Posted in Desopakari

Christianity : நீங்களே உணவு கொடுங்கள்.

Image result for Jesus 5 loaf and 2 fish

உணவு ! இந்த உலகில் உயிர்வாழ நமக்கு உணவும் நீரும் அடிப்படைத் தேவைகள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த அடிப்படைத் தேவைகள் நமக்குக் கிடைக்கின்றனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

வேர்ல்ட் ஃபுட் புரோக்ராம் அமைப்பின் புள்ளி விவரத்தின் படி உலகில் 795 மில்லியன் மக்கள் தேவையான அளவு உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். புரியும் படி சொல்ல வேண்டுமெனில் ஒரு ஒன்பது பேரை எடுத்துக்கொண்டால் அதில் ஒருவர் பட்டினியின் பிரஜை ! அதிலும் ஆசியா தான் ஏழை கண்டம். உலக பட்டினி வாசிகளில் 67% பேர் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள்.

சரியான ஊட்டச்சத்து கிடைக்காதது அதை விடப் பெரிய சிக்கல். சுமார் 13 சதவீதம் மக்கள் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கின்றனர். சர்வதேச அளவில் ஊட்டச்சத்து இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 31 இலட்சம் குழந்தைகள் இறந்து போகின்றனர் என்பது அதிர்ச்சிச் செய்தி. ஒரு கோடி பேர் எடை குறைவாக இருக்கின்றனர் என்பது இன்னொரு அதிர்ச்சி.

இயேசு நம் ஆன்மீகப் பசியாற்ற வந்தவர். ஆனால் மனிதனின் ஆகாரத் தேவையை உதறி விடவில்லை. தனது போதனையைக் கேட்க வந்திருந்த மக்களின் பசியை அறிந்த இயேசு, சீடர்களிடம் சொன்னார், ” நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்”. அப்போது ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் தான் அங்கே இருந்தன. அவற்றை இயேசுவிடம் கொடுத்த போது அது ஐயாயிரம் பேரின் பசியைத் தீர்த்து கூடைகளிலும் வந்து நிரம்பியது.

இயேசு உணவைப் பகிர்ந்தளித்து, பகிர்தலில் தேவையை அந்த இடத்தில் வெளிப்படுத்தினார். வெறும் ஆன்மீக வாழ்க்கை என்று சொல்லி மனித தேவைகளை அவர் உதாசீனம் செய்யவில்லை.

“நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என இயேசு சொன்னது நமக்கு இடப்பட்ட ஒரு கட்டளையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி வாழும் ஏழை எளிய மக்களின் வறுமை நமக்கு மனித நேயத்தைக் கற்றுத் தரவேண்டும். பகிர்தலை ஊக்குவிக்க வேண்டும். அதை இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். அதனால் தான் இறுதித் தீர்ப்பு நாளின் போது, “நான் பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்” என்கிறார்.

“மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான்” என்கிறார் இயேசு. அது நமது ஆன்மீக உணவைப் பேசுகிறது.

இயேசு நம்மிடம் இரண்டு விதமான உணவு வழங்குதலைப் பேசுகிறார். ஒன்று மனிதனுடைய இவ்வாழ்வுக்குத் தேவையான உணவு. இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் மனித வாழ்க்கை. இன்னொன்று மறு வாழ்வுக்குத் தேவையான வார்த்தையாம் இறைவனைப் பகிர்ந்து கொள்வது. அது பரிசுத்த ஆவியிடமிருந்து பெற்றுக் கொண்டதை பிறருக்கு அறிவிப்பது.

  1. வெளிப்படுத்தல் இதுவே

இறைவார்த்தையை நாம் அறிந்து கொள்வதும், தூய ஆவியால் வெளிப்படுத்துதலைப் பெற்றுக் கொள்வதும் நமது முக்கியமான தேவைகள். ” சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பார்கள்” வேத அறிவு நமக்கு அதை பிறருக்கு சொல்ல முடியும். எனவே இறைவார்த்தைகளை முதலில் நாம் ஆழமாகப் புரிந்து கொள்வோம்.

இறைவார்த்தையை வாசிக்கும் போது, ஒரு குழந்தையாய் நமது அறிவை முழுதும் கழற்றி வைத்து விட்டு அமர்வோம். தூய ஆவியானவரே நமக்கு வார்த்தைகளை வெளிப்படுத்த செபிப்போம். மனித அறிவினால் பைபிளைப் புரிந்து கொள்வது பயனளிப்பதில்லை, இறைவன் வெளிப்படுத்தும் உண்மைகளே நம்மை வழிநடத்தும்.

  1. தாகம் இதுவே

பிறரை நினைப்போம். பிறருக்கு இறை வார்த்தைகளைக் கொடுக்க வேண்டும் என நினைப்போம். நாம் பிறருக்குக் கொடுக்க வேண்டும் எனும் தணியாத தாகத்தை இதயத்தில் கொண்டிருந்தால், இயேசுவே நமக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவார் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை.

நம்மைச் சுற்றிய நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் இவர்களிடம் என்ன தேவை என்பதை அறிவோம். அவர்களுடைய தேவை இவ்வுலக தேவையாய் இருந்தாலும் சரி, ஆன்மீகத் தேவையாய் இருந்தாலும் சரி. அவற்றை எந்நேரமும் முழுமனதுடன் வழங்க மனதைத் தயாராக்குவோம்.

