பாலஸ்தீனத்தை இஸ்லாமியர்களின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்னும் உந்துதலில் ஏற்பட்டவை தான் சிலுவைப் போர்கள். இப்போர்கள் திருச்சபையின் தூண்டுதலாலும், அவர்களுடைய ஈடுபாட்டினாலும் நிகழ்ந்தவையே. எருசலேமிற்கு கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் செய்வது வழக்கமாக இருந்தது.
கிபி 1000 வது ஆண்டில் கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவார். அவர் மக்களை தீர்ப்பிடுவார் என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். எனவே எருசலேமிற்குச் செல்லும் மக்களின் கூட்டம் அந்த காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருந்தது. அப்படி செல்லும் பயணிகள் பாலஸ்தீனத்தில் பல இன்னல்களைச் சந்தித்தார்கள். அவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டுமெனில் பாலஸ்தீனம் முகமதியர்களின் கையை விட்டு கிறிஸ்தவர்களிடம் வரவேண்டும் என்று திருச்சபை நினைத்தது. அந்த எண்ணமே சிலுவைப்போருக்கு வித்தானது.
1095ம் ஆண்டு முதல் 1272ம் ஆண்டு வரை பல சிலுவைப்போர்கள் நிகழ்ந்தன. இவை வரலாற்றில் நடந்த மிகப்பெரும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ஏழு முக்கியமான சிலுவைப்போர்கள் நிகழ்ந்தன. ஆனால் இந்த ஏழு சிலுவைப்போர்களுமே தோல்வியில் முடிந்தன. ஏராளமான உயிரிழப்பும், பொருள் இழப்பும் ஏற்பட்டன. போரிடச் என்றவர்களிடம் போதுமான அளவு பயிற்சி இல்லாததும், ஒருமித்த குறிக்கோள் இல்லாததும், பிரிவினை மனப்பான்மைகளும், தன்னை பெரியவனாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணமும் இந்த போர்களின் தோல்விக்கு காரணமாய் அமைந்தன.
போப் இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தார். 1095ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சிலுவை அடையாளத்தை ஏந்திக் கொண்டு போருக்குச் சென்றார்கள். ஆனல் ஒழுங்குபடுத்தப் படுத்தப் படாத, போர் பயிற்சி அதிகம் இல்லாத படை என்பதால் போரில் தோல்வியடைந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் காட்ப்ரே என்பவர் முறையான போர் பயிற்சியுடனும், வகைப்படுத்தப் பட்ட படையுடனும் சென்று பாலஸ்தீனாவை கைப்பற்றினார். ஆனால் இதுவும் அதிக நாள் நீடிக்கவில்லை.
பாலஸ்தீனாவின் எல்லைப் பகுதிகள் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகின. பிரான்ஸ் நாட்டின் ஏழாம் லூயிஸ் , மன்னன் மூன்றாம் கான்ராடுவுடன் இணைந்து போருக்குச் சென்றார். இது இரண்டாம் சிலுவைப்போர் என்று அழைக்கப்படுகிறது. இதில் இவர்கள் சில பகுதிகளைக் கைப்பற்றினார்கள்.
கி,பி 1187ல் மீண்டும் எருசலேம் கைநழுவியது. சலாடின் என்பவரால் எருசலேம் கையகப்படுத்தப்பட்டது. இதை மீண்டும் பிடிப்பதற்காக மூன்றாம் சிலுவைப்போர் நிகழ்ந்தது. ஜெர்மனியில் பிரடெரிக் பார்பரோசா, பிரான்சைச் சேர்ந்த பிலிப் அகஸ்டஸ் மற்றும் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சர்ட் ஆகியோர் இந்த போரை நடத்தினார்கள். வழியிலேயே பிரடெரிக் இறந்துவிட, அகஸ்டஸ் போரைக் கைவிட்டு திரும்பினார். எனவே ரிச்சர்ட் வேறு வழியின்றி எருசலேமை கையகப்படுத்தி வைத்திருந்த மன்னன் சலாடினுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டான். இதன்படி கிறிஸ்தவர்கள் எருசலேமிற்கு தடையின்றி செல்ல வழி பிறந்தது.
நான்காம் சிலுவைப்போர் திருச்சபை வரலாற்றின் திருப்பமாக இருந்தது. 1201 ல் நிகழ்ந்த் இந்த சிலுவைப்போரில் எருசலேமைப் பிடிப்பதற்குப் பதிலாக கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றினார்கள் போராளிகள். கான்ஸ்டாண்டிநோபிள் சின்னாபின்னப் படுத்தப்பட்டது. இந்த சிலுவைப்போர் துருக்கியர்கள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றக் காரணமாய் இருந்தது. இது கிறிஸ்தவத் திருச்சபைக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாய் முடிந்தது.
