Posted in Life of JESUS

இயேசு வரலாறு 23 : மலைக்க வைத்த மலைப் பொழிவு.

Image result for Sermon on the mountதிருமுழுக்கு யோவானின் படுகொலை இயேசுவின் மனதில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய பணியை இரண்டு மடங்கு தீவிரப்படுத்த வேண்டும் என்று இயேசு முடிவெடுத்தது அப்போது தான். இன்னும் தன்னுடைய பணியை திட்டமிட்டுச் செய்யவேண்டும். இதுவரை சுகமாக்குதல் மற்றும் சிறு சிறு போதனைகள் வழியாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த இயேசு இப்போது தன்னுடைய அடுத்த அடியை எடுத்து வைக்கிறார். அதற்கு இன்னும் அவருக்கு ஆள்பலம் தேவை. தன்னுடைய கொள்கைகளைப் பரப்பவும், தன்னுடன் பணிபுரியவும் இன்னும் சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

தன்னுடைய சீடர்களின் எண்ணிக்கையை பன்னிரண்டாக மாற்ற வேண்டும் என்பது இயேசுவின் விருப்பமாக இருந்தது. பன்னிரண்டு பேரைத் இயேசு தேர்ந்தெடுத்ததற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு. இயேசு தன்னை சிதறுண்டு போன இஸ்ரேல் மக்களுக்காக வந்தவராகத் தான் அறிமுகப் படுத்துகிறார். இஸ்ரேல் என்பது பன்னிரண்டு கோத்திரங்கள் அல்லது பிரிவுகள் கொண்டது. அந்த பன்னிரண்டு கோத்திரங்களையும் குறிக்கும் விதமாக இயேசு பன்னிரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.

தன்னுடைய போதனைகளை ஆர்வமுடன் கவனித்து வந்த கூட்டத்திலிருந்து பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். யாக்கோபு, மற்றும் பேதுரு அவருக்குத் துணை நின்றார்கள். கப்பர்நாகூமுக்கு மீண்டும் இயேசு திரும்புகையில் பன்னிரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.

பேதுரு, அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பார்த்தலமேயு, தோமா, மத்தேயு,
அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயுஸ், சீமோன் மற்றும் யூதாஸ் இஸ்காரியோத். பன்னிரண்டு பேர் இப்போது இயேசுவின் சீடர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இயேசு அவர்களை அப்போஸ்தலர்கள் என்று அழைத்தார்.

ஒரு தனிமையான இடத்துக்குச் சென்ற அந்த பதிமூன்று பேரும் நீண்ட நேரம் செபித்தார்கள். தங்கள் தீவிர மக்கள் பணிக்கு முன்பாக மனதிற்கு வலிமை சேர்க்கும் விதமாய் அவர்கள் விண்ணகத் தந்தையின் அருளையும், வழிகாட்டுதலையும் வேண்டினார்கள். செபநேரம் முடிந்தபின் அவர்கள் பதிமூன்று பேரும் கப்பர்நகூமின் ஏரிக்கரையோரமாக நடந்தார்கள். வழியில் இவர்களிடம் வந்த பிணியாளர்களை வழக்கம்போலவே குணமாக்கியபடி சென்று கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது. இயேசு தன்னுடைய சீடர்கள் பன்னிரண்டு பேரையும் முதலில் பக்குவப்படுத்த விரும்பினார். அதற்கு அவருக்குத் தனிமை தேவைப்பட்டத்து. எனவே மக்கள் கூட்டத்திலிருந்து விலகி, இயேசுவும் சீடர்களும் நதியில் இருந்த ஒரு படகில் ஏறி பயணித்தார்கள்.

