Posted in Desopakari

வரமும், வளமும் நிறைந்த குமரி.

Image result for kanyakumari district

இந்தியாவின் வேறெந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு குமரிக்கு உண்டு. தமிழகத்தின் சின்ன சொர்க்கம் என்று குமரியைச் சொல்லலாம். அழகான காலநிலையும், இனிமையான வாழ்க்கைச் சூழலும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையும் என குமரிமாவட்டம் மற்ற எல்லா மாவட்டங்களையும் விட ரொம்பவே ஸ்பெஷலானது.

தமிழக மாநிலங்களிலேயே கல்வியறிவில் முன்னிலையில் நிற்கும் மாவட்டம் என்பதிலும் நமக்குப் பெருமை உண்டு. கற்றவர்கள் நிரம்பியிருக்கும் தளம் என்பதால் தான், தேவையற்ற அரிவாள் கலாச்சாரங்களோ, இனச் சண்டைகளோ இல்லாமல் அமைதியாகவே இருக்கிறது நமது மாநிலம்.

பொதுவாகவோ ஒரு மாவட்டம் இருந்தால் அது நிலப்பரப்பாகவோ, அல்லது கடல்பரப்பாகவோ, அல்லது மலைப்பரப்பாகவோ இருப்பது தான் இயல்பு. குமரி மாவட்டத்தில் அனைத்துமே இருக்கின்றன என்பது வியப்பு. குமரிமாவட்ட காட்டுப் பகுதி 7.5 கோடி ஆண்டுகள் பழசு என்கிறது வனத்துறை. மாவட்டத்தின் 30% இத்தகைய காட்டுப் பகுதிகள் தான்.

கடல் சார் பகுதிகளை எடுத்துக் கொண்டால், சுமார் 72 கிலோமீட்டர் தூரம் கடற்கரையாய் இருக்கிறது குமரி மாவட்டம். சுமார் 42 கடற்கரைக் கிராமங்கள் மீன்பிடி தொழிலைச் செய்து வருகின்றன. மீன்பிடி தொழிலைச் சார்ந்து சுமார் 37 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன‌ என்கிறது டைரக்டர் ஆஃப் பிஷரீஸ்.

சுமார் 52 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு நமது விவசாயத்தின் வரலாற்றை விட்டு விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. தானியங்கள், காய்கறிகள், பழங்கள், வாழை போன்றவற்றையெல்லாம் இதில் இணைத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக அளவில் 6.07 சதவீதம் எனதத்தளித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை, குமரி மாவட்டத்தில் 44.47 சதவீதம் என வலுவாக இருக்கிறது.

ஆயினும், ஒரு காலத்தில் இயற்கையோடு இணைந்தே இருந்த வாழ்க்கை இன்று பெருமளவு விலகிச் சென்றுவிட்டது என்பதையும் ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டும்.

கால்நூற்றாண்டுக்கு முன்பு எனது கிராமத்து வீட்டைச் சுற்றி நான்கைந்து செங்கவரி மாமரங்களும், ஏகப்பட்ட கொய்யா மரங்களும், பலா மரங்களும், தோட்டத்தில் பனை மரங்களும் இருந்தன. இப்போதோ எல்லாவற்றையும் அழித்து விட்டு அமானுஷ்ய மௌனத்தைக் காற்றிலும் கரைத்திறக்கும் ரப்பர் மரங்கள் மட்டுமே அசைகின்றன.

வயல்களில் நெற்கதிர்கள் தலையாட்டிய காலம் போய் இப்போது ரப்பரோ, வாழையோ தான் வரிசை கட்டி நிற்கின்றன. அதன் விளைவாகத்தான் இப்போது நமது மாவட்டத்தில் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு ரப்பரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. மத்திய அரசின் சர்வதேசக் கொள்கைகள் உள்ளூர் விவசாயத்தையும், விளைச்சலையும், சிறுதொழில்களையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு ஏகாதிபத்ய முதலாளிகளுக்குச் சாதகமான இறக்குமதிகளையே ஊக்குவிக்கிறது என்பது கவலையளிக்கும் விஷயம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நமது சுற்றுச் சூழலைக் குறித்து அதிக கவனம் உடையவர்களாக இருக்க வேண்டும் ?

  1. இது இறைவனின் படைப்பு.

நமது நிலமும் நிலத்தின் வளங்களும், கனிம வளங்களும், காடு மலைகளும், காற்று மண்டலமும், நீர் வளங்களும் எல்லாமே கடவுள் நமக்காக உருவாக்கியவை என்கிறது விவிலியத்தின் முதல் நூலான ஆதியாகமம்.

அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன ( திருவெளிப்பாடு 4 :11) என்கிறது விவிலியத்தின் கடைசி நூலான திருவெளிப்பாடு.

இறைவன் படைக்கின்ற எதையும் பாதுகாக்கும் உரிமை மட்டுமே நமக்கு உண்டு. இறைவனின் படைப்பை அழிக்கும் போது இறைவனை அவமரியாதை செய்கிறோம்.

கழிவுகளால் சுற்றுப் புறத்தை நாசமாக்கும் போதும், ஆலைக்கழிவுகளால் நீர் நிலைகளை அசுத்தமாக்கும் போதும், புகை ஓசை போன்றவற்றால் காற்று மண்டலத்தை கறைபடியச் செய்யும் போதும் நாம் இறைவனின் படைப்பை உதாசீனம் செய்பவர்கள் ஆகிறோம்.