1220ல் நிகழ்ந்த் ஐந்தாம் சிலுவைப்போர் ஒரு சமாதான உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி எருசலேம், பெத்லகேம் போன்ற கிறிஸ்தவர்களின் புனித இடங்கள் கிறிஸ்தவர்களுக்கே வழங்கப்பட்டன. ஆனால் இந்த உடன்படிக்கை நீண்ட நாட்கள் நிலைநிற்கவில்லை. 1274ம் ஆண்டு மீண்டும் எருசலேம் முகமதியர்களிடம் சேர்ந்தது.
1248ல் நிகழ்ந்த ஆறாம் சிலுவைப்போரும், 1270 ல் நிகழ்ந்த ஏழாம் சிலுவைப்போரும் புனித லூயிஸ் என்பவரின் முயற்சியால் நிகழ்ந்தது. ஆனால் இந்த இரண்டு சிலுவைப்போர்களுமே கிறிஸ்தவர்களுக்குச் சாதகமான முறையில் நிறைவடையவில்லை. ஏழு சிலுவைப்போர்கள் முக்கியமாக நிகழ்ந்தாலும் போரின் இலட்சியம் நிறைவேற்றப்படவேயில்லை. முகமதியர்கள் தங்கள் ஆளுகைக்குல் எருசலேமை 1917 வரை வைத்திருந்தார்கள்.
சிலுவைப்போர்கள் தோல்வியில் முடிந்தாலும் சில நன்மைகளும் நிகழத்தான் செய்தன. குறிப்பாக முகமதியர்கள் ஐரோப்ப நாடுகளுக்குள் அத்துமீறல் செய்வது இதன் பின்னால் தடை செய்யப்பட்டது. எருசலேமிற்குச் செல்ல விரும்பிய பயணிகள் சுதந்திரமாய் சென்று வரக்கூடிய சூழலை சிலுவைப்போர்கள் ஏற்படுத்தின. திருச்சபையின் வளர்ச்சிக்கும் இவை ஒருவகையில் உதவியாய் இருந்தன.
சிலுவைப் போர்களுக்கான காரணங்கள்
கிழக்கு சபை அமைந்த பகுதியின் பேரரசன் முதலாம் அலெக்சியஸ் துருக்கியர்களுக்கு எதிராக போர் தொடுக்க விரும்பினான். அதற்காக அவன் ரோமில் இருந்த போப்பின் ஆதரவை நாடினான்.
அப்போதைய போப் அர்பான் இதை ஆதரித்து துருக்கியர்களுக்கு எதிரான போரை தூண்டி விட்டார். மேற்கு ஐரோப்பாவுக்கு அர்பான் அறைகூவல் விடுத்தார். போரில் ஈடுபடுபவர்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைக்கும் என்றும். அவர்கள் வேறு பல சலுகைகளையும் பெறுவார்கள் எனவும் 1095 நவம்பர் 26ல் போப் அறிவித்தார்.
மதம் எளிதில் மக்களை உணர்ச்சி வலையால் பிடிக்கக் கூடிய வல்லமை படைத்தது. அது அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைத்தது. கிழக்கு மேற்கு என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஒன்றானார்கள். விரைவிலேயே படை திரண்டது. அனைவரும் இடது தோளிலே சிலுவை அடையாளத்தை அணிந்து கொண்டிருந்தனர்.
இஸ்லாமியருக்கு எதிராகப் போராடவேண்டும் எனும் வெறி கிறிஸ்தவர்களிடம் நிரம்பியது. அதற்காக மக்கள் பணம் பொருள் அனைத்தையும் அர்ப்பணித்தனர். ஒருமித்த சிந்தனை அங்கே நிலவியது.
ஐரோப்பிய நாடுகளில் அக்காலத்தில் பஞ்சம் நிலவியது. ஐம்பது ஆண்டுகளாக பஞ்சத்தின் பிடியில் சிக்கியிருந்த மக்கள் போர் மூலமாக பஞ்சம் தீரும் என நம்பினார்கள். சிலுவைப்போர் வரவேற்கப்பட்டது.
கொள்ளையடிக்க விரும்பியவர்களும், வன்முறைகளில் நாட்டமுடையவர்களும், பலவான்களும் போர்களை இயல்பாகவே விரும்பினார்கள். எனவே அவர்களுக்கும் சிலுவைப்போர் தேவையாய் இருந்தது.