நீண்டதூரம் பயணித்து மறு கரையில் இறங்கி மரங்களின் இடையே நடந்து அங்கே இருந்த ஒரு மலையில் ஏறினார்கள். மலையின் உச்சியில் ஏறி வசதியான ஒரு இடத்தில் அவர்கள் பதிமூன்றுபேரும் அமர்ந்து பேசத் துவங்கினார்கள். இயேசு அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே மலையின் கீழ் மக்கள் வந்து குவியத் துவங்கினார்கள். பெருங் கூட்டமான மக்கள் மலையைச் சுற்றி அமர்ந்ததைக் கண்ட இயேசு தன்னுடைய போதனையை மக்களுக்கும் சீடர்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்க முடிவெடுத்தார்.

இதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக போதித்துக் கொண்டிருந்த போதனைகளின் சாரம்சத்தைத் தொகுக்க வேண்டிய நிலமை இயேசுவுக்கு. அப்போது தான் தன்னுடைய போதனைகளின் சுருக்கத்தை பன்னிரண்டு பேருக்கும் எளிதில் புரிய வைக்க முடியும்.

எட்டு விதிகள் !. ஆம் இயேசு தன்னுடைய போதனையின் சுருக்கமாக, தன்னுடைய போதனைகளின் சாரம்சத்தைத் தொகுத்து எட்டு விதிகளாகச் சொன்னார். இதுவரை மனித குலம் அறிந்திராத கேட்டிராத போதனைகளாக அவை விளங்கின. சுற்றியிருந்த மக்களை வியப்புக்கும், தெளிவுக்கும் இடையே ஓட ஓட விரட்டிய போதனைகள் அவை.

அவை கேட்பதற்கு மிகவும் எளிதாகவும், செயல்படுத்துவதற்கு மிக மிகக் கடினமானவையுமாய் இருந்தன. மனித வாழ்க்கை பூமியில் ஆனந்தமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டுமென்றால் இந்த எட்டு விதிகளையும் கடைபிடித்தால் போதும். இயேசு தன்னுடைய போதனையை ஆரம்பித்தார். மக்கள் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தார்கள்.

எளிய மனதோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. இயேசு முதலாவது விதியைச் சொன்னார். எளிய மனம் என்ற சொல்லில் இயேசு மனித நேயத்தையும், கர்வத்தின் பக்கம் தலை சாய்க்காத பண்பையும், புகழின் மீது படுத்து ஓய்வெடுத்து விடாத மன நிலையையும் புரிய வைக்கிறார். மனதளவில் எளிமையாய் இருங்கள், அப்படி இருப்பவர்கள் சுவர்க்கத்தின் சொந்தக்காரர்களாவீர்கள்.

இரண்டாவது மொழியாக, துயருறுவோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். எளிய மனதோராய் வாழ்வதற்குரிய முயற்சியில் நுழைகையில் வருகின்ற துயரை, மனிதநேயப் பணிகளில் நடக்கையில் வரும் துயரை இயேசு இப்படிக் குறிப்பிடுகிறார். துயருக்குப் பயந்து ஒதுங்கிவிடாத மனிதர்களை அவர் தேடுகிறார். வருத்தங்கள் வந்தாலும் தொடர்ந்து நடக்கும் மனங்களுக்கு ஆறுதல் நிச்சயம் உண்டு என்பதை இயேசுவின் இரண்டாவது விதி சொல்கிறது.

கனிவுடையோர் பேறு பெற்றோர். அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். கனிவான மனமும், செயல்களும் உடைவர்கள் மக்களின் மனதில் அமர்வார்கள் என்பதையும், அவர்களே வாழ்வில் சாதனையாளர்கள். வெறுமனே சட்டங்களைப் பேசித் திரிபவர்கள் அல்ல, மனதளவில் மனித நேயம் கொண்டவர்களே உயர்ந்தவர்கள் என்பதை இயேசுவின் மூன்றாவது மொழி விளக்குகிறது.

