Posted in Desopakari

Christianity : மது எனும் திரவச் சாத்தான்

 Image result for drinking

“மது, நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு” என கொட்டை எழுத்தில் எழுதி வைத்தாலும் கூட டாஸ்மார்க் வாசலில் முண்டியடிக்கும் கூட்டம் குறைவதில்லை. எச்சரிக்கையை வாசித்தாலும் அவர்களுடைய சிந்தனையில் அது சம்மணமிட்டு அமர்வதில்லை.

சென்னையில் மரண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன். இறந்த உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வழியில் சாராய வாசனை சுழற்றியடிக்க ஆட்டம் போட்டுக் கொண்டே ஒரு இளைஞர் கூட்டம் முன்னாலேயே செல்லும்., “ஆளு எப்படிப்பா இறந்து போனாரு?” என கேட்டுப் பாருங்கள். “அதையேம்பா கேக்கறே.. குடிச்சு குடிச்சு கொடல் வெந்து செத்து போய்ட்டான்” என்பார்கள்.

இது தீமை, இது தேவையற்றது என படிச்சுப் படிச்சு சொன்னாலும், அடிச்சு அடிச்சு சொன்னாலும் குடிச்சுக் கொண்டே இருக்கும் கூட்டம் திருந்த முயல்வதில்லை. எத்தனையோ இறைவாக்கினர்கள், தீர்க்கத்தரிசிகள் சொல்லியும் மனம் திரும்பாத மக்களைப் போல !

உலக அளவில் மதுவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 33 இலட்சம் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனத்தின் (WHO) புள்ளி விவரம். உலக அளவில் நடக்கும் மரணங்களில் சுமார் 5.9 சதவீதம் மதுவினால் உருவாகிறது. இந்தியா எதில் வளர்கிறதோ இல்லையோ, மதுவினால் செத்துப் போவோரின் எண்ணிக்கையில் ஆண்டுதோறும் வளர்கிறது. இதற்கு முக்கியமான காரணம்  அருந்தும் மதுவின் அளவு அதிகரிப்பதும், அருந்துவோரின் வயது குறைந்திருப்பதும் தான்.  அடுத்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் செலவாகப் போகும் மதுவின் அளவு 19000 கோடி லிட்டர் என்கிறது இந்திய அரசுப் பிரிவு ஒன்றின் புள்ளி விவரம்.

வார இறுதிகளில் தண்ணியடிப்பதும், போதைகளின் பிடியில் மதி மயங்கிக் கிடப்பதும் இன்றைக்கு ஃபேஷன் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சமூகமும், ஊடகங்களும், வியாபார நிறுவனங்களும்  கட்டியெழுப்பிவிட்டன. கல்யாணத்துக்கு மணமகன் தேடுகையில் “பையன் குடிப்பானா ?” என அதிர்ச்சியோடு வினவிய காலங்கள் மலையேறிவிட்டன. வீட்டில் பாட்டில் வாங்கி வைத்து குடிக்கும் குடும்பங்கள் அதிகரித்து விட்டன.

மது நமது நரம்பு மண்டலத்திலும், மூளையிலும் செய்யும் இரசாயன மாற்றங்கள் நமது ஆரோக்கியத்துக்குக் கண்ணி வெடி வைக்கக் கூடியவை. குடிக்கும் மதுவில் 2 சதவீதம் மட்டுமே சிறுநீர் வழியே வெளியாகும் மற்றவை எல்லாம் உடலை அதகளம் பண்ணிவிட்டே அடங்கும். எனவே தான் மருத்துவம் மது வேண்டாம் என்கிறது. அடிமைகளிடம் ‘அளவாய்’ குடியுங்கள் என அட்வைஸ் செய்கிறது.

கிறிஸ்தவம் மதுவை எப்படிப் பார்க்கிறது ? பாவத்துக்கான அகன்ற பாதையாகவே மதுவின் ஆதிக்கத்தை பைபிள் படம் பிடிக்கிறது. எத்தகையை நீதிமானாய் இருந்தாலும் மதுவின் மாயக் கரம் அவரை பாவத்தின் படுகுழிக்குள் தள்ளிவிடும் என எச்சரிக்கையும் செய்கிறது.

நோவா எத்தகைய நீதிமான் என்பது நமக்குத் தெரியும். கடவுளின் ஒற்றை வார்த்தையைப் பற்றிக் கொண்டு சுமார் 80 ஆண்டுகள் பொட்டல் காட்டில் பேழை செய்து கொண்டிருந்தவர் அவர். அத்தகைய விசுவாச மனிதரும் மதுவின் போதையினால் ஆடை விலகி அலங்கோலமாகிக் கிடந்தார். தொடர்ந்த பல துயரங்களுக்குக் காரணமானார்.

