Posted in Sunday School

மாடர்ன் கெட்ட குமாரன் / ஊதாரி மைந்தன்

 

காட்சி 1

( அப்பா தேவநாதன், மூத்த மகன் ராபர்ட், இளைய மகன் ஜான் )

வீடு : ராத்திரி நேரம். மணி 11.30. ஜானின் செல்போன் அடிக்கிறது.

( போனில் “ஸ்வேதா காலிங்…”. ஜான் உற்சாகமாகி போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போகிறான். சிரித்துச் சிரித்து உற்சாகமாகப் பேசுகிறான்.

பேசிக்கொண்டே ஒரு தம் பத்த வைக்கிறான். இழுக்கிறான். ரசிக்கிறான் )

உள்ளிருந்து அப்பாவின் குரல்

தேவா : ஜான்… ஜான்.. எங்கேயிருக்கே.

ஜான் : அப்பா… இதோ வரேன்.

( கிசு கிசுத்த குரலில் போனில்… ‘ஹேய்.. வில் கம் டூ ஃபேஸ்புக்…’ என்று சொல்லி விட்டு கீழே வருகிறான். போனை பாக்கெட்டில் போட்டு மறைத்து விட்டு. )

தேவா : இந்த நைட் டைம்ல ஏம்பா மொட்டை மாடில போய் இருக்கே.. காற்று அடிக்குதுல்ல, காச்சல் கீச்சல் வந்துட போவுது.

ஜான் : இல்லப்பா.. உள்ளே கொஞ்சம் புழுக்கமா இருந்துச்சு அதான்..

தேவா: ஏசி ரூம்ல புழுக்கமா ?

ஜான் : அது… இந்த.. இயற்கை காற்று மாதிரி வராதுல்ல… ( சமாளிப்பு )

தேவா : காற்று எப்பவும் வீசிட்டே தான் இருக்கும். தூக்கம் எப்பவும் கிடைக்காதுப்பா. போய் தூங்கு.

ஜான் : சரிப்பா..

தேவா : மிட் நைட் வரைக்கும் முழிச்சிருந்தா உடம்புக்கு ஆவாது.

ஜான் : யா… தூங்க தான் போறேன். எனக்கும் தூக்கம் வருது…

தேவா : குட் நைட்..

ஜான் : குட் நைட் டாட். (போலியாய் ஒரு கொட்டாவி விடுகிறான் .. அப்பா போனதும் திருட்டுப் பார்வை பார்க்கிறான். )


காட்சி 2 :

அறையில் போய் கதவைப் பூட்டி விட்டு லேப்டாப்பை ஆன் பண்ணுகிறான். ஸ்வேதா ஆன்லைனில்.

ஹேய்.. என்கிறான்.

கேமரா வெளியே இருட்டையும், இருட்டில் இருக்கும் வீட்டையும் காட்டுகிறது.

காட்சி 3 :

( காஃபி ஷாப் )

ஜான் : ஹாய் டா…

ஸ்வேதா : பொறுக்கி.. எவ்ளோ நேரம் தான் வெயிட் பன்றது.

ஜான் : சாரி டா… கிளம்பும்போ டாடி வந்துட்டாங்க.

ஸ்வேதா : ம்ம்.. எவ்வளவு நாள் தான் டாடி டாடின்னு சுத்திட்டு இருப்பே..

ஜான் : நான் டாடி ஆகற வரைக்கும் ..

ஸ்வேதா : ஆமா…… என்னவோ.. போ.. லைஃப் ஈஸ் ஷார்ட்… டோன்ட் ரிக்ரட் லேட்டர்.

ஜான் : அப்படியெல்லாம் ஒண்ணும் ஆவாது…

ஸ்வேதா : ஆமா… ஆந்தை மாதிரி நைட் ஃபுல்லா முழிச்சு முழிச்சி பேசறது. காலைல அப்பா கூட தோட்டத்துல போய் மாடு மாதிரி உழைக்கிறது. என்ன பொழப்புடா..உனக்கு ?

ஜான் : வாட்..டு..டூ ? அவரு பாசக்கார அப்பா.. (சிரிக்கிறான் )

ஸ்வேதா : நோ.. பணக்கார அப்பா…

ஜான் : சோ…

ஸ்வேதா : கெட் த ஷேர் அன்ட் கம் அவுட்.

ஜான் : என்ன சொல்றே ?

ஸ்வேதா : நான் என்ன மேஜர் சுந்தர் ராஜனா ? இங்கிலீஷ்ல சொன்னதை அப்படியே தமிழ்லயும் சொல்ல ?

ஜான் : அப்படியில்ல.. ஷேர் எல்லாம் வாங்க சொல்றே

ஸ்வேதா : ஆமா, நான் ஆப்பிள் கம்பெனியோட ஷேரையா வாங்க சொன்னேன். உனக்கு உரிமையான பணம்டா அது.

ஜான் : இப்போ வாங்கி என்ன பண்றது ?

ஸ்வேதா : பல்லு இருக்கும்போ தான் பக்கோடா சாப்ட முடியும். இப்போ பணம் இருந்தா வி கேன் என் ஜாய்…

ஜான் : ம்ம்.. கேக்க நல்லா தான் இருக்கு.

ஸ்வேதா : ஆனா கேக்க மாட்டேங்கிறியே.. உன்…..அப்பன் கிட்டே.

ஜான் : இல்ல.. அண்ணனுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவான்.

ஸ்வேதா : நீ என்ன அண்ணன் பணத்தையா கேக்கறே ? உன் பணம் மேன்.. இட்ஸ் யுவர் பிளடி மணி… யு ஹேவ் எவ்ரி ரைட்ஸ்.

ஜான் : ம்ம்ம்…

ஸ்வேதா : சரி, நான் ஒரு ஐடியா சொல்றேன். பீட்டர், வில்சன், ஜோஸ் இவங்களையும் சேத்துப்போம். உங்க அப்பா கிட்டே பணம் வாங்கு. நாம ஒரு பிஸினஸ் ஆரம்பிப்போம்.

ஜான் : பிஸினஸ் ?

