Posted in Desopakari

சேமிப்பு என்பது செலவழித்தல்._

Image result for Save and christian

சேமிப்பு என்பது செலவு செய்யாமல் இருப்பதல்ல, ஸ்மார்ட்டாக செலவு செய்வது. கஞ்சத்தனமாய் இருப்பதல்ல சேமிப்பு. செலவு செய்ய வேண்டியவற்றுக்குச் செலவு செய்து, செலவு செய்ய தேவையில்லாத விஷயங்களை விலக்குவது தான் இதில் முக்கியம்.

“கையில காசு வருது, தங்கவே மாட்டேங்குது ! பத்து ரூபா வந்தா நூறு ரூபாய்க்குச் செலவு வருது” என புலம்பும் மக்களை நாம் சந்திப்பதுண்டு. “தூரில்லாத பானையும், சேமிக்காத வீடும் ஒண்ணு தான்” என ஊரில் பெரியவர்கள் சொல்வதையும் நாம் கேட்பதுண்டு. இவையெல்லாம் சேமிப்பின் தேவையை நமக்கு உணர்த்துகின்றன.

ஒரு மனிதனுக்கு எழுகின்ற மிகப்பெரிய பிரச்சினைகளைப் பட்டியலிட்டால் பெரும்பாலானவை பணம் சார்ந்ததாகவே இருக்கிறது. எனவே தான் இயேசுவும் தனது போதனைகளில் பணத்தையும், செல்வத்தையும் அதிக அளவில் பேசுகிறார். அன்பைப் பற்றியோ, விசுவாசத்தைப் பற்றியோ, நரகத்தைப் பற்றியோ, சொர்க்கத்தைப் பற்றியோ இயேசு போதித்ததை விட அதிகம் அவர் செல்வத்தைப் பற்றி தான் போதித்திருக்கிறார்.

பணம் வைத்திருப்பதை இயேசு எதிர்க்கவில்லை. பண ஆசை வைத்திருப்பதை அவர் எதிர்த்தார். செல்வத்தின் மீதான ஆசை மிகப்பெரிய பாவம் என விவிலியம் வலியுறுத்திக் கூறுகிறது. இயேசு பணத்தைச் செலவு செய்தார். அவரது சீடர் யூதாஸ் பணத்தைச் சேமித்து வைக்கும் பணப்பை வைத்திருந்தார். எனவே பணம் செலவு செய்வதோ, சேமிப்பதோ வாழ்வின் பாகம் என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளுக்கு எதிர்பதம் என்ன என்று கேட்டால் சாத்தான் என்று சொல்வோம். ஆனால் இயேசு அப்படிச் சொல்லவில்லை. கடவுளுக்கு எதிர்ச்சொல் செல்வம் என்கிறார்.

“எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” என்கிறார் இயேசு.

அதாவது செல்வத்தை அன்பு செய்கிறீர்கள் என்றால் கடவுளை வெறுக்கிறீர்கள் என பொருள். செல்வத்தைச் சார்கிறீர்கள் எனில் இறைவனை புறக்கணிக்கிறீர்கள் என்று பொருள். எனவே யாருக்கு நீங்கள் பணிவிடை செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் ஆன்மீக வாழ்க்கை அளவிடப்படும்.

மனிதர்கள் அன்பு செய்யப்பட வேண்டியவர்கள். பணம் பயன்படுத்தப் பட வேண்டியது. ஆனால் இன்றைய உலகம் பணத்தை அன்பு செய்கிறது, மனிதர்களைப் பயன்படுத்துகிறது. எனவே தான் உலகெங்கும் சுயநலச் சுரண்டல்கள் நிரம்பி வழிகின்றன. செல்வம் நெருப்பைப் போன்றது. அதை அடக்கி, சரியான வகையில் பயன்படுத்தினால் அடுப்பில் எரியும் நெருப்பைப் போல பயனளிக்கும். இல்லையேல் நம்மையே அழிக்கும்.

“நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். ( 1 கொரிந்தியர் 16:2 ) என்கிறது விவிலியம். சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விவிலிய வாசகமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

சம்பாதிப்பது கொஞ்சமாய் இருக்கலாம், அல்லது அதிகமாய் இருக்கலாம் அதில் ஒரு குறிப்பிட்ட அளவைச் சேமிக்க முயல்வதே சரியான வழி. இவ்வளவு சம்பாதித்த பின்பு தான் சேமிப்பேன் என நினைப்பது சேமிப்புக்கு உதவாது !

