Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு : 8 திருச்சபை வளர்ச்சியின் அடுத்த‌ கட்டம்

Image result for history of christianity

திருச்சபை வளர்ச்சியின் இரண்டாவது கட்டம்

ரோமர்கள் கிறிஸ்தவத்தை அழிப்பதற்காக பல வழிகளில் முயன்றார்கள். மற்ற பல மதங்களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்தவம் தன்னுடைய அணுகுமுறையையும், வழிபாட்டு முறையையும் மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டிருந்தது ரோமர்களின் கோபத்தைத் தூண்டியது.

சிலைவழிபாடு அக்காலத்தில் பரவலாக இருந்த ஒரு வழிபாட்டு முறை. கிறிஸ்தவம் அதை எதிர்த்தது. சிலைகளுக்குப் பலியிடுவதையோ, அவற்றுக்கு அபிஷேகங்கள் நடத்துவதையோ கிறிஸ்தவம் எதிர்த்தது. பல மதங்கள் இயேசுவையும் ஒரு கடவுளாக வழிபட ஒப்புக்கொண்டன, கிறிஸ்தவர்களோ இயேசுவை வழிபட வேண்டுமெனில் பிற கடவுள்கள் யாரையும் வழிபடக் கூடாது என்று தடை விதித்தது. பல கடவுள்களோடு ஒருவராக இயேசு அல்ல, இயேசுவே ஒரே கடவுள் என்னும் கொள்கையை அது போதித்தது. கிறிஸ்தவத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடு பார்க்கப் படவில்லை. தலைவராக இருக்க அனைவருமே தகுதியுடைவர்கள் என்னும் கருத்து நிலவியது. இவையெல்லாம் ரோம அரசர்கள் கிறிஸ்தவத்தின் மீது வெறுப்பு கொள்ள காரணமாயின.

கி.பி 303 முதல் கி.பி 305 வரை ஆண்ட டயோக்ளிஷியன் ஆட்சிகாலம் கிறிஸ்வதவர்களுக்கு ஒரு நடுக்கத்தின் காலமாக இருந்தது. கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடைக்கல்லாய் இருந்தவன் இந்த மன்னன். இவன் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல சட்டங்கள் இடப்பட்டன. அதன்படி கிறிஸ்தவர்களாய் இருப்பவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், அவர்களை நாடுகடத்துதல், ஆலயங்களை எரிப்பது, கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை மறுப்பு உட்பட ஏராளமான சட்டங்கள் போடப்பட்டன. இவை கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைப் பெருமளவில் பாதித்தன. கிறிஸ்தவர்கள் மீண்டும் மறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார்கள்.

வருடங்கள் ஓடின. மேலும் சில மன்னர்கள் வந்தார்கள். முந்தைய அரசர்களின் போரை தொடர்ந்தார்கள். அவர்கள் விட்ட இடத்திலிருந்து இவர்கள் தொடர்ந்தார்கள். கிறிஸ்தவம் என்னும் மதம் அடியோடு அழிக்கப்படுமோ என்று தோன்றுமளவுக்கு நிகழ்வுகள் நடந்தன. அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்தது கான்ஸ்டண்டைன் மன்னனின் வரவு.

கான்ஸ்டண்டைன் மன்னன் கிறிஸ்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கும் ஒரு அறிக்கை வெளியிட்டான். அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் கிறிஸ்தவம் ஒரு அங்கீகரிக்கப் பட்ட மதமாக திகழும் என்பதே அது. அந்த சட்டத்தைப் பின்பற்றி கி.பி 380 ல் கிறிஸ்தவ மதம் என்பது ரோம பேரரசின் அங்கீகரிக்கப் பட்ட மதமாக மாறியது.

