Posted in OLD Testament

கி.மு 31 : தந்தை மகன் போராட்டம்

Image result for david absalom

மன்னன் தாவீதின் மகன்களில் ஒருவனான அப்சலோம், அவனுடைய தந்தைக்கும் இன்னொரு மனைவிக்கும் பிறந்த சகோதரனான அம்மோனைக் கொன்று விட்டுத் தப்பியோடினான். தாவீது இறந்து போன மகனுக்காகக் கலங்கித் தவித்தார். வருடங்கள் செல்லச் செல்ல இறந்துபோன மகனின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய, தலைமறைவான மகன் அப்சலோமையும் நினைத்து ஏங்கத் துவங்கினார். ஆனாலும் தன் மகனைத் திரும்ப அழைக்கும் நினைப்பு அவருக்கு இருக்கவில்லை.

தாவீது மன்னன் அப்சலோமின் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார் என்பதை அவருடன் பலகாலமாக பணியாற்றிவரும் யோபாவு என்பவர்அறிந்தார். அவர் ஒரு நாடகமாடி மன்னனின் மகனைத் திரும்பவும் நாட்டிற்குக் கூட்டி வரத் திட்டமிட்டார். அதன்படி ஒரு காட்சி அரங்கேறியது.

தலைவிரிகோலமாய் கதறிக்கொண்டே தாவீதின் முன்னால் ஓடி வந்து விழுந்தாள் ஒரு பெண்.
‘அரசே காப்பாற்றும்….’

‘எழுந்திரு பெண்ணே உனக்கு என்ன வேண்டும்’ தாவீது கேட்டார்.

‘தலைவரே… நான் ஒரு விதவை. எனக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். இருவருக்கும் ஒருமுறை தகராறு வந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அந்தச் சண்டையில் எனது ஒரு மகன் இறந்து விட்டான். இப்போது எனக்கிருப்பது ஒரே மகன். உறவினர்களும், நண்பர்களும் எல்லோரும் அவனைக் கொல்லும் வெறியோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவனை இழந்துவிட்டேன், மிச்சமிருக்கிற ஒரு மகனையும் கூட இழந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’ பெண் அழுது கொண்டே சொன்னாள்.

‘சரி.. நான் கட்டளையிடுகிறேன். அவனை இனிமேல் யாரும் தொடமாட்டார்கள். நீ போய் வா…’ மன்னன் சொன்னார்.

‘நன்றி அரசே… அவனைக் காப்பாற்றியமைக்கு மிக்க நன்றி. கொலையாளியானாலும் தாய்க்குப் பிள்ளை தானே…’ அவள் தொடர்ந்தாள்.

‘ஆம்… உண்மை தான்.. அவனுடைய ஒரு தலைமயிர் கூட வெட்டப்படாது. நீ தைரியமாய்ப் போ…’ மன்னன் சொன்னான்.

‘அரசே… நான் ஒன்று சொல்லலாமா ?’ பெண் கேட்டாள்

‘சொல்… என்ன சொல்ல விரும்புகிறாய்’ தாவீது கேட்டார்.

‘என்னுடைய மகனுக்கு இரக்கம் காட்டிய நீர். உம்முடைய மகனை மன்னிக்காமல் விட்டுவிட்டது சரியென்று நினைக்கிறீர்களா ?’ அந்தப் பெண் அமைதியாய் பணிவாய்க் கேட்டாள்.

‘நீ.. யாரைப் பற்றிச் சொல்கிறாய் ? அப்சலோமைப் பற்றியா ?’ தாவீது கேட்டார்

‘ஆம் அரசே… நான் உமது முன்னிலையில் வரும்போதே பலர் எச்சரித்தார்கள். என் உயிருக்கே தீங்கு ஏற்படலாம் என்று தெரிந்தும் நான் உங்களிடம் உங்கள் மகனை திரும்ப அழையுங்கள் என்று சொல்வதற்காகத் தான் வந்தேன்’ அவள் சொன்னாள்.

தாவீது எழுந்தார். ‘ உண்மையைச் சொல்…. உன்னை இங்கே அனுப்பியது யோபாவு தானே ? ‘ தாவீது கேட்டார்.