சேமிப்பு பழக்கத்தை ஞானம் என்றும், சேமிக்கும் பழக்கம் இல்லாதது மதிகேடத் தனம் என்றும் விவிலியம் கூறுகிறது. “ஞானமுள்ளவர் வீட்டில் செல்வமும் அரும்பொருள்களும் இருக்கும்; மதிகேடர் தம் செல்வத்தைக் கரைத்துவிடுவார்.( நீதிமொழிகள் 21:20 ). வருவதையெல்லாம் செலவு செய்வது என்பது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். இறைவன் இன்று தருகின்ற வளங்களில் தேவைக்கு மிஞ்சியவற்றை ஆடம்பரத்துக்காய் செலவழிக்காமல் நாளைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் வைப்பதே நல்லது !

“நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்” என்கிறது நீதிமொழிகள். செல்வத்தைச் சேமிக்க வேண்டும், அதையும் நல்ல விதமாகச் சேமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வசனம் இது. நமது சேமிப்பு நமது எதிர்கால சந்ததிக்கு உதவ வேண்டும். அப்படி உதவ வேண்டுமெனில் நமது பணம் மட்டுமல்ல குணமும் நேர் வழியில் இருக்க வேண்டும். சேமிப்பை சிந்தித்து, நேர்மையை விட்டு விலகினால் வாழ்க்கை அர்த்தமிழக்கும்.

சேமிப்பு மிகவும் அவசியம். இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அவ்வுலக வாழ்வுக்காகவும் நாம் சேமிக்க வேண்டும். சொல்லப் போனால் அந்த சேமிப்பு தான் மிகவும் முக்கியமானது, முதன்மையானது, அவசியமானது ! அதை எப்படிச் சேமிப்பது.

செல்வத்தை விண்ணகத்தில் சேமியுங்கள் என்றார் இறைவன். கேட்பதற்கு விசித்திரமாய் இருக்கும். ஆனால் எது நம்மோடு விண்ணகம் வரும் ? நாம் சேர்த்த செல்வங்கள் அல்ல, நாம் செய்த நல்ல செயல்கள். நாம் ஆத்மார்த்தமாய் செய்த அன்புப் பணிகள். நாம் இறைவனுக்காய் செய்த ஆன்மீகப் பணிகள். இவையே விண்ணகத்தில் சேமிக்கப்படும் செல்வங்கள். மண்ணக செல்வங்கள் பூச்சியும் துருவும் அரிக்கும், விண்ணக செல்வங்களோ காலா காலமும் நிலைக்கும்.

இதைத் தான் இயேசு சொன்னார், ‘உலகத்தில் கிடைக்கும் அழிந்து போகும் செல்வத்தைக் கொண்டு விண்ணகத்துக்கான செல்வத்தைச் சேமியுங்கள்” என்று ! செல்வம் தவறானது அல்ல. ஆனால் அது ஆபத்தானது. க‌த்தி தவறானது அல்ல, கவனமாய்க் கையாள வேண்டியது.

நமக்கு கடவுள் தந்திருக்கும் பொருளாதார எல்லைக்குள் வாழப் பழகுவதே சிக்கனத்தின் முதல் படி. அந்த எல்லைக்குள் எந்த விதமான ஒப்பீடுகளும் இல்லாமல் வாழ்வதே சேமிப்பின் முதல்படி. பிறருடைய வசதிகளையோ, விளம்பரங்களின் வசீகரங்களையோ பார்ப்பது நம்மை ஆபத்தில் கொண்டு போய் விடும். நம்மை இறைவன் பார்த்துக் கொள்வார் எனும் விசுவாசமே சேமிப்பின் துவக்கம்.

விண்ணக வாழ்வுக்கான சேமித்தல் என்பது, இவ்வுலகில் நாம் சேமித்தவற்றை ஏழைகளுக்காகவும், இறைபணிக்காகவும் செலவு செய்வதே !

சேமிப்போம்,

நமது தலைமுறையும், வருகின்ற தலைமுறையும் இவ்வுலகில் வளமோடு வாழ சேமிப்போம்.

சேமிப்போம்,

நமது மரணத்துக்குப் பின் இறையோடு இணைகின்ற நிலைவாழ்வுக்காய் சேமிப்போம்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s