ஸ்வேதா : அதையும் தமிழ்ல சொல்லணுமா ? “தொழில்”

ஜான் : சே.. நாட் லைக் தேட். இப்பவும் நான் தொழில் தானே செய்றேன் ( புன்னகைக்கிறான் )

ஸ்வேதா : நீ செய்றதுக்கு பேரு பிஸினசா ? புல் ஷிட்… அடிமைத்தனம்…

ஜான் : சோ.. நீ இப்போ என்ன தான் சொல்றே ?

ஸ்வேதா : ஐயோ.. மறுபடியும் முதல்ல இருந்தா… நாளைக்கு நாம எல்லாரும் மீட் பண்ணுவோம். அப்போ பேசுவோம்.

ஜான் : ம்ம்ம்.. ஓகே.. நோ..பிராப்ளம்.


காட்சி 3 :

( ஒரு வீடு… போர்ட்டிகோவில் எல்லோரும் இருக்கிறார்கள் )

ஆட்டோவில் வந்து இறங்குகிறான் ஜான்.

ஸ்வேதா, பீட்டர், வில்சன், ஜோஸ் நான்குபேரும் அங்கே காத்திருக்கிறார்கள்

ஸ்வேதா : வந்துட்டாருப்பா தங்க மகன்

பீட்டர் : தங்க மகன் இல்லப்பா.. தந்தை மகன்.

ஜான் : ஆரம்பிச்சாச்சா… என்னைக் கலாய்க்கலேன்னா உங்களுக்கு பொழுது போவாதே !

வில்சன் : கலாய்க்கல.. கவலையா இருக்கு…

ஜான் : கவலையா ?

வில்சன் : பின்னே.. ஆடி கார்ல வர வேண்டியவன் ஆட்டோல வரே…

பீட்டர் : ஐபோன் வெச்சிருக்க வேண்டியவன் … அழுக்கு போன் வெச்சிருக்கே

ஜோஸ் : ரோலக்ஸ் வாட்ச் கட்ட வேண்டியவன், லொடக்கு வாட்ச் கட்டியிருக்கே.

ஜான் : ஹே…ஹே.. எனஃப்… இப்போ வந்த விஷயத்தைப் பேசுவோம்.

பீட்டர் : ஹாட்டான மேட்டர் பேசறதுக்கு முன்னாடி சில்லுன்னு சரக்கடிக்கிறது சிறப்பான விஷயம்.

ஜோஸ் : கூடவே சிப்ஸ் இருந்தா மிகச் சிறப்பான விஷயம்.

ஜான் : கூடவே தம் இருந்தா… மிக மிகச் சிறப்பு…

( எல்லோரும் சிரிக்கிறார்கள். சரக்கு பாட்டில் வருகிறது. ஆளுக்கொரு கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு குடிக்கிறார்கள்.. .சற்று நேரத்துக்குப் பின்… )
ஸ்வேதா : ஓகே.. லெட்ஸ் கெட் பேக் டு த பிஸினஸ். புதுசா ஏதாச்சும் ஒரு பிஸினஸ் பண்ணுவோம். இன்னோவேட்டிவா.. அஞ்சே வருஷத்துல அஞ்சு பேருமே செட்டில் ஆயிடலாம். நம்ம கிட்டே திறமை இருக்கு. ஒரே குறைபாடு, பணம் தான். அது உன்கிட்டே மட்டும் தான் இருக்கு. நீ மட்டும் நினைச்சா…

பீட்டர் : உன் பேர்லயே கம்பெனி ஆரம்பிக்கலாம்… இல்லேன்னா 90 % ஷேர் உன்பேர்ல போட்டுக்கலாம்.

வில்சன் : மொபைல், டேல்பெட் எல்லாம் இன்னிக்கு செம ஹாட்.. அந்த மாதிரி ஒரு ஷோரூம் போடலாம்.

ஜோஸ் : கூடவே லேப்டார், சாஃப்ட் வேர்ஸ் கூட விக்கலாம்.

பீட்டர் : இல்லேன்னா பீட்ஸா ஹட் மாதிரி ஒரு ரெஸ்ட்டாரன்ட் ஆரம்பிக்கலாம்.

ஸ்வேதா : நாம ஒரு மல்டி பிளக்ஸ் ஷோரூம் ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஸ்டேட்லயும், ஒவ்வொரு விஷயம் ஸ்பெஷலா இருக்கும். உதாரணமா, ஜெய்ப்பூர்ல கலைப்பொருட்கள் ஸ்பெஷல், மும்பைல துணிகள் ஸ்பெஷல், சிங்கப்பூர் – மலேஷியால போன் கம்ப்யூட்டர் பொருள்களெல்லாம் கிடைக்கும்…

வில்சன் : பாண்டிச்சேரில சரக்கு கிடைக்கும்.

ஸ்வேதா : ஹே… லூசு.. சீரியசா பேசிட்டிருக்கேன்ல.

ஜான் : ம்ம்.. எனக்கு இந்த ஐடியா புடிச்சிருக்கு… பட்.. அப்பா கிட்டே போய்.. எப்படி ?

பீட்டர் : மச்சி.. நீ இப்படி பயந்தாங்கொள்ளியா இருந்தா உன் அண்ணா உனக்கு அல்வா குடுப்பான், பாத்துக்கோ.

ஜான் : சே..சே.. அவன் அப்படியில்லை.

பீட்டர் : மச்சி.. சொல்றேன்னு தப்பா நினைக்காதே.. அப்பன் இருக்கும்பவே சொத்தைப் பிரிச்சுகிட்டா உனக்கு தான் நல்லது.

வில்சன் : உயில்ல உன் அப்பா உனக்கு எதுவுமே எழுதலேன்னா என்ன பண்ணுவே ?

ஸ்வேதா : இப்பவே உன் அண்ணனை தூக்கித் தலைல வெச்சு ஆடறாரு உங்க அப்பா… சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்

( இசை… பேச்சுகள் கேட்கவில்லை… இசை… காட்சி… நேரம் செல்கிறது )

ஜான் : நீங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு. எனக்கும் அந்த சந்தேகம் உண்டு. நாளைக்கே நான் அப்பனைப் புடிக்கிறேன், மேட்டரை முடிக்கிறேன். நீங்க கவலையே படாதீங்க.

மற்றவர்கள் : கிரேட் மச்சீ !! ஆல் த பெஸ்ட்.

