கிறிஸ்தவத்தின் வேர்கள்
நம்பிக்கையின்
மீது
நங்கூரமிறக்கியிருக்கிறது.
கவலை இருட்டின்
கூர் நகங்கள் நகரும்
புலப்படாப்
பொழுதுகளின் வெளிச்சமும்,
தோல்வித் துடுப்புகள்
இழுத்துச் சென்ற
பேரலைப் பொழுதுகளின்
இரையும் கரையும்.
பயங்கள் படுத்துறங்கும்
படுக்கையின் நுனிகளில்
தூக்கம் தொலைக்கும்
இரவுகளின் முடிவுகளும்,
இறையில் வைக்கும்
நிறைவான நம்பிக்கையே.
விசுவாசமே
பார்வையைப் பரிசளிக்கிறது
விசுவாசமே
நோய்கள் பாய்களைச் சுருட்டியோட
பணிக்கிறது.
தனிமனிதன்
நம்பிக்கை இழக்கையில்
பாதைகள் புதைகுழிகளாகின்றன.
குடும்பம்
நம்பிக்கை இழக்கையில்
சின்ன சொர்க்கம் ஒன்று
செத்துப் போகிறது.
நாடு
நம்பிக்கை இழக்கையில்
நல்லரசுக் கனவுகள்
நழுவி உடைகின்றன.
கிறிஸ்தவன்
நம்பிக்கை இழக்கையில்
சிலுவை மரம்
இயேசுவை அறைகிறது.
விசுவாசம்
மலைகளை நகரச் செய்யும்
மரங்களைப் பெயரச் செய்யும்
வாழ்க்கையை
உயரச் செய்யும்.
விசுவாசம் இருக்கையில்
நாம்
சிங்கத்தின் மீதிருக்கும்
சிற்றெறும்பாவோம்,
விசுவாசம் விடைபெறுகையில்
நம்மீது கவலைச் சிங்கங்கள்
கூடாரமடிக்கும்.
ஆன்மீகத்தின் வாசலில்
சந்தேகம் வந்து
சம்மணமிடுகையில்
சத்தமாய் சொல்லிக் கொள்வோம்
என்னை
காணாமல் விசுவசிப்பவன் பாக்கியவான்