Posted in History of Christianity

கிறிஸ்தவ வரலாறு 17 a : கிறிஸ்தவத்தின் பிரிவுகளும், இயக்கங்களும்

 Image result for Christianity groups
ரோம சபைக்கு எதிராக ஆங்காங்கே தனித்தனிக் குழுக்கள் ஆரம்பித்த காலகட்டம் பிரிவினையின் ஆரம்பம் எனலாம். போப்பின் ஆளுகைக்கு எதிராகவும், தலைவராக வேண்டும் என்னும் தனி போதகர்களின் ஆசையின் காரணமாகவும் இயக்கங்கள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்தன. துறவற சபைகள் தனியே இயங்கினாலும் அவை ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக இருக்கவில்லை. எனவே ரோம சபை அவர்களை ஆதரித்தது. அதேநேரம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிராக முளைத்த சபைகளை திருச்சபை வன்மையாகக் கண்டித்தது. அவர்களை திருச்சபையிலிருந்து வெளியேற்றியது. அவற்றில் முக்கியமானவையாக நான்கு இயக்கங்களைக் குறிப்பிடலாம்.

அல்பிஜென்ஸஸ் எனும் இயக்கம் கி.பி 1170 ஆரம்பமானது. தென் பிரான்ஸிலுள்ள அல்பி என்னுமிடத்தில் துவங்கிய இயக்கியமானதால் இதற்கு அந்த பெயர் வழங்கப்பட்டது. இவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையின் கட்டுப்பாடுகளையும், நிறுவன அமைப்பையும் பகிரங்கமாக எதிர்க்கும் குழுவாக அறிமுகமானார்கள். விவிலியத்தின் வார்த்தைகளைக் கொண்டு முடிவுகளை எடுப்பதாக தங்களைப் பிரகடனப் படுத்திக் கொண்டார்கள். எனவே விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் சொல்லப்படாத அனைத்தையும் இவர்கள் மறுதலித்தார்கள். ரோமத் திருச்சபை நம்பிக்கைகளான உத்தரிக்கும் ஸ்தலம் (சுவர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடைப்பட்ட ஒரு இடம் ) என்பதை இவர்கள் திட்டவட்டமாக மறுத்தார்கள். ஆனாலும் இவர்களிடம் சரியான திட்டமிடுதலும், தெளிவான பார்வையும் இல்லாததால் இவர்களால் பரவ இயலாமல் போயிற்று. மேலும் ரோமன் கத்தோலிக்கர்களும் இவர்களுடைய வளர்ச்சிக்குத் தடையாய் இருந்தார்கள்.

கி.பி 1176ம் ஆண்டு பீட்டர் வால்டோ என்பவர் வால்டென்சியன்ஸ் என்னும் குழுவை ஆரம்பித்தார். இவரும் தன்னுடன் சிலரை ஈர்த்துக் கொண்டு தனி சபை நடத்தத் துவங்கினார். கத்தோலிக்க மதத்தில் இருந்து கொண்டே தனியாக சபைகள் நடத்துவதை ஏற்றுக்கொள்ளாத கத்தோலிக்கத் திருச்சபை இவரை வெளியேற்றியது. இவர் கவலைப்படாமல் தன்னுடைய சபை வளர்ச்சிக்காய் போதிக்க ஆரம்பித்தார். இவர்களும் விவிலியத்தின் வார்த்தைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்று தங்கள் கொள்கையை வகுத்திருந்தார்கள். இவர்கள் தான் பிற்காலத்தில் புரட்டஸ்டன்ஸ் சபையாக மாறினார்கள் என்போரும் உண்டு.

மூன்றாவது முக்கிய இயக்கம் கி.பி 1350 களில் ஆரம்பமான லோலார்ட்ஸ் என்னும் இயக்கம். இவர்களும் தங்களை தனியே அடையாளப் படுத்திக் கொள்ள கத்தோலிக்க மதத்தையும், அதன் கோட்பாடுகளையும் எதிர்த்தார்கள். ஆலயத்தில் திருவிருந்து நிகழ்ச்சியில் பரிமாறப்படும் அப்பமும், திராட்சை இரசமும் உண்ணும் போது நாம் இயேசுவையே உண்கிறோம் என்னும் கத்தோலிக்க நம்பிக்கையை எதிர்த்தார்கள்.