லோத்தின் வாழ்க்கையின் அவலமும் மதுவினால் உருவானது. மதுவின் மயக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறான் லோத்து. விளைவு தனது மகள்களின் குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். எவ்வளவு பெரிய அவமானம் நிறைந்த துயரம் !.

நன்மை தீமை எது என அறிய வேண்டுமானால் மதுவை விலக்கி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். “..திராட்சை ரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்” ( லேவியர் 10 : 10 ) என பைபிள் கூறுகிறது. மதுப் பழக்கம் தூயது எது, தீயது எது எனும் வேறுபாடைக் காண விடாமல் நமது கண்களை மழுங்கடிக்கச் செய்யும் என்பதையே வேதாகமம் வலியுறுத்துகிறது.

நசரேயன் எப்படி பரிசுத்தவானாய் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி எண்ணாகமம் சொல்லும் போது, “மதுபானத்தின் காடியையும், திராட்சை ரசத்தினால் செய்த எவ்விதப் பானத்தையும் குடியாமலும்” என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு குழந்தையை நசரேயனாக வளர்த்த வேண்டுமெனில் அவன் தாய் மது அருந்தக் கூடாது என்கிறது சிம்சோனின் வாழ்க்கை.  கடவுளுக்காகத் தூய்மையாய் இருக்க வேண்டும் என்பவர்கள் மதுவை விலக்கவேண்டும் என்பதையே இந்த இறை வார்த்தைகள் வலியுறுத்துகின்றன.

நல்ல குடும்ப உறவை மது சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகிறது. மகன் குடிகாரனாய் இருந்தால், அவன் பெற்றோர் சொல் கேளாதவனாகவும், துஷ்டனாகவும் மாறிவிடுகிறான் என்பதை உபாகமம் 21:20 அழகாய்ச் சொல்கிறது., “குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்” எனும் (நீ.மொ 23:21) வசனம் இன்றைய குடும்பங்களின் நிலையை சித்தரிக்கிறது. வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை வியர்வை சிந்தாத மது முதலாளிகள் உறுஞ்சிக் கொழுக்கிறார்கள்.

குடிவெறியர்கள் வெற்றியாளர்களாய் மாறுவதில்லை. இதை பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே காணலாம். பெனாதாத்தும் அவனுடன் மற்ற ராஜாக்களும் குடிபோதையில் இருந்தபோது தான் வீழ்த்தப்பட்டார்கள் என்கிறது 1 இராஜாக்கள் 20. அம்னோன் குடிபோதையில் இருந்த போது தான் கொலை செய்யப்படுகிறான்.  மது நமது வீழ்ச்சிக்கான முன்னுரையை எழுதிவிடுகிறது !

“கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள் ( சங் 75 :8). எனும் சங்கீதம் துன்மார்க்கர்களுக்கான பானமே மதுபானம் என்கிறது.

இன்றைய ஊடகங்கள் முதலாளிகளின் பிரதிநிதிகள். அறிவாளிகள் என்பவர்கள் மெல்லிய மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு, கண்ணாடி கோப்பையில் மதுவை சுவைப்பவர்கள் என்கிறது. ஆனந்தம் என்பது பார்களில் வழியும் பீர்களில் இருப்பதால் சொல்கிறது. உண்மையில் மது மக்களை மடையர்கள் ஆக்கும் என்பது தான் வேதாகம வாக்கு. “திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்: போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்: அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே” ( நீ.மொ 20:1 பொ.மொ).

ஞானமுள்ளவனாய் இருக்க வேண்டுமெனில் குடிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல்,  குடிகாரர்களோடு கூட்டு சேரவும் கூடாது என்கிறது பைபிள். “பிள்ளாய், இதைக் கவனி: ஞானமுள்ளவனாயிரு: உன் மனத்தை நன்னெறியில் செலுத்து. குடிகாரரோடு சேராதே” (நீ.மொ : 23:19) என்கிறது நீதிமொழி. “உங்கள் நடுவில் சகோதரர் அல்லது சகோதரி என்னும் பெயரை வைத்துக்கொண்டு ………..குடிவெறியராகவோ கொள்ளையடிப்பவராகவோ இருப்பவர்களோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டாம்” ( 1 கொரி  5 :11) என்கிறது புதிய ஏற்பாட்டுப் போதனை.