அங்கீகரிக்கப் பட்ட மதமாக கிறிஸ்தவம் மாறியபின் அதற்கு அரசு பாதுகாப்பு இருந்தது. மறைந்து வாழும் வாழ்க்கை நின்று போனது. கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப விரும்புகின்றவர்கள் கொடுமைகள் அனுபவிக்கும் நிலை அகன்று விட்டது.

அங்கீகரிக்கப் பட்ட மதமாக கிறிஸ்தவம் ஆனதும் கிறிஸ்தவ மதத்துக்கான புனித நூலைத் தயாரிக்கும் பணி துவங்கியது. கி.பி 397ம் ஆண்டில் வேதாகமம் தொகுக்கப் பட்டது. அது கிறிஸ்தவ மதத்தின் அடித்தளமானது.

கிறிஸ்தவத்தில் கி.பி ஐநூறாம் ஆண்டு முதல் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டுவரை உள்ள காலம் இடைக்காலம் என அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் திருச்சபையைத் துறவறம் பெருமளவில் ஆக்கிரமித்தது.

ஐரோப்பா போன்ற நாடுகளில் கிறிஸ்தவம் பெருமளவில் பரவிய காலகட்டம் இது என்பதாலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகி விடுகிறது இந்த இடைக்காலத் திருச்சபை. கிறிஸ்தவத்தில் துறவறமே சிறந்ததென்று கருதி ஒரு காலகட்டத்தில் ஐரோப்பா துறவி மடங்களால் நிரம்பி வழிந்தது.

ரோமை ஆண்டுவந்த மன்னன் தியோக்லேஷியான் அன்றைக்கு உலகம் என்று கருதப்பட்ட ரோம் நகரை இரண்டாகப் பிரித்தார். மேற்குப் பாகம் ரோமை தலைநகராகக் கொண்டும் கிழக்கும் பாகம் கான்ஸ்டாண்டிநோபிளை தலைமையிடமாகவும் கொண்டு இயங்கத் துவங்கியது. இது ரோமின் வீழ்ச்சியானது.

முதலாம் கிரெகோரி போப்பாக பதவியேற்ற கி.பி 590ம் ஆண்டே திருச்சபையின் இடைக்கால ஆரம்பமாகிறது.

ஒரு குழப்பமான சூழலில் கிரெகோரி பதவியேற்றார். இவர் பதவியேற்கும் முன் 527 முதல் 565 வரை கான்ஸ்டாண்டிநோபிளின் பேரரசன் ஜஸ்டினியான் காலத்தில் கிறிஸ்தவத்திலுள்ள கொள்கைப் பிரிவினரோடு திருச்சபைக்கு பெரும் போராட்டம் இருந்தது.

யுனிஸ்டியான் கான்ஸ்டாண்டிநோபிள் நகரை விரிவாக்கி தன்னுடைய அரசின் எல்லைகளை பலப்படுத்த விரும்பினான். மேலும் திருச்சபைக்கு தானே தலைவனாக வேண்டும் என்றும் அனைத்து பேராயர்களும், குருக்களும் தனக்குக் கீழானவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினான்

த சர்ச் ஆஃ செயிண்ட் சோபியா ஆலயத்தை கான்ஸ்டாண்டிநோபிளில் இவர் கட்டினார். மேலும் பல ஆலயங்களையும் துறவற மடங்களையும் இவர் கட்டினார்.
கிறிஸ்தவத்தை வளர்க்க வேண்டும் என இவர் விரும்பினாலும் அனைத்துக்கும் தானே தலைவராக வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்ததால் திருச்சபைக்கு எதிரானவராய் தோன்றினார்.

கி.பி 54ல் பிறந்த கிரெகோரி ஒரு சிறந்த வழக்கறிஞராய் வாழ்ந்து வந்தார். லம்பாடியர்களால் ரோம் நகருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனும் சூழல் எழுந்தபோது இவர் அமைதிப் பேச்சின் தலைவராக செயலாற்றினார்.