காட்சி 4

( அப்பா, மூத்த மகன், இளைய மகன் )

தேவா : ராபர்ட்… ரப்பர் தோட்டத்துக்கு ஒரு இருபது பேரை அனுப்பு. ஷீட் அடிச்சதெல்லாம் காஞ்சிடுச்சு, நம்ம லாரியை வரச்சொல்லி எக்ஸ்போர்ட்க்கு ஏற்பாடு பண்ணிடு.

ஜான் : அப்பா…

தேவா : கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா…

தேவா : ஆங்… மறந்துட்டேன்… நம்ம வாழை வயல்ல உரம் போடணும். நாலு ஏக்கராக்கும் உரம் போடணும்ன்னா எப்படியும் ஒரு பத்து பேராவது வேணும். ஒரு இருநூறு மூட்டை பாஸ்பேட், இருநூறு மூட்டை யூரியா வேணும். ஏற்பாடு பண்ணிடு.

ஜான் : அப்பா, கொஞ்சம் பேசணும்.

தேவா : கொஞ்சம் வெயிட் பண்ணு ஜான்… வரேன்..

தேவா ; ராபர்ட்.. சொன்னதெல்லாம் புரிஞ்சுதுல்ல… எல்லாம் கூட நின்னு பாத்துக்கோ சரியா ?

ஜான் : அப்பா…

தேவா : ஏம்பா.. கொஞ்சம் வெயிட் பண்ண மாட்டியா ? வேலை பிரிச்சு குடுத்துட்டு இருக்கேன்ல…

ஜான் : நான் சொந்தமா பிஸினஸ் பண்ண போறேன்.

தேவா : வாவ்.. ரொம்ப சந்தோசம். இப்பவாவது புத்தி வந்துச்சே.. சரி..சரி.. நம்ம முந்திரித் தோட்டம் முழுசா நீயே எடுத்து நிர்வாகம் பண்ணு.. இப்போ நல்ல ரேட் போவுதுப்பா… கேரளா முந்திரி ஆலை முதலாளிகள் கிட்டே பேசி ஒரு ஆலையைக்…………………….

ஜான் : டாட்… நான் இங்கேயெல்லாம் வேலை பண்ண முடியாது. வேற பிஸினஸ்…

தேவா : வே..வேற பிஸினசா ? ம்ம்.. சரி,, சொல்லு என்ன பிஸினஸ்,,

ஜான் : இதெல்லாம் உங்களுக்குப் புரியாதுப்பா…

தேவா : சொன்னா புரிஞ்சுக்க டிரை பண்றேன்…

ஜான் : இட்ஸ்… மல்டிபர்ப்பஸ் காம்ப்ளக்ஸ்… சம்திங் ஸ்பெஷல் டாட்.

தேவா : ம்ம்.. சரி, அதுக்கென்ன பண்ணிடுவோம்.

ஜான் : நான் பண்ண போறேன்… தனியா.

தேவா : இப்ப என்ன தான் சொல்ல வரே ?

ஜான் : எனக்கு பணம் வேணும்.

தேவா : சரி.. தரேன். எவ்ளோ வேணும்ன்னு சொல்லு, நான் தரேன். நீ பிஸினஸ் பண்ணு.

( அப்போது அண்ணனும் முகம் கோபமடைகிறது.. தலையை அசைக்கிறான் )

ஜான் : நோ டாட். எனக்கு அப்படி வேண்டாம். என்னோட ஷேர் குடுங்க..

( அப்பா அதிர்ச்சியாகிறார் )

தேவா : என்னப்பா சொல்றே ? ஷேரா ?

ஜான் : ஏன் ? அப்படி ஒண்ணு தர மாதிரியே ஐடியா இல்லையா ?

தேவா : ஏன்பா இப்படியெல்லாம் பேசறே ?

ராபர்ட் : அப்பா கிட்டே இப்படியெல்லாம் பேச உனக்கு எப்படிடா தைரியம் வந்துது..

ஜான் : டேய்… உன் வேலை ஜிங்கியடிக்கிறது. அதைப் போய் அடி. உனக்கு வீட்ல என்ன உரிமை இருக்கோ, அது எனக்கும் இருக்கு.. ஓகே.. டோன்ட் பி ஓவர் ஸ்மார்ட்.

தேவா : உங்களுக்குள்ள எதுக்கு சண்டை.. உன்னை யாரோ தப்பா வழிநடத்தறாங்க ஜான்…

ஜான் : டாடி.. பிளீஸ் ஸ்டாப் த நான்சன்ஸ். என் பிரண்ட்ஸ் பத்தி தப்பா பேசறதே உங்களுக்கு வேலையா போச்சு. தருவீங்களா மாட்டீங்களா ? அதை மட்டும் சொல்லுங்க.

தேவா : சொத்தெல்லாம் நான் செத்தப்புறம் பிரிக்க வேண்டியது டா…

ஜான் : அதுக்காக செத்துப் போங்கன்னா சொல்ல முடியும் ?

( தேவா அதிர்ச்சியாகிறார். .. அண்ணன் கோபத்தில் வெளியேறுகிறான் )

தேவா : ஓகே.. என்னோட சொத்தில உனக்கு என்னென்ன வருமோ அதைக் கணக்கு பாத்து உனக்கு தரேன்.

ஜான் : எவ்ளோ நாள்ல தருவீங்க.

தேவா : ஒன் வீக்ல உன்னோட அக்கவுண்ட்ல பணத்தை டிப்பாசிட் பண்ணிடறேன்.

ஜான் : ( ஒரு வெற்றிப் புன்னகை சிந்துகிறான் – வீட்டுக்கு வெளியே சென்று போன் செய்கிறான் )

ஜான் : ஹேய்.. சக்ஸஸ்.. டாட் சொத்தைப் பிரிக்க ஒத்துகிட்டாரு. லெட்ஸ் ராக் !

(சொல்லி விட்டு சிரிக்கிறான். அதை சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை கண்களைத் துடைத்துக் கொள்கிறார். )

காட்சி 5
தேவா : ஜான்.. ஜான்…

ஜான் : ம்ம்..