இயேசுவின் இறுதி இரா உணவில் அப்பத்தைப் பிட்டு ‘இதை என் நினைவாகச் உண்ணுங்கள், இது என் உடல். ‘ என்ற இயேசுவின் வார்த்தைகளை கத்தோலிக்கர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாதிட்டார்கள். இவையெல்லாம் அடையாளங்களே உண்மையில் அப்பம் இறைவனாவதில்லை என்று தீர்க்கமாய் சொன்னார்கள். கி.பி 1380ம் ஆண்டு இவர்கள் முதன் முதலில் விவிலியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள் ! இவ்வியக்கத்தை ஆரம்பித்த ஜான் விக்ளிப் இந்த மொழிபெயர்ப்பைச் செய்தார். இவருடைய போதனைகளும் எழுத்துக்களும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனாலும் இவர்களால் நிலைக்க முடியவில்லை.,

யுனைட்டர் பிரதரன் என்றழைக்கப்பட்ட குழுவை ஜான் ஹஸ் என்பவர் கி.பி ஆயிரத்து முன்னூறுகளின் பிற்பகுதியில் ஆரம்பித்தார். இவர் லாலார்ட்ஸ் இயக்க தலைவர் ஜான் விக்ளிப் போதனைகளையே அடிப்படையாகக் கொண்டு போதித்தார். ரோமன் சபைக்கு எதிராக பெரும் பிரச்சாரங்களை இவர் நிகழ்த்தினார். திருச்சபை இவருடைய பிரச்சாரங்களினால் எரிச்சலடைந்து இவரை ரோம சபையை விட்டு வெளியேற்றியது. தற்போதைய மொரேவியன் சபை இந்த குழுவிலிருந்து தோன்றியதே. ஜான் ஹஸ்ன் போதனைகளும், பிரச்சாரங்களும் மிகவும் வசீகரத் தன்மையுடையவையாக இருந்தன. இவர் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிராக செயல்பட்டதனால் இவர் கி.பி 1415ம் ஆண்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

ரோம கத்தோலிக்க சபையின் அதிகாரத்தை எதிர்த்தும், அவர்களுடைய போதனைகள் நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இவ்வாறு பல இயக்கங்கள் ஆரம்பித்தாலும் அவை துறவற சபைகளைப் போல சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. கிறிஸ்தவம் என்பது இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொள்வதும், அவரை விசுவசிப்பதும் மட்டுமே என்னும் கருத்தே மையம் கொண்டிருந்தது. மக்களின் தேவைகளுக்கு விவிலியத்தின் வார்த்தைகள் தீர்வாக சொல்லப்பட்டன.

இவற்றில் பெரும்பாலானவை வாழ்ந்து காட்டுவதை விட வாசித்துக் காட்டுவதையே முன்னிலைப்படுத்தின. இந்த சபைகள் எல்லாம் ரோமன் திருச்சபையையும் அதன் சடங்குகளையும் வெறுத்தன. ஆலயங்களில் சிலைகள் வைத்திருப்பதையும், குருவானவர் பாவ மன்னிப்பு வழங்குவதையும், அப்பமும் இரசமும் இயேசுவின் உடலாய் இரத்தமாய் மாறுகிறது என்பதையும் இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

எதிர்ப்பில் எழுந்த நன்மைகள்

ரோம சபைக்கு எதிராய் ஏராளம் சபைகள் ஆங்காங்கே உருவானதில் கிடைத்த மிக முக்கியமான நன்மை விவிலியம் பரவலாய் எல்லோருக்கும் கிடைத்தது என்று சொல்லலாம். இந்த குழுவினர் விவிலியத்தை மட்டுமே முக்கியப் படுத்தியதால் விவிலியத்தில் சொல்லப்பட்டிருந்த பல கருத்துக்கள் புதிதாக மக்களைச் சென்றடைந்தன. ஆங்கிலத்தில் விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
இக்காலத்தில் ஹியூமனிஸ்ட்கள் தோன்றினார்கள் !

