Posted in Bible People

பைபிள் மாந்தர்கள் : 123 விருந்து வைத்த அரசன்.

123 விருந்து வைத்த அரசன்.

Image result for parable of wedding feast

அரசர் ஒருவர் இருந்தார். அவருடைய மகனுக்கு திருமணம். ஒரு மிகப்பெரிய விருந்தை அவர் ஏற்பாடு செய்தார். அந்த விருந்துக்கு ஏராளமானோரை அவர் அழைத்தார்.

விழா நாள் வந்தது. அழைப்பு பெற்றவர்கள் யாரும் விருந்துக்கு வரவில்லை. உடனே அரசன் தனது பணியாளர்களை அனுப்பி, அவர்களை அழைத்து வரச் சொன்னான். அவர்கள் சென்றார்கள். அழைத்தார்கள். யாருமே வரவில்லை. அவர்கள் மன்னரிடம் திரும்பி வந்து விஷயத்தைச் சொன்னார்கள்.

மன்னர் வேறு சில பணியாளர்களை அழைத்தார், “நீங்கள் செல்லுங்கள். காளைகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்து விருந்து சமைத்திருக்கிறேன். விருந்து பிரமாதமாக இருக்கும் என சொல்லி மக்களை அழையுங்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்

பணியாளர்கள் அழைக்கப்பட்டவர்களைச் சந்தித்து மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்தனர். அவர்களோ மறுமொழியாக,

‘நான் வயல் ஒன்றை வாங்கியிருக்கிறேன். இன்று உழவு நாள். நான் இல்லாவிட்டால் சரிவராது…’

‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்… நான் அதை ஓட்டிப் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்’

‘மன்னியுங்கள். கடைக்குப் போக வேண்டியிருக்கிறது என்னால் வர இயலாது’ ஆளாளுக்குச் சாக்குப் போக்கு சொன்னதுடன் நிற்காமல், சிலர் வந்து அவர்களை தாக்கி, அவமானப்படுத்தி கொன்றும் விட்டார்கள்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட மன்னன் கடும் சினம் கொண்டான். தனது படையை அழைத்தான். “நீங்கள் போய் கொலையாளிகளைக் கொன்றொழியுங்கள்” என்று கட்டளையிட்டான். அவர்கள் அவ்வாறே செய்தனர்.

மன்னன் மீண்டும் வேறு சில‌ பணியாளர்களை அழைத்தான். விருந்தை வீணாக்க அவர் விரும்பவில்லை.

விருந்து தயாராய் இருக்கிறது. அழைக்கப்பட்டவர்கள் தகுதி இழந்து விட்டனர். எனவே நீங்கள் போய் கண்ணில் காணும் எல்லோரையும் அழைத்து வாருங்கள்” என்றார்.

அவர்கள் போய், நல்லவர் தீயவர் எனும் பாரபட்சம் காட்டாமல், ஏழைகள் உடல் ஊனமுற்றவர்கள் என வேறுபாடு காட்டாமல் எல்லோரையும் அழைத்தார்கள். அவர்கள் மிகவும் ஆச்சரியத்துடனும், ஆனந்தத்துடனும் விருந்துக்கு வந்து கலந்து கொண்டார்கள்.

விருந்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் வாசலில் திருமண ஆடை வழங்கப்பட்டது. எல்லோரும் அதை வாங்கி போர்த்துக் கொண்டார்கள். ஒருவன் மட்டும் அதை வாங்கவில்லை. தனது ஆடை அதை விடச் சிறப்பாக இருப்பதாய் அவன் கருதினான். எனவே தனது ஆடையுடன் விழா அரங்கில் நுழைந்தான்.

ஒருவழியாக பந்தி நிரம்பியது. அரசர் விழா நடந்த இடத்தில் பார்வையிட்டார். அவருடைய கண்களில் அந்த நபர் தென்பட்டார்.

அவர் அவனை அழைத்தார்.” தோழா.. திருமண ஆடையின்றி நீ எப்படி உள்ளே நுழைந்தாய் ?” அவர் கேட்டார்.  அவன் பதில் பேச முடியாமல் வெலவெலத்தான்.

அரசர் பணியாளர்களை அழைத்தார், “இவனுடைய கையையும், காலையும் கட்டி புறம்பே உள்ள இருளில் எறியுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார்.

பணியாளர்கள் அப்படியே செய்தனர். விருந்துக்கு அழைக்கப்பட்டவன், இருளுக்குள் எறியப்பட்டான்.

‘இதுதான் விண்ணக விழாவிலும் நடக்கப் போகிறது. அழைக்கப்பட்ட இஸ்ரயேல் குல மக்கள் அழைப்பைப் புறக்கணிப்பார்கள். பிற இன மக்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டு விண்ணக விருந்தைச் சுவைப்பார்கள்’ இயேசு சொன்னார்.

விருந்துக்கு அழைத்த தந்தை விண்ணகத் தந்தைக்கு ஒப்பாகிறார். மகன் இயேசு கிறிஸ்து. விருந்து இயேசுவின் மீட்பின் நற்செய்தி. அழைப்பு இஸ்ரவேல் மக்களுக்கு விடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அதை நிராகரிக்கின்றனர்.

கடவுளோ இறைவாக்கினர்களை அனுப்புகிறார். மக்களோ உலக செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விண்ணக அழைப்பை நிராகரிக்கின்றனர்.

கடவுளின் தாகமும், அன்பும் தீரவில்லை. எனவே வேறு சில இறைவாக்கினர்களை அனுப்புகிறார். அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். அது திருமுழுக்கு யோவானின் கொலை வரை தொடர்கிறது.

எனவே அந்த மீட்பின் செய்தி இஸ்ரவேல் மக்களைத் தாண்டிய பிற இன மக்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த மக்கள் நற்செய்தியை ஏற்றுக் கொள்கின்றனர். உலகெங்கும் நற்செய்தி பரவுகிறது.

இறைவனின் மீட்பு பாவத்தை மூடும் ஆடையாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஒருவர் அந்த ஆடையை விட்டு விட்டு தனது “சுய முயற்சி, நல்ல செயல்கள்” போன்றவற்றின் மூலம் விருந்தில் கலந்து கொள்ள முயல்கிறார்.

கடவுளோ தனது சுய முயற்சியால் விண்ணகம் நுழைய விரும்பும் மனிதரை நரகத்தில் எறிகிறார். மீட்பு என்பது இறைவன் தரும் மீட்பின் ஆடையை அணிவதேயன்றி, நமது செயல்களின் ஆடையை அணிவதல்ல என்பதை விளக்குகிறார்.

இந்த நிகழ்ச்சி சொல்லும் முக்கியமான செய்திகள் இரண்டு.

ஒன்று, இறைவனின் அழைப்பை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டு, நமது சுயத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல், இறைவன் இலவசமாய் அருளும் மீட்பின் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.

 

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s