தேவா : இதாப்பா உன்னோட புது அக்கவுண்ட், டிபிட் கார்ட் ( மேஜை மீது வைக்கிறார் ). உனக்கு சேரவேண்டிய பணம் முழுசும் இதுல போட்டிருக்கேன். அறுபது கோடி ரூபா இருக்கு. பிஸினஸ் ஆரம்பி. வாழ்த்துகள்.

ஜான் : ( பேசாமல் சூட்கேசில் துணிகளை எடுத்து வைக்கிறான். லேப்டாப் பையை தூக்குகிறான். பொருட்களை பேக் செய்கிறான் )

தேவா : ஜான்.. எதுக்கு இப்போ பேக்கிங் ?

ஜான் : நான் போறேன்.

தேவா : அதான் உன் ஷேர் புல்லா குடுத்துட்டேனே.. ஏன் போறே ?

ஜான் : என்னோட சொத்தெல்லாம் வந்துச்சு.. இனிமே நான் எதுக்கு இங்கே ?

தேவா : அப்போ நானோ, அண்ணனோ உன் சொத்து இல்லையா ஜான் ?

ஜான் : டாட்… ஓவர் சீன், சென்டிமென்ட் எல்லாம் வேண்டாம். நான் என் வழியே போறேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க.

( ஜான் எல்லா பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். தந்தை சோகமாய் பார்த்துக் கொண்டே இருக்கிறார் )

காட்சி 6

( ஜான் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து குஷியாய் சிரிக்கிறார்கள்.. தண்ணியடிக்கிறார்கள் )

ஸ்வேதா : ஜான், யூ ஆர் சூப்பர்ப்.. நீ ஹீரோடா… இனிமே தான் நம்ம லைஃபே சேஞ்ச் ஆக போவுது.

மற்றவர்கள் : எஸ்.. கலக்கிடுவோம்

நண்பன் : சீரியசா திங்க் பண்ணி, பிளான் போடணும்.

ஜான் : கமான் … 60 கோடி ரூபாய் ! முதல்ல கொஞ்ச நாள் என் ஜாய் பண்ணுவோம். ஊர் ஊரா சுத்துவோம், பீர் பீரா ஊத்துவோம்.. அப்புறம் பாத்துக்கலாம்.

நண்பர்கள் : சியர்ஸ் மச்சான். நீ தெய்வம்டா…


காட்சி 7

( பாட்டு . பாடலில் தண்ணியடிப்பது, பெரிய உணவகங்களுக்குப் போவது, டான்ஸ் கிளப்கள் என திரிகிறது. )

( ஸ்வேதா, பீட்டர், வில்சன் & ஜோஸ் நான்குபேரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் )

ஸ்வேதா : கைஸ்… இப்படியே போச்சுன்னா எல்லாத்தையும் அவனே அழிச்சுடுவான். நாம நம்ம அக்கவுண்ட் க்கு கொஞ்சம் பணம் டிரான்ஸ்பர் பண்ணியாவணும்.

பீட்டர் : எப்படி ?

ஸ்வேதா : நான் பாத்துக்கறேன். பட் ஒன் திங். நான் உங்க அக்கவுண்ட்க்கு எல்லாம் எவ்ளோ வாங்கி தரேனோ அதுல 10% எனக்கு ! டீல் ?

மற்றவர்கள் : ஷ்யூர்.

( எல்லோரும் சிரிக்கிறார்கள் )

காட்சி 8

( தந்தையின் வீடு )

( போன் அடிக்கிறது. தந்தை ஓடிப் போய் போனை எடுக்கிறார். ஓடும் போது செயர் தடுக்கி விழுகிறார்.. ஆனாலும் உடனே பதறிப் போய் போனை எடுக்கிறார். எடுத்ததும் அழைக்கிறார் )

தேவா : ஹே.. ஜான்.. மோனே…

மறு முனை : ….

தேவா : ஓ.. செண்பகநாதனா… ம்ம். சொல்லுங்க…

மறுமுனை : …

தேவா : சரி.. நான் அப்புறம் பேசறேன்.


காட்சி 9

( ஸ்வேதா – ஜான் )

ஸ்வேதா : ஜான் … நாம இனிமேலும் இப்படி பொறுப்பில்லாம ஜாலி அடிக்கக் கூடாது. பிஸினஸ் ல இறங்கிடுவோம்.

ஜான் : சீரியஸ்லி ?போதைக் கண்களோடு… கேட்கிறான்.

ஸ்வேதா : எஸ்… டியர்.. நாம ஜெயிக்கணும். நீங்க பெரிய வெற்றியாளரா மாறணும்.

ஜான் : ஓகே.. ஐ ஆம் ரெடி…

ஸ்வேதா : நம்ம தனித்தனியா, ஆளுக்கொரு ஸ்டேட் போயி அங்க இருக்கிற மார்கெட்டிங் ஸ்ட்ராட்டஜியைப் படிக்கணும். அப்புறம் Product Negotiation பண்ணணும்.

ஜான் : ம்ம்.. ஓகே.. பட்.. நீ மட்டும் என் கூட வா… ( கொஞ்சலாய் )

ஸ்வேதா : ஷ்…. சீரியசா பேசிட்டிருக்கேன்ல .. கேளுங்க முதல்ல

ஜான் : ம்ம்.. சொல்லு… பண்ணிடுவோம்.

ஸ்வேதா : மத்த பசங்க கிட்டே பணம் இல்லை. எல்லாரோட அக்கவுண்ட்லயும் கொஞ்சம் பணம் டிரான்ஸ்பர் பண்ணி விட்டேன்னா, அவங்க தனியா போய்ட்டு வருவாங்க.

ஜான் : பணம் டிரான்ஸ்பர் பண்ணவா ?

ஸ்வேதா : யா.. கணக்கு ஒழுங்கா காட்ட சொல்லிடலாம்.

ஜான் : அதுக்கில்ல….

ஸ்வேதா : ஹேய்.. எங்களையே நம்பிக்கையில்லையா ?

ஜான் : சே..சே. நம்பிக்கை இல்லாம இல்ல… பட்.. ( இழுக்கிறான், தலையைச் சொறிகிறான் )

ஸ்வேதா : இன்சல்டிங் ஆ இருக்கு ஜான். நான் கிளம்பறேன். நீ இவ்ளோ சந்தேகப்படுவேன்னு நான் நினைக்கவேயில்லை.