ஹியூமனிஸ்ட்கள் மனித முக்கியத்துவத்தைப் பிரச்சாரம் செய்தார்கள். ஒவ்வொரு தனிமனிதனும் முக்கியமானவன் என்றும் அவனுக்குள் இருக்கும் ஆன்மாவை அவன் காத்துக் கொள்ளவேண்டும் என்றும், தனி தியானங்கள் தேவை என்றும் ஹியூமனிஸ்ட் கள் போதித்தார்கள். மனிதன் தன்னுடைய செயல்களில் தூய்மையைக் கடைபிடிக்கவேண்டும் என்றும், மனித நேயமிக்க செயல்களைச் செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதையும் இவர்கள் மையப்படுத்தினார்கள். கிபி 1433 முதல் 1536 வரை மார்சிலியோ, ஜான் காலட், எராஸ்மஸ் போன்ற பலர் இந்த ஹியூமனிஸ்ட் குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டார்கள். ஹியூமனிஸ்ட்களின் காலம் ஒரு தத்துவார்த்த காலம் போல் விளங்கியது. பல நூல்கள் எழுதப்பட்டன, நற்செய்தி பலரை சென்றடைந்தது.

இக்காலத்தில் விளங்கிய இன்னொரு குழுவினர் ‘மிஸ்டிக்ஸ்’ என்பவர்கள். இவர்கள் தனியுறவே இறையுறவு எனும் கொள்கை கொண்டிருந்தவர்கள். இவர்களும் ஹியூமனிஸ்களின் சாயலையே கொண்டிருந்தார்கள். இவர்கள் தனிப்பட்ட மனிதன் தன்னுடைய ஆழ்மன தியானத்தின் மூலம் இறைவனை அடைய முடியும் என்னும் கொள்கை கொண்டிருந்தார்கள். சமுதாயத்தின் பிரச்சினைகளிலிருந்து தப்பி தனியே வாழ்வதும், பின் ஆழ்மன தியானங்களின் மூலம் உள்ளோளி உணர்வு பெற்று அதன் மூலம் இறை பிரசன்னத்தை உணர்வதும் இவர்களுடைய கொள்கையாய் இருந்தது. இதனால் இவர்கள் திருச்சபையின் எல்லா கொள்கைகளையும் விட்டு விட்டார்கள். எந்த அடையாளங்களும் தேவையில்லை என்று விலகிவிட்டார்கள். விவிலியம் சொல்லாத வழிகளை இவர்களாகவே உருவாக்கிக் கொண்டார்கள்.

மெய்ஸ்டர் எக்கார்ட் என்பவர் ஜெர்மனியில் மிஸ்டிக்ஸ் பிரிவைத் தோற்றுவித்தார். உள்ளொளிப் பயணங்கள் மூலம் மனிதன் இறைவனை அடையவேண்டும். அப்போது கடவுளும் மனிதனை அடைவார். அவ்வேளையில் கடவுளும் மனிதனும், மனிதனும் கடவுளும் ஒன்றாவோம் என்று ஒரு புதிய தத்துவத்தைக் கொண்டு வந்தார். இவருடைய சிந்தனைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொடுத்தன. ஆனாலும் கடவுள் என்னும் நிலையில் இவர் கிறிஸ்தவத்தை மையப்படுத்தி மதத்தின் பரவலுக்கு உதவி புரிந்தார். கி.பி 1260 முதல் கி.பி 1327 வரை எக்கார்ட் மிஸ்டிக்ஸ் கொள்கைகளை பரப்புவதில் ஈடுபட்டார்.

கி.பி 1347 முதல் கி.பி 1380 வரை வாழ்ந்த புனித கேத்தரின் தனி தியானத்தை முதன்மைப்படுத்தினார். இவ்வாழ்க்கையில் துறவறம் சார்ந்த ஒறுத்தல் முயற்சிகளும் தனி மனித ஒழுக்கமும் ஆழ்மன தியானங்களுமே ஆன்மீகம் என்று போதித்தார். தன்னுடைய தனி தியானங்களின் இறை பிரசன்னத்தையும், இறைவனின் குரலையும் கேட்டதாக இவர் பல வேளைகளில் குறிப்பிடுகிறார். இந்த தனியுறவுக் கொள்கைகள் நெதர்லாந்து போன்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவின.

