Posted in Desopakari

Christianity : தேர்தல் களம்

bread-of-life

இதோ, கைக்கெட்டும் தூரத்தில் தேர்தல் வருகிறது. அரசியல் தலைவர்கள் மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கவனிக்கவில்லையே எனும் தார்மீகக் கோபம் நம்மில் தவறாமல் எழுகிறது. யாருக்கு வாக்களிப்பது என்பதில் எழுகின்ற குழப்பம் எளிதில் தீர்வதில்லை.

கிறிஸ்தவ வட்டாரத்துக்குள்ளேயே தேர்தல் குறித்து இரண்டு விதமான சிந்தனைகள் இருக்கின்றன. தேர்தல் என்பது கடவுளுக்கு விருப்பமில்லாத ஒன்று. மக்களின் விருப்பத்துக்காகவே தலைமைகள் உருவாக்கப்பட்டன. அரசர்கள் உருவாக்கப்பட்டனர் என பைபிள் வசனங்களைச் சுட்டிக் காட்டி அவர்கள் வாதிடுகின்றனர்.

இன்னொரு பிரிவினர், வாக்களிப்பது நமது கடமை என்று கூறி, ஏன் வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும், எந்த மனநிலையில் வாக்களிக்க வேண்டும் என்பதையெல்லாம் என அவர்கள் பட்டியல் போடுகின்றனர்.

தேர்தல் காலத்தில் நமது கடமை என்ன ? நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அலசும் முன் ஒரு விஷயத்தை நமது இதயங்களில் பச்சை குத்தியது போல ஆழமாய் பதிக்க வேண்டியது அவசியம்.

சங்கீதம் 10:16 சொல்வது போல, “ஆண்டவர் என்றுமுள அரசர்” எனும் உண்மையில் நாம் நிலைத்திருக்க வேண்டும். இவ்வுலக வாழ்க்கைத் தலைவர்கள் வருவார்கள் போவார்கள். இறைவன் ஒருவரே எப்போதும் நமது தலைவர், அரசர் எனும் சிந்தனை இருக்க வேண்டும். அப்போது தான் அவருடைய கட்டளைகளை மீறிய செயல்களை நாம் செய்யாமல் இருப்போம்.

தேர்தல் காலத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் ?

  1. ஆழமான செபம்.

நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய ஆயுதம் செபம். நாம் பயன்படுத்தாத ஒரே ஆயுதமும் அது தான். பெரும்பாலும் நமக்கு பல் தேய்ப்பது போல, காபி குடிப்பது போல ஒரு வழக்கமான ஏற்பாடாக ‘செபம்’ மாறி விட்டது. இந்த தேர்தல் காலம் வெறுமனே ஒரு வெளிவேடமாய் இல்லாமல், ஆழமான, ஆத்மார்த்தமான செபங்களை நமது நாட்டின் தேர்தலுக்காக ஏறெடுப்போம்.

நமக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், கட்சி சார்பு சிந்தனைகள் இருக்கலாம். ஆனால் தேர்தலைப் பொறுத்தவரை, நமது வேண்டுதல் “என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” (மத் : 26, 39) என்ற இயேசுவின் வார்த்தையைப் போன்று அமைவதே சிறப்பானது.

  1. தலைமையை ஏற்றுக் கொள்ளல்.

சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் (மத் 22 : 21 ) என்றார் இயேசு. சீசர் என்பது மண்ணுலகத் தலைமையையும், கடவுள் என்பது விண்ணுகலத் தலைமையையும் குறிக்கிறது.

கடவுள் மண்ணுலகத் தலைமையை உதாசீனம் செய்யச் சொல்லவில்லை. ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார். சீசருக்கு எவையெல்லாம் உரியவையோ அவற்றை சீசருக்குக் கொடுக்கச் சொன்னார். இதயங்களை இறைவனுக்கும், உலகக் கடமைகளை சீசருக்கும் என எடுத்துக் கொள்ளலாம்.