ஜான் : ஹே.. கூல் டவுன். நான் என்ன சந்தேகமா பட்டேன்.. ஐம்.. திங்கிங் அவ்ளோ தான்.

ஸ்வேதா : ம்ம்ம்ம்

ஜான் : என்ன டல்லாயிட்டே. டேக் மை லேப்டாப். நான் இப்பவே டிரான்ஸ்பர் பண்றேன்…

ஸ்வேதா : ம்ம். சீ ஜான். நாம 5 பேரும் எப்பவுமே அடுத்தவங்களோட சக்ஸஸ் பற்றி தான் யோசிக்கணும். நம்பிக்கை இல்லேன்னா எதுவும் செய்ய முடியாது.
நம்பிக்கை தான் நல்லதுன்னு நீ நம்பணும்.

ஜான் : பிளீஸ்.. ஸ்டாப் த லெக்சர்…

ஸ்வேதா : லேப்டாப் ஓப்பன் பண்ணுகிறாள்

ஜான் : பாஸ்வேர்ட் போடு..

ஸ்வேதா : இல்ல.. நீயே போடு..

ஜான் : உன் பேரு தான் .. ஸ்வேதா123

ஸ்வேதா : அட.. டச் பண்ணிட்டேடா…

ஜான் : இல்லையே… ( குறும்பாய் )

ஸ்வேதா : சீ… உனக்கு வேற வேலையே இல்லை.

ஜான் : ஏன்.. இந்த வேலை சரியில்லையா ?

ஸ்வேதா : வேலை எல்லாம் சரியா தான்.. ம்ம்ம்.. இப்போ டிரான்ஸ்பர் பண்ணு, பண்ணிட்டு மத்த வேலையைப் பாப்போம்.

ஜான் : சரி, இப்போ எவ்ளோ டிரான்ஸ்பர் பண்ணலாம் ?

ஸ்வேதா : ( மனக் குரல் : ஒரு பத்து இலட்சம் கேட்டுப் பாப்போம் )

ஸ்வேதா : ஒரு பத்து…

ஜான் : ஹே.. பத்து அதிகம். ஒண்ணு போடறேன். ஆளுக்கு ஒரு கோடி. அப்புறம் பாத்துக்கலாம்.

ஸ்வேதா : அதிர்ச்சியில் வாயைப் பிளக்கிறாள். கண்ணில் மகிழ்ச்சி.. ஜானின் தோளில் சாய்ந்து.. ‘உன் விருப்பம் டா.. ‘ என சிணுங்குகிறாள்.

காட்சி 10

( ஜானின் தந்தையின் வீடு )
காலிங் பெல் அடிக்கிறது. தந்தை ஓடிப் போய் பார்க்கிறார்.

தேவா : ஜான்… ஜான்.. நீயா… ( என கேட்டுக் கொண்டே திறக்கிறார். வெளியே ராபர்ட் )

ராபர்ட் : ஆமா.. எப்பவும் அவன் நினைப்பாவே கெடங்க. அவன் எவ கூட சுத்திட்டு இருக்கானோ ? கேட்டதும் பணத்தையெல்லாம் குடுத்துட்டீங்க. முடியாதுன்னு சொல்லியிருக்கலாம். இல்லேன்னா கொஞ்சமா குடுத்திருக்கலாம்.

தேவா : அவன் என் பையன்டா…

ராபர்ட் : பையன் மாதிரி நடந்துக்கணும். என்னைப் பாருங்க…

தேவா : ம்ம்ம்… சோகத்தில் உள்ளே செல்கிறார்.

காட்சி 11

( பாடல் வரிகள். ஒவ்வொருவரும் ஜாலியாய் திரிகிறார்கள். )

ஸ்வேதா, மற்றும் நண்பர்கள். ( ஜான் இல்லை )

ஜோஸ் : ஸ்வேதா.. நீ கலக்கிட்டே… ஆளுக்கு ஒரு கோடி. ஐமீன்.. 10 லட்சம் கமிஷன் போக 90 லட்சம்.

பீட்டர் : கிடைச்சதை நம்ம நல்லா செலவு பண்ணுவோம். என் ஜாய் பண்ணுவோம். இன்வெஸ்ட் பண்ணுவோம்.

வில்சன் : ஹே.. மத்ததையும் கறக்கணும்…

பீட்டர் : கொஞ்சம் பொறுமையா பண்ணுவோம்.

வில்சன் : பண்றதை சட்டுபுட்டுன்னு பண்ணிடணும். மனுஷனோட மனசு வானிலை அறிக்கை மாதிரி, மாறிகிட்டே இருக்கும். நான் ஹெல்ப் பண்றேன்.

பீட்டர் : அவன் தங்க முட்டையிடற வாத்துடா.. அறுக்க கூடாது.

வில்சன் : அவன் வாத்து இல்ல, அடை கோழி.. சொந்தமா அவனால முட்டை போட முடியாது. அடைகாப்பான் அவ்ளோ தான்.

பீட்டர் : லூசு மாதிரி பேசாதடா…

ஸ்வேதா : நோ… வில்சன் சொல்றது தான் சரி. நாம எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் பணத்தை கறந்துட்டு கம்பி நீட்டிடணும்.

வில்சன் : சீ.. தட்ஸ் மை கேள்..

ஸ்வேதா : பிளான் பண்ணி வெச்சிருக்கேன். அவனோட அக்கவுண்ட் ல இருந்து பணத்தை நம்ம அக்கவுண்ட் க்கு நாம தான் மாத்தணும்.

பீட்டர் : எப்படி ? உனக்கு அவன் பாஸ்வேர்ட் தெரியுமா ?

ஸ்வேதா : அவனோட சிஸ்டம் பாஸ்வேர்ட் எனக்கு தெரியும். பட் அவனோட பேங்க் பாஸ்வேர்ட் எதுவும் தெரியாது.

ஜோஸ் : தென் ஹௌ ?

ஸ்வேதா : வேணும் சக்க வேரிலும் காய்க்கும் ன்னு சொல்லுவாங்க, இப்போ சாஃப்ட்வேரிலும் காய்க்கும்.