‘ஆம் அரசே….’ அந்தப் பெண் உண்மையைக் கூறினாள்.

‘சரி… உங்கள் விருப்பப் படியே அவனை அழைத்து வரச் செய்கிறேன். ஆனால் அவன் என்னுடைய முகத்தில் விழிக்கக் கூடாது. நாட்டில் வேறு எங்காவது வந்து பிழைத்துக் கொள்ளட்டும்’ தாவீது சொன்னார்.

அப்சலோம், அழைத்து வரப்பட்டான்.

ஆனால் அவன் இரண்டு ஆண்டுகள் அவன் தன்னுடைய தந்தையின் முகத்தில் விழிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் சென்றபின் யோபாவு மூலமாகத் தூது விட்டு தந்தையைச் சென்று சந்தித்தான். நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட தந்தையும் மகனும் கண்ணீர் விட்டுக் கட்டித் தழுவிக் கொண்டனர். பகையை எல்லாம் மறந்தார்கள். அப்சலோம் தனக்கென ஒரு தேரும், தனக்கு முன்னால் ஓட ஐம்பது பேரையும் அமர்த்திக் கொண்டு அரச வாழ்க்கையை ஆரம்பித்தான். சொகுசு வாழ்க்கை வாழத் துவங்கியதும் அப்சலோமின் மனதுக்குள் பேராசைத் தீ பற்றிக் கொண்டது.

நான் அரசனானால் எப்படி இருக்கும் !

அரசராகவேண்டும் என்னும் எண்ணம் அப்சலோமின் மனதுக்குள் வந்ததுமுதல் அவனுடைய தூக்கம் போய்விட்டது. அவன் திட்டமிடவும், வியூகங்கள் அமைக்கவும் ஆரம்பித்தான்.

தினமும் காலையில் நகர வாசலில் சென்று மக்களின் குறைகளைக் கேட்பான்.

‘ஓ… இப்படி ஒரு பெரிய குறை உனக்கு இருக்கிறதா ? நானாயிருந்தால் இப்போது உன்னுடைய குறைகளை நீ விரும்புவது போல தீர்த்து வைத்திருப்பேன். என்ன செய்வது தாவீதல்லவா மன்னனாக இருக்கிறார் ?’ என்று எல்லோரிடமும் கூறுவான்.

தொடர்ந்து நான்கு வருடங்களாக அப்சலோம் நகரில் எல்லா இடங்களிலும் இதே போன்ற பதிலை திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி, ‘அப்சலோம் அரசரானால் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் போலிருக்கிறதே’ என்று மக்களைப் பேசவைத்தான்.

நாடெங்கும் அப்சலோமுக்கு ஆதரவான ஒரு அலை உருவாகியது. அப்சலோமின் ஆதரவாளர்களும், அவனை அரசனாக்க வேண்டும் என்னும் எண்ணமுள்ளவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்தார்கள்.

தாவீதுக்கு இந்தத் தகவல் தெரியவந்தபோது காலம் கடந்திருந்தது.
‘அரசே… இனிமேல் நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது. நமக்கு ஆதரவாய் இருந்த மக்கள் எல்லோரும் இப்போது அப்சலோமின் பின்னால். அவன் தான அரசனாக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எந்நேரமும் நாம் அப்சலோமினால் தாக்கப் படலாம். ‘ அரண்மனை வாசிகள் தாவீதை எச்சரித்தார்கள்.

‘இப்போது என்ன செய்வது ? நான்கு ஆண்டுகளாக அப்சலோம் செய்து வந்த சதி எப்படி நமக்குத் தெரியாமல் போயிற்று’ மன்னன் கேட்டான்.

‘அரசே… அது அவனுடைய தந்திரமும், தந்தையிடம் மகனைப் பற்றிப் புகார் கொடுக்க வேண்டாம் என்று நினைத்த உம் விசுவாசிகளின் எண்ணமும் தான். இப்போது எல்லாம் கைமீறிப் போய்விட்டது. நாம் உடனே தப்பிச் செல்லவில்லையேல் அழிவு நிச்சயம். ‘ பணியாளர்கள் சொன்னார்கள்.