சிறையில் இருந்தவர்கள் விரும்பினால் அவர்களும் படைகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். கைதிகளுக்கு வெளி உலகிற்கு வர இது ஒரு வாய்ப்பாக அமைந்ததால் அவர்கள் இதை தீவிரமாய் ஆதரித்தனர்.
போர் வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. எனவே வணிகத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்கள் சிலுபைப்போரை ஆதரித்தனர்.
சிலுவைப்போர் முழு மூச்சாக வரவேற்கப்பட மக்கள் மத்தியிலே மத குருக்கள் ஏற்படுத்திய சிந்தனையும் ஒரு முக்கிய பங்கு வகித்தது. சிலுவைப்போர்களில் ஈடுபடுவது புனிதச் செயல் என்று மக்களுக்குச் சொல்லப்பட்டது. புனிதப் போரில் இறப்பவர்களுக்கு சுவர்க்கம் நிச்சயம் என்று போதிக்கப்பட்டது.
புனிதப் பயணங்கள் அன்றைய காலத்தில் மிக முக்கிய நிகழ்வாக இருந்தன. அவை மதத்தின் அடையாளங்களாக மட்டும் இல்லாமல் மீட்பின் வாசலாகவும் பார்க்கப் பட்டது. எனவே அந்தப் பயணத்திற்கு தடை ஏற்பட்டதை மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்கள்.
சிலுவைப் போர்களால் ஏற்பட்ட விளைவுகள்
சிலுவைப்போர்கள் பல விளைவுகளுக்குக் காரணமாயிருந்தன.
கிறிஸ்தவர்களிடையே இருந்த கிழக்கு சபை, மேற்கு சபை என்னும் எண்ணம் மாறி, கிறிஸ்தவர்கள் என்னும் எண்ணம் உருவாக இந்த சிலுவைப்போர்கள் பெருமளவில் உதவின.
சிலுவைப்போர்களில் உயிரிழந்த செல்வந்தர்களின் சொத்துக்களெல்லாம் அரசின் வசமானது. இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இது அரச செல்வம் உயர வழி வகுத்தது.
வணிகமும், தொழிலும் மறுமலர்ச்சியடைய இந்த சிலுவைப்போர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவின எனலாம்
சிலுவைப்போர்களில் அரசர்கள் போப்பின் ஆலோசனைப்படி நடந்ததால் கிறிஸ்தவ தலைமையின் வலிமை உயர்ந்தது.
நினைவுச் சின்னங்கள், புனிதப்பயணங்கள் போன்றவற்றுக்கான மரியாதை அதிகரித்தது. மக்களின் புனிதப்பயணங்கள் செல்லும் விருப்பம் அதிகரித்தது.
மத்தியதரைக் கடலில் கிழக்குப் பகுதிகளில் ரோமின் எல்லை விரிவடைய சிலுவைப் போர்கள் காரணமாய் இருந்தன.
கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமியருக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட இந்த சிலுவைப் போர்களும் ஒரு முக்கிய காரணமாயிற்று.
மேற்கு, கிழக்கு நாடுகளிடையே உறவுப் பாலம் உருவானது. எனவே கலாச்சாரங்கள், புதிய நாகரீகங்கள் என பலவற்றை அவர்கள் கற்றுக் கொள்ள சிலுவைப்போர்கள் வாய்ப்பளித்தன. மேற்கத்திய நாடுகளில் துறவறம் வளரவும் சிலுவைப் போர்கள் காரணமாயிற்று.
சிலுவைப்போர்கள் நடந்த காலத்தில் எதிரிகளின் எல்லைக்குட்பட்ட கிணறுகளில் நச்சு கலக்கப்பட்டது. இரு தரப்பினருமே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் அவர்களுக்குள் நல்ல தண்ணீருக்கான சண்டை நடந்தது. பிளவை நோய் தாக்கி பலர் மரணமடைந்தனர்.
போர்களின் மூலமாக மதத்தைப் பரப்புதல் கிறிஸ்தவ அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது. எனவே எத்தனை நன்மைகள் விளைந்தாலும் சிலுவைப் போர்கள் கிறிஸ்தவ வரலாற்றின் கறைகளே.
PL SHARE BOOK FOR HISTORY OF CHRISTIANITY FULL IN TAMIL , will pay
LikeLike
its very good, informative, easy to understand. congratulations
LikeLike
Thank you
LikeLike