சிறந்த நுட்பமும், அறிவும் அரசியல் செல்வாக்கும் பெற்றவராக இருந்தார் கிரெகோரி. எனினும் அரசியல் பதவிகளை விரும்பாமல் கிறிஸ்தவத்தில் இணைந்து பணி செய்வதையே விரும்பினார்.

தன்னுடைய சொத்துகளின் பெரும்பாகத்தை விற்று அதை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். கிறிஸ்தவ மதத்தின் துறவற நிலையையே முதலில் விரும்பினார். சுமார் ஐந்து ஆண்டுகள் இவர் துறவற நிலையிலேயே இருந்தார்.

ஒருமுறை ரோம் நகரில் இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவர்கள் அடிமைகளாய் விற்கப்பட்டார்கள். அந்த இந்த சிறுவர்களின் அழகையும், கம்பீரத்தையும் கண்ட கிரெகோரி அந்த நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்ப வேண்டும் என்று ஆவல் கொண்டார்.

கி.பி 570ல் ரோம் நகரில் பிளேக் நோய் பரவியது. அப்போது ரோம் நகர போப் காலமானார். அடுத்த போப் ஆக பணியாற்றும் வாய்ப்பு திறமையும், சாதுர்யமும், தைரியமும் நிறைந்த கிரெகோரிக்கு வாய்த்தது.

ஆனால் கிரெகோரி முதலில் போப் பட்டத்தை விரும்பவில்லை. ஓடி ஒளிந்தார். ஆனால் குழு கிரெகோரியைத் தான் போப் ஆக திருநிலைப்படுத்துவது என முடிவோடு இருந்தார். எனவே மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கண்டுபிடித்து போப்பாக நியமித்தார்கள்.

கடவுளின் பணியாளர்களுக்கெல்லாம் பணியாளர் என்னும் பெயரை வைத்துக் கொண்டு போப் எனும் பதவியின் பெருமையை இவர் உயர்த்தினார். போப்பின் பணிகளும் அவருடைய ஆளுமைளும் இவருடைய காலத்தில் சிறப்பாக வெளிப்பட்டன.

திருச்சபை வளர்ச்சியின் மூன்றாவது கட்டம்

திருச்சபை வளர்ச்சியின் மூன்றாவது கட்டம் என்பது ரோமின் வீழ்ச்சி முதல் கான்ஸ்டாண்டிநோபிள் வீழ்ச்சி வரை உள்ள சுமார் ஆயிரம் ஆண்டு காலத்தைக் குறிப்பிடலாம். இந்த காலகட்டத்தில் கிறிஸ்தவம் பலவிதமான மாற்றங்களைச் சந்தித்தது. இந்த காலகட்டத்தில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்காற்றியவர் முதலாம் கிரிகோரி என்பவர்.

ரோம் அரசாங்கத்தில் கவர்னராகப் பணியாற்றி வந்த கிரிகோரி தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின் துறவியாக மாறினார். லத்தீன் மொழியில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கினார் அவர். லத்தீன் இலக்கியங்களின் மீது ஆழ்ந்த பரிச்சயம் கொண்டிருந்தார். ரோம் பிஷப்பின் பிரதிநிதியாக கான்ஸ்டாண்டிநோபிளில் சிலகாலம் பணியாற்றிய இவர் பின்னர் தனியே வந்து தூய ஆண்ட்ரூ என்று ஒரு மடம் ஆரம்பித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். துறவறம் ஏற்றபின் தன்னுடைய சொத்துகளையெல்லாம் விட்டு விட்டு துறவுப் பணியில் முழுமையாய் தன்னை அர்ப்பணித்தார்.

கிரிகோரியில் செயல்களும், பேச்சும், அவருடைய இலக்கியப் புலமையும் அவரை மக்களிடம் அதிக அறிமுகம் உடையவராக மாற்றியது. சிறப்பான மக்கள் பணியும் அவரை பிரபலப் படுத்தியது. ரோம் பிஷப்பிற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும், மிகவும் செல்வாக்குள்ளவராகவும் இருந்தார். கி.பி 590 ல் போல் கலேஜியஸ் மரணத்துக்குப் பின் கிரிகோரி போப்பாக தெரிந்தெடுக்கப் பட்டார்.

