துறவறத்தையும் அதன் தன்மைகளின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முதலில் தனித்து வாழ்ந்த துறவியர். இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, பாறைவெளிகள், குகைகள் மற்றும் பாலை நிலங்களில் தனித்துத் தவம் செய்தனர். ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இரண்டாவது வகையினர் குழுக்களாக துறவறத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய துறவியர் குகைகளில் சேர்ந்து வாழ்ந்தனர். திரு வழிபாடுகள் செய்யப்பட்டன. ஒறுத்தல் முயற்சிகளை அனைவரும் பின்பற்றினர்.
மூன்றாவது பிரிவினர் அமைப்பு ரீதியாக துறவறம் மேற்கொண்டவர்கள். இவர்கள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தங்கிக் கொண்டனர்.
ஒறுத்தல் முயற்சிக்காகச் செலவிடும் நேரத்தையும், உழைப்பையும் மக்கள் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தனர்.
ஆண்டனி
கி.பி இருநூற்று ஐம்பதில் எகிப்தில் பிறந்த ஆண்டனி என்பவர் துறவற வரலாற்றில் மிக முக்கியமானவர். ஒருவன் விண்ணக வாழ்வை அடைய வேண்டுமெனில் தனக்குள்ளதை எல்லாம் விற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் எனும் கட்டளை அவரை வசீகரித்தது.
தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். அனைத்து சொத்துகளையும் இழந்தபின் ஒரு பாழடைந்த கோட்டைக்குள் சென்று மூடிக் கொண்டார். அப்போது அவருக்குப் முப்பத்தைந்து.
அவருடைய ஐம்பத்து ஐந்தாவது வயது வரை அந்த கோட்டையை விட்டு வெளியே வரவில்லை. அடைத்த கதவுகளுக்குள் அவர் தியானத்திலும், ஒறுத்தல் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
மக்கள் அவருக்கு அப்பமும், நீரும் அளித்து வந்தனர். இருபது ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்தபின் வெளியே வந்த அவருக்கு பெரும் மரியாதை கிடைத்தது. மக்கள் அவருடைய போதனைகளைக் கேட்க பெருமளவில் திரண்டனர்.
துறவற வாழ்க்கையின் தேவை. அதன் இன்பம். தூய்மையான வாழ்வின் தேவை இவற்றைப் பற்றியெல்லாம் அவர் மக்களுக்குப் போதித்தார். தன்னுடைய 105 வது வயதில் இறையடி சேர்ந்தார்.
சீமோன்
அந்த காலத்தில் துறவறத்தில் ஈடுபட்டவர்களின் இன்னொரு முக்கியமான நபர் சீமோன். அவர் ஒறுத்தல் முயற்சிக்காக நாற்பது நாட்கள் ஒரு இருட்டுக் குகைக்குள் குடியிருந்தார். அப்போது தன்னுடைய வலது காலை ஒரு சங்கிலியால் கட்டி பாறையோடு இணைத்திருந்தார்.
நகர முடியாமல், எதுவும் உண்ண முடியாமல் தன்னை ஒறுத்து குகையில் வாழ்ந்த அவர் அதன் பின் வெளியே வந்து வேறொரு ஒறுத்தலில் ஈடுபட்டார்.
நாற்பது முழ உயரமுள்ள ஒரு கோலின் உச்சியில் ஒரு சிறு கூண்டு செய்து அதில் முப்பத்து ஏழு ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்திருக்கிறார்.
பியோர்
பியோர் துறவி உலகத்தோடு தனக்கிருந்த உறவை வெட்டி விட்டதன் மூலம் துறவறத்தின் ஆழத்தை அனுபவித்தார். தன்னுடைய குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் விட்டு விட்டு தனியே வாழ்ந்தார்.
ஐம்பது ஆண்டுகள் தன்னுடைய குடும்பத்தினரோடும், உறவினரோடும் பேசாமல், அவர்களைப் பார்க்காமல் வாழ்ந்த பியோரை ஒருமுறை மக்கள் கட்டாயப்படுத்தினார்கள். அதாவது அவருடைய சகோதரியைச் சந்திக்க வேண்டுமென்று.
பியோர் சென்றார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கப் போகும் தன்னுடைய சகோதரனைப் பார்க்க ஆவலில் காத்திருந்தாள் சகோதரி. ஆனால் பியோர் விட்டை அடைந்ததும் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டார்.
தன்னுடைய சகோதரியை அவர் பார்க்கவேயில்லை. இதை ஒரு பெரும் ஒறுத்தல் முயற்சியாய் அவர் நிறைவேற்றினார்.
சிரோஸ்
சிரோஸ் என்றொரு துறவி இருந்தார். அவருடைய ஒறுத்தல் முயற்சி இன்னும் கடுமையானது. அவர் எப்போதுமே விழித்திருந்து கடவுளை வேண்டிக் கொண்டே இருப்பார்.
அவருக்கு தூக்கத்தை ஒடுக்க வேண்டும் எனும் ஆசை. எனவே தூக்கம் வராமலிருக்கும் வழிகளைக் கடைபிடிக்க ஆரம்பித்தார். என்ன செய்தாகிலும் தூக்கத்தைத் துரத்தினார்.
தூக்கம் அதிகமாய் வருவதாய் தெரிந்தால் பெரிய செங்குத்தான பாறையின் உச்சியில் போய் நின்று கொள்வார். தூங்கினால் விழுந்து இறந்துவிடுமளவுக்கு ஆபத்து இருப்பதால் தூக்கம் வராமல் தப்பித்துக் கொள்வார்.
இவர்களைத் தவிரவும் ஆயிரக்கணக்கான துறவிகள் அந்த நாட்களில் கிறிஸ்தவத்தில் இருந்தார்கள். அவர்களுடைய பல கதைகள் சுவாரஸ்யமானவை.
அப்பல்லோ என்பவர் குடும்பத்தை விட்டு தனித்து வாழ்ந்தார். தன்னுடைய தந்தையின் அடக்கச் சடங்கிற்கு செல்லவும் மறுத்தார். தானும் உலக வாழ்க்கைக்கு இறந்து போயிருப்பதாய் சொன்னார்.
சிலர் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் மட்டும் குடித்தும், சிலர் தோல் ஆடைகளை மட்டுமே உடுத்தியும், சிலர் வாரம் ஒருமுறை தான் உண்டும் தங்களுடைய துறவற வாழ்க்கையை நடத்தினார்கள்.