நான்காவதாக, நீதியை நிலை நாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இயேசுவின் இந்த போதனை மக்களின் மனதுக்குள் இருந்த போராட்ட குணத்தைத் கூர் தீட்டும் வகையில் அமைந்தது. நீதி நிகழவில்லை என்பதை அறிந்திருந்தும், மறைநூல் வல்லுநர்கள் சொல்பவை நீதியல்ல என்பதைத் தெரிந்திருந்தும் அவற்றுக்கு எதிராக போராடும் குணமில்லாதவர்களை நோக்கி இயேசு, நீதியை நிலைநாட்டும் வேட்கை கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். அரசியல் சட்டங்களை நோக்கிய நீதியை அல்ல மதத்தோடான, அல்லது ஆன்மீகம் என்று கற்பிக்கப்பட்டவையோடான தார்மீகக் கேள்விகளையே இயேசுவின் இந்த விதி குறிப்பிடுகிறது.

இரக்கமுடையோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். என்பது இயேசுவின் ஐந்தாவது விதியாக அமைந்தது. சக மனிதனோடு இரக்கம் கொள்பவர்கள் இரக்கத்தை எங்கிருந்தேனும் பெற்றுக் கொள்வார்கள் என்பதை இயேசு சொல்கிறார். இரக்க மனம் இருந்தால் வாழ்வின் கவலைகளுக்கான பல்வேறு காரணிகள் கதவடைத்துச் செல்லும் என்பதை இயேசு அறிந்திருந்தார். பல யூத சட்டங்கள் இரக்கத்தைப் பற்றிப் போதிக்காமல் பலி செலுத்துவதைப் பற்றியும், கண்ணுக்குக் கண் என்னும் போதனைகளைச் சுற்றியுமே இருந்ததால் இயேசுவின் விதிகளில் இரக்கமும் இடம் பிடிக்கிறது.

தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். இயேசுவின் ஆறாவது வழிமுறை தூய்மையான இதயத்தைத் தயாராக்க அழைப்பு விடுக்கிறது. மனம் களவு, விபச்சாரம், வன்மம் போன்ற எந்தவிதமான சிந்தனைகளும் இல்லாமல் தூய்மையாக இருந்தால் அவர்கள் கடவுளைக் காண்பதும் விண்ணரசுக்குச் செல்வதும் நிச்சயம் நிகழும் என்கிறார் இயேசு. தூய்மை என்பதை வாழ்வின் ஒரு இலட்சியமாக, வாழ்வின் அர்த்தமாகவே ஆக்கிக் கொள்ள இயேசு இதன் மூலம் அழைப்பு விடுக்கிறார்.

ஏழாவதாக, அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர். என்கிறார் இயேசு. அமைதியற்ற சூழல் எப்போதுமே மனதில் தெளிவான முடிவுகளை எடுத்திட தடைக்கல்லாக இருக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார். மக்களிடம் வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் மக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக இயேசுவின் ஏழாவது போதனை அமைகிறது.

கடைசியாக, நீதியின் பொருட்டு துன்புறுத்தப் படுவோர் பேறு பெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. இயேசு தன்னுடைய சீடர்களை மையப்படுத்தி இந்தப் போதனையைச் சொல்கிறார். தன்னுடைய போதனைகளை ஆன்மீக நீதி சார்ந்த போதனைகளை, யூத சமுதாயத்தின் வீதிகளில் விளம்பி நடக்கும் போது நிச்சயமாக துன்பங்கள் வரும். அந்த துன்பங்களைத் தாங்கும் வலிமை சீடர்களுக்கு வேண்டும் என்னும் பார்வையில் இயேசு பேசியிருக்கக் கூடும்.

இயேசு தன்னுடைய எட்டு விதிகளையும் கூறி முடித்தபின் கூட்டத்தினரைப் பார்த்தார். கூட்டத்தினர் ஆழ்கடல் போல அமைதி காத்தனர். அவர்களிடம் இதுவரை இப்படி ஒரு போதனை நிகழ்ந்ததில்லை. ஆலயத்துக்கு பத்தில் ஒரு பங்கு சொத்தைக் கொடுப்பதும், பலியிடுவதும், எருசலேம் தேவாலயத்துக்குப் புனிதப் பயணம் செய்வதும் தான் விண்ணரசுக்கு உரியவை, சுவர்க்கத்தில் நம்மைச் சேர்ப்பவை என்று நம்பிக் கொண்டிருந்த மக்களுக்கு இயேசுவின் இந்த புதிய போதனைகள் வியப்பையும் குழப்பத்தையும் தந்திருப்பதில் வியப்பில்லை.