கடவுள் பணி செய்பவர்கள் துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது இவருடைய சிந்தனைகளில் ஒன்று. அதை அவர் முக்கியப்படுத்தி பிரகடனப் படுத்தினார். பணி வாழ்வுக்குத் தேவை பணிவு என்பதை மிகவும் ஆழமாக நம்பியவர். இயேசுவின் போதனைகளை வாழ்வில் வாழ்ந்து காட்டவேண்டும் என்னும் உயரிய சிந்தனைகளின் படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் இவர். இவர் இயேசுவை வாழ்ந்து காட்டியதில் ஈர்க்கப்பட்ட பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் இணைந்தார்கள்.

இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இவர் ஊழியர்களை அனுப்பி இறைபணி செய்ய வைத்தார். இவருடைய ஆர்வத்தினால் ஏராளம் மக்கள் நற்செய்தி அறிந்தார்கள், பலர் அறிவித்தனர். தாமாகவே பல புதிய செயல்களைச் செய்து போப் பின் பெருமையையும், இருப்பையும் உலகிற்கு உரத்துச் சொன்னார் இவர். தன்னுடைய இலக்கிய அறிவினால் விவிலியத்தில் வரும் யோபு புத்தகத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். ஏராளமான கடிதங்கள் வாயிலாக தன்னுடைய கருத்துக்களை அடுத்துள்ள இடங்களுக்கெல்லாம் இவர் பரப்பினார். சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்து ஏராளமானவ்ர்களுக்கு இறை செய்திகளை வழங்கினார்.

இவருடைய காலத்தில் உத்தரிக்கும் ஸ்தலம் – மையப்படுத்தப்பட்டது. இவ்வுலகில் நீதிமானாக விளங்குபவர்கள் மோட்சத்துக்குச் செல்வார்கள், இவ்வுலகில் பாவிகளாய் இருப்பவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள். இவ்வுலகில் நல்லவர்களாக இருந்து, தவறுதலாய் பாவம் செய்தவர்கள் உத்தரிக்கும் ஸ்தலம்’ என்னும் இடத்துக்குச் செல்வார்கள். அங்கே அவர்களுக்கு மோட்சத்தில் செல்ல இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். நம்முடைய செபங்கள் அவர்களை மீட்கும் என்பதில் கிரிகோரி நம்பிக்கை கொண்டிருந்தார். இறை பணியில் ஆர்வமாய் ஈடுபட்ட காரணத்தால் இவர் மகா கிரிகோரி என்றும் அழைக்கப்பட்டார்.

நாட்டில் ஆட்சி மாறி மாறி வந்தாலும் திருச்சபையில் போப்பின் ஆட்சிக் காலம் நிலையாக இருந்ததால் பலர் அந்த ஆட்சியை விரும்பினார்கள். போப் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார்கள். எனவே போப்பின் ஆட்சி சிறப்பான ஆட்சி என்னும் பெயர் பரவியது. நிலைத் தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை அனைவரும் விரும்பினார்கள். ரோமில் இருக்கும் கிறிஸ்தவத் தலைமைக்கு உயர் மரியாதைகளும், பெருமைகளும் இருப்பதாக எங்கும் செய்திகள் பரவின. அரசர்களின் அதிகாரங்களை விட போப்பின் அதிகாரம் மிகவும் மதிக்கப்பட்டது.

உலக சபைகள் மீது ரோம் போப் முழு அதிகாரம் கொண்டவர் என்னும் கருத்து வந்தது இவர் காலத்தில் தான்.

அதன்பின் நாட்கள் செல்லச் செல்ல போப்பின் அதிகாரம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது.

Advertisement

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s