Posted in Desopakari

Christianity : உயிர்ப்பு தரும் உத்தரவாதம்.

download (1)

உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய நிகழ்வு இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். இயேசுவின் பிறப்பு உலகிற்கு வியப்பாய் இருந்தது. இயேசுவின் உயிர்ப்பு உலகிற்கு மீட்பாய் மிளிர்ந்தது. உயிர்ப்பு இல்லையெனில் கிறிஸ்தவ நம்பிக்கைகளும், விசுவாசமும் வலுவிழந்து போய்விடும். உயிர்ப்பே நமக்கு அடிப்படை. எனவே தான் அப்போஸ்தலர்களும், ஆதிகால கிறிஸ்தவ தலைவர்களும் தங்கள் போதனைகளை சிலுவையிலிருந்தும், இயேசுவின் உயிர்ப்பிலிருந்து துவங்கினார்கள்.

இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகின்ற உத்தரவாதங்கள் நமது ஆன்மீக வாழ்க்கையைச் செழுமைப்படுத்துகின்றன. அவருடைய உயிர்ப்பு தரும் எண்ணற்ற உத்தரவாதங்களில் டாப் 10 உத்தரவாதங்கள் இவை.

  1. கடவுளுக்கு ஏற்புடையவர்களாக முடியுமெனும் உத்தரவாதம்.

“நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்செய்தார்” ( ரோமர் 4 : 25 )

இயேசுவின் பிறப்போ, அவருடைய சிலுவைப் பாடுகளோ, மரணமோ நம்மை இயேசுவுக்கு ஏற்புடையவர்களாக மாற்றவில்லை. பிதா அவரை உயிர்த்தெழச் செய்ததன் மூலம் நம்மை அவருக்கு ஏற்புடையவர்களாக மாற்றியிருக்கிறார். நம் பாவங்களை இயேசு மன்னித்ததன் உத்தரவாதம் அது ! நாம் கடவுளின் மீட்பில் இணைய முடியும் என்பதன் உத்தரவாதம் அது. இயேசுவின் பலியை தந்தை ஏற்றுக் கொண்டதன் உத்தரவாதம் இது. இயேசுவின் உயிர்ப்பு கொண்டு வரும் மிகப்பெரிய உத்தரவாதம் இது எனலாம்.

  1. தூய ஆவியானவர் நம்மோடு எனும் உத்தரவாதம்.

“நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்” ( யோவான் 16 :7 )

இயேசுவின் உயிர்ப்பு தான் தூய ஆவியானவர் எனும் மாபெரும் தேற்றரவாளர் நமக்குக் கிடைக்கக் காரணம். தூய ஆவியானவரின் வழிகாட்டுதல் தான் நம்மை கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகிறது. தூய ஆவியானவரின் வருகை தான் நமக்கு மிகப்பெரிய துணிச்சலைத் தருகிறது. நமது வாழ்க்கையின் மிகப்பெரிய வலுவூட்டும் அம்சம் தூய ஆவியானவர் நமது இதயத்திலிருந்து செயலாற்றுவது தான். அந்த உத்தரவாதம் உயிர்ப்பின் மூலம் நமக்குக் கிடைக்கிறது.

  1. நமக்கு வாழ்வு உண்டு எனும் உத்தரவாதம்.

நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள் ( யோவான் 14 : 19 )

இயேசுவின் உயிர்ப்பு மரணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கான  வலுவான உத்தரவாதம். இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது ( 1 கொரி 15 : 20)

மரணத்துக்குப் பிறகு உயிர்ப்பு இருந்தால் மட்டுமே நமக்கு நிலைவாழ்வு கிடைக்கும். அந்த நிலைவாழ்வுக்கான உத்தரவாதம் இயேசுவின் உயிர்ப்பின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” ( யோவான் 11 :25 ) எனும் இயேசுவின் வார்த்தைகள் வலிமையானவை.

  1. இயேசு நம்மோடு எனும் உத்தரவாதம்.

“இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” ( மத் 28:20)

இயேசுவின் உயிர்ப்பு அவரை காலங்கள் கடந்தவராக்கியது. அது தான் இறைமகன் நம்மோடு இருக்கின்ற ஒரு பாக்கியத்தின் கதவைத் திறந்து வைத்திருக்கிறது. இயேசுவின் உயிர்ப்புதான் நமக்கு துணிச்சலையும் அவர் நம்மோடு இருக்கிறார் எனும் உத்தரவாதத்தையும் தந்திருக்கிறது.

  1. இரண்டாம் வருகையின் உத்தரவாதம்.

நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் ( அப் 1 : 11 )

இயேசுவின் உயிர்ப்பு அவருடைய இரண்டாம் வருகையை நமக்கு உறுதி செய்கிறது. இயேசு விண்ணேற்பு அடைந்தபோது தூதர் அதை உறுதி செய்கிறார் என்கிறது திரு விவிலியம். இயேசு மீண்டும் வருவார் எனும் உத்தரவாதம் நமது வாழ்வின் மிகப்பெரிய ஊக்கம் என்பதில் சந்தேகமில்லை.