தாவீது சம்மதித்தார். அவர் தனக்கு ஆதரவான மக்களோடு நாட்டை விட்டே ஓடிப் போனார். தன்னுடைய வைப்பாட்டிகளில் சிலரை மட்டும் அரண்மனையைப் பாதுகாக்கும் படி அரண்மனைக்குள்ளே விட்டு விட்டுச் சென்றார்.

தாவீது, மக்களோடு தப்பிச் சென்றபோது அவருடன் ஆண்டவரின் பத்துக் கட்டளைகள் அடங்கிய பேழையையும் குருக்கள் அவருடன் கொண்டு சென்றார்கள்.

தாவீது குருக்களிடம்,’ நீங்கள் ஆண்டவரின் பேழையை நாட்டிலேயே வைத்து விட்டு வாருங்கள். கடவுளுக்கு என்மேல் பிரியமிருந்தால் நான் மீண்டும் இந்தப் பேழையைக் காண அவர் வழி காட்டட்டும். இல்லையேல் நான் செத்துப் போவதைப் பற்றிக் கவலையில்லை’ என்றான். குருக்கள் அவ்வாறே செய்தனர்.
உடன்படிக்கையின் பேழை மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பியது.

தப்பியோடிய தாவீது ஒலிவமலையைச் சென்றடைந்தார். தன் மகன் தன்னை ஏமாற்றிவிட்டானே என்று நினைத்து அழுதுகொண்டே வெறும் காலுடன் அவர் மலையில் ஏறினார். அதைக் கண்ட மக்களும் தங்கள் மிதியடிகளைக் கழற்றி வைத்து விட்டு அவருடன் மலையில் ஏறினார்கள்.

மலையில் ஏறியபோது அங்கே அவருடைய ஆலோசகர் ஊசா நின்றிருந்தார். தாவீது அவரிடம்
‘ஊசா ? நீ ஏன் என்னோடு வந்தாய் ? நீ அரண்மனையிலேயே தங்கியிருக்கலாமே’ என்று கேட்டார்.

‘அரசே நீங்கள் இல்லாத அரசவையில் எனக்குப் பங்கு வேண்டாம். மரித்தாலும் நான் உங்களோடு தான் …. நீங்கள் வாழாத அரச வாழ்க்கை எனக்கு மட்டும் எதற்கு’ என மறுத்தார்.

தாவீது அவரிடம்,’ அப்படியல்ல ஊசா… நீ அப்சலோமுடன் இருக்க வேண்டும் அப்போது தான் அப்சலோமின் நடவடிக்கைகளை நீ அறிந்து கொள்ளவும், முடிந்தால் தடுக்கவும் முடியும். நீ அங்கே இருந்து எங்களுக்குத் தகவல்களை மட்டும் அனுப்பிக்கொண்டிரு’ என்று அவனை அனுப்பி வைத்தார். ஊசாவும் திரும்பிச் சென்றார்.

தாவீது சென்ற இடங்களில் இருவிதமான வரவேற்புகளைப் பெற்றார். சில இடங்களில் சிலர் அவருக்கு நல்ல உணவுகள் கொடுத்து உபசரித்தனர். சில இடங்களில் மக்கள் அவருக்கு எதிராய் வசைபாடினார்கள்.

அதே நேரத்தில் அப்சலோம் அரசைப் பிடிக்கும் நோக்கத்துடன் அரண்மனையை நோக்கிப் படையெடுத்து வந்தான். தாவீதைக் கொல்ல வாளுடன் அரண்மனைக்குள் புகுந்த அப்சலோமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரண்மனை வெறிச்சோடிக் கிடந்தது. அப்சலோமின் அரச ஆலோசகராக தீய சிந்தனைகள் கொண்ட அகிதோபல் இருந்தான்.

வெறுமையாய்க் கிடந்த அரண்மனையைக் கண்ட அப்சலோம் எரிச்சலடைந்தான். அவன் அகிதோபலிடம்
‘இப்போது நாம் என்ன செய்வது ? அரண்மனையில் என் தந்தையின் வைப்பாட்டிகள் சிலரைத் தவிர யாரும் இல்லையே ? என்ன செய்வது ? எனக்கு ஒரு நல்ல ஆலோசனை கூறு’ என்றான்.