நமது உலகக் கடமைகளில் ஒன்று தேர்தலில் வாக்களிக்க வேண்டியது என்பதை நினைவில் கொள்வோம்.

  1. தலைமையை உருவாக்குதல்.

துவக்கத்தில் இறைவன் மக்களின் வேண்டுதலுக்காக அரசரை ஏற்படுத்துகிறார். பின்னர் மக்களின் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப தலைமையை அவர் உருவாக்கச் சொல்கிறார்.

மக்களின் பிரதிநிதியாக மோசே இருக்க வேண்டியதையும், மக்களிடையே பண்பாளர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தலைவர்களாக நியமிக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறும் மோசேயின் மாமனார், “கடவுள் கட்டளையிடும் இக்காரியத்தை…” என ( விடுதலைப் பயணம் : 18, 17..23 )  அந்தத் தேர்தல் விஷயத்தைக் கடவுளின் கட்டளையாகவே பார்க்கிறார்.

  1. தலைமைக்குப் பணிந்திருத்தல்

தலைமை நமக்குப் பிடித்தமாக இருந்தாலும், பிடிக்காததாக இருந்தாலும் தலைமை என்பது இறைவனால் தரப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்கிறது விவிலியம்.

“ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை; இப்பொழுதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார்.” ( ரோமர் 13 : 1..3 ).

இறைவன் தலைமையை ஏற்படுத்தும்போது அதை நம் மூலமாகவே செயல்படுத்துகிறார். ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தது போல, நமது ஒவ்வொரு வாக்குகளையும் அவர் தமது சித்தத்துக்கு ஏற்றபடி பயன்படுத்துவார் எனும் நம்பிக்கை கொள்வோம்.

  1. ஞானமும், அறிவும் உள்ள தலைமை

“ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்” (இணைச்சட்டம் 1 :13 ) என்கிறார் இறைவன்.

எனவே நாம் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, நமது விருப்பு, வெறுப்பு, சாதீய, சமூக அடையாளங்களைப் பாராமல் இறைவன் சொல்கின்ற ஞானமும், அறிவும் நிரம்பியவரைத் தேர்ந்தெடுக்க முயல்வோம்.

  1. மனித நேயம் கொண்ட தலைமை

விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள்; உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்றுபோல் செவிகொடுங்கள்; எந்த மனிதனுக்கும் அஞ்ச வேண்டாம், ஏனெனில், நீதித்தீர்ப்பு கடவுளுக்கே உரியது. உங்களால் தீர்க்க இயலாததை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் வழக்கைக் கேட்பேன்’ ( இணைச்சட்டம் 1 : 15..20)

தலைமையின் குணாதிசயங்களாக இறைவன் கூறுவதில் சிறப்பிடம் பெறுவது பாரபட்சமற்ற தன்மை. மனிதர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப நீதியை வளைக்காத தன்மை. நீதி இறைவனின் விருப்பம் என்பதை உணர்ந்த தன்மை. இந்த குணாதிசயங்களை இறைவன் ஒரு தலைவரிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

“மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்” என்கிறார் இயேசு. நமது தலைவர் சின்ன விஷயங்களில் நம்பிக்கைக்குரியவராக இருந்திருக்கிறாரா ? என சிந்தித்து வாக்களிப்பதும் அவசியம்.

  1. இறைவனுக்குப் பயந்தவர்

இறைவனுக்குப் பயந்தவரே தலைவராக இருக்க வேண்டும் என விவிலியம் பல இடங்களில் வலியுறுத்துகிறது. “பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள். அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; ( சங் 2 : 10) என்கிறது சங்கீதம்.

“நீங்கள் செய்வது யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் நீதி வழங்குவது மனிதனை முன்னிட்டு அன்று, ஆண்டவரை முன்னிட்டே; ஏனெனில், நீதி வழங்குவதில் அவர் உங்களோடு இருக்கிறார். உங்களிடம் இறையச்சம் இருக்கட்டும் ” ( 2 குறிப்பேடு 19 : 6, 7 ) என்கிறது இறைவாக்கு.