  1. மாட்சியின் உடலுக்குரிய உத்தரவாதம்

” நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர் ( பிலி 3 :21 )

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு தான் நமக்கு மகிமையின் உடலுக்கான உத்தரவாதமாக வருகிறது. இயேசு எனும் கொடியில் இணைந்திருக்கும் நாம் மறு வாழ்வுக்கான பிரவேசத்தில் புதுப் பிறப்பாவது இயேசுவின் உயிர்ப்பின் பயனாகத் தான். “இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார் ( 1 தெச 4:14 ) எனும் இறைவார்த்தை நமக்கு தெம்பூட்டுகிறது.

  1. பரிந்து பேசுபவர் உண்டெனும் உத்தரவாதம்

“இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! ” ( ரோமர் 8 : 34 )

இயேசு உயிர்த்தெழுந்து மீண்டும் தந்தையின் வலது புறத்தில் இருப்பது நமக்கு மிகப்பெரிய ஆறுதல். நம்மை சாத்தான் குற்றம் சாட்டும்போது நமக்குப் பரிந்து பேசுபவராக இருப்பவர் இறைமகன் இயேசு மட்டுமே.

அவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம், தொடர்ந்து அவர் காட்டிய வழியில் நடக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். அந்த பாதையில் நாம் தவறி விழும்போது இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார். “தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்” ( எபி 7 : 25 )

  1. பாவங்கள் அழிந்ததன் உத்தரவாதம்

கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்.( 1 கொரி 15: 17)

இயேசுவின் உயிர்த்தெழுதல் மட்டும் நிகழவில்லையெனில் நாம் இன்னும் பாவங்களில் வாழ்பவர்களாக இருப்போம் என்கிறது விவிலியம். நம் பாவங்களின் நிவாரண பலியாக அவர் இருக்கிறார். அவருடைய உயிர்த்தெழுதல் நமது பாவங்களை முழுமையாகக் கழுவி விட்டது. நாம் புதுப் பிறப்பாகவும், மறு பிறப்பாகவும் மாறுவதற்கு அது தான் நமக்கான அடித்தளமாக அமைகிறது.

  1. நாம் உண்மைக்குச் சான்றுபகர்கிறோம் எனும் உத்தரவாதம்.

“கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால்  …. நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம். ( 1 கொரி 15:15)

இயேசு உயிருடன் எழுப்பப்படாமல் இருந்திருந்தால் அறிவிக்கப்படும் நற்செய்தி பொய் செய்தியாகி இருக்கும். இயேசு உயிர்த்தெழுந்ததால் அந்த செய்தி உண்மைச் செய்தியாகி விட்டது. காரணம் உயிர்த்தெழுதலே அவர்களின் முதல் செய்தியாக இருந்தது.

இயேசுவின் உயிர்ப்பு தான் உண்மையை அறிவிப்பவர்களாக நம்மை மாற்றியிருக்கிறது. உண்மைக்குச் சான்று பகர இறைவன் வந்தார். அவர் உண்மையாக இருந்தார். அந்த உண்மைக்கு நாம் சான்று பகர்கிறோம் எனும் உத்தரவாதம் இயேசுவின் உயிர்ப்பினால் நமக்குக் கிடைத்திருக்கிறது.

  1. நமது விசுவாசம் நிலையானது எனும் உத்தரவாதம்.

1 கொரி 15:14 முதல் வருகின்ற வசனங்கள் இயேசு உயிர்த்தெழுந்ததால் கிடைக்கக் கூடிய முக்கியமான நன்மைகளையும், அது நமக்குத் தரும் சில முக்கியமான உத்தரவாதங்க‌ளையும் பேசுகிறது.

அதில் முக்கியமானது நமது விசுவாசம் தொடர்பானது. இயேசு உயிர்த்தெழவில்லையெனில் நமது விசுவாசம் வீணாகியிருக்கும். அவரது உயிர்ப்பு தான் நமது நம்பிக்கையை அங்கீகரிக்கிறது. நமது விசுவாசம் தான் நமது கிறிஸ்தவ வாழ்க்கையை அலங்கரிக்கிறது.

இப்படி,

இயேசுவின் உயிர்ப்பு நமது வாழ்க்கைக்குத் தருகின்ற உத்தரவாதங்களை நாம் முழுமையாகப் புரிந்து கொள்வோம். உயிர்ப்பு என்பது அலங்காரமாய் செலவிடவேண்டிய தினம் அல்ல. நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டிய தினம். சிந்திப்போம், செயல்படுவோம்.

அனைவருக்கும் உயிர்ப்பு விழா நல்வாழ்த்துகள்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s