  1. இது இறைவனுக்கே சொந்தம்

“மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம் ( சங்கீதம் 24 : 1 )”

இறைவன் படைத்த இந்த உலகு இறைவனுக்கே சொந்தமானது. இதைப் பயன்படுத்தும் உரிமை மட்டுமே நமக்கு உண்டு. பாழ்படுத்தும் உரிமை நமக்கு இல்லை. வளங்களை அழிப்பதும், நிலங்களைச் சுரண்டுவதும் இறைவனுக்குச் சொந்தமான ஒரு பொருளை அழிப்பது போன்றது. இது நிச்சயம் இறைவனுக்கு ஏற்புடைய செயலாக இருக்கப் போவதில்லை.

“வானமும் உமதே! வையமும் உமதே! பூவுலகையும் அதில் நிறைந்துள அனைத்தையும் நிலைநிறுத்தியவர் நீரே! ( சங்கீதம் 89 : 11 )

  1. இது இறைபுகழ் பாடும்

“மலைகளே, அனைத்துக் குன்றுகளே, கனிதரும் மரங்களே, அனைத்துக் கேதுரு மரங்களே. காட்டு விலங்குகளே, அனைத்துக் கால்நடைகளே, ஊர்ந்து செல்லும் உயிரினங்களே, சிறகுள்ள பறவைகளே, …நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். ( சங் 148 )

இறைவனின் புகழை மலைகளும், மரங்களும், விலங்குகளும் பாடவேண்டும் என்கிறது சங்கீதம். இறைபுகழ் பாடுவது என்பது வாயால் பாடுவதல்ல. இறைவனின் படைப்புகள் அதன் மேன்மையோடு பாதுகாக்கப்படுவது இறைவனை மகிமைப்படுத்துவதே. இறைவன் தான் படைத்த அனைத்தும் நல்லதென்று கண்டார் இறைவன். அவர் நல்லதாய் கண்டதை அல்லதாய் மாற்றாமல் இருப்போம்.

  1. இது இறை மகிமைக்கானது.

“உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள்.( லேவியர் 25 : 14 )”

இறைவன் இலவசமாய்க் கொடுத்ததை சுரண்டுவதும், அதை சுயநல எண்ணங்களினால் நமக்குச் சொந்தமாய் ஆக்கிக் கொள்வதும் பாவமான செயல்கள். எனவே தான், “என்னை பாகம் பிரிப்பவனாக ஏற்படுத்தியவன் யார்?” என இயேசுவே ஒரு முறை கோபம் கொள்கிறார்.

இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்வதே இறைவன் விரும்பும் செயல். நாமோ நிலம், நீர் என அனைத்தையும் விலை பொருட்களாக்கிவிட்டோம். நாளை காற்றும் கூட கலங்களில் விற்கப்படலாம்.

இந்த பூமி இறை மகிமைக்கானது, அதை சுயநல சிந்தனைகளால் சுருக்கி இறைவனை அவமானப் படுத்தாமல் இருப்போம்.

“…..யாவும் உம்மிடத்திலிருந்து வந்தவை. உம் கையினின்று நாங்கள் பெற்றுக்கொண்டவற்றையே நாங்கள் உமக்குக் கொடுத்துள்ளோம் ( 1 குறிப்பேடு 29 : 14 )

  1. இதை இறைவனே பராமரிக்கிறார்.

“வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! ( மத் 6 : 26 )”

கடவுள் படைத்தவற்றை கடவுளே பராமரிக்கிறார். நிலங்களையும், வளங்களையும், உயிர்களையும் பராமரிப்பவர் இறைவனே. நமது வாழ்க்கை இறைவனின் பராமரிப்பில் இருக்கிறது. எனவே தான், “கடவுளுக்குரியவற்றை முதலில் தேடும் போது மற்றவை நமக்கு கூடக் கொடுக்கப்படும்” என்கிறார் இயேசு.

இறைவன் தந்த பூமியை இறைவன் ஆழமாக நேசிக்கிறார். ஒரு பறவையைக் கூட அவர் கவனிக்காமல் விடுவதில்லை. இந்த பூமியை நாம் அழிக்கும்போது அவர் கவலைப்படுகிறார்.

 

  1. நல்லோரே இதைப் பாதுகாப்பர்.

“நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது. உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்; வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.” ( நீதி 12 : 10 )

இறைவனின் படைப்புகளைப் பரிவுடன் பராமரிப்பவர்களை நல்லோர் என்கிறது விவிலியம். உழுது பயிரிடாதவர்கள் அறிவு அற்றவர்கள் என்றும் அது சொல்கிறது. நமக்கு இறைவன் அளித்திருக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதையே இந்த வசனம் விளக்குகிறது.

  1. இறைவனே இதை வளப்படுத்துகிறார்.

“வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்? இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்? மனிதர் வாழா மண்ணிலும் மாந்தர் குடியிராப் பாலையிலும் மழை பெய்வித்துப் பாழ்வெளிக்கும் வறண்ட நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப் பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்? ( யோபு 38 : 25 )

இறைவன் படைத்த நிலத்தை, இறைவனே வளப்படுத்துகிறார். இறைவன் வளப்படுத்தும் நிலத்தை மனிதர் பயன்படுத்த இலவசமாகத் தருகிறார்.

இந்த பூமியும் வளங்களும் நாம் பயன்படுத்துவதற்காக இறைவன் கொடுத்தவை. இதை நாம் வணங்குவதோ, வழிபடுவதோ தவறானது. இறைவனை விட அதிகமாய் பணத்தையோ, நிலத்தையோ நேசிக்கும்போது நாம் விக்கிரக ஆராதனைக்காரராக, சிலைவழிபாட்டுக்காரராக மாறிப் போகிறோம்.

அழகான குமரிமாவட்டத்தை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். வளங்களை அழிக்காமல், சுயநலத்துக்காக அமுக்காமல் இந்த நிலத்தையும், வளங்களையும், அவரது மகிமைக்காகவே பயன்படுத்துவோம்.

 

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s