ஜோஸ் : புரியற மாதிரி சொல்லு

ஸ்வேதா : ஆட்டோமேஷன் சாஃப்ட்வேர் ஒண்ணு இருக்கு. அதை அவனோட சிஸ்டம்ல இன்ஸ்டால் பண்ண போறேன். பண்ணிட்டு ஹைட் ஆப்ஷன் போட்டுடுவேன். பேக்ரவுண்ட்ல அது ஓடிட்டே இருக்கும். அந்த சிஸ்டம்ல அவன் என்னென்ன பண்றானோ அதெல்லாம் ஒரு ஃபைல்ல ஸ்டோர் ஆகும். நெக்ஸ் ஒன் வீக்ல ஒரு நாள் கூடவா அவன் பேங்க் ஐடில போக மாட்டான் ??

வில்சன் : வாவ்.. வாட் அ கிளவர் ஐடியா… எழும்பி வந்து ஸ்வேதாவின் தோளில் கட்டிக் கொள்கிறான்.

ஸ்வேதா : வில்சன்.. ஸ்டாப் இட். நீயும் நானும் லவ் பண்ற விஷயம் ஜானுக்கு தெரியாது. தெரிஞ்சா விஷயம் பஞ்சராயிடும். சோ,, நோ கொஞ்சல்… அன்டில் மணி செட்டில்ட் !

( எல்லோரும் சிரிக்கிறார்கள் )


காட்சி 12 :

( தேவா வீட்டு வாசலில் அமர்ந்து பாதையையே பார்த்துக் கொண்டிருக்கிறார் )

தேவா ( மனக் குரல் ) : ஜான்.. நீ எங்கப்பா இருக்கே ? உன்னை நான் எவ்ளோ ஆசையா தேடறேன். அப்பாவைத் தேடணும்ன்னு தோணலையா ? ஒரு போன் பண்ணணும்ன்னு கூட தோணலையா ? உன் போன் நம்பரையும் மாத்திட்டே. நீ எங்கே இருக்கேன்னும் தெரியல. ஜான்.. ஜான்.. மிஸ் யூ மை சன்…


காட்சி 13 :

ஜான் படுக்கையை விட்டு எழும்புகிறான்

எழும்பி பல் தேய்க்கிறான். டிரஸ் போடுகிறான்.

ஜான் ( மனதுக்குள் ) : ஸ்வேதா இன்னும் வரவேயில்லையே… .. ( போனைத் தேடுகிறான். அங்கும் இங்கும் பார்க்கிறான்.. போனைக் காணோம் )

டேபிளில் பார்க்கிறான். அவனுடைய லேப்டாப்பையும் காணோம். அப்போது தான் உணர்கிறான். அவனுடைய பர்ஸ், வீட்டிலிருந்த பொருட்கள், துணி மணிகள் எதையும் காணோம்.

( ஒரு குட்டி பிளாஷ் பேக். நேற்று இரவு. ஜான் தண்ணியடித்து போதையில் கிடக்கிறான். அப்போது ஸ்வேதா ஜானின் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே வருகிறாள் )

ஸ்வேதா : கீ என் கிட்டே இருக்கிறது எவ்ளோ வசதியா இருக்கு ( சிரிக்கிறாள் )

வில்சன் : பாஸ்வேர்ட் ஏ உன் பேரு வெச்சவன், கீயை உன் கைல வெக்க மாட்டானா என்ன ? ( சிரிப்பு )

( வீட்டுக்குள் நுழைகிறார்கள். )

ஸ்வேதா : எல்லாத்தையும் எடுங்க. பர்ஸ், போன், லேப்டாப் ரொம்ப ரொம்ப முக்கியம். அவன் பணத்தை புல்லா கறந்தாச்சுன்னு அவன் கண்டுபிடிக்கிறதுக்குள்ள நாம பறந்துடணும்.

வில்சன் : ஆளையே போட்டுடலாமா ?

ஸ்வேதா : லூசு ! செத்த பாம்பை அடிக்கவா ? தேவையில்லாம ஜெயில்ல கிடக்கவா ?

ஜோஸ் : போலீசுக்கு போவானா ?

ஸ்வேதா : போனா போகட்டும். பணம் இருக்கு, எல்லார் வாயையும் அடச்சுடலாம். மோர் ஓவர், அவனோட ஐடி, அவனோட ஐபி, அவனோட சிஸ்டம், அவனே டிரான்ஸ்பர் பண்ணியிருக்கான். இட்ஸ் கிளீன் !

( பேச்சு இல்லாமல் இசை. வீட்டை காலி செய்கிறார்கள் )காட்சி 14

( ஒரு பப்ளிக் பூத்தில் இருந்து தனது பேங்க் குக்கு போன் பண்ணுகிறான் )

ஜான் : ஹேய்… என் அக்கவுண்ட் பேலன்ஸ் பாக்கணும்.

பேங்க் ஊழியர் : ஒன் மினிட் சார்.. ஐ நீட் யுவர் டேட் ஆஃப் பர்த், அட்ரஸ்,….

ஜான் : ஷ்யூயர் ( சொல்கிறான் )

பேங்க் : நில் பேலன்ஸ் சார்..

ஜான் : நில் ?? ஜோக் அடிக்கிறீங்களா ? இன்னும் 50 கோடி இருக்கணுமே.. கேன் யூ பிளீஸ் செக் ?

பேங்க : சார், நேற்று நீங்க நாலு அக்கவுண்ட்க்கு மொத்த பணத்தையும் டிரான்ஸ்பர் பண்ணியிருக்கீங்க.

ஜான் : வாட் த ஹெல்.. எப்படி ? நான் எதுவும் பண்ணலையே.

பேங்க் : சார்.. உங்க கிட்டே போன்ல பேசி கன்ஃபர்ம் வாங்கியிருக்காங்க. அப்புறம் ஒவ்வொரு டிரான்சாக்ஷனுக்கும் உங்க மொபைல்ல ஓ.டி.பி அனுப்பியிருக்காங்களே சார்.

ஜான் : ஓ..ஷிட்… எல்லாம் பிளான் பண்ணியிருக்காங்க..

பேங்க் : சார்.. எனி பிராப்ளம்.

ஜான் : யா… பட்.. வில் கால் யூ..