இந்த தனியுறவுக் கொள்கைகளில் திருச்சபை மையப்படுத்தப்படவில்லை. கூடி வாழ்தல் செபித்தல் போன்றவற்றை விட தனி மனித சிந்தனைகளும், ஒழுக்கங்களும், தியானங்களுமே மையப்படுத்தப் பட்டதால் மக்கள் தீவுகள் போல வாழத் துவங்கினார்கள். அவரவருக்குப் பிடித்த வழியில் இறைவனைத் தரிசிக்க முடியும் என்பது போன்ற ஒரு மாயை ஏற்பட்டது. சமுதாயப் பணிகளிலும், மனித நேயப் பணிகளிலும், திருச்சபை நிகழ்வுகளிலும் ஈடுபடுவது இல்லாமல் போய்விட்டது. இயேசுவின் போதனைகளான கடவுளை நேசி, மனிதனை நேசி என்னும் கொள்கைகள் மாறி உன்னை மட்டும் நேசி என்றானது.

இந்த தனியுறவுக் கொள்கையினர் தழைத்து வளர்ந்து வந்த காலகட்டத்தில் சுதேசி இயக்கம் என்னும் பெயரில் இயக்கங்கள் தோன்றின. இவை பெரும்பாலும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே எழுந்தன. தங்கள் பணம் ரோமில் இருக்கும் தலைமை இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதே அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. தங்கள் பணத்தை தாங்களே செலவிடவும், தங்களை தாங்களே வழிநடத்தவும் வேண்டும் என்று இந்த இயக்கத்தினர் போதித்தார்கள். போப்பின் அதிகாரத்துக்கு எதிராக இந்த அலை எழும்பியது. இது பல தனித் தனிக் குழுக்கள் தோன்றி இலக்கில்லாமல் செல்லவும் வழி வகுத்தது.

இயேசு சபையின் வருகை

இயேசு சபை ஸ்பெயின் நாட்டில் கிபி 1536ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. புராட்டஸ்டண்ட் மதத்தின் எழுச்சியை மட்டுப்படுத்தவும், கத்தோலிக்க திருச்சபை சந்தித்து வந்த சவால்களை நிவர்த்தி செய்யவும் இயேசு சபை பெரிதும் உதவியது. இக்னேசியஸ் லயோலா என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் ‘JESUITS’ என்று அழைக்கப்படுகிறது. போப் மூன்றாம் ஜான்பாலில் ஒப்புதலுடன் இந்த இயக்கம் மிகவும் உயிர்ப்புடனும், எழுச்சியுடனும் தன்னுடைய பணியை ஆரம்பித்தது. இவர்கள் மிகச் சிறந்த கோட்பாடுகளுடன் தங்களுடைய இயக்கத்தை வளர்த்தார்கள். தன் வாழ்வில் நேர்ந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக இந்த இயக்கத்தை ஆரம்பித்த இக்னேஷியஸ் பின்னாட்களில் புனிதர் பட்டம் பெற்றார்.

புராட்டஸ்டண்ட் மதம் கத்தோலிக்கத் திருச்சபையின் குறைகளை நிவர்த்தி செய்யும் என்னும் எதிர்பார்ப்பில் ஏராளமான மக்கள் அதில் இணைந்தார்கள். இந்த மாற்றம் கத்தோலிக்கத் திருச்சபையிலும் ஒரு வித மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களும் இறை வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து போதனைகள் செய்வதை துரிதப்படுத்தினார்கள். இயேசு சபை அதற்கு உறுதுணையாய் இருந்தது.

இவர்கள் தனிமனித ஒழுக்கங்களை மிகவும் முக்கியமாக வலியுறுத்தினார்கள். தங்கள் தாய் சபையான ரோமன் கத்தோலிக்க மதத்தின் வளர்ச்சிக்கும், அவர்களுடைய புகழ் பரவலுக்கும் முக்கிய இடம் கொடுத்தார்கள். மக்களை கிறிஸ்தவ இயக்கத்தில் இணைக்க வேண்டும் என்னும் தனியாத தாகம் அவர்களிடம் இருந்தது. அவர்களுடைய தனிப்பட்ட விசுவாசத்தையும் வளர்த்து, சமுதாயத்திலும் அந்த விசுவாசத்தை விதைத்தார்கள்.

கல்வியை இவர்கள் முதன்மைப்படுத்தினார்கள். எதிராக வந்த அனைத்துத் தடைகளையும் முறியடித்து சுமார் எழுபது ஆண்டுகளில் 306 கல்லூரிகளைக் கொண்ட மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்தார்கள். கல்வியை மக்களுக்கு வழங்கி அதன்மூலம் சமூக வளர்ச்சிக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் வழிகோலுவது இவர்களுடைய முக்கியமான திட்டமாக இருந்தது. இந்த இயேசு சபை சார்பாக இந்தியா வந்த முக்கியமான நபர் புனித பிரான்சிஸ் சேவியர்.

