Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு 22 : புராட்டஸ்டண்ட் சபையின் முக்கியப் பிரிவுகள்.

Image result for vatican church

புராட்டஸ்டண்ட் சபை கத்தோலிக்கத் தலைமைக்கும் கொள்கைக்கும் எதிராக உருவானது. கத்தோலிக்க சபையின் திருவருட்சாதனங்களுக்குத் தரப்படும் முன்னுரிமைகள், அன்னை மரியாள் மரியாதை, புனிதர் மரியாதை போன்றவை எதிர்ப்புக்கு ஆளாயின. போப்பின் அதிகார மையத்தையும் புராட்டஸ்ட் சபையினர் எதிர்த்தனர்.

புராட்டஸ்டண்ட் சபை கத்தோலிக்கத்தை விட்டுப் பிரிந்தபின் தங்களுக்குள்ளேயே கருத்து மோதல்களும், மீறல்களும் கொண்டன. அப்போதெல்லாம் புதுப்புது சபைகள் தோன்றின. பல்லாயிரக்கணக்கான கிளைச் சபைகளோடு விளங்கும் புராட்டஸ்டண்ட் சபையின் முக்கியமான சில பிரிவுகள் இவை.

1 சொசினியானிசம்

சொசீனியஸ் என்பவரால் இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. கிறிஸ்து தெய்வீகத் தன்மை உடையவரல்ல. அவர் மனிதரே. அவருடைய வாழ்க்கை முறையே அவரை உயிர்த்தெழ வைத்தது.

கிறிஸ்துவின் மரணமோ உயிர்ப்போ உலகிற்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது. கிறிஸ்துவின் வாழ்க்கையை பின்பற்றுதலும், அவருடைய கீழ்ப்படிதலை கற்றுக் கொள்வதுமே கிறிஸ்தவனின் கடமை என்று போதிக்கப்பட்டது.

இந்த சபைப்பிரிவினர் கிறிஸ்தவத்தின் அடிப்படையையே எதிர்த்ததனால் வளர முடியாமல் வீழ்ந்தனர்.

2. அர்மீனியானிசம்

ஜேக்கப் ஆர்மீனியஸ் என்பவரால் ஏற்பட்ட சபை ஆர்மீனியானிசம் என்று அழைக்கப்பட்டது. இந்தச் சபையிலேயே பின்னர் பிரிவுகள் ஏற்பட்டன. இந்தச் சபையினர் முக்கியமாக கடவுளின் திட்டங்களைக் குறித்து பேசினார்கள்.

விதி என்று நாம் சொல்லும் கருத்தே அவர்களுடைய சபையிலும் காணப்பட்டது. நமக்கு நடப்பது எல்லாம் இறைவன் ஏற்கனவே முன்கூட்டி திட்டமிட்டு நடக்கிறதா ? யார் மீட்படைய வேண்டும் என்பதை முதலிலேயே கணித்து, அதன் பின்னர் நிகழ்வுகள் நடக்கின்றனவா என்பது போன்ற விஷயங்கள் இந்த சபையில் முன்னிறுத்தப் பட்டன.

நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இங்கிலாந்திலும் இந்த சபை பரவியது.

3. பியூரிட்டான்ஸ்

கிறிஸ்தவத்தில் நடைபெற்று வந்த பல செயல்களை எதிர்த்தவர்கள் தனியே ஆரம்பித்தது தான் பியூரிட்டான்ஸ் சபை. இவர்கள் திருமுழுக்கு கொடுக்கும் போது நெற்றியில் சிலுவை அடையாளம் இடக் கூடாது என்று வாதிட்டனர்.

குருக்கள் மக்களைப் போல இருக்க வேண்டும். அவர்களை வேறுபடுத்திக் காட்டும் ஆடைகள் அணியத் தேவையில்லை என்பதும் இவர்களுடைய வாதமாய் இருந்தது.

4. ஸெப்பராஸ்டிஸ்ட்ஸ்

இவர்கள் சபைகள் தனித்து இயங்க வேண்டும் எனும் கொள்கையுடையவர்கள். அமைப்பு ரீதியாக சபை இருக்க வேண்டிய தேவையில்லை. சபைகள் தனித்தனியே அவரவர்களுக்குப் பிடித்த தலைவர்களை கொண்டு இயங்க வேண்டும்.

