Posted in Desopakari

விழித்திரு, பணிந்திரு, நிலைத்திரு

Related image“யோவ்.. கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு ? எதுக்குய்யா பிச்சை எடுக்கிறே”

இப்படி ஒரு வாசகத்தை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். சில சமயம் நாமே கூட சொல்லியிருப்போம். அதாவது கைகால் இருக்கிறவன் பிச்சை எடுக்கக் கூடாது என்பது தான் இதன் பொருள், இல்லையா ? நிக் வாயிச்சஸ் என்றொரு மனிதர் இருக்கிறார். அவருக்கு பிறவியிலேயே ஊனம். ஊனம் என்றால் ஏதோ சின்னக் குறை இல்லை. அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை. ஒரு சதுர மனிதராகத் தான் பிறந்தார் அவர். நம்முடைய கணக்குபடி இப்படிப்பட்ட ஒரு மனிதர் பிச்சை எடுக்கத் தான் லாயக்கு ! இல்லையா ?

நிக்கின் பெற்றோரும் ஆரம்ப காலத்தில் அப்படித் தான் நினைத்தார்கள். ஐயோ, இவன் எப்படி வளர்வான். ஒரு சாதாரண மனிதனாக வாழணும்னாலே பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியிருக்குமே என்று ரொம்பவே கவலைப்பட்டார்கள். ரொம்ப நியாயமான கவலை. கையில் ஆறு விரல் இருந்தாலே அது ஒரு குறை என நினைக்கும் நமக்கு கைகள், கால்கள் இரண்டும் இல்லாதவனைப் பார்த்தால் எப்படி இருக்கும் ? நிக்கும் அப்படித் தான் கவலைப்பட்டார். நிச்சயம் வாழ முடியாது என உள்ளுக்குள் உறுதியாய் நம்பினார். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சில முயற்சிகள் எடுத்தார். கையும் இல்லாமல் காலும் இல்லாமல் தற்கொலை கூட செய்யமுடியாது என்று அவர் கண்டு கொண்டது அப்போது தான் !

அவருடைய தந்தை அவரிடம் அடிக்கடி ஒரு வாசகத்தைச் சொல்வார். “கடவுள் உன்னை இப்படிப் படைத்திருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் உண்டு. கடவுளை நம்பு”. அந்த வாசகம் நிக்கை தைரியமூட்டும். தன்னை இப்படி கடவுள் ஏன் படைத்தார் ? ஒருவேளை சட்டென எனக்கு கைகளும், கால்களும் முளைக்குமோ ? அப்போது நான் ‘சாட்சி’ சொல்லி நிறைய பேர் மனம் திரும்ப காரணமாய் இருப்பேனோ என்றெல்லாம் அவர் கருதினார். அதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் சர்ச்சில், பள்ளிக்கூடங்களில் பேசுவதற்கான வாய்ப்புகள் வந்தன.

“கையும் காலும் இல்லாதவன், அவன் எப்படி தான் வாழறான்னு கேப்போமே” எனும் ரீதியாகத் தான் அவருடைய பேச்சுகள் முதலில் கவனிக்கப்பட்டன. ஆனால் அவருக்குள் மக்களை வசீகரிக்கும் ஒரு திறமை இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டது. மெல்ல மெல்ல தனது உரையாடல் தளத்தை விரிவுபடுத்தினார்.. ஊர் தாண்டினார். மாநிலம் தாண்டினார்.ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் அமெரிக்காவுக்குக் குடிபோனார். கடல் கடந்து உரையாற்றத் தொடங்கினார். இந்தியா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று பல இலட்சம் மக்களை தனது தன்னம்பிக்கையால் தொட்டிருக்கிறார்..

பிச்சை தான் எடுக்க முடியும் என பரிதாபமாய்ப் பார்க்கப் பட்டவர் இன்று உலகமே பிரமிக்குமளவுக்கு பணிகள் செய்கிறார். அவருடைய பணியின் மையம் இயேசுவின் அன்பு தான். இயேசுவை நேசிக்கவும், அவரைப் பற்றிக் கொள்ளவும், அவர்மூலமே மீட்பு என்பதை பறைசாற்றவுமே அவருடைய உரைகள் கிளைகள் விரிக்கின்றன. பணியாளன் தானாய் உருவாவதில்லை, கடவுள் அழைக்கிறார்.. அவர் எப்போது அழைப்பார், யாரை அழைப்பார் என்பதை யாரும் சொல்ல முடியாது. ஆனால் அழைக்கிறார். கைகளும், கால்களும் இல்லாதவர்கள் கூட இயேசுவின் பணியை அற்புதமாய்ச் செய்ய முடியும். காரணம் “உன் பலவீனத்தில் என் பலத்தைப் புகுத்துவேன்” என்பதே இறைவனின் வாக்கு.