பிரான்சிஸ் சேவியர் இந்தியாவில் கத்தோலிக்க மதம் பரவ முக்கியமான காரணமாக விளங்கினார். தென்னிந்தியாவில் குறிப்பாக தென் தமிழகத்தில் அவர் பல்லாயிரம் பேரை கிறிஸ்தவ மதத்துக்குள் இணைத்தார். இலங்கை மலாக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் அவர் இறை செய்தி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், லத்தீன் அமெரிக்கா, ஹியூபெக், சீனா போன்ற இடங்களுக்கும் இயேசு சபை விரைவாகப் பரவியது.

இயேசு சபையின் தீவிரப் பணி கத்தோலிக்க மதத்திற்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது.

வத்திக்கான் சபையும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும்

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தவும், தங்களுக்குரிய மத ஒழுங்குகளை அமைக்கவும் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டினர். இந்த வத்திக்கான் சங்க முடிவுகள் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பணிகளை வரையறுத்தது.

குறிப்பாக சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுதல் பற்றி வத்திக்கான் கிறிஸ்தவர்களுக்கு பல வேண்டுதல்களை வைக்கிறது. பெண்விடுதலை, கல்வி, ஏழ்மை என பலதரப்பட்ட சமூக காரணிகளை அணுகுவது குறித்து வத்திக்கான் சங்கம் வரையறைகள் தருகிறது. சமூகப்பணியும் ஆன்மீகப் பணியும் இணைந்து பயணித்தலே உண்மையான ஆன்மீகம் என வத்திக்கான் சங்கம் வலியுறுத்துகிறது.

முதலாம் வத்திக்கான் சங்கம் 1869 – 1870 ல் நடைபெற்றது. இந்த சங்கத்தில் முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் நடப்பதற்கு இந்த வத்திக்கான் சங்க கூட்டம் ஆதாரமாய் இருந்தது.

போப்பாண்டவரின் தலைமை சந்தேகத்துக்கோ, விவாதத்துக்கோ இடமின்றி அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்டது முதலாம் வத்திக்கான் சங்கத்தின் ஒரு பாகமாகும்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் 23ம் ஜான் போப்பாக இருந்த காலத்தில் 1962 அக்டோபர் 11ல் ஆரம்பித்தது. வத்திக்கான் கூட்டம் முடியும் முன் போப்பானவர் இறந்து விட்டார் எனவே தொடர்ச்சியை அடுத்து வந்த போப் ஆறாம் பால் தொடர்ந்தார்.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், மற்ற கிறிஸ்தவர்களும் ஒரே தூய ஆவியின் வரங்களைப் பெற்றவர்கள் எனவே சகோதர உறவு அனைத்து கிறிஸ்தவர்களிடமும் காட்டப்பட வேண்டும் என வத்திக்கான் வலியுறுத்தியது.

கிறிஸ்தவ ஒற்றுமையை நிலைநாட்ட கத்தோலிக்க மதத்தில் அனைவரும் இணைய வேண்டும் என வற்புறுத்தாமல், கிறிஸ்துவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதும் வத்திக்கான் தீர்மானங்களில் சிறப்பு மிக்கதாகும்.

சமூகப்பணிகள் அற்ற கிறிஸ்தவ விசுவாசம் முழுமையானதாய் இருக்காது என்பதை இரண்டாம் வத்திக்கான் சங்கமும் வலியுறுத்துகிறது.

அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்று படவேண்டும் என்னும் நோக்கத்தில் பொதுவான மொழிபெயர்ப்புடன் கூடிய விவிலியம் ஒன்றை கத்தோலிக்க கிறிஸ்தவம் முன்னின்று நிறைவேற்றியிருப்பது உலகக் கிறிஸ்தவர்கள் ஒன்றுபட வேண்டும் என்னும் அவர்களுடைய தாகத்தையே காட்டுகிறது.

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் பல்வேறு பெயர்களில் தனித்தனியே இயங்குவது போன்ற ஒரு தோற்றம் உண்டு. அதை மாற்ற வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பல முயற்சிகள் நிகழ்ந்துள்ளன.

அமெரிக்காவில் 1857ம் ஆண்டு கிறிஸ்துவின் ஐக்கிய சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த சபையில் அமெரிக்காவிலுள்ள பல கிறிஸ்தவப் பிரிவுகள் இணைந்தன.

