நல்லது எல்லாம் நல்லதல்ல !

 Image result for jesus

நாலு பேருக்கு நல்லது நடக்கும்ன்னா எதுவுமே தப்பில்லை – என்பது போன்ற ஒரு வாக்கியத்தை அடிக்கடி கேட்க நேர்கிறது. “நான் சொல்ற பொய்யினால ஒரு நல்லது நடக்கும்ன்னா நடந்துட்டு போகட்டுமே” என தத்துவம் போல பலர் பேசுவதையும் தவறாமல் கேட்க முடிகிறது. “ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணணும்” எனும் உலக மகா பிரசித்த வாசகத்தை அறியாவதவர்கள் இருக்கவும் முடியாது !

இத்தகைய வாசகங்களை அடிக்கடிக் கேட்டுக் கேட்டு நம்மை அறியாமலேயே அந்த சிந்தனைகளின் பக்கம் சாய்ந்து விடுகிறோம். அது சரியான வழி என்று உள்ளுக்குள் சிந்திக்கவும் தொடங்கி விடுகிறோம். அப்போது தான் சிக்கல் ஆரம்பமாகிறது. பழைய ராபின்குட் கதாபாத்திரங்களைப் பார்த்தால் ஒரு ஹீரோ முதலாளி வர்க்கத்திடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு வழங்கும் ஆபத்பாந்தவனாக இருப்பான். இவனைப் போல ஒருவன் சமூகத்துக்குத் தேவை என பல வேளைகளின் மனசு நம்பத் தொடங்கி விடுகிறது இல்லையா ?

விளைவு நல்லதாக இருந்தால் போதும், செயலோ, சிந்தனையோ எப்படியும் இருக்கலாம் எனும் உலக தத்துவம் கிறிஸ்தவத்தின் கதவுகளுக்குள்ளும் நுழைந்து விடுகிறது. ஒரு ஏழைக்குப் பணம் கிடைப்பதற்காக போலியாகப் போடப்படும் கையொப்பமாகவோ, ஒருவனைத் தப்புவிக்க சொல்லப்படும் ஒரு சின்னப் பொய்யாகவோ, மேலதிகாரியிடம் சொல்லும் ஒரு தவறான தகவலாகவோ எதுவாகவும் இருக்கலாம் அந்த விஷயம்.

நம்மைப் பொறுத்தவரை நமது வாழ்க்கையின் அடிப்படை கிறிஸ்துவின் வாழ்க்கையிலும், வார்த்தையிலும் மட்டுமே வார்த்தெடுக்கப் பட வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் இத்தகைய செயல்களை “செத்த கிரியைகள்” என பைபிள் சுட்டிக் காட்டுகிறது. புதிய மொழிபெயர்ப்பு இத்தகைய செயல்களை “சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்கள்” என குறிப்பிடுகிறது.

கெட்ட செயல்கள் என்ன என்று கேட்டால் சட்டென சொல்லி விட முடியும். கொலை, கொள்ளை, கோபம், விபச்சாரம், கர்வம், பொறாமை என அது விரிவடையும். இவையெல்லாம் வெளிப்படையாகவே தெரிகின்ற பாவச் செயல்கள்.

செத்த கிரியைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. ஒருவகையில் பசுத்தோல் போர்த்திய புலி போன்ற செயல்கள் இவை. வெளிப்பார்வைக்கு நல்லது போலத் தோற்றமளிக்கும் கெட்ட செயல்கள் என்று சொல்லலாம்.

தூய ஆவியினால் துவங்கப்படாத எந்த செயல்களும் ஒருவகையில் செத்த கிரியைகளாகவே அடங்கி விடுகின்றன. எபி.9 :14 சொல்லும் பொருளும் இது தான். இறைமகனின் விருப்பத்தின் எல்லைகளுக்கு வெளியே நிகழும் எந்த செயலுமே சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்கள் தான்.

இதற்கு எதிர்மாறான செயல் ‘நல்ல செயல்/ நல்ல கிரியை’ என்பதை எளிதில் உணர முடியும். இதையே இறைமகன் இயேசு “..மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத் 5:16) ல் போதிக்கிறார்.

ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தான் அவளுக்கு ஒரு கால் இல்லை. ஊரிலுள்ளவர்கள் எல்லோருமே அவனைப் பாராட்டினார்கள். புகழ்ந்தார்கள். அவனுடைய தியாகம், பெரிய மனசு என்றெல்லாம் போஸ்டர் ஒட்டாத குறையாய்ப் பாராட்டினார்கள். அவனும் கர்வத்தோடு இருந்தான்.

நாட்கள் சென்றன. பிறருடைய பாராட்டுகள் நின்று போயின. அன்றாட வாழ்க்கைக்குள் நுழைந்தான். வீட்டில் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்தன. சண்டை சச்சரவு, வெறுப்பு என வாழ்க்கை நிலைகுலைந்தது. தன் கணவன் தன்னைத் திருமணம் செய்து கொண்டது பிறருடைய பாராட்டுக்காகத் தான் என்பதும், தன் மீதான அன்பினால் இல்லை என்பதும் அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது. அவள் உடைந்து போனாள். அவர்களுடைய திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் செய்யப்படும் செயல்கள் செத்த செயல்களாகவே மாறி விடுகின்றன. அவை நிலைப்பதும் இல்லை, இறைவனின் விருப்பப் பட்டியலில் இடம் பெறுவதும் இல்லை. உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் மீதான அன்பின் வெளிப்பாட்டில் செய்யப்படும் செயல்கள் மட்டுமே விண்ணக வாழ்வுக்கு நம்மைத் தயாராக்கும்.

பிறருடைய பாராட்டுக்காகவோ, புகழுக்காகவோ ஒரு செயல் செய்யப்படும் போது அதில் உண்மையான அன்பு தொலைந்து போகிறது. ஆனால் இறைவனின் புகழ் பரவ வேண்டும் என உண்மையான அன்புடன் ஒரு செயலைச் செய்யும் போது அந்தச் செயல் நிலைக்கிறது. சக மனிதன் மீது உண்மையான கரிசனையும் அக்கறையும் செயல்களாக வெளிப்படும் போது அந்த செயல்களில் ஆன்மீக வாசனை ஆழமாய் விழுகிறது.

இயேசு மனிதனாக இந்த உலகிற்கு அவதாரம் எடுத்தது நம்முடைய பாராட்டு விழாக்களுக்காக அல்ல. அவர் மனுக்குலத்தின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பினால் மட்டுமெ. உலக மக்களை பாவத்தின் புதைகுழியிலிருந்து தூக்கி, மீட்பின் சமவெளிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அவர் அவதரித்தார். மாட்டுத் தொழுத்தின் முதல் அழுகை முதல், கல்வாரி மலையின் கடைசி அழுகை வரை இயேசுவின் பயணம் தூய்மையான அன்பின் வெளிப்பாடாகவே இருந்தது.

அன்பின் வெளிப்பாடாக இல்லாத செயல்கள் எத்தனை வலிமையாக இருந்தாலும் அது இயேசுவின் பார்வையில் தவறானதே. இதை மிக எளிய ஒரு காட்சியின் மூலம் விவிலியம் நமக்குச் சொல்கிறது. ஆலயத்தில் பிச்சை இடுகிறார்கள். பணக்காரர்கள் கத்தை கத்தையாகப் பணத்தைப் போட, முந்தியின் முடிந்து வைத்த இரண்டு காசைப் போடுகிறாள் ஏழை விதவை. அந்தக் காணிக்கையே இயேசுவின் பார்வையில் பெரிதானது ! காரணம் அவள் தன்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தாள். இருப்பதையெல்லாம் கொடுக்க உண்மையான அன்பினால் மட்டுமே சாத்தியம். பிறருடைய பாராட்டை எதிர்பாராமல் செயல்பட அன்பினால் மட்டுமே முடியும்.