அகிதோபல் அவனிடம் ‘ நீர் போய் அரண்மனையில் இருக்கும் தாவீதின் வைப்பாட்டிகளோடு உறவு கொள். அப்போது உன்னுடைய கை ஓங்கிவிட்டது என்பதையும். நீ தாவீதுக்கு எதிராய் ஆட்சியைப் பிடித்து விட்டாய் என்பதையும் மக்கள் அறிந்து கொள்வார்கள்’ என்று ஒரு கொடுமையான யோசனையைச் சொன்னான்.

அப்சலோம் அந்த அறிவுரையை ஏற்றான். தாயாய் நினைக்கவேண்டிய தந்தையின் வைப்பாட்டிகளோடு உறவு கொண்டான்.
நாட்டு மக்கள் எல்லோரும் அப்சலோமின் கை ஓங்கிவிட்டது தாவீது துரத்தப்பட்டார் என்பதை அறிந்து கொண்டார்கள்.

அப்போது ஊசா அங்கு வந்து சேர்ந்தார்.

‘அரசே வாழ்க…. ‘ ஊசா அப்சலோமின் முன்னால் பணிந்தான்.

‘நீ.. ஊசா தானே ? ஏன் நீ தந்தையுடன் போகவில்லை ? நீங்கள் நண்பர்கள் அல்லவா ?’ அப்சலோம் கேட்டான்.

‘நான் தாவீதுக்கு நண்பன் என்று சொல்வதை விட இஸ்ரயேலை யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்களின் ஆலோசகன் என்பதே சரியாகும். அப்போது தாவீது அரசராய் இருந்தார். அவரோடு இருந்தேன். இப்போது நீர் அரசர் உம்மோடு உண்மையாய்ப் பணியாற்றுவேன்’ என்றார்.

‘நல்லது ! உன்னை நினைத்து நான் மகிழ்கிறேன்’ அப்சலோம் ஊசாவை முழுமையாய் நம்பிவிட்டான்.

அப்சலோம் தன்னுடைய ஆஸ்தான ஆலோசகன் அகிதோபலை அழைத்தான்.
‘அகிதோபல், தாவீதை வெற்றி கொள்ளும் வரை இந்த அரசு என்னுடையதாகாது. எனவே ஒரு நல்ல யோசனை சொல். தாவீதை நான் கொல்ல வேண்டும்’ என்றான்.

‘ நாம் பதினாயிரம் பேர் நேராக தாவீது ஒளிந்திருக்கும் காட்டுக்குச் செல்லவேண்டும். அங்கு சென்று அவர்கள் மீது பாய்ந்து அவர்களை பயப்படுத்தவேண்டும். அப்போது கூட்டம் சிதறி ஓடும் மன்னனை நாம் எளிதாகக் கொல்லலாம்’ அகிதோபல் யோசனை சொன்னான்.

அகிதோபலில் யோசனையின் படி செயல்பட்டால் தாவீது கொல்லப்படுவது உறுதி என்பதை ஊசா உணர்ந்தார். எப்படியாவது தாவீதைத் தப்புவிக்கவேண்டுமே என்று கடவுளை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டிருந்தார்.

மன்னன் ஊசாவைப் பார்த்தான்.’ நீர் என்ன சொல்கிறீர் ? என் தந்தையின் பிரதான ஆலோசகர் அல்லவா ? உம்முடைய கருத்தைச் சொல்லும்’ அப்சலோம் கேட்டான்.

‘சிறுபிள்ளைத்தனமான யோசனையைக் கேட்டு நான் சிரிக்காமல் என்ன செய்வது மன்னா ?’ ஊசா சொன்னான்

‘என்னுடைய யோசனை சிறுபிள்ளைத் தனமானதா ? அப்படியென்ன சிறுபிள்ளைத் தனம் கண்டாய் இதில் ?’ அகிதோபல் ஆத்திரப் பட்டான்.