இங்கிலாந்தில் இதேபோல 1832ல் ‘இங்கிலாந்து வேல்ஸ் சபை ஆட்சி ஒருமைப்பாடு’ எனும் பெயரில் ஒரு இணைந்த இயக்கம் ஆரம்பமானது. இதிலும் வெவ்வேறு பிரிவினர் பலர் இணைந்தனர்.

1900ல் ஸ்காட்லாந்தில் பல சபைகள் ஒன்றாக இணைந்து ஒருங்கிணைந்த சுதந்திர சபை உருவானது. இந்த அமைப்பில் ஸ்காட்லாந்து சபைகள் பல இணைந்தன.

ஜப்பானில் இதேபோல 1941ல் ஜப்பானின் கிறிஸ்து சபை உருவானது. இதில் குறிப்பாக மெத்தடிஸ்ட் சபையும், சீர்திருத்தச் சபையும் இணைந்தன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘பிலிபைன்ஸ் ஐக்கிய எவாஞ்சலிக்கல் சபை’ 1946 ல் பெரும்பான்மையான சீர்திருத்தச் சபைப் பிரிவுகளை ஒன்றாக்கி உருவானது.

இவ்வாறு உலகின் பெரும்பாலான இடங்களில் பல கிறிஸ்தவக் குழுக்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற விரும்பினர். இது கிறிஸ்தவர்களிடையே உள்ள போட்டி மனப்பான்மையைக் குறைக்கும் நோக்கிலும், ஒற்றுமையை வளர்க்கும் நோக்கிலும் உருவானதாகும்.

கிறிஸ்தவத்தின் புதிய பிரிவுகள்

கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து சென்ற புராட்டஸ்டண்ட் மதத்தினர் தங்களுடைய சபையை ஒரே இயக்கமாக நடத்த இயலவில்லை. கத்தோலிக்க மதத்துக்கு மாற்றாக தோன்றிய புராட்டஸ்டண்ட் மதத்தில் இன்றைய நிலவரப்படி சுமார் முப்பதாயிரம் பிரிவுகள் இருக்கின்றன. பொதுவான தலைமையும் வழிகாட்டுதலும் இல்லாததாலும், பொதுமக்களே குருக்கள் என்னும் கொள்கையினாலும், சபை நடத்த குருத்துவப் பட்டம் பெறத் தேவையில்லை என்ற கருத்து நிலவியதாலும், குருக்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்னும் நிலை இருந்ததாலும் பலர் வேதாகமத்தை வாசித்து தாங்கள் புரிந்து கொண்டதன் படி இறை விளக்கம் கொடுக்கவும், தனித்தனியே குழுக்கள் ஆரம்பிக்கவும் துவங்கினார்கள்.

ஒவ்வொருவரும் அவர்கள் புரிந்து கொண்ட விதமே சரியானது என்று வாதிட்டுக் கொண்டு தங்கள் சபைகளை நடத்தினார்கள். மீட்பு பெற தங்கள் சபைக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது என்பது தனிக் குழுக்கள் அமைப்போரின் போதனையாய் இருக்கிறது. ஒரு வகையில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு இந்த குழுக்கள் காரணமாக இருந்தாலும், ஒரு பொதுமைப்பட்ட போதனை வகுக்கப்படாததால் ஒரு சபையில் சொல்லும் விளக்கங்கள் தவறென்று வேறொரு பிரிவினர் போதிப்பது போன்ற பல குழப்பங்கள் ஏற்பட்டன.

புராட்டஸ்டண்ட் பிரிவிற்குப் பின் கத்தோலிக்க மதத்தில் ஆயிரத்து ஐநூறுகளின் பிற்பகுதியில் ‘ஓரேட்டரி ஆஃப் டிவைன் லவ்’ என்னும் இயக்கம் ஆரம்பமானது. இவர்கள் விவிலியம் சார்ந்த போதனைகளையும், இறை அனுபவ வெளிப்பாடுகளையும் முன்னிலைப்படுத்தினார்கள். இந்த அறக்கட்டளை மிகவும் உயிர்ப்புடன் செயல்பட்டது. இவர்கள் சமுதாயப்பணிகளையும் ஏராளம் செய்தனர். இவர்களுடைய பணி புராட்டஸ்டண்ட் பிரிவினரின் வளர்ச்சிக்கு ஒரு வேகத்தடை போட்டது.

