Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 12 – கிழக்கு சபையும், மேற்கு சபையும் பிரிகிறது

Image result for Third Leo

மன்னன் டியோகிளேசியன் கிபி 286ல் ரோம் அரசை இரண்டாகப் பிரித்து மேற்கில் ரோம் நகரின் தலைமையிலும், கிழக்கே கான்ஸ்டாண்டிநோபிளிலுமாக இரண்டு பிரிவை ஏற்படுத்தினார்.

உலகின் பல நாடுகளிலும் பத்து நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் புகுந்து தங்கள் இருப்பை நிலை நாட்டினர். எனினும் எல்லா கிறிஸ்தவர்களும் ரோம் நகர போப்பின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்தனர்.

கான்ஸ்டாண்டிநோபிள் தனிப் பிரிவாக இருந்தாலும் அங்குள்ள தலைமைக்கு உலகக் கிறிஸ்தவர்களிடம் வரவேற்பு இல்லை. இது 1054ல் இரண்டு சபைகளுக்குமிடையே பெரும் பிளவு ஏற்பட காரணமாயிற்று. இந்த இரண்டு சபைகளும் பிரிய பல்வேறு காரணங்கள் இருந்தன.

கிழக்கிலுள்ள அரசு கிரேக்க அரசென்றே அந்நாட்களில் அழைக்கப்பட்டது. காரணம் கிழக்கில் ஆட்சி மொழி கிரேக்கமாய் இருந்தது. மேற்கு ரோம சபையோ லத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது. லத்தீன் மொழியினருக்கு கிரேக்க மொழிமீது இயல்பாகவே மொழி விரோதம் இருந்து வந்தது.

இந்த மொழிப் பாகுபாடு இவர்கள் ஒட்டுமொத்தமாக கூடிய பொதுக்குழுக்களிலும் அவ்வப்போது பிரதிபலித்தே வந்திருக்கிறது. குறிப்பாக இரண்டு இடங்களிலும் சில கலாச்சார வேறுபாடுகள் மத அடையாளங்களிலும், திருமுழுக்கு போன்றவற்றிலும் வெளிப்பட்டன. அவை இரு தரப்பினருக்குமிடையே உரசல் வர வழி வகுத்தது.

கிழக்கு சபைக்கு கான்ஸ்டண்டைன் மன்னன் காலம் முதலே அரசியல் தலையீடு அதிகமாய் இருந்தது. மேற்கைப் பொறுத்தவரை போப்பின் அதிகாரமே முக்கியமானதாய் இருந்தது.

அரசியல் ரீதியாகவும், எல்லை ரீதியாகவும் இந்த இரண்டு சபைகளுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. குறிப்பாக பல்கேரியா, தெற்கு இத்தாலி போன்ற இடங்களுக்கு இரண்டு தலைமைகளும் உரிமை கொண்டாடின.

கொள்கை ரீதியாகவும் இரு சபைகளுக்குள்ளும் உரசல்கள் நிகழ்ந்தன. உதாரணமாக கிபி 589ல் டாலிடோ ஆலோசனைக் குழு ‘தூய ஆவியானவர் தந்தையிடமிருந்தும், மகனிடமிருந்தும் வருபவர்’ என்று ரோமை சபையின் விசுவாச பிரமாணத்தில் சேர்த்தது. இதற்கு அவர்கள் கிழக்கு சபையின் அனுமதியைக் கேட்கவில்லை.

ஏனெனில் கிழக்கு சபை இந்தக் கருத்தை ஒத்துக் கொள்ளவில்லை. தந்தியிடமிருந்து மகனாகிய இயேசுவின் வழியாக தூய ஆவியானவர் வருகிறார் என்றே கிழக்குத் திருச்சபை ஒத்துக் கொண்டிருந்தது.

தந்தையும் , மகனும் ஒன்றே எனும் அடிப்படையில் தங்கள் கருத்து சரி என ரோம் சபை வாதிட்டது. தந்தையும் மகனும் ஒன்றே எனினும் மகனுக்குப் பிறகே தூய ஆவியானவர் வருகிறார். மகன் தான் தூய ஆவியானவரை அனுப்புவேன் என்று சொல்லியிருக்கிறார் எனவே இந்தக் கோட்பாடே உண்மையானது என கிழக்கு சபையினர் வாதிட்டனர்.

கிழக்குச் சபை ஆதிக்கம் செலுத்திய டிரில்லியன் பேரவை கிபி 692ல் கூடியது. அதில் அவர்கள் பல சட்டங்களை இயற்றினார்கள். அவற்றில் சில ரோமை சபையினரின் எதிர்ப்புக்கு ஆளாகின.