  1. பகிர்தல் இதுவே

கொடுக்கக் கொடுக்க வளர்வதே இறை அறிவு. இருப்பதை பிறருக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும். அது உணவாய் இருந்தாலும் சரி உணர்வாய் இருந்தாலும் சரி. இறைவார்த்தையை பகிர்ந்து கொடுக்கும் போது நமது வாழ்க்கையும் செழுமையடைகிறது. “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” ( லூக்கா 3 : 11 ) இயேசுவின் வார்த்தை நம்மை வழிநடத்தட்டும்.

பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும் ( ஏசாயா 58 : 10 ).  எனும் இறைவார்த்தை நமக்கு ஊக்கமளிக்கட்டும்.

  1. செயல்படுதல் இதுவே

நமது விசுவாசமும், நம்பிக்கையும் செயல்கள் இல்லையேல் செத்ததாகி விடும்.

“ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும். ( யாக்கோபு 2 : 15..17) எனும் வார்த்தைகள் பிறருக்கு உதவ வேண்டியதன் தேவையை நமக்கு உணர்த்துகின்றன.

  1. அன்பு செய்தல் இதுவே.

உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்? ( 1 யோவான் 3 : 17 ) என்கிறது விவிலியம். அன்பு என்பது கொடுத்தலில் வெளிப்படுகிறது என்பதையே இந்த வசனம் விளக்குகிறது.

பசியில் இருப்பவருக்கு உணவு, அறியாமையில் இருப்பவர்களுக்கு இறைவார்த்தை. என பகிர்தல் எப்படியும் இருக்கலாம். நாம் ஒருவரோடு இறை வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள வில்லையேல் நாம் அவரிடம் அன்பு கொள்ளவில்லை என்பது தான் அர்த்தம்.

இன்னும் ஒரு படி மேலே போய் எதிரிகளிடமும் அதே அன்பைக் காட்டவேண்டும் என்கிறது விவிலியம். “உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.( நீதி 25:21 ). இதே சிந்தனையை இயேசுவும் நமக்குச் சொல்கிறார்.

  1. நெருங்குதல் இதுவே

“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. ( யோவான் 6 : 35) என்கிறார் இயேசு. அவரை உண்டு அவரது இரத்தத்தைக் குடிக்கும் போது, அதாவது அவரது இறை வார்த்தையை உண்டு அதை உயிரோடு கலக்கச் செய்யும் போது நாம் நிறைவு அடைகிறோம்.

நம்முடைய ஆன்ம பசி அத்துடன் அடங்கிவிடும். என்னை அன்பு செய்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள் என்றார் இயேசு. “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.( கலாத்தியர் 6 : 2) என்கிறார் பவுல். இயேசுவை நெருங்க ஒருவர் மற்றவர் சுமைகளைத் தாங்க வேண்டும் என்பதே இதில் வெளிப்படுகிறது.

  1. நோன்பு இதுவே

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! ( ஏசாயா 58 : 7 ) என்கிறார் இறைவன்.

நோன்பு என்பது நாம் உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல, பிறரை உண்ண வைப்பதும் தான் எனும் மாபெரும் உண்மை பகிர்ந்தலை நமக்கு ஊக்கப்படுத்துகிறது.

  1. காணிக்கை இதுவே

“ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்.( நீதி 19:17) என்கிறது நீதி மொழிகள். எல்லாவற்றையும் படைத்த இறைவனுக்கு நாம் எதையுமே தந்து விட முடியாது.

சிலுவையில் உயிர்விட்டு, நம்மை மீட்டு, நமக்கு மீட்பையும் ஆவியின் கனிகளையும் அனைத்தையும் இலவசமாகவே தந்த இறைவனுக்கு நாம் எதையேனும் கொடுக்க வேண்டுமெனில் அது ஏழைகளின் மூலமாகவே கொடுக்க முடியும் என்கிறது பைபிள்.

9.ஆசீர்வாதம் இதுவே

கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்.( நீதி 22 : 9 ). இறைவனின் ஆசீர்வாதம் வேண்டும் என்பது எல்லோருமே எதிர்பார்க்கும் ஒரு கொடை. அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள எளிய வழி நமது உணவை மற்றவர்களோடு பகிர்ந்து உண்பது தான் என்கிறது நீதி மொழிகள். இறைவன் நம் உள்ளத்தைப் பார்ப்பவர். எனவே உண்மையான அன்போடு அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

  1. புகழ்ச்சி இதுவே

இறைவனைப் புகழ்வது என்பது மணிக்கணக்காகப் பாட்டுப் பாடி துதிப்பது என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் விவிலியம் நமக்கு இன்னொரு போதனையைத் தருகிறது. “ஏழையை ஒடுக்கிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார் ( நீதி 14 :31 ) என்கிறது நீதி மொழிகள்.

இறைவனைப் புகழ நினைக்கும் போது வறியவர்களை மனதில் நினைப்போம். அது ஒரு புகழ்ச்சிப் பிரார்த்தனையாய் மாறிவிடுகிறது. அந்தப் பிரார்த்தனையை தினமும் செய்வோம்.

“நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார் இயேசு. அவருடைய வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுவோம். பசித்த வயிறுக்கு உணவும், பசித்த ஆன்மாவுக்கு இறைவனையும் கொடுப்போம். அன்பின் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s