சபை எந்த அரசுக்கும் பணியக் கூடாது. அரசு வேறு மதம் வேறு. இந்தச் சபையில் இருப்பவர்களுக்கு ஒரே தலைவர் இயேசுவே என்ற கொள்கையை வைத்திருந்தார்கள்.

5. பிரஸ்பத்தீரியன்ஸ்

ஸ்காட்லாந்து நாட்டில் பிரஸ்பத்தீரியன்ஸ் என்னும் பிரிவினர் இருந்தார்கள். இவர்களும் கொள்கை ரீதியாக பல கிறிஸ்தவ மத சம்பிரதாயங்களை வெறுத்தார்கள். இவர்களும் இயேசுவின் தலைமை என்பதை மட்டுமே முக்கியப் படுத்தினார்கள்.

6. குவேக்கர் சபை

குவேக்கர் சபையினர் உள் மனதில் இயேசு வெளிப்படுகிறார் என்றனர். விவிலியம் கூறும் இரண்டாம் வருகையும், வெளிப்படுத்துதலும் முக்கியமில்லை. ஒவ்வொருவரின் மனதிலும் இறைவன் ஒளியாய் இருக்கிறார்.

மற்ற பணிகள் எதுவும் முக்கியமில்லை நம்முடைய உள்ளத்தின் ஒளியைப் பாதுகாக்க வேண்டும். எனவே திருச்சடங்குகள் ஏதும் தேவையில்லை. தனியே ஆன்மீகப் பணி செய்ய வேண்டும் என்றனர்

இந்த சபைப் பிரிவினர் வேகமாக வளர்ந்தனர். வேகமாக இந்த பிரிவு வளர்ந்ததால் பல இடங்களிலும் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தில் இந்த சபை ஒடுக்கப்பட்டது.

7. அனபாப்டிஸ்ட்

இவர்கள் திருமுழுக்கு குறித்து சர்ச்சைகளைக் கிளப்பினார்கள். குழந்தைகளுக்கு திருமுழுக்கு தேவையில்லை என்பது இவர்களுடைய உறுதியான கொள்கையாய் இருந்தது.

பெரியவர்கள் ஆனபின் அவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தால் போதுமானது. திருமுழுக்கு கொடுத்தபின் அவர்கள் கிறிஸ்தவ நிலைக்குள் வருவார்கள். கிறிஸ்தவன் தனித்தன்மை வாய்ந்தவன். அவனுக்கு அரசு ரீதியிலான காரியங்களில் ஈடுபாடு கூடாது என்றனர்.

கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகளான லூத்தரன், கத்தோலிக்கம் போன்றவர்கள் மீது இவர்கள் கடுமையான விமர்சனம் வைத்ததால் இவர்கள் வெறுக்கப்பட்டனர்.

8. பக்தி இயக்கம்

நற்செய்தி அறிவித்தலிலும் பக்தி முயற்சிகளும் இங்கு முன்னிறுத்தப் பட்டன. வாழ்க்கையோடு சேர்ந்த ஆன்மீகம் போதிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்தவன் என்பது செயலில் வெளிப்பட வேண்டும் என போதித்தனர்.

இவர்களுடைய சபை ஜெர்மனியில் புகழ் பெற்றது. இந்த சபையிலிருந்து பலர் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார்கள். இந்தியா வந்த சீகன் பால்கு என்பவர் இந்த சபையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்கள் பல்வேறு விதமான விவிலிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்.

9. மொரேவிய சபை

மொரேவிய சபையில் நற்செய்தி பரப்புதல் முக்கியமாய் இருந்தது. ஒழுங்கு முறையுடன் கூடிய திட்டமிட்ட ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நாட்டில் பல இடங்களுக்கும் கிறிஸ்தவம் செல்ல வேண்டும் என்பது இவர்களுடைய முக்கிய சிந்தனையாய் இருந்தது.

நற்செய்தி அறிவிக்க பல இடங்கள் இருந்தாலும் இவர்கள் தேர்வு செய்யும் இடங்கள் மிகவும் கடினமான இடங்களாய் இருந்தன. கடினமான இடங்களில் கிறிஸ்தவத்தை தாங்கள் கொண்டு சென்றால் மற்ற இடங்களுக்கு பிறர் கொண்டு செல்வார்கள் என்பது இவர்களுடைய திட்டம்.

10 மெதடிஸ்ட் சபை

கிறிஸ்தவ சபைகளில் மெதடிஸ்ட் சபை முக்கியமான ஒன்று. இவர்களுடைய சபையின் நோக்கம் நற்செய்தி அறிவித்தலாகவே இருந்தது. குறிப்பாக இவர்கள் சிறைச்சாலைகளில் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என விரும்பினார்கள்.

