கிறிஸ்தவ மதத்தில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும், போப்பிற்கு எதிராகவும் நடந்த கிளர்ச்சியே திருச்சபையின் மிகப்பெரிய கிளர்ச்சி எனலாம். போப்பின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட விருப்பமில்லாதவர்களும், தங்களை தாங்களே ஆளவேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்களும், தங்கள் பணம் திருச்சபையின் தலைமை இடத்துக்குச் செல்வதை விரும்பாதவர்களாலும் இந்த கிளர்ச்சி துவங்கப்பட்டது. ஏற்கனவே கிறிஸ்தவத்தில் பல குழுக்களும், துறவறங்களும், தனியுறவுச் சபைகளும் ஆங்காங்கே தோன்றி வளர்ந்தாலும் அவை பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தோ, அல்லது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமலோ தான் நடந்து கொண்டிருந்தன. திருச்சபைக்கு விரோதமாய் நடந்தவர்கள் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார்கள். அவர்கள் ஆரம்பித்த தனிச் சபைகள் ஏதும் மாபெரும் பிளவையோ தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை.
கத்தோலிக்க மதத்துக்கு எதிராகவும், போப்புக்கு எதிராகவும் எழுந்த முதல் சவால் அரசுகள் போப்பின் அதிகார வட்டத்தை விரும்பாமல் தனித்து இயங்கியது எனலாம். அதுவே ஆங்காங்கே கத்தோலிக்க மதத்துக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்ற ஏதுவாயின. போதிக்கும் திறமை இருந்தவர்கள் தனித் தனிக் குழுக்களாக பிரிந்து தங்கள் பெயரை நிலைநாட்டிக் கொள்ளவேண்டும் என்று விரும்பியதும் கிளர்ச்சிக்கான காரணங்களின் ஒன்றாகும். இன்னொரு முக்கியமான காரணம் அந்நாட்களில் ரோமுக்கு சென்று கொண்டிருந்த பணம். இந்த பணம் தங்களுக்குள்ளேயே இருந்தால் நன்றாக இருக்குமே என்று மக்கள் நினைத்தார்கள். அதுவரை ரோமன் கத்தோலிக்க சபைக்கு எந்த பெரிய இழப்பும் ஏற்படாததால் அவர்கள் மறை பரப்புதலில் முழு மூச்சாக ஈடுபடவில்லை. அவர்களுடைய திருச்சபைச் சட்டங்களையே பெருமளவில் மதித்து நடந்தார்கள்.
கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்த ‘பாவசங்கீர்த்தனம்’ , பாவமன்னிப்பு அல்லது பாவ மன்னிப்புச் சீட்டின் மீதும் பலர் அதிருப்தி கொண்டிருந்தார்கள். திருச்சபைத் தலைவரான குருவிடம் தாங்கள் செய்யும் பாவங்களை மக்கள் சொல்லவேண்டும், குருவானவர் அந்த பாவத்துக்குப் பிராயச் சித்தமாக ஏதேனும் செய்யச் சொல்வார். அந்த பிராயசித்தத்தின் மூலம் பாவம் மன்னிக்கப் படும். என்பது கத்தோலிக்கர்களின் வழக்கமாக இருந்தது. பாவங்களை அறிக்கை இடுபவர்களுக்கு வழங்கப்படும் பிராயச்சித்தம் என்ன என்பதைக் குறிப்பிடும் சீட்டே பாவ மன்னிப்புச் சீட்டு என்றழைக்கப்பட்டது. பிராயச் சித்தமாக ஆலயத்தில் முழங்கால் படியிட்டு செபிப்பது, யாருக்கு எதிராக பாவம் செய்திருக்கிறோமோ அவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்பது, ஏதாவது புண்ணிய ஸ்தலத்துக்குச் செல்வது போன்றவை வழக்கமான பாவ மன்னிப்புச் சீட்டின் உள்ளடக்கமாகும். ஆனால் மன்னர்கள் செல்வந்தர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படும் பாவ மன்னிப்புச் சீட்டிலோ ஆலயத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்கித் தருவது, ஆலய தேவைக்காக ஒரு தொகை வழங்குவது என்பது பாவமன்னிப்புச் சீட்டாக இருந்தது.
செல்வந்தர்களும், மன்னர்களும் திருச்சபைக்கு எதிராக குரல் கொடுக்க இது ஒரு காரணமாக இருந்தது.
பாவ மன்னிப்புச் சீட்டு விவிலியத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. இவை கத்தோலிக்கத் திருச்சபையின் தீர்மானங்களாய் இருந்தது. எனவே இவற்றை கிளர்ச்சியாளர்கள் தங்கள் எதிர்ப்பு வரிசையில் முன்னிலைப்படுத்தினார்கள். இந்த கிளர்ச்சிகளும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லையெனிலும் பின்னாட்களில் புராட்டஸ்டண்ட் சபை உருவாக இவையே அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.