1524ம் ஆண்டு ‘தியேட்டின் ஆர்டர்’ என்னும் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. டினி என்பவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அதற்கு உறுதுணையாக நின்றார் பின்னாட்களில் போப்பாக திருநிலைப்படுத்தப்பட்ட கராப்பா என்பவர். ஏழ்மை, பணிவு, கீழ்ப்படிதல் போன்ற குணங்களை வாழ்க்கைக் குறிக்கோள்களாகக் கொண்டு இந்த அறக்கட்டளை பணியாற்றியது. இத்தாலியில் இந்த அறக்கட்டளை ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகத்தோடு இணைந்து இந்த அறக்கட்டளையினர் பணிகளிலும் ஈடுபட்டார்கள். எனவே கத்தோலிக்க மதத்தின் இழந்த பெயர் ஓரளவு மீண்டெடுக்கப்பட்டது.

கேப்புசின் அறக்கட்டலை 1525ம் ஆண்டு மேட்டியோ டா பேசியோ என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஒறுத்தல் முயற்சிகளால் வாழ்வின் உயர் நிலை அடையவும், ஆன்மீகத்தின் ஆழங்களை தரிசிக்கவும் கொள்கை ரீதியாய் இணைந்தவர்கள். இவர்கள் செருப்புகளைக் கூட வெறுத்து தங்கள் ஒறுத்தலைக் காட்டினார்கள். உணவுக்காய் பிச்சையும் எடுத்தார்கள்.

கி.பி 1535ம் ஆண்டு பெண்களுக்காக ஏஞ்சலா மெரிசி என்னும் பெண்ணால் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை உருசுலின் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையினரும் சமூக பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார்கள். கல்வி அறிவித்தல் பணியிலும், மருத்துவ உதவிகளிலும், நோயாளிகளுக்கு ஆறுதல் அளிப்பதிலும் இவர்கள் முனைப்புடன் ஈடுபட்டார்கள்.

கிபி 17ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் தோன்றிய இயக்கம் ‘பக்தி மார்க்கம்’ என்பது. லூத்தரன் சபையில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என்னும் சூளுரையோடு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இந்த பக்தி மார்க்கம். தனிப்பட்ட வாழ்க்கையில் பத்தியுடனும், ஆன்மீக ஆழத்துடனும் வாழவேண்டும் என்றும், நம்முடைய தினசரி வாழ்க்கையில் அதை செயலில் காட்ட வேண்டும் என்றும், நடை முறை வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் விவிலியத்தைப் பயன்படுத்தவேண்டும் என்றும் இந்த இயக்கம் கொள்கை வகுத்துக் கொண்டது. பிலிப் ஸ்பீனரால் துவங்கப்பட்ட இந்த இயக்கம் பின்னர் பிராங்கே என்பவரின் வழிகாட்டலில் வளர்ந்தது.

ஏழைகள் கல்வி அறிவு பெறுவதற்காக கல்வி நிலையங்கள் ஏற்படுத்துதல், விதவைகள் இல்லம் அமைத்தல், அனாதைகளைக் கவனித்தல், விவிலியம் போதித்தல் என எல்லா விதமான பணிகளையும் அவர்கள் செய்தார்கள்.

கவுண்ட் வான் ஸின்செண்டார்ஃப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சபை மொரேவியன். இவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் கண்ட கிறிஸ்தவர்களையும், மற்றவர்களையும் மொரேவியன் சபையில் இணைத்தார்கள். கி.பி 1742ல் இந்த சபை அங்கீகரிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்த அமைப்பினர் விஜயம் செய்து கிறிஸ்தவத்தைப் பரப்பினார்கள்.

ஜான் வெஸ்லி ஆரம்பித்த மெதடிஸ்ட் சபை ஒரு பெரும் சபையாக உருவெடுத்தது. சிறையில் வாடுவோரை சந்தித்து ஆறுதல் அளிப்பதும், விவிலியத்தை வாசித்து செபிப்பதும் இவருடைய வழக்கமாக இருந்தது. சுமார் இருநூறு புத்தகங்களையும் 42, 000 சொற்பொழிவுகளையும் இவர் செய்திருக்கிறார். போதைப் பழக்கம், அடிமைத்தனம், போர் இவைகளுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பியவர் அவர்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s