இயேசு அமைதியாக உட்கார்ந்திருந்த மக்களைப் பார்த்தார். திரும்பி தன்னுடைய சீடர்களைப் பார்த்தார். யாருமே பேசவில்லை. இயேசு எழுந்து நின்று உரத்த குரலில் ‘ என்பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, உங்கள் மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும் போது ஆனந்தமடையுங்கள். ஏனெனில் விண்ணரசில் உங்களுக்கு கைமாறு அதிகமாகும்.’ என்றார். கூட்டத்தினரிடையே மீண்டும் மெளனம். சீடர்களிடம் தெளிவா குழப்பமா என்று தெரியாத முக பாவங்கள். இயேசு அவர்களைப் பார்த்து மீண்டும் சொன்னார்.

‘திருச்சட்ட நூலிலுள்ள சட்டங்களை நான் அழிக்க வந்தேன் என்று எண்ணவேண்டாம். அழிப்பதற்கு அல்ல நிறைவேற்றவே வந்தேன். திருச்சட்ட நூலில் உள்ள அனைத்துமே நிறைவேறும் எதுவுமே நிறைவேறாமல் ஒழிந்து போகாது. ஆனால் திருச்சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் நெறி உயர்வானதாய் இருக்கட்டும். பரிசேயர், மறைநூல் அறிஞர்களுடைய நெறி போல உங்கள் நெறி இருக்க வேண்டாம். அது அழிவுக்கானது. அந் நெறியுடன் இருப்பவர்கள் விண்ணரசில் சேர முடியாது’

பத்துக் கட்டளை என்ன சொல்கிறது ? கொலை செய்யாதே. கொலை செய்யாமல் இருப்பது மட்டுமே திருச்சட்டத்தை நிறைவேற்றுவது ஆகாது. நான் சொல்கிறேன், தன்னுடைய சகோதரன் ஒருவனிடம் கோபம் கொள்பவன் கூட இறுதித் தீர்ப்பில் தண்டனை பெறுவான். சகோதரனைக் கொல்வது மட்டுமல்ல, கொல்ல வேண்டும் என்று நினைப்பது கூட கொலை தான்.

நீ ஆலயத்தில் கடவுளின் முன்னிலையில் காணிக்கை செலுத்த வரும்போது நன்றாக யோசித்துப் பார். நீ யாரிடமாவது கோபம் கொண்டிருந்தால் அந்த மனநிலையோடு காணிக்கை செலுத்தாதே. காணிக்கைப் பொருளை அப்படியே விட்டு விட்டு நேராக அவனிடம் சென்று மன்னிப்பு கேள். உன்னுடைய கோபத்தை தீர்த்துக் கொண்டு அவனுடன் சமாதானமாகு முதலி. அதன் பின் வந்து காணிக்கையைச் செலுத்து. இது தான் நீ கொலை செய்யாமல் இருப்பது. கொலை செய்வது என்பது மனதின் நிம்மதியைக் கொல்வதும் கொலை தான், நட்பைக் கொல்வதும் கொலை தான், நேசத்தைக் கொல்வதும் கொலை தான். உயிரைக் கொல்வது மட்டுமல்ல.