நம்முடைய குற்ற உணர்வுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் நாம் நல்ல செயல்களைச் செய்ய முயல்வதுண்டு. ஒரு தப்பைச் செய்து விட்டால் அதை “பேலன்ஸ்” செய்ய நாலு பேருக்கு நல்லது செய்யும் ஒரு மனநிலை. ஆலய வாசலில் இருப்பவர்களுக்குப் போடும் தர்மம் போல, அல்லது ஏதோ ஒரு ஏழைக்குப் படிக்க உதவுவது, ஒரு ஆலயம் கட்ட உதவுவது இப்படி இந்தப் பட்டியல் நீளும். “ஐயோ இன்னிக்கு சண்டே.. சர்ச்சுக்குப் போயாகணும்” என ஒருவித கீ கொடுத்த ரோபோ மனநிலையில் செயல்படுவதும் இந்த பட்டியலில் தான் சேரும். இத்தகைய செயல்கள் நிச்சயம் செத்த கிரியைகளே !

இப்படி குற்ற உணர்வு உங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் மதவாதிகள் அதை வைத்துச் சம்பாதிக்க முயல்வதும் உண்டு. “இந்த உறுப்பினராய் சேருங்கள்” “அங்கே போய் அந்த திட்டத்தில் இணையுங்கள்” இவையெல்லாம் உங்களுக்கு சொர்க்கத்துக்கான சாவியை ரெடிமேடாய் செய்து தரும் – என வலையில் வீழ்த்துவதும் உண்டு. !

மனிதர்கள் “எவ்வளவு செய்தோம்” என்பதையே பெரும்பாலும் முதன்மைப்படுத்துகிறார்கள் ஆனால் இயேசுவின் வாழ்க்கை எண்ணிக்கையில் இருக்கவில்லை. எவ்வளவு ஆழமாக, ஆத்மார்த்தமாக, உண்மையான அர்ப்பணிப்புடன் நடக்கிறது என்பதிலேயே இருக்கிறது. இயேசு தன்னுடைய வாழ்நாளில் 200 கிலோமீட்டர் சுற்றளவைத்தாண்டிப் பயணித்ததில்லை என்கின்றனர் விவிலிய வல்லுனர்கள். அவருடைய வாழ்நாளில் அவர் உருவாக்கிய அப்போஸ்தலர்கள் 12 பேர் தான். இன்றைக்கு அவருடைய இருப்பின் விஸ்வரூபம் உலகுக்கே தெரிகிறது.

நாம் பல வேளைகளில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம், எத்தனை இடத்தை மிக விரைவாக சந்திக்கிறோம், எத்தனை மக்களுக்கு நற்செய்தி சொல்கிறோம் என்பதைப் பற்றியே சிந்திக்கிறோம். பக்கத்து வீட்டு நபருக்கு நற்செய்தியையும், இயேசுவின் அன்பையும் அறிமுகப்படுத்த தவறிவிடுகிறோம். அவருக்காக உண்மையான செபம் செய்ய மறந்து விடுகிறோம். உண்மையான அழைத்தல் இல்லாமல் நாம் “எண்ணிக்கை” அடிப்படையில் செயல்பட்டால் நமது செயல்கள் செத்த கிரியைகளாகிவிடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

முழுமையான விசுவாசம் இல்லாத செயல் செத்த கிரியையே ! விசுவாசத் தடுமாற்றம் என்பது மிக எளிதில் சாத்தான் நமது மனதில் விதைக்கும் ஒரு விஷ விதை. செபத்தின் போதும் நமது மனதின் பின்னணியில் அவநம்பிக்கை இசையை சாத்தான் மெல்ல ஓட விடுவான். பேய் பிடிச்சா ஒரு தாயத்து கட்டலாமா ? ஒரு மந்திரவாதம் செய்யலாமா ? ஒரு தர்காக்குப் போகலாமா என நமது விசுவாசத்தின் வேர்களை மெல்ல மெல்ல வெட்டுவான். அந்த வலையில் வீழ்ந்து விட்டால் நமது செயல்களெல்லாம் சாவை நோக்கிய செயல்களாகவே மாறிப் போய்விடும்.