பிற்காலத்தில் அதிகமான பிரிவுகளும், பல இயக்கங்களும் மெதடிஸ்ட் சபையிலிருந்து தோன்றின. இவர்கள் சிறுவர்களுக்கு போதிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

11. பிராட் சர்ச் பார்ட்டி

இவர்கள் சபையின் முக்கியமான ஆன்மீக மலர்ச்சி மனிதனுக்குள் வளர வேண்டும் என போதிக்கப்பட்டது. நற்கருணை போன்ற கிறிஸ்தவ வழக்கங்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை இவர்கள்.

சபையின் திரு அருட்சாதனங்களை விட ஆன்மீக விழிப்புணர்வே தேவை என்றனர். அறிவுக் கோட்பாடுகள், விவாதங்கள் தேவையில்லை என்றனர். விவிலியத்தின் கருத்துக்களை விவாதிப்பதை விட தவத்தில் இறையை காண வேண்டும் என போதித்தனர்.

இங்கிலாந்தில் துவங்கிய இந்த சபை அதிக வளர்ச்சியடையவில்லை. ஆனால் வேறு சபைகள் தோன்ற இந்த சபை காரணமாய் இருந்தது எனலாம். குறிப்பாக ஆக்ஸ்போர்ட் இயக்கத்தினர் இந்த சபையிலிருந்தே தோன்றினர்.

12. ஆங்கிலேய கத்தோலிக்கச் சபை அல்லது ஆக்ஸ்போர்ட் இயக்கம்

இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபைக்கும், புராட்டஸ்டண்ட் பிரிவினருக்கும் இடையே ஒரு பாலமாக இந்த சபை விளங்கும் என கூறிக் கொண்டனர். திவ்ய அருட்சாதனங்களான நற்கருணை போன்றவை தேவை என போதித்தனர். மெத்டிஸ்ட் சபையினரை தங்கள் எதிரிகளாய் பாவித்தனர்.

இவர்களுடைய சிந்தனை பெரும்பாலும் கத்தோலிக்க சபையைச் சார்ந்து இருந்ததால் மற்ற பிரிவினர் இவர்களை எதிர்த்தார்கள். எனவே இந்த சபையில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

13 கத்தோலிக்க அப்போஸ்தலத் திருச்சபை

ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகளில் சில இடங்களில் இந்த திருச்சபை பரவியது. இவர்களுடைய சபையில் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டவர் பன்னிரண்டு பேர் இருந்தனர்.

அப்போஸ்தலர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களுடைய முக்கிய நோக்கம் இரண்டாம் வருகைக்கான தங்களைத் தயாரித்துக் கொள்வதும், அதை எதிர்பார்த்துக் காத்திருப்பதுமாய் இருந்தது.

14 பிளைமவுத் பிரதரன் சபை

இவர்கள் குருக்கள் தேவையில்லை, தலைமை தேவையில்லை என்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற இடங்களில் இவர்களுடைய சபை பெருகியது. இவர்கள் விசுவாசப் பிரமாணம் தேவையில்லை. விசுவாசம் மட்டுமே போதும். தூய ஆவியானவரே அனைவரையும் ஒன்றாய் இணைக்கிறார் என்றனர்.

15. இரட்சண்ய சேனை

இது மெதடிஸ்ட் சபையிலிருந்து தோன்றிய சபை எனலாம். காரணம் இதை ஆரம்பித்தவர் மெத்தடிஸ்ட் சபையைச் சேர்ந்தவர். இவர் சபை ஒரு இராணுவத்தைப் போன்றது என்பதைக் குறிக்கும் விதமாக சேனை என்னும் பெயரை வைத்தார்.

கிறிஸ்தவ மத சிந்தனைகளை தெருவோரங்களில் பிரசங்கிப்பது இந்த சபையினரின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாய் இருந்தது. இங்கிலாந்தில் தோன்றிய இந்த சபை பல நாடுகளுக்கும் பரவியது.

16 லூத்தரன் சபை

லூத்தரன் சபையும் பழமையான வரலாறு கொண்டது. வழிபாடுகளைப் பொறுத்தவரை இவர்களுக்கும் கத்தோலிக்க மதத்தினருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் திவ்ய அருட்சாதனங்கள், அன்னை மரியாள் போன்ற விஷயங்களில் வேறுபடுகின்றனர்.