விபச்சாரம் செய்யாதே என்று பத்து கட்டளைகள் சொல்கிறது. நான் உங்களிடம் சொல்கிறேன். இச்சைக் கண்களோடு நீங்கள் ஒரு பெண்ணைப் பார்த்தாலே நீங்கள் மனதில் அவளோடு விபச்சாரம் செய்கிறீர்கள். இதுவும் விபச்சாரப் பாவமே. அப்படியானால் என்ன செய்ய வேண்டும் ? உன் கண் உன்னை தவறு செய்யத் தூண்டுகிறது எனில் அந்தக் கண்ணைப் பிடுங்கி எறி. இரண்டு கண்களோடு நரகத்தில் உழல்வதை விட, ஒற்றைக் கண்ணணாய் விண்ணகம் வருதலே சிறந்தது. உனது கை உன்னை பாவம் செய்யத் தூண்டினால் கையை வெட்டி எறி. முழு உடலோடு நரகத்தில் கிடப்பதை விட கை இல்லாமல் சொர்க்கத்தில் சேர்வதே நல்லது.

இயேசுவின் போதனைகளும் விளக்கங்களும் வீரியத்துடன் பாய கூட்டத்தினர் ஸ்தம்பித்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த மலைப் பிரதேசம் முழுவதும் இயேசுவின் போதனைகளைக் கேட்பதற்காக காதுகளைத் திறந்து வைத்துக் கிடந்தது. இயேசு போதனையைத் தீவிரப்படுத்தினார்.

நீங்கள் உலகின் உப்பு போன்றவர்கள். உப்பு தன்னுடைய உவர்ப்புத் தன்மை இல்லாமல் போனால் எதற்குப் பயன்படுவதில்லை. அது வெளியிலே கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும். உவர்ப்புத் தன்மையைக் காத்துக் கொள்ளுங்கள். அந்நாட்களில் அடுப்பின் வெப்பத் தன்மையை அதிகரிப்பதற்காக உப்பை அடுப்பைச் சுற்றிலும் கொட்டுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல அது தன்னுடைய வீரியத்தை இழந்துவிடும். அப்படி இழந்த உப்பானது பயன்படாத உப்பாகி வெளியில் கொட்டப்படும். அதையே இயேசு தன்னுடைய உவமையாகப் பயன்படுத்துகிறார்.

நீங்கள் உலகின் ஒளியைப் போன்றவர்கள். விளக்கைக் கொளுத்தி மரக்காலின் கீழ் மறைத்து வைத்தால் அதனால் என்ன பயன் ? விளக்கு இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். அதன் ஒளி சுற்றியிருக்கும் இருட்டை அகற்ற வேண்டும். அதற்கு அந்த விளக்கானது விளக்குத் தண்டின் மீது தான் இருக்க வேண்டும். நீங்களும் விளக்கு போன்றவர்கள். ஒளியாய் இருக்கிறீர்கள் நீங்கள் ஒளியாதிருங்கள்.

விவாகரத்து செய்ய வேண்டாம். கடவுள் ஆதாம் ஏவாளை ஆணும் பெண்ணுமாகப் படைத்ததின் நோக்கமே மனிதன் ஒரு பெண்ணுடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகத் தான். அதை விட்டு விட்டு விவாகரத்தை சட்டங்கள் சம்மதிக்கின்றன என்று சொல்லி நீங்கள் ஆதரிக்காதீர்கள். விவாகரத்து என்பது இறைவனின் விருப்பத்துக்கு விரோதமான பாவம்.

உங்கள் பேச்சு ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் இருக்கட்டும். இதைத் தவிர்த்த அனைத்தும் தீயோனிடமிருந்தே வருகின்றன. உங்கள் பேச்சில் நேர்மை நிலைபெற்றிருக்கட்டும். ஆணையிடுதலை வழக்கமாக்காதீர்கள். உங்கள் தலை முடி ஒன்றையேனும், கருப்பாக்கவோ, வெள்ளையாக்கவோ உங்களால் முடியாது. உங்கள் உயரத்தில் அரையடியை உங்களால் கூட்டவோ குறைக்கவோ முடியாது. உங்களுக்கு உங்கள் மீதே அதிகாரம் இல்லாத போது உலக பொருட்களின் மீது எந்த அதிகாரமும் இல்லை. எனவே எதன் மீதும் ஆணையிடாதீர்கள்.