காட்சி 15

ஜான் நண்பர்களைத் தேடி அலைகிறான். காணோம்.

பசிக்கிறது,. கையில் காசு இல்லை. பெட்டிக்கடையில் போய் பேசுகிறான்.

ஜான் : (தயங்கித் தயங்கி ).. பசிக்குது…

கடைக்காரர் : பசிக்குதுன்னா சாப்டு..

ஜான் : காசில்ல… அதான்..

கடைக்காரர் ( அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு ) சட்டையைக் கழற்றி வெச்சுட்டு சாப்டு..

ஜான் : ஐயோ.. சட்டையில்லாம.. அசிங்கமா…

கடைக்காரர் : ஓ… அப்போ தொரை போய் காசு சம்பாதிச்சுட்டு வாங்க…

ஜான் : இல்ல.. ஏதாச்சும் ஒரு வேலை குடுத்தீங்கன்னா..

கடைக்காரர் : சரி.. போய் பாத்திரம் எல்லாம் கழுவி வை.. சாப்பாடு போடறேன்.

( ஜான் உள்ளே போய் பாத்திரம் கழுவுகிறான். கடைக்காரர் ரெண்டு இட்லியை தட்டில் வைத்து கொடுக்கிறார். ஜானின் கண் முன்னால் பழைய நினைவுகள் எல்லாம் வருகின்றன )


காட்சி 16

ஜான் : ( பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் – ஒரு நபரிடம் ) சார்.. கேன் ஐ கெட் 100 ருப்பீஸ் ?

நபர் : ஓ.. இப்பல்லாம் இங்கிலீஷ் பேசி பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்களா ?

ஜான் : நோ..நோ.. நான் கோடீஸ்வரன் சார்… எல்லாரும் ஏமாத்திட்டாங்க..

நபர் : இப்படி சொல்லி ஏமாத்த கிளம்பிட்டியா ?

ஜான் : இல்ல.. கண்டிப்பா திரும்ப குடுத்திடுவேன்… என் ஊரு வந்து சென்னை..

நபர் : தெரியுமே.. ஊருக்கு போணும், பஸ்ஸுக்கு காசில்ல.. அதானே..

ஜான் : ஐயோ.. கரெக்ட் சார். எப்படி கண்டு பிடிச்சீங்க ?

நபர் : என்ன நக்கலா ? எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க ?

ஜான் : நாங்க 5 பேரு சார், 60 கோடியைச் சுருட்டிட்டு நாலு பேரும் ஓடிட்டாங்க..

நபர் : கீழ்ப்பாக்கம் கேஸா ?

ஜான் : அதென்ன சார் கீழ்ப்பாக்கம் ?

நபர் : ஆளை விடுய்யா… ( அங்கிருந்து போய் விடுகிறார் )

Scene  17

( இப்போ ஜானின் உடைகளெல்லாம் அழுக்காகி விட்டிருக்கின்றன. அதே டீ. கடை. நேராக பாத்திரம் கழுவும் இடத்துக்குப் போகிறான் அவனாகவே பாத்திரம் கழுவ ஆரம்பிக்கிறான். அப்போது ஒரு தட்டில் ஒரு வடை இருக்கிறது. எடுத்து கடிக்கிறான் )

கடைக்காரர் : பளார்…. என்னய்யா தின்றே ?

ஜான் ; சா…சார்.. ஒரு வடை.. மீதி வெச்சிருந்தது.

கடைக்காரர் : மீதி வெச்சிருந்தாலும் சரி, பாதி வெச்சிருந்தாலும் சரி.. தொடக்கூடாது. இந்த இடத்துல இருக்கிற குப்பை கூட என்னோட சொந்தம் புரியுதா ?

ஜான் : ( கண் கலங்குகிறான். ) சரிங்க…

கடைக்காரர் : கெளம்பு… கெளம்பு..

ஜான் : சார் பாத்திரம் கழுவிக்கிறேன்.. பசிக்குது..

கடைக்காரர் : ஆமா.. இன்னிக்கு வடையை எடுத்தவன், நாளைக்கு கடையையே எடுத்துடுவே.. காலி பண்ணுடா..

ஜான் : பிளீஸ்…சார்…

கடைக்காரர் : ( கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார் )


காட்சி 18

ஜான் சாலை ஓரத்தில் ஒரு கல்லில் அமைதியாக அமர்ந்திருக்கிறான். இறுக்கமான முகம். ஏதோ யோசனை.

அடுத்த ஷாட் : மகனைக் காணாத ஏக்கத்தில் அப்பா வாசலில் உட்கார்ந்திருக்கிறார்.

காட்சிகள் மாறி மாறி வருகின்றன.

ஜான் : ( மனதுக்குள் ) ஒரே வழி தான். அப்பா கிட்டே போறது. இதை விட பெட்டர் வேலை எங்க தோட்டத்துலயே கிடைக்கும். நல்ல சாப்பாடு, தூங்க இடம். வேற என்ன வேணும் ?

எழும்புகிறான்.

காட்சி 19
அப்பா காத்திருக்கிறார். வழக்கம் போல. தூரத்தில் நிழலாய் ஒரு உருவம் தெரிகிறது. உற்றும் பார்க்கிறார்.. ஜான்

அப்பா : ஜான்..ஓ..ஜான்.. ஓடுகிறார். அவனைக் கட்டியணைக்கிறார்..

ஜான் : ( அப்பாவை விலக்கி விடுகிறான். தரையில் மண்டியிடுகிறான் -அழுகிறான். ) அப்பா.. நான் தப்பு பண்ணிட்டேன்… மன்னிச்சிடுங்க… மன்னிச்சிடுங்க.. (அழுகை )

அப்பா : முதல்ல எழும்பு.. வா.. வீட்டுக்கு வா..

ஜான் : இல்லப்பா…நோ.. நான் இனிமே உங்க பிள்ளையா இருக்கவே தகுதி இல்லை. ஐ லாஸ்ட் எவ்ரிதிங்.. எல்லாம் போச்சு…

அப்பா : அதெல்லாம் அப்புறம் பேசலாம்.. முதல்ல வா..