‘தாவீதும் அவருடைய வீரர்களும் பயமுறுத்தலுக்கெல்லாம் அஞ்சமாட்டார்கள் என்பதை அனைவரும் அறிவர். அவர்கள் இப்போது அப்சலோம் மீது மிகவும் கோபத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் பதுங்கிக் கிடக்கும் புலிகளைப் போல இருக்கிறார்கள். வாய்ப்பு வந்தால் பத்துமடங்கு வீரத்தோடு எதிர்ப்பது நிச்சயம். அது மட்டுமல்ல, தாவீது கண்டிப்பாக படையினரோடு தங்கமாட்டார். தனியாகத் தான் தங்குவார். நீங்கள் போரிட்டு அவரைக் கொல்ல முடியாமல் போனால் நீங்கள் தோற்றதாய் ஆகிவிடாதா ?’ ஊசா கேட்டான்.

அப்சலோம் தலையாட்டினான்,’ உண்மைதான் ஊசா… நீங்கள் வேறு யோசனை சொல்லுங்கள்’ அப்சலோம் கேட்டான்.

‘நாம் இஸ்ரயேல் மக்களை அனைவரையும் ஒன்றுசேர்க்க வேண்டும். ஒரு மிகப் பெரிய கூட்டமாக நாம் போய் அவர்கள் மேல் பாய்ந்து மொத்தமாக அமுக்கவேண்டும். அதுதான் சிறந்த வழி. தாவீது மட்டுமல்ல அவரோடு இருக்கும் அனைவரும் அழிந்தால் தான் நமக்கு எதிரிகளே இல்லை என்னும் நிலை வரும்’ ஊசா சொன்னார்.

அப்சலோமுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. ‘ அகிதோபல், உன்னுடைய யோசனையை விட ஊசாவின் யோசனை சிறப்பாய் இருக்கிறது. நாம் அதையே பின்பற்றுவோம்’ அப்சலோம் சொன்னான்.

அகிதோபல் அவமானத்தால் நெளிந்தான். வேகமாக வெளியேறி வீட்டுக்குச் சென்றான். இனிமேல் தனக்கு இந்த அரசவையில் மரியாதை கிடைக்கப் போவதில்லை. இத்தனை பெரிய அவமானத்தைச் சுமந்து கொண்டு நான் ஏன் உயிர்வாழவேண்டும் என்று மனதில் நினைத்த அகிதோபல் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தான்.

ஊசா இந்தத் தகவல்களையெல்லாம் தாவீதுக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தான்.

தாவீது தம் படைவீரர்களை நோக்கி,’ நம்மை நோக்கி மக்கள் படை வரப்போகிறது. இதுதான் சந்தர்ப்பம். பொதுமக்கள் போரில் அனுபவமில்லாதவர்கள். நாம் அவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்க வேண்டும். அனுபவமில்லாத மக்கள் பயத்தில் நாலாதிசையிலும் சிதறி ஓடுவார்கள். நாம் வெற்றிபெறமுடியும்’ என்றான்.
வீரர்கள் தயாரானார்கள்.

யோவாபு, அபிசாய், இத்தாய் ஆகிய மூன்றுபேரின் தலைமையின் கீழ் தன்னுடைய வீரர்களை தாவீது ஒன்றுதிரட்டினார்.

அவர்கள் தாவீதிடம்,’ அரசே… நீங்கள் போருக்கு வரவேண்டாம். ஒருவேளை நீங்கள் மடிந்தால் பிறகு எங்களுக்கு தலைவன் இல்லாத நிலை வரும் எனவே நீங்கள் போருக்கு வரவேண்டாம். இங்கேயே மறைவாய் இருங்கள்’ என்றனர். தாவீது ஒத்துக் கொண்டார்.

மூன்று குழுக்களும் போருக்குச் செல்லத் தயாரானபோது தாவீது மீண்டும் மூவரையும் அழைத்து. ‘போரில் நாம் வெற்றிபெறவேண்டும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. ஆனால்… ‘ தாவீது நிறுத்தினார்.

‘சொல்லுங்கள் தலைவரே…’ யோவாபு கேட்டார்.

‘அப்சலோம் எதிரியானாலும் என் மகன்… அவன் மீது நான் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன்…. அவனை மட்டும் கொல்லாதீர்கள்’ தாவீது தழுதழுத்தார்.

‘அப்படியே ஆகட்டும்’ யோவாபு சொன்னார். படைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து அப்சலோமின் படையைத் தாக்கப் புறப்பட்டன.