தீமையைத் தீமையால் வெல்ல முடியாது. தீமையை நன்மையால் வெல்ல முடியும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதெல்லாம் பழைய போதனைகள். மோசேயின் காலத்தில் ஒருவனுடைய பல்லை யாரேனும் உடைத்தால் பதிலுக்கு அவனுடைய கண்ணைப் பிடுங்குவதோ, மிருகத்தனமாய் நடந்து கொள்வதோ வழக்கமாய் இருந்தது. அதை நெறிப்படுத்தத் தான் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று சட்டங்கள் வகுத்தார்கள். நான் இப்போது சொல்கிறேன், அவற்றை விட்டு விடுங்கள். யாரேனும் உங்களை வலக்கன்னத்தில் அறைந்தால் நீங்கள் பதிலுக்கு அறையாதீர்கள். அவனுக்கு உங்கள் இடக் கன்னத்தையும் காட்டுங்கள். அவன் செய்வது தவறு என்பதை அவனே புரிந்து கொள்ள வையுங்கள். யாரேனும் உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால் அவனுக்கு அதைவிட விலையுயர்ந்த உங்கள் மேலாடையையும் கொடுங்கள். யாராவது ஒரு கல் தொலைவு கூட வர கட்டாயப் படுத்தினால் இரண்டு கல் தொலைவு அவனோடு செல்லுங்கள். பணிவாய் இருப்பதற்கும் ஒரு துணிவு வேண்டும். அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இயேசுவின் போதனைகள் ஒரு புதிய தளத்தில் சீடர்களின் பார்வையைத் தெளிவடையச் செய்து கொண்டே இருந்தது. அவர்கள் இயேசுவின் போதனைகளை தங்கள் உள்ளத்தில் எழுதினார்கள். மக்களும், சீடர்களும் தன்னுடைய போதனையை முழுக் கவனத்துடன் கேட்பதைக் கண்ட இயேசு மகிழ்ந்தார். தன்னுடைய போதனையைத் தொடர்ந்தார்.

நண்பனுக்கு அன்பு, பகைவனுக்கு வெறுப்பு என்பதைத் தானே கேட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் எதிரியையும் நேசியுங்கள், அவர்களுக்காகவும் நீங்கள் செபியுங்கள். நண்பனுக்கு மட்டுமே அன்பை செலுத்துவதில் எந்த நன்மையும் இல்லை. அதை எல்லோரும் செய்கிறார்கள். அது பதில் எதிர்பார்த்து நன்மை செய்வதைப் போல. அதை எல்லா மக்களும் தான் செய்கிறார்கள். நீங்கள் அவர்களிடமிருந்து வித்தியாசப்படுங்கள். எதிரிகளை நேசியுங்கள், அவர்கள் உங்கள் நண்பர்களாவார்கள். உங்களை வெறுப்பவர்களைத் தான் நீங்கள் அதிகமாக அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் வெறுப்பு குடிகொண்ட மனதை நீங்கள் அன்பினால் நிறைப்பதே உன்னதமான பணி. ஏனெனில் கடவுள் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர் நல்லோர் மேலும், தீயோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்.

நீங்கள் நல்ல செயல்கள் செய்யும்போது மனிதர் பார்க்க வேண்டுமென்று மக்கள் கூடியிருக்கும் இடத்தில் மக்களுக்கு முன்பாக அவற்றைச் செய்யவேண்டாம். அப்படிச் செய்தால் அதற்குரிய பலன் அப்பொழுதே அவர்களுக்குக் கிடைத்தாயிற்று. கடவுள் முன்னிலையில் அது கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் தர்மம் செய்யும் போது வலது கை செய்வதை இடது கை கூட தெரியாதபடி மறைவாகவே செய்யுங்கள். வெளிவேடக்காரரைப் போல இருக்க வேண்டாம். மக்களுடைய புகழ்ச்சியை அவர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் கடவுளின் அங்கீகாரத்தையே விரும்புங்கள்.