ஜான் : அப்பா.. எனக்கொரு வேலை தருவீங்களா… ? பசிக்குது சோறு தருவீங்களா ?

( அப்பா கண் கலங்குகிறார் )

அப்பா : என்னப்பா பேசறே.. நீ எப்பவும் என் மகன் தான். வா.. வந்து குளி முதல்ல… உனக்காக புது டிரஸ் எடுத்து வெச்சிருக்கேன். அதைப் போடு.

அப்பா : டேய்.. மாரி.. முத்து மாரி… சின்ன அய்யா வந்திருக்காக. அவருக்கு ஸ்பெஷல் சாப்பாடு தயார் பண்ண சொல்லு. இன்னிக்கு நம்ம வீட்ல வேலை செய்ற எல்லாருக்கும் நம்ம வீட்ல தான் விருந்து. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, என்னென்ன உண்டோ பண்ண சொல்லு.

ஜான் : அப்பா… உங்களை ரொம்பவே காயப்படுத்திட்டேன்..

அப்பா : நீ திரும்பி வந்திருக்கே… திருந்தி வந்திருக்கே… அதான்பா முக்கியம். வா..

( அப்பா அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குள் செல்கிறார் )


காட்சி : 20

ஜானின் அண்ணன் ராபர்ட் மாரிமுத்துவிடம்.

ராபர்ட் : மாரி.. என்ன அங்கேயும் இங்கேயும் ஓடிட்டிருக்கே ?

மாரி : அய்யா தெரியாதுங்களா ? சின்ன அய்யா வந்திருக்காக

ராபர்ட் : யாரு ? ஜானா ?

மாரி : ஆமாங்கய்யா….

ராபர்ட் : கார் ஏதும் காணோமே ( சுற்றும் முற்றும் பார்க்கிறான் )

மாரி : சோறே இல்லாம வந்திருக்காரு, நீங்க காரு இல்லாமலா ன்னு கேக்கறீங்க… ஐயோ அவரு வந்த கோலத்தைப் பாக்கணுமே.. ஒரு பிச்சைக்காரர் மாதிரி..

ராபர்ட் : ஓ.. எல்லாத்தையும் செலவழிச்சிட்டு வந்திருக்கானா ? மறுபடியும் என்ன வேணுமாம்…

மாரி : தெரியலங்கய்யா.. நைட் அப்பா விருந்து வைக்க சொல்லியிருக்காரு…

ராபர்ட் : ஓ.. விருந்தா… மறுபடியும் இருக்கிறதுல பாதி அவனுக்கு வேணுமா.. வரட்டும் வரட்டும் …

மாரி : நீங்க தம்பியைப் போய் பாக்கலீங்களா ?

ராபர்ட் : அந்த உதவாக்கரையை நான் பாக்கணுமா ? மறுபடியும் சேத்துகிட்டா அவனுக்கு சோறு எவன் போடறது. இனிமே இருக்கிறதெல்லாம் என் சொத்து. வரட்டும் பாகப் பிரிவினை மண்ணாங்கட்டின்னு.. ( கோபத்தில் கையிலிருந்த பொருளை எறிகிறார். )

காட்சி 21

( மாரி அப்பாவின் காதில் ஏதோ சொல்கிறார். அவர் எழும்பி வீட்டுக்கு வெளியே வந்து ராபர்ட்டைப் பார்க்கிறார் )

அப்பா : ராபர்ட்.. வாப்பா. வீட்ல வா.. தம்பி வந்திருக்கான்.

ராபர்ட் : தம்பி வரல.. உங்களை நம்பி வந்திருக்கான்.

அப்பா : என்ன கோபமா ?

ராபர்ட் : இல்ல சந்தோசம் ( எரிச்சலில் ). வேற வழியில்லாத நிலை வந்தப்போ உங்க நினைப்பு வந்திருக்கு. அள்ளிக் கொட்டினீங்களே ! என்னாச்சு ? சாப்டு, சரக்கடிச்சு, பொண்ணுங்க கிட்டே பணத்தை உட்டுட்டு வந்திருக்கான். பொறுக்கி பய..

அப்பா : அப்படியெல்லாம் சொல்லாதேப்பா… அவன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான். இப்போ மனம் மாறி வந்திருக்கான்…

ராபர்ட் : மறுபடியும் கேப்பானே பணம்.. என்ன செய்ய போறீங்க.. ?

அப்பா : எனக்குரியதெல்லாம் உன்னுடையது தான்பா.. அவன் இப்போ உலகத்தைப் புரிஞ்சுகிட்டான். நம்மளை விரும்பி வந்திருக்கான். திரும்பி வந்திருக்கான். அன்பு செய்றதுதான்பா முறை. அவன் உன் தம்பிப்பா..

ராபர்ட் : அப்பா.. அவன் உங்க புள்ள. என்னிக்கு பணத்தோட போனானோ அன்னில இருந்து அவன் என் தம்பி இல்லை. ஆள விடுங்க. நீங்க போய் அவனை தலைல வெச்சு கொண்டாடுங்க. என்னால முடியாது..

அப்பா : ராபர்ட்….

ராபர்ட் : ஆமா.. மாடு மாதிரி உழைக்கிறவன் எல்லாம் கேணையன். அவனுக்கு ஒரு விருந்து வைக்கமாட்டாராம். கூத்தடிச்சிட்டு வந்தவனைக் கூப்பிட்டு கொண்டாடுவாராம். நல்ல நியாயப்பா உங்களோடது.. ஆளை விடுங்க…

( ராபர்ட் கோபத்தில் தூரமாய் செல்கிறான் )

அப்பா சோகத்தில் அவனையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

பின்குரல் : எதையும் எதிர்பாராமல் வைக்கும் அன்பு விண்ணகத் தந்தையுடையது. பாவத்தின் படுகுழியில் விழுபவர்கள் மனம் திரும்பி வருகையில் அவர் இரு கரம் நீட்டி அரவணைக்கிறார். ஆனால் பரிசேய சகோதரர்களுக்கோ அது பொறுப்பதில்லை. அவர்கள் தந்தையிடமிருந்து பலன் எதிர்பார்த்து பணி செய்பவர்கள்.

இளைய மகனல்ல. இப்போது மூத்த மகன் தான் கெட்ட குமாரன் !

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s