Posted in Desopakari

Christianity : உடலெனும் ஆலயம் 

Image result for body is the temple of god

முன்பெல்லாம் ஊரில் வைத்தியர்களிடம் போனால் நாக்கை நீட்டு என்பார்கள். நாமும் முடிந்த வரை நீட்டுவோம். கண்ணை உற்று உற்றுப் பார்ப்பார்கள். நாடி பிடித்துப் பார்ப்பார்கள். நமது அவயங்களின் மூலம் நமது உடலின் நோய்களைக் கண்டு பிடிக்கும் முறை அது என்பது நமக்குத் தெரியும். அதற்குரிய மருந்துகளைக் கொடுத்தபின் உடல்நிலை சரியாகி நாம் ஆரோக்கிய நிலைக்குத் திரும்புவோம்.

ஆன்மீகத் தூய்மைக்கும் நாக்கையும், கண்களையும், கைகளையும் கவனிக்க வேண்டும் என்கிறார் இயேசு !  நாம் தூய்மையான வாழ்க்கை வாழவேண்டும் என்பதையே இயேசு தனது வாழ்க்கையின் மூலமாகவும், வார்த்தைகளின் மூலமாகவும் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். அதற்கு நமது கண்கள், கைகள், கால்கள் என ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாக இருக்க வேண்டும்.  “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” எனுமளவுக்கு இயேசு உடல் தூய்மையைப் போதித்தார்.

நமது சிந்தனைகள் தான் நமது உடலை இயக்குகின்றன. இதயத்தின் சிந்தனைகள் தூயதாக இருக்கும் போது, உடலில் செயல்கள் தூய்மையானவையாக இருக்கின்றன. அதனால் தான் இயேசுவின் போதனைகள் வெறுமனே கிளைகளை வெட்டும் வேலைகளைச் செய்யாமல் வேர்களை விசாரிக்கும் வேலையைச் செய்கின்றன.

“பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்” (1 கொரி 9 : 27) என பவுல் கூறுகிறார். உடலை அடக்கும் வலிமை இல்லாதவர்கள் நற்செய்தி அறிவிக்கும் தகுதியையே இழந்து விடுகிறார்கள் என்பதையே பவுலின் வார்த்தைகள் தெளிவாக்குகின்றன. இயேசுவைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவது என்பது நற்செய்தி அறிவித்தலின் ஒரு பாகமே. உடலைக் கட்டுப்படுத்தாதவர்கள் நற்செய்திக்குப் பதிலாக துர்செய்தியையே அறிவிக்கிறார்கள்.

நமது உடல் தூய ஆவி வாழும் ஆலயமாக இருக்க வேண்டுமெனில் அது தூய்மையான இடமாக இருக்க வேண்டியது அவசியம். தூய்மையற்ற இடங்கள் தீய ஆவிகளின் இல்லங்கள். அத்தகைய இடங்களைக் கண்டால் வெளியேறிய ஆவி, “பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து அங்கே குடியிருக்கும்”

நமது உடலின் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்கின்றன என ஒரு சுய பரிசோதனை செய்து கொள்வது தூய்மையான வாழ்வுக்குள் நம்மை இட்டுச் செல்ல உதவும்.

உதாரணமாக, நமது நாக்கு என்ன செய்கிறது ? பிறரைப் பற்றிய அவதூறுகளைப் பேசிப் பேசி பொழுதைக் கழிக்கிறதா ? தேவையற்ற கதைகளைப் பேசி மனதைக் கெடுக்கிறதா ? பிறரைக் காயப்படச் செய்கிறதா ? பெருமை பேசித் திரிகிறதா ? தீங்கு விதைக்கிறதா ? என ஒவ்வொரு உரையாடலின் போதும் ஒரு சின்ன சுய பரிசோதனை செய்து கொள்வோம். “பயனில் நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்” என கடவுள் எரேமியாவிடம் ( எரே 15 : 19 ) நாவின் தூய்மை குறித்துப் பேசியதை நினைவில் கொள்வோம்.

நமது காது என்ன செய்கிறது ? வக்கிர நகைச்சுவைக்கும் காது கொடுக்கிறதா ? கிசு கிசுக்களை ரகசியமாய்க் கேட்கிறதா ? இல்லை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே கதவைத் திறந்து அல்ல விஷயங்களுக்கு சன்னலையும் சாத்திக் கொள்கிறதா ? சிந்திப்போம்.

நமது கண் என்ன செய்கிறது ? அழகை ரசிக்கிறேன் என இச்சைப்பார்வையுடன் இதய விபச்சாரம் செய்கிறதா ? கருணையுடன் நோக்க வேண்டியவர்களை அனல் பார்வையால் எரிக்கிறதா ? “வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்” ( சங் 119 : 37 ) என விண்ணப்பம் செய்கிறோமா ? இல்லை ரகசியமாய் ரசிக்கிறோமா ? கண்கள் இருளானால் உடல் முழுவதும் இருளாகிவிடும் எனும் உண்மை நம்மை உலுக்குகிறதா ?

“நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது: நீங்களே அக்கோவில்” ( 1 கொரி 3 : 16 – 17 ) என்கிறது விவிலியம். ஆலயத்தைத் தீட்டுப் படுத்துவதை இறைவன் விரும்புவதில்லை. ஆலயத்தைத் தீட்டுப் படுத்தியவர்களைத் தான் இயேசு சாட்டை பின்னி அடித்து விரட்டினார்.

இயேசு எனும் திராட்சைக் கொடியின் கிளைகள் நாம். நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டுமெனில் ஒரே உடலாய் இருக்க வேண்டியது அவசியம். தூய்மையான திராட்சைக் கொடியான இயேசுவின் கிளைகள் நெருஞ்சிகளாகவோ, கள்ளிகளாகவோ இருக்க முடியாது. அவரில் நிலைத்திருக்க வேண்டுமெனில் அதன் அடிப்படைத் தேவையே தூய்மையான மனமும், உடலும் தான். இயேசு மூலைக்கல்லாய் இருக்கும் கட்டிடத்தில் கட்டப்பட வேண்டுமெனில் நாம் அதற்குத் தகுதியானவர்களாக நம்மை மாற்ற வேன்டும்.

நமது உடலில் தூய ஆவியானவரை ஏற்றுக் கொள்ளும் போது, நமது உடல் நமதல்ல. அதை நாம் கடவுளுக்காய் அர்ப்பணித்து விடுகிறோம் என்பதே உண்மை. அந்த அர்ப்பணிப்பின் தூய்மையை விட்டு நாம் விலகும் போது இறைவனின் பிரசன்னமும் நம்மை விட்டு அகன்று போய், இருளான வாழ்க்கைக்குள் நாம் விழுந்து விடுகிறோம்.

உடலுக்கும், மனதுக்கும் இடையேயான தொடர்பை சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன மருத்துவம் தனது குறிப்பேடுகளில் குறித்து வைத்திருக்கிறது. இன்றைய நவீன மருத்துவம் அதை அங்கீகரித்திருக்கிறது. உடலில் வருகின்ற பெரும்பாலான நோய்களுக்கு மனதில் தான் விதை போடப்பட்டிருக்கிறது என்பதை மருத்துவம் பல ஆய்வுகளின் மூலம் விளக்கியிருக்கிறது.

கோபம், எரிச்சல், மன அழுத்தம், பொறாமை, குழப்பம், பதட்டம் எனும் தேவையற்ற பல்வேறு மனநிலைகள் தான் உடலின் சமநிலையில் பல வேளைகளில் பள்ளம் பறித்து விடுகிறது. “வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” எனும் விவிலிய வசனங்கள் நமது சிந்தனைகளின் தூய்மையை போதிக்கின்றன. அவை, உடலின் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தருகின்றன.

தற்கொலை குற்றம் என சட்டம் சொல்வதைப் போல, தனது சொந்த உடலைத் தீட்டுப் படுத்துவது பாவம் என்கிறது விவிலியம். “ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர்” என விபச்சாரத்தைப் பற்றி (1 கொரி 6 : 18 ) பேசுகிறது கடவுளின் வார்த்தை. போதை, புகை, மது எனும் பழக்கங்களெல்லாம் இறைவனின் ஆலயமாகிய நமது உடலை கறைபடுத்தி, குறைபடுத்திவிடுகிறது. “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு : ஆனால் எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்” எனும் வேதாகம வார்த்தை நம்மை ஊக்கப்படுத்த வேண்டும்.

உடலை கடவுளின் ஆலயமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் ? அதை கடவுளுக்காய் அர்ப்பணிக்க வேண்டும். உங்கள் கண்களிடம் சொல்லி வையுங்கள். “இயேசுவைப் போலப் பார்க்க வேண்டும்” என்று. உங்கள் காதுகளிடம் சொல்லி வையுங்கள், “இயேசுவைப் போலக் கேட்க வேண்டும்” என்று. உங்கள், நாவிடம் சொல்லி வையுங்கள், “இயேசுவைப் போல பேச வேண்டும்” என்று. உங்கள் அவயங்கள் இயேசுவைப் போல செயல்படும் போது, உங்கள் உடல் ஆலயமாகிவிடும். படகிலே படுத்துறங்கிய இறைவனைப் போல, நம் மனதிலே படுத்துறங்குவார் இறைவன்.

“கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள் ( 1 கொரி 6 : 20 ).” எனும் வேதாகம வார்த்தையை இதயத்தில் இருத்துவோம். “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்” எனும் சங்கீதத்தை நாவில் நிறுத்துவோம்.
இறைவனுக்காய் உடலைத் தூய்மையாக்குவோம்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s