லூத்தரன் சபை இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது.

17. பெந்தே கோஸ்தே சபை

இவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக அதிகமாய் பிரார்த்திப்பவர்கள். இவர்களுடைய கூட்டங்களில் தூய ஆவிக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆவியில் ஒன்றித்திருத்தல், அன்னிய பாஷ பேசுதல், உற்சாகமாய் பாடுதல் என இவர்களுடைய வழிபாடுகள் இருக்கும்.

பெந்தேகோஸ்தே என்பது இயேசு உயிர்த்தபின் ஐம்பதாவது நாள் சீடர்கள் மேல் தூய ஆவியானவர் நெருப்பு வடிவில் இறங்கிய நாளைக் குறிக்கிறது. அதே போன்ற இன்னொரு நாள் விரைவில் வரும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

18. அஸெம்பிளீஸ் ஆஃப் காட்

இந்த சபை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆரம்பமானது. பிரசங்கம் என்பது இந்த சபைகளில் முக்கியப்படுத்தப்படுகிறது. ஓய்வு நாள் பாட சாலைகள், குழுக்கள், நற்செய்தி அறிவித்தல் என பல பணிகளைச் செய்கின்றனர். இவர்கள் மிக விரைவாகப் பரவும் ஒரு சபையினர் என்பது குறிப்பிடத் தக்கது.

19. அட்வெண்ட் சபை.

அட்வெண்ட் சபை வில்லியம் மில்லர் என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. இவர் இயேசுவின் இரண்டாம் வருகை 1843ம் ஆண்டு நிகழும் என தீர்க்கத் தரிசனம் சொன்னார். எனவே இவர் சார்ந்திருந்த பாப்டிஸ்ட் சபையில் பெரும் புகழைப் பெற்றார்.

மறை நூலை மிக நுட்பமாக ஆராய்ந்ததால் இந்த முடிவு கிடைத்ததாக அவர் சொன்னார். ஆனால் அந்த ஆண்டு ஏதும் நிகழவில்லை. எனவே மீண்டும் ஆய்ந்து 1844ல் இரண்டாம் வருகை நிகழும் என்றார். அதுவும் நிகழவில்லை. எனவே அவரும் அவருடைய ஆதரவாளர்களும் சபை மக்களால் எதிர்ப்புக்கு ஆளானார்கள்.

எதிர்ப்புக்கு உள்ளான இவர்கள் தனியே போய் அட்வெண்ட் சபை என்ற ஒன்றை ஆரம்பித்தனர்.

20 யஹோவா சபை

இவர்கள் கடவுளை யஹோவா என்றே அழைத்தனர். நரக வேதனை என்ற ஒன்று கிடையாது என போதித்தனர். இவர்களுடைய சிந்தனைப்படி இயேசுவின் இரண்டாம் வருகை 1874லேயே நடந்து விட்டது. இப்போது நடப்பது இறைவனின் ஆயிரம் ஆண்டு ஆட்சி என்றனர். இயேசுவை அறைந்த சிலுவை + வடிவிலானது அல்ல ஒரு நேர்கோடு போன்றது என்றெல்லாம் இவர்கள் பல சிந்தனைகள் கொண்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட சில முக்கியச் சபைகளைத் தவிரவும் ஆயிரமாயிரம் கிளை சபைகள் புராட்டஸ்டண்ட் சபைப்பிரிவில் தோன்றின. இவர்கள் பல பாகங்களுக்கும் சென்று நற்செய்தியை அறிவித்தனர். கத்தோலிக்க சபையைத் தவிர்த்த அனைவரும் புராட்டஸ்டண்ட் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் பல சபையினர் இந்த இரண்டு பிரிவுகளையுமே வெறுத்து தனியே கிறிஸ்தவப் பணி செய்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் 1995ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரக் கணக்குப் படி சுமார் 968,000,000 கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், 395,867,000 புராட்டஸ்டண்ட் பிரிவினரும், 275,583,000 மற்ற பிரிவினரும், 217,948,000 ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்களும், 70,530,000 ஆங்கிலிக்கன்ஸும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

One thought on “கிறிஸ்தவ வரலாறு 22 : புராட்டஸ்டண்ட் சபையின் முக்கியப் பிரிவுகள்.

  1. இது இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு பின் பல பிரிவுகள் தோன்றின . என்பது தான் உண்மை

    Like

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s