செபிக்கும்போதும் அப்படியே செய்யுங்கள். செபம் என்பது கடவுளோடு கொள்ளும் உன்னத உரையாடல். அது சூல் கொண்ட சோகங்களைக் கால் கொண்டு நசுக்குமிடம். நீங்கள் பரிசேயரைப் போலவோ, மறைநூல் அறிஞர்களைப் போலவோ பொது இடங்களில் நின்று உரக்கக் கத்தி செபிக்க வேண்டாம். தனிமை அறைக்குள் சென்று தாழிட்டு கடவுளை நோக்கி மனதைத் திறந்து மன்றாடுங்கள். உங்கள் செபத்தைக் கடவுள் கேட்பார். பலன் அளிப்பார். ஆழ்மனதிலிருந்து உங்கள் வேண்டுதல்களை எழுப்புங்கள். வீதிகளில் நின்று நெடுநேரம் செபிப்பது உங்களை ஆன்மீகவாதி போல தோன்றச் செய்யும் ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. நோன்பு இருக்கும்போதும் நீங்கள் முகவாட்டமாய் வெளிவேடக்காரரைப் போல இருக்காதீர்கள். நீங்கள் நோன்பு இருப்பதே தெரியாதபடி உற்சாகமாய், வழக்கம் போல இருங்கள்.

யாரையும் தீர்ப்பிடும் அதிகாரமும் நமக்கு வழங்கப்படவில்லை. நாம் யாரையும் தீர்ப்பிடக் கூடாது. அப்படித் தீர்ப்பிட்டால், நாமும் தீர்ப்புக்கு உள்ளாவோம். நாம் மன்னிப்பையே ஆயுதமாகக் கொள்ள வேண்டும். அடுத்தவர் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன் நம்முடைய குறைகளைக் களைய வேண்டும். நம்முடைய கண்ணில் மிகப்பெரிய தூசியை வைத்துக் கொண்டு அடுத்தவன் கண்ணில் சிறிய தூசி விழுந்திருக்கிறது என்று சொல்வது சரியான முறையல்ல. முதலில் நம் கண்ணிலிருக்கும் தூசியை எடுத்து எறிய வேண்டும் அப்போது தான் அடுத்தவர் கண்ணிலிருக்கும் தூசியை எடுக்க நமக்கு கண் நன்றாகத் தெரியும். முதலில் நாம் தயாராவோம். பின் அடுத்தவரைத் தயார் படுத்துவோம்.

மறை நூல் விளக்கங்களைக் கேட்கும்போது காதுகளை அல்ல மனதைத் திறந்து வையுங்கள். ஓநாய்கள் ஆடுகளின் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வரக் கூடும். அவர்களுடைய விஷமத்தன போதனையின் விஷத்தை அறிந்து கொள்ளுங்கள். மரத்தை அறிந்து கொள்ள அதன் கனிகள் போதுமானது. நல்ல மரத்தில் கெட்ட கனிகள் வருவதில்லை, கெட்ட கனி நல்ல பழத்தைத் தருவதுமில்லை. போலி போதனையாளர்களை அவர்களுடைய வார்த்தைகளை வைத்தல்ல, செயல்களை வைத்தே அறிந்து கொள்ளுங்கள்.