விசுவாசம் இல்லாமல் ஒரு நல்ல செயலுக்காகக் கொடுக்கும் பணமாய் இருக்கலாம். அல்லது ஒரு முயற்சியில் செலவிடும் நேரமாய் இருக்கலாம். ஒரு எழுத்தாய் இருக்கலாம். பிரசங்கமாய் இருக்கலாம். விசுவாசம் இல்லாத எந்த செயலுமே அழிவுக்கானதே ! இறையின் மீதான வலிமையான அடித்தளம் இல்லாவிட்டால் நமது கிறிஸ்தவ வாழ்க்கையே அர்த்தமற்றதாகிப் போய்விடும்.

இயேசுவின் வாழ்க்கையில் இயேசு உண்மையையே நேசித்தார். போலித்தனங்களையே முற்றிலும் எதிர்த்தார். சட்டங்கள் செயல்களை உருவாக்கலாம். ஆனால் உண்மையான மனமாற்றமே நல்ல செயல்களை ஊற்றெடுக்கச் செய்ய முடியும். இயேசுவின் போதனைகள் நல்ல செயல்களை இதயத்தில் ஊற்றெடுக்கச் செய்யும் முயற்சியாகவே இருந்தன. எனவே தான் அவருடைய கட்டளைகள் கிளைகளை வெட்டும் முயற்சியாக இருக்கவில்லை. வேர்களை விசாரிக்கும் முயற்சியாக இருந்தன.

உதாரணமாக, கொலை செய்யாதே என்பது சட்டத்தின் கட்டளை. கொலை எனும் தவறைத் தடுக்கும் முயற்சி. அந்தக்கிளையை வெட்டும் முயற்சி. இயேசுவோ, கோபம் கொள்ளாதே என்றார். அது வேர்களை விசாரிக்கும் முயற்சி. விபச்சாரம் செய்யாதே என்பது தடுக்கும் முயற்சி, பார்வைகளையே சரிசெய்வது அடிப்படையை மாற்றும் முயற்சி.

இப்படி இயேசுவின் போதனைகள் ஒவ்வொன்றிலும் இயேசு வெறும் செயல்களை முதன்மைப்படுத்தவில்லை. அன்றைய பரிசேயர்கள் எல்லா கட்டளைகளையும் சரிவரச் செய்தார்கள். ஆனால் இயேசுவோ அவர்களையே எப்போதும் எதிர்த்தார். காரணம் அவர்களுடைய போலித்தனமும், எண்ணங்கள் தூய்மை இல்லாமல் இருந்ததும் தான்.

வெறுமனே செயல்களைச் செய்தால் போதும் எனும் சிந்தனை அவர்களுக்கு இருந்தது. ஆனால் உள்ளத்தில் உண்மையான அன்பு ஊற்றெடுக்கவும் இல்லை, தாழ்மையான மனதும் இல்லை. சட்டங்களின் மூலம் அவர்கள் செயல்களைச் செய்துவிட்டு தங்களை ஆன்மீகவாதிகளாகக் காட்டிக் கொண்டார்கள். எனவே தான் அவர்களுடைய செயல்கள் பெரும்பாலும் செத்த கிரியைகளாகி இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற முடியாமல் போய்விட்டது !

இந்த சிந்தனையின் பின்னணியில் நமது அவசரத் தேவைகள் இரண்டு.

ஒன்று, நமது செயல்களில் இருப்பவை செத்த கிரியைகளா, நல்ல கிரியைகளா என்பதை இனம் காண்பது. ஒவ்வோர் செயலைச் செய்யும் போதும், இது தூய ஆவியின் வழிகாட்டலா, உண்மையான அன்பின் வெளிப்பாடா, விசுவாசத்தின் செயலா என்பன போன்ற அளவுகோல்களைக் கொண்டு அதை அடையாளம் காணலாம்.

இரண்டாவது, கெட்ட கிரியைகளை விட்டு விட்டு, நல்ல செயல்களைச் செய்யத் துவங்குவது. ஒவ்வொரு செயலுக்குமான விதையை இறை வழிகாட்டலின் அடிப்படையில் உருவாக்குவது. இவை நம்மை நல்ல ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s