மதுவின் பழக்கம் வாழ்க்கையில் எதையெல்லாம் கொண்டுவரும் ? “துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்-இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?  திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே”நீ.மொ 23:29. அது பாம்பு போலக, விரியனைப் போலத் தீண்டும் ! மது வாழ்க்கையில் வளத்தையும், முன்னேற்றத்தையும், ஆன்மீக வளர்ச்சியையும் தரும் என ஏதேனும் வசனம் சொல்கிறதா ?

குடிப் பழக்கத்தைப் பற்றிய எச்சரிக்கைகள் பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல. ஆவிக்குரிய அனுபவத்தில் நுழையும் புதிய ஏற்பாடு மனிதர்களின் தேவையாகவும் இருக்கிறது. “பிற இனத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும். அப்பொழுது நீங்கள் காமவெறி, இச்சை, மதுமயக்கம், களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலைவழிபாடு ஆகியவற்றில் காலத்தைக் கழித்தீர்கள்” ( 1 பேதுரு 3-4). இனிமேல் புதிய வாழ்க்கையில் நீங்கள் குடிவெறி உட்பட அனைத்து பாவங்களையும் விட வேண்டும் என்பது தான் இந்தப் போதனை.

தலைமைப் பண்புக்கு உரியவர்கள், நீதியை வழங்கவேண்டியவர்கள், ஏழைகளுக்கு நியாயம் வழங்க வேண்டியவர்களெல்லாம் மதுவை குடிக்கக் கூடாது என்பதே கிறிஸ்தவப் பாடம். “திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்”. என்கிறது பழைய ஏற்பாடு.

“திருத்தொண்டர்களும் கண்ணியமுடையவர்களாக இருக்க வேண்டும்: இரட்டை நாக்கு உள்ளவர்களாகவும் குடிவெறிக்கு அடிமைப்பட்டவர்களாகவும். இழிவான ஊதியத்தின் மேல் ஆசை உள்ளவர்களாகவும் இருத்தலாகாது” (1 திமோ 3:8 ). என்கிறது புதிய ஏற்பாடு.

லூக்கா 21:34, ல் மனுமகனின் வருகைக்காக காத்திருங்கள், குடிவெறியில் சிக்கி மீட்பை இழக்கவேண்டாம் என இறைமகன் இயேசுவே உவமையின் வாயிலாகச் சொல்கிறார்.

பைபிளின் குடியைக் குறித்தும், அதன் தீமைகளைக் குறித்தும், அதனால் நாம் இழந்து போகின்ற மீட்பைக் குறித்தும் இத்தனை இருந்தாலும் மானிட மனமோ நமது தவறுகளைச் சரிபார்ப்பதற்குரிய வசனங்களையே தேடுகிறது. இயேசு கானாவூரில் திராட்சை இரசம் கொடுத்தார், இருதயத்தை  மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தைக் கர்த்தர் கொடுத்தார் என்றெல்லாம் பைபிள் வசனங்களையே சொல்லிக் காட்டுவதுண்டு.

அத்தகைய சூழ்நிலைகளில் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இயேசுவைச் சோதித்த சாத்தான் கூட  “பைபிள் வசனங்களைச் சொல்லித் தான் இயேசுவைக் குழப்பப் பார்த்தது. இயேசுவோ தந்தையில் நிலைத்திருந்தார்.  பைபிள் வசனங்களுக்கு, பைபிள் வசனங்களினாலேயே பதில் சொல்லி சோதனைகளைக் கடந்தார்.

கடவுள் மனிதனை சுய சிந்தனையோடு படைத்திருக்கிறார். எதை எடுக்க வேண்டும், எதை விலக்க  வேண்டும் என்பதை மனிதனே முடிவு செய்ய அனுமதிக்கிறார். சர்வ வல்லவரின் மீட்பில் இணைவதா, சர்ப்பத்தின் வஞ்சக வலையில் வீழ்வதா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

“குடிவெறியர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை” (1 கொரி 6:10 )

சிந்திப்போம். பைபிள் என்பது என்ன ?

பாவிகள் இளைப்பாறும் கூடாரமா ?
ஆன்மாவை வலுவாக்கும் ஆகாரமா ?

One thought on “Christianity : மது எனும் திரவச் சாத்தான்

  1. சரியாக சொன்னீர்கள். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக.

    Like

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s