தலைவர்களைத் தேர்ந்தெடுக்கையில் அவருக்கும் இறைவனுக்குமான உறவு எப்படி இருக்கிறது ? அல்லது இறை மதிப்பீடுகளை எப்படி அவர் கைக்கொள்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

  1. பண ஆசை இல்லாதவர்

“அவன் இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது; வெள்ளியும் பொன்னும் அளவுமீறிச் சேர்க்கலாகாது.” (இணைச்சட்டம் 17:17 ) என அரசர்களுக்கான விதிமுறைகளைப் பேசுகிறது பைபிள்.

திருமணத்தில் நேர்மையையும், செல்வம் சேர்ப்பதில் நேர்மையையும் கடைபிடிப்பவரையே தலைவராக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். தேர்தல் நேரத்தில் நமது அணுகுமுறை இப்படியாகத் தான் இருக்க வேண்டும்.

  1. நீதியை விரும்புபவர்

“…நீதியின்படி தீர்ப்பிடுங்கள் ” என்பதே இறைவன் நமக்கு இடுகின்ற கட்டளை. நமது தலைவர்கள் எப்படி இருக்கின்றனர். நீதியின் வாசனையோடு இருக்கிறார்களா ? இல்லை அவர்கள் தங்கள் கட்சி, சமூகம், லாபம் போன்றவற்றைப் பார்த்து நீதி வழங்குகிறார்களா என்பதைக் கவனிக்கும் கடமை நமக்கு உண்டு.

“நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்; பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்” என்கிறது நீதிமொழிகள் 28 : 12.

  1. பணிவு கொண்டவர்

“இதயத்தில் இறுமாப்புக்கொண்டு, தன் சகோதரருக்கு மேல் தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், கட்டளைகளிலிருந்து வலமோ இடமோ பிறழாமலும் இருப்பான்” என்பதை அரசருக்கான விதிமுறையாக இறைவன் ஏற்படுத்துகிறார்.

இயேசுவும் அதையே தனது போதனைகளிலும் பிரதிபலிக்கிறார். “உங்களில் தலைவராக விரும்புபவர் எல்லோருக்கும் பணியாளராக இருக்கட்டும்” என்கிறார். அதை தன் வாழ்க்கையிலும் அவர் செயல்படுத்தியும் காட்டினார்.

இப்படி விவிலியம் நமக்குக் காட்டும் தலைவருக்கான குணாதிசயங்கள் மிக‌ உயர்ந்த இடத்தில் இருக்கின்றன. அரசர்களை இறைவன் மக்களின் விருப்பத்துக்காக அனுமதித்தார். அதன் பின் அரசர்களுக்கான விதிமுறைகளை வகுத்து அவர்களை நெறிப்படுத்தினார். ஆதித் திருச்சபையிலும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது என்பதற்கு ஸ்தேவானின் தேர்வே ஒரு உதாரணம்.

வாக்களிப்பது என்பது நமக்கு இடப்பட்ட உலகக் கடமை. இறைவன் சொல்லும் மதிப்பீடுகளின் அடிப்படையில் வாழ்கின்ற ஒரு மனிதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடவுள் நமக்கு சிந்திக்கும் ஆற்றலையும், அவரைச் சார்ந்திருந்து முடிவெடுக்கும் திறமையையும் தந்திருக்கிறார். அந்த ஆன்மீக வெளிச்சத்தின் அடிப்படையில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பது நமது கடமை.

ஒருவேளை, ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுக்கும் அபாயம் இருப்பதை நீங்கள் உணர்ந்தால் “யாருக்கும் வாக்களிப்பதில்லை” எனும் பிரிவில் வாக்களியுங்கள்.

மீண்டும் ஒரு முறை மனதில் எழுதுவோம். “கடவுளே அனைத்து உலகின் வேந்தர்” (திருப்பாடல்கள் 47 : 7). அவரது அதிகாரமே நமக்கு உறுதியானதும், இறுதியானதும்.

*

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s