மண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேர்க்க வேண்டாம். அது இவ்வுலகோடு அழிந்து போகும். விண்ணகத்தில் சேமித்து வையுங்கள். விண்ணகத்தில் சேமிக்கும் செல்வம் என்பது நல்ல செயல்கள். அவற்றை தவறாமல் சேமியுங்கள். விண்ணகத்தில் சேமிக்கும் செல்வத்தை கரையான் அரிப்பதில்லை, திருடர் திருடுவதுமில்லை. செல்வத்தின் மீதான ஆசைகள் மனிதனுடைய ஆன்மீகத் தேடலுக்கு ஊறு விளைவிக்கும். ஒருவன் இரண்டு எஜமானனுக்கு ஊழியம் செய்வது என்பது இயலாத காரியம். பணத்துக்காகவும், நிலை வாழ்வுக்காகவும் ஒருவன் உழைக்க முடியாது. எது நிலையானதோ அதைத் தேடுவதே சிறந்தது. ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள். அவற்றுக்கு நிலங்கள் இல்லை, விதைப்பதில்லை, அறுப்பதில்லை, களஞ்சியங்கள் கட்டி தானியங்களைச் சேர்ப்பதுமில்லை. ஆனால் கடவுள் அவற்றுக்கும் உணவளிக்கிறார். பறவைகளையே பராமரிப்பவர் உங்களைப் பராமரிக்க மாட்டாரா ? ஏன் வயிற்றுக்கான போராட்டங்களை மட்டுமே வாழ்க்கை என அர்த்தப்படுத்துகிறீர்கள் ? முதலில் கடவுளுக்கான வாழ்க்கையைத் தேடுங்கள். உங்களுக்கான வாழ்க்கை உங்களை தேடி வரும்.

இயேசுவின் போதனைகள் மக்களை தெளிவு படுத்திக் கொண்டிருக்க, சீடர்களை அவை தயாரித்துக் கொண்டிருந்தன.

கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்
தேடுவோர் கண்டடைவார்கள்.
உங்களில் மகன் உங்களிடம் அப்பம் கேட்டால் நீங்கள் கல்லையா கொடுப்பீர்கள் ? மீன் கேட்டால் பாம்பையா கொடுப்பீர்கள். இல்லையல்லவா ? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே நல்லவற்றைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, உலகின் கடவுள் தம்முடைய பிள்ளைகளுக்கு நல்லவற்றைத் தர மாட்டாரா ? நம்பிக்கை கொள்ளுங்கள். அதுவே வாழ்வின் அடிப்படை.

நீங்கள் கேட்பதற்கு முன்பே உங்களுக்கு என்ன தேவை என்பதைக் கடவுள் அறிந்திருக்கிறார். எனவே நீங்கள் அதிகமாய் அவரிடம் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இப்படி செபியுங்கள். விண்ணுலகிலிருக்கும் எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதென்று போற்றப்படுக. உனது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களையும் மன்னியுங்கள். தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே ஆமென். இந்த செபமே போதுமானது.

இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள். அழிவுக்குச் செல்லும் வழி பெரியது. அதில் நுழைவது எளிது. அதில் தான் நிறைய பேர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வுக்குச் செல்லும் பாதை குறுகியது. இடர்கள் நிறைந்தது. நீதி, நேர்மை, அன்பு என்னும் என்னுடைய போதனைகளின் படி வாழ்வது. அந்த பாதையில் நடப்பது மட்டுமல்ல, அந்த பாதையைக் கண்டு பிடிப்பதே கடினமானது. ஆனால் அது தான் உங்களை வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

நான் சொல்லும் போதனைகளைக் கேட்பவன் பாறை மீது வீட்டைக் கட்டிய அறிவாளியைப் போன்றவன். காற்று வந்தாலும், புயல் அடித்தாலும் அடித்தளம் பாறையில் அமைந்திருப்பதால் வீடு அசையாது. என் போதனைகளைக் கேட்காமல் வாழ்பவனோ மணல் மீது தன் வீட்டைக் கட்டியவனைப் போன்றவன். சிறு காற்றுக்கே சிதறுண்டு போவான்.

இயேசுவின் போதனைகள் அதிகாரத் தோரணையில், முழக்கங்களாக மலையின் மேலிருந்து வீரியத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. கேட்டவர்கள் எல்லோரும் பிரமித்துப் போனார்கள். சீடர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும்., வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், போதனையை எப்படி வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மனதில் எழுதிக் கொண்டார்கள்.

இயேசுவின் பணி வாழ்வில் நிகழ்ந்த மிக முக்கியமான போதனையாக இந்த மலைப்பிரசங்கம் நிலைபெறுகிறது.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s