போரில் தாவீதின் வீரர்கள் சுற்றி வளைத்துத் தாக்கினர். மிகக் கடுமையாக நடந்த போரின் முடிவில் அப்சலோமின் படை சிதறடிக்கப் பட்டது.

அப்சலோம் ஒரு கோவேறு கழுதையில் ஏறித் தப்பி ஓடினான்.

அப்சலோம் தப்பி ஓடிய பகுதி முழுவதும் அடர்ந்த கருவாலி மரங்கள் மிகுதியாய் இருந்தன. கழுதை அவனைச் சுமந்து கருவாலிமரங்களுக்குக் கீழே ஓடிக் கொண்டிருந்தது. திடீரென அப்சலோமின் முடி ஒரு கருவேலிமரத்தில் சிக்கிக் கொள்ள அப்சலோம் அந்தரத்தில் தொங்கினான். கழுதை ஓடிவிட்டது.

அப்சலோமைத் துரத்திச் சென்றவர்கள் வெற்றியுடன் திரும்பி வந்து யோபாவுவிடம் தகவல் சொன்னார்கள்.

‘தலைவரே… படை சிதறடிக்கப் பட்டது ! அப்சலோம் ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறான்’ வீரன் ஒருவன் சொன்னான்.

‘மூடனே. அவனை அப்படியே விட்டு விட்டு வந்தீர்களா ? நீங்கள் அவனைக் கொன்று விட்டு வந்திருக்க வேண்டும்.. போ.. அவனைக் கொன்று விட்டு வா. உனக்கு பத்து வெள்ளிக்காசுகளையும், ஒரு கச்சையையும் தருகிறேன்’ யோபாவு சொன்னான்.

‘இல்லை தலைவரே… அப்சலோமைக் கொல்லக் கூடாது என்பது அரச ஆணை. எனவே நீங்கள் எனக்கு ஆயிரம் வெள்ளிக்காசுகளைத் தந்தாலும் நான் அந்தச் செயலைச் செய்ய மாட்டேன்’ வீரன் மறுத்தான்.

‘உன்னிடம் பேசிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை… நானே அவனைக் கொல்வேன்…’ என்று சொல்லிக் கொண்டே யோபாவு அப்சலோம் தொங்கிக் கொண்டிருந்த இடத்துக்கு ஈட்டிகளையும் எடுத்துக் கொண்டு விரைந்தார்.

அப்சலோம் இன்னும் அதே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.

யோபாவு நேராக அவன் முன்னால் போய் நின்றார்.
‘துரோகியே… சொந்தத் தந்தையையே கொல்லத் துணிந்தாயே…. ‘ என ஆவேசமாய்த் திட்டினார்.

‘மன்னியுங்கள் யோபாவு. அறிவில்லாமல் செயல்பட்டுவிட்டேன். என்னை விட்டுவிடுங்கள்… கொல்லாதீர்கள்’ அப்சலோம் உயிருக்குப் பயந்து கெஞ்சினான்.

‘உன்னைக் கொல்லக் கூடாது என்பது தான் அரசரின் ஆணை’ யோபாவு சொன்னார்.

‘ அப்படியா….. ?’ அப்சலோம் மெல்லப் புன்னகைத்தான்.

‘ஆனால் நான் உன்னைக் கொல்லாமல் விடப் போவதில்லை…… ‘ சொல்லிக் கொண்டே யோபாவு தன்னிடமிருந்த ஈட்டியை எடுத்து அப்சலோமின் நெஞ்சில் ஆழமாகக் குத்திக் கொன்றார். அப்சலோம் அதிர்ந்துபோன பார்வையோடு பிணமானான்.

போரில் தாவீதின் படை வெற்றிபெற்றதை அறிந்து தாவீது மகிழ்ந்தார்.

‘என் மகன் அப்சலோம்… அவன் எங்கே ?’ மன்னர் கேட்டார்.

‘அப்சலோம் கொல்லப்பட்டார். ‘ தாவீதுக்குத் தகவல் சொல்லப்பட்டது.

மகன் இறந்ததை அறிந்த தாவீது மிகவும் மனம் கலங்கி அழுதார்.
யோபாவு அவரை சமாதானப் படுத்தி மீண்டும் அரியணையில் அமரச் செய்தார்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s