மோசே வலிமையானவனாய் இருந்த போது அவன் இறை திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. காரணம் தனது பலத்தை அவர் நம்பினார். அவர் பலவீனன் ஆனபோது, ‘ஐயோ பேசவே எனக்குத் தெரியாதே’ என்கிறார். அரசவையின் கம்பீரங்களும், கர்வமும் கரைந்து போக அவர் இறைவனைப் பற்றிக் கொள்கிறார்.

பணியாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் வரையறைகளைப் பார்க்க வேண்டுமெனில் கொஞ்சம் வேர்களை விசாரித்தாலே போதும். அதாவது இயேசுவின் அப்போஸ்தலர்கள் எப்படிப் பணி செய்தார்கள் ? அவர்களுடைய தேவைகள், குணாதிசயங்கள் எப்படி இருந்தன ? அதற்கடுத்த நூற்றாண்டுகளில் அழைத்தலை ஏற்று வந்து பணி செய்த மிஷனரிகள் எப்படி இருந்தார்கள் என்பதை அலசினாலே விடைகள் கிடைத்துவிடும்.

அழைத்தல் இல்லாமல் ஊழியம் என்பது சிறப்பாக இருக்கவே முடியாது. இறை அழைத்தலுக்காகக் காத்திருப்பது, இறைப் பணியின் முதல் தேவை. இயேசுவும் தனது முதல் முப்பது ஆண்டு புவி வாழ்க்கையில் தயாரிப்புப் பணியையே செய்தார். அழைத்தல் வரை காத்திருந்தார். தான் கடவுளின் மகன் எனும் அடையாளத்தை வைத்துக் கொண்டு அவர் அழைத்தலுக்கு முன்பாகவே களத்தில் குதிக்கவில்லை ! காத்திருந்தார். அதையே இறை பணி செய்பவர்களிடமும் எதிர்பார்க்கிறார். அழைத்தல் வரும்போது செயல்படுகையில் இறைவனின் முழுமையான திட்டமும், பாதுகாப்பும் நம்மோடு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

“எந்த ஊழியனும் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்யக் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனை சிநேகிப்பான். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் உங்களால் ஊழியம் செய்ய உங்களாலே கூடாது” என்பதை இயேசு நமக்குச் சொன்ன மிகப்பெரிய தகுதியாகக் கொள்ளலாம். ஒரு நல்ல ஊழியரை அடையாளம் காண இந்த அளவுகோல் ஒன்றே போதுமானது. ஊழியத்தின் படிகளில் பயணிக்கும் போது நாம் கடவுளுக்கு மட்டுமாக ஊழியம் செய்யப் போகிறோம் எனும் சிந்தனை நமக்கு இருக்க வேண்டியது அவசியம். சிலுவை சுமக்காமல் இறை பணி என்பது சாத்தியமில்லை. ‘நாம் சிலுவை சுமக்காமல் பல்லக்கில் பயணிக்கிறோம்’ எனில் ஒருமுறை நமது செயலை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

பணம் பயன்படுத்துவதற்கானது, கடவுள் அன்பு செய்வதற்குரியவர். நாமோ பணத்தை அன்பு செய்கிறோம், கடவுளை பயன்படுத்தப் பார்க்கிறோம். தேவைகளின் போது ஓடிச் சென்று விண்ணப்பம் வைக்கும் ஒருவராக மட்டுமே கடவுளைப் பார்க்கிறோம். ஒரு பையன் எப்பல்லாம் பணத் தேவை வருகிறதோ அப்போது மட்டும் அப்பாவைப் போய்ப் பார்த்து, ‘பணக் கொடுங்க டாடி’ என கேட்டால் தந்தையின் மனம் என்ன உணர்வில் இருக்கும் ? அவர் பணம் கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆனால் மனம் நிச்சயம் காயமடையும் இல்லையா ? உலகத் தந்தையே இப்படியெனில், விண்ணகத் தந்தை எப்படி இருப்பார் ?

இன்று ஊழியங்கள் இறைவனைப் பற்றிக் கொண்டு தான் ஆரம்பமாகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் இறைவனுக்கும் ஊழியக்காரனுக்கும் இடையே வந்து அமர்கிறது. செல்வமும், பணமும், புகழும் தொடர்ந்து இறைவனுக்கும், ஊழியக்காரனுக்கும் இடையே சேரத் துவங்குகிறது. செல்வம் பெருகப் பெருக, இடைவெளி அதிகரிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் கடவுள் கண்காணாத தூரத்தில் போய் விடுகிறார். இந்த செல்வங்கலெல்லாம், கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் என தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு ஊழியக்காரர் சிலாகிக்கிறார். தந்தையோ, ‘மகனே.. எதுவும் இல்லாமல் இருந்தபோது உன்னிடம் இருந்த அந்த அன்னியோன்யமும், அன்பும் எங்கே’ என மௌனமாய் துயரத்துடன் கேட்கிறார். “பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பலவேதனைகளை தாங்களாகவே தங்கள் மேல் வருவித்துக் கொள்கிறார்கள்” ( 1 தீமோ 6:10 பொ.மொ ) என தெளிவாய் சொல்கிறது விவிலியம்.

