புனித தோமா இந்தியாவுக்கு வருகை தந்தபோது ஆரம்பித்த கிறிஸ்தவம் இந்தியாவில் தட்சசீலா நகரில் முளைவிட ஆரம்பித்தது. ஆனால் தோமா எதிர்பார்த்தது போல அங்கு கிறிஸ்தவம் வளரவில்லை. காலப்போக்கில் அழிந்து விட்டது. ஆனால் தோமா கேரளாவில் உருவாக்கிய கிறிஸ்தவ அடித்தளம் நிலைபெற்றது. பெருமளவில் பரவாவிடினும் பூர்வீகமாய் கிறிஸ்தவ மதம் அங்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. சிரியன் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்த தோமா கிறிஸ்தவர்கள் முதலாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கேரளாவில் உள்ளனர்.
கி.பி இரண்டாம் நூற்றாண்டிலும் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் இருந்தது என்பதை அலெக்சாந்திரியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த தத்துவ அறிஞர் பண்டேனூஸ் என்பவருடைய குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. இவருடைய வருகையின் போது இயேசுவின் சீடர்களில் ஒருவரான பார்த்தலமேயு என்பவரும் இந்தியாவில் வந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.
நான்காம் நூற்றாண்டில் மருதா என்னும் கிறிஸ்தவரைப் பற்றி புனித ஜான் கிறிசாந்தோம் குறிப்பிடுகிறார். அவர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியதாகவும் அவர் இந்தியாவிலுள்ள சபை ஒன்றுக்கு தலைவராய் இருந்து பணியாற்றியதாகவும், கிபி 381ல் நடந்த கான்ஸ்டாண்டிநோபிள் பொதுச்சங்கத்தில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். கி.பி 345ல் கானாவூர் தோமா என்பவர் பெர்சியா நகரை விட்டு கேரளாவுக்கு வந்தார். அவருடன் எழுபத்து இரண்டு கிறிஸ்தவக் குடும்பங்களும் வந்து கேரளாவில் குடியேறினார்கள். அவர்கள் அங்கே ஒரு ஆலயமும் கட்டி அங்குள்ள கிறிஸ்தவர்களோடு இணைந்து வாழ்ந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. புனித அம்புறோஸ் தன்னுடைய குறிப்புகளில் மாசியஸ் என்னும் கிறிஸ்தவ தலைவர் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ சமூகங்களோடு தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கிறார்.
கி.பி ஆறாம் நூற்றாண்டில் காஸ்மாஸ் இண்டிகோபிளேஸ்டஸ் என்னும் வணிகர் தன்னுடைய பயண அனுபவங்களைக் குறிப்பிடுகையில் மலபாரிலுள்ள கிறிஸ்தவர்கள் மிளகு சாகுபடி செய்வதாக எழுதுகிறார்.
கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டில் சீனாவுக்கு இறை பணி ஆற்றுவதற்காகச் சென்ற போப்பாண்டவரின் தூதர்கள் இந்தியா வழியாக பயணம் செய்து மலபார் பகுதியில் தோமா கிறிஸ்தவர்கள் வாழ்வதாகக் குறிப்பிடுகின்றனர். கி.பி 1320ல் டொமினிக் சபையைச் சார்ந்த ஜோர்தான் என்னும் குருவும் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த நான்கு குருக்களும் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களைச் சந்திப்பதற்காக வருகை புரிந்தார்கள். இந்த வருகைக்குப் பின் போப்பாண்டவர் இருபத்து இரண்டாம் ஜாண் உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் பல விதங்களில் வேறு வேறு விதமாக கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டிருப்பதை அறிந்து, கிறிஸ்தவர்களில் பல பிரிவுகள் இருக்கக் கூடாது ஒரே இயக்கமாக அவர்கள் செயல்படவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருப்பதாய் தெரிகிறது.
கி.பி 1350 ல் கிளமெண்ட் ஜாண் டிமாரி ரோலி என்னும் ஆயர் இந்தியாவிற்கு வந்து ஓராண்டு தங்கியிருந்தார். அவர் போப்பாண்டவர் ஆறாம் கிளமெண்ட் அவர்களிடமிருந்து வந்ததால் அவரை மலபார் கிறிஸ்தவர்கள் மிகவும் பாசத்துடனும் மரியாதையுடனும் நடத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் நூறு பொற்காசுகள் கொடுத்து கெளரவித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை விட்டுச் செல்கையில் பணமுடிப்பாக ஆயிரம் பொற்காசுகள் வழங்கியிருக்கிறார்கள்.
போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தபோது இந்தியாவின் கிறிஸ்தவம் புத்தெழுச்சி பெற்றது. அவர்கள் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் இருப்பதைக் கண்டு வியப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் வந்தபோது மலபாரில் சுமார் அறுபதாயிரம் கத்தோலிக்கர்கள் சுமார் அறுபது கிராமங்களில் வசிப்பதைப் பார்த்தார்கள். அவர்களுடைய குறிப்பேடுகளில் இந்த செய்திகள் காணப்படுகின்றன.
கி.பி 1663ல் சுமார் 116 சபைகளாக இயங்கி வந்த தோமா கிறிஸ்தவர்களை கத்தோலிக்க பிரிவுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போர்த்துக்கீசியர்களின் இந்த முயற்சியின் விளைவாக சுமார் 84 சபைகள் கத்தோலிக்க சபையில் இணைந்தன. மிச்சமிருந்த சபைகள் தங்கலை ஜேக்கபைட்ஸ் என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தங்களை புராட்டஸ்டண்ட் குழுவினருடன் இணைத்துக் கொண்டார்கள்.
இன்றும் கேரளாவில் மூன்று வகையான கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள். முதலாவது கத்தோலிக்கர்கள். இவர்கள் போப்பாண்டவரை தங்கள் ஆன்மீகத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள். அவர்கள் சீரோ – மலபார், சீரோ மலங்கரா, மற்றும் லத்தீன் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். இன்னொரு பிரிவினர் சிஸ்மாட்டிக்ஸ். இவர்கள் சிரியன் வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் போப்பாண்டவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளாதவர்கள். அவர்கள் ஜெக்கோபியர்கள், மார்த்தோமா கிறிஸ்தவர்கள் மற்றும் நஸ்ரானியன்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் கிறிஸ்தவம் முதலாம் நூற்றாண்டிலேயே நுழைந்திருந்தும் சுமார் பதினெட்டு நூற்றாண்டுகளாக அவை பரவவேயில்லை. மலபார் தேசத்தை விட்டு வெளியே பெரிய அளவில் கிறிஸ்தவம் ஒரு இயக்கமாக எழுச்சி பெறவில்லை. அது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் வேகமாகப் பரவியது.