குருக்கள் திருமணம் செய்வதை ஆதரிக்கும் சட்டம் அதில் ஒன்று. குருக்கள் தனிவாழ்விலும், பொதுவாழ்விலும் தங்களை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும். இயேசுவைப் போல அவர் பணி செய்பவர்கள் திருமணம் செய்யக் கூடாது எனும் கருத்து முதல் சில நூற்றாண்டுகளில் வலிமையாய் இருந்தது.

அந்த ஆழமான சிந்தனையை விலக்கும் இந்த புதிய சட்டத்தை மேற்கு சபையினர் எதிர்த்தனர்.

இயேசு கிறிஸ்துவை தேவ ஆட்டுக்குட்டியாக சித்தரிப்பது தவறென கூறப்பட்டது. இதுவும் மேற்குச் சபையின் எதிர்ப்புக்கு ஆளானது. முதல் சில நூற்றாண்டுகளாக இருந்த நம்பிக்கைகளுக்கும் வழக்கங்களுக்கு எதிராக நிற்க அவர்கள் மறுத்தனர்.

கிழக்குப் பேராயரை போப்பின் அதே அதிகாரம் உடையவராக சித்தரிக்கப்பட்ட சட்டத்தையும் ரோம் சபை எதிர்த்தது. தவக்காலங்களில் சனிக்கிழமை உண்ணா நோன்பு இருப்பது உட்பட மேலும் சில சட்டங்கள் ரோம் சபையினரின் விருப்பத்துக்கு இணங்காமல் இருந்தது.

அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் இயேசு மானிட உருவில் வந்த கடவுள் எனும் கோட்பாட்டின் படி உருவப்படங்களை வழிபாடுகளில் பயன்படுத்தினர். சிலைகள் செய்வதும், படங்கள் பயன்படுத்துவதும் அந்நாட்களில் சகஜமாய் இருந்தது. இந்த வழக்கம் கிறிஸ்தவர்களை உருவ வழிபாட்டுக் காரர்கள் போல சித்தரித்தது.

கிபி 717ல் பேரரசனாய் இருந்த மூன்றாம் லியோ இந்த எண்ணத்தைத் தகர்ப்பதற்காக இனிமேல் வழிபாடுகளில் உருவங்களோ, உருவப் படங்களோ வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

மேற்கு ரோமின் எதிர்ப்பையும் மீறி கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த பெரும் மாறுதல் கிழக்கு மேற்கு பிரிவிற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது.

இறுதியாக மிகாவேல் செருலேரியு எனும் கிழக்குப் பேராயர் தானும் போப்பைப் போன்ற அதிகாரத்துடன் விளங்க வேண்டும் என விரும்பினார். எனவே அவர் ரோம் போப்புக்கு எதிராக மடல் எழுதினார்.

மேலும் பல்கேரியாவிலுள்ள துறவற மடங்களில் ரோம் நடத்தி வந்த லத்தீன் வழிபாடுகளை வலுக்கட்டாயமாய் நிறுத்தினார். அரசிடமிருந்தும், ரோமிடமிருந்தும் பிரிந்தால் மட்டுமே தனக்கும் போப் அந்தஸ்து கிடைக்கும் என கருதினார்.

இது ரோம் போப் ஒன்பதாம் லியோவை கடும் கோபமூட்டின. கிபி 1054 ஜூலை பதினாறில் கிழக்குச் சபையையும் மேற்குச் சபையும் பிரிந்தன.

இந்தப் பிளவினால் கிழக்கு சபை பலமிழந்தது. ஒரு நல்ல தலைமை இல்லாததனால் சபைகள் தனித் தனியே இயங்க ஆரம்பித்தன. சிலுவைப்போர்களுக்கும் இந்தப் பிளவே வழி வகுத்தது.

துருக்கியரின் போரை சந்திக்கும் வலு இல்லாத நிலைக்கு கிழக்கு சபை தள்ளப்பட்டது. சின்ன ஆசியாவிலுள்ள பல இடங்கள் 1071ல் துருக்கியரின் கைக்குப் போனது. சிறப்பு மிக்க நிசேயா 1081ல் வீழ்ந்தது. மேலும் சில நூற்றாண்டுகள் தாக்குப் பிடித்த கான்ஸ்டாண்டிநோபிள் 1453ல் வீழ்ச்சியடைந்தது.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s