பல வேளைகளில் இத்தகைய ஊழியக்காரர்களுடைய போலித்தனங்களை நாம் கண்டுகொள்வதில்லை. பழைய இந்துக் கலாச்சாரப் பிண்ணணியும், தாக்கமும் நம்மிடையே எப்போதும் உண்டு. “சாமி கண்ணைக் குத்தும்” என இப்போதும் ஒரு சின்ன உதறல் உள்ளுக்குள் உண்டு. காத்து, கருப்பு, புளியமர பேய் என சர்வ திகில் கதைகளும் நமது விசுவாசத்தையும் அசைப்பதுண்டு. அதனால் தான் “ஊழியக்காரனைப் பற்றிப் பேசாதே” என சிலர் தடுப்பதும் உண்டு. “அவர்களுடைய கனிகளைக் கொண்டே அவர்களை அடையாளம் காண்பீர்கள்” என்று இயேசு சொன்னார். கனிகளைக் கொண்டு அடையாளம் காணுங்கள் என்று தான் சொன்னார். அப்படி சரியாக அடையாளம் காணாமல் இருப்பது ஒருவகையில் பாவமே !

“போதகரை நம்பாதே, போதகத்தை நம்பு” என்பதெல்லாம் பழைய கதை ! “என்னைப் பின்செல்” என்பது தான் இயேசுவின் அறைகூவல். “என்னைப் பின்செல்லாதே, நான் பேசுவதை மட்டும் கேள்” என்பதல்ல. இன்னும் சொல்லப்போனால், “வந்து கேளுங்கள்” என்பது பழைய ஏற்பாடு. “வந்து பாருங்கள்” என்பதே இயேசுவின் புதிய ஏற்பாடு என்று கூட சொல்லலாம். இறைப்பணி செய்பவர்கள் முதலில் தனது மனதை இறைவனின் பால் முழுமையாய் சரணடையச் செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

நற்செய்தி அறிவித்தலில் இரண்டு வகை உண்டு. ஒன்று மயிலிறகால் வருடி விசுவாசிகளை புல்லரிக்க வைக்கும் நற்செய்தி அறிவித்தல். இதைக் கேட்பவர்கள் உற்சாகமாய் ஆடிப் பாடலாம், கடவுளைப் புகழலாம், மகிழ்வாய் இருக்கலாம். ஆனால் அதன் பின் அவர்களுடைய வாழ்க்கை மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி கதை தான். இன்னொரு வகை, உண்மையை உரத்துச் சொல்லும் யோவானைப் போன்றது. வந்திருப்பவர்களுடைய காணிக்கையை விட அவர்களுடைய மீட்பை முக்கியமானதாய்ப் பார்க்கும் போதனை அது. ‘ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பது பாவம்’, ‘உன் கண் இடறலாய் இருந்தால் அதைப் பிடுங்கி எறி’, ‘பணத்தாசை கொள்ளாதே’, ‘கர்வம் கொள்வது பாவம்’,’ பெருமை கொள்வது பாவம்’ என்றெல்லாம் இயேசுவின் போதனைகளை அப்படியே போதிக்கும். கடவுளைத் தவிர எதற்கும் அஞ்சாத போதனை அது ! அதுவே உண்மையான போதனை. உண்மையை, அதன் உண்மைத் தன்மையுடன் போதிப்பது.

எனக்கொரு வீக்னெஸ் இருக்கு, ‘கொஞ்சம் கோவக்காரன்’ என்று சொல்லும் இறைவிசுவாசிகள் எக்கச்சக்கம். கோபம் கொள்வது பாவமப்பா. கோபம் கொண்டால் எரிநகரம் என பைபிள் சொல்கிறது என்று அவரிடம் போதிப்பது நற்செய்தி ! மேலதிகாரியிடம் பொய்சொல்லிவிட்டு ஆலயம் வருவதில் என்ன பயன் இருக்க முடியும் ? ஏற்கனவே ‘பொய்’ எனும் பாவத்தைச் சம்பாதித்து விட்டோமே ! இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நற்செய்தி அறிவித்தலே !

இந்த நாளில், நமது நாட்டிலும் உலகின் மூலை முடுக்கெங்கும் இறைவனின் நற்செய்தியைப் பரப்பிய நல்ல ஊழியக்காரர்களையும், பணியாளர்களையும் நினைவு கூர்வோம். நற்செய்தி அறிவித்தல் என்பது இறைவன் நமக்கு இட்ட கடமைகளின் ஒன்று. அதற்கு இறையழைத்தலுக்காக பாவத்தை விலக்கிக் காத்திருப்பதும், அழைத்தல் வந்தால் முழுமையாய் சரணடைவதும், உலக செல்வங்களிலிருந்து பார்வையைத் துண்டித்து விட்டு இறைவனை மட்டுமே பற்றிக் கொள்வதும் எனும் மூன்று முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வோம். அழைக்கும் இறைவன் உண்மையுள்ளவர். செவி சாய்ப்பவர்களையும், வழி நடப்பவர்களையும் அவர் தவிக்க விடுவதேயில்லை.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s