Posted in Mother Teresa

அன்னை 4 : முதல் விதை

Image result for Young Mother teresa

முதல் விதை

தந்தை இறந்து விட்டார்.

1917ம் ஆண்டு ஆக்னஸின் தந்தை இறைவனை அடைந்து விட்டார். அப்போது ஆக்னஸிற்கு வயது வெறும் ஏழு !

தந்தையின் தோள்சாய்ந்து கதைகள் கேட்டு கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிப் போகும் ஆக்னஸ் அந்த துயரத்தின் வீரியத்தை உள்வாங்கி ஒட்டு மொத்தமாய் உடைந்து போனாள்.

எதிர்பாராத மரணங்கள் வாழ்வின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டவை.

ஆக்னஸின் குடும்பமும் ஆட்டம் கண்டது. மரணம் தான், இதுவரை தேவையில்லை என்று நினைத்திருந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க வைக்கிறது.

மரணம் தான், வாழ்வின் மீதான பயத்தை வெளிக்கொணர்கிறது. அதே மரணம் தான் புதைந்து கிடக்கும் தன்னம்பிக்கையை தூசு தட்டவும் உதவுகிறது.

ஆக்னஸின் அன்னை வேர் வெட்டுப்பட்ட ஆலமரமாய் சாய்ந்தாள். மரமே சாய்ந்தபின் கிளைகளில் ஆடிப்பாடும் கிளிகளின் கதி என்னாவது ? அவையும் சாய்ந்தன.

என்ன செய்வது ? பசிக்கு மரணம், ஜனனம் என வித்தியாசம் பார்க்கத் தெரியாதே அது வழக்கம் போல் வந்தது.

பெரும் பெயருடனும், பணத்துடனும் இருந்த தந்தையை, கூட இருந்த நண்பர்களும், பங்குதாரர்களும் மரணத்தின் பின் மறுதலித்தனர்.

வரவேண்டிய பணம் வரவில்லை. அநியாயங்களே ஆன்கஸின் வாசலில் வந்து குவிந்தன.

வேறு வழியில்லை. தாய்ப்பறவை பறந்தால் தான் உணவு கிடைக்கும் எனும் நிலை. அன்னை நிமிந்தாள். அவளுடைய நம்பிக்கையும் நிமிர்ந்தது.

பெர்னாய் அலங்கார ஆடைகள் செய்வது, கலைப்பொருட்கள் செய்வது என பல திறமைகளைக் கொண்டிருந்தாள். தேவையில்லை என்று நினைத்திருந்தவை இப்போது உதவிக்கு ஓடிவந்தன. அந்த திறமைகளை பசியாற்றப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்தாள்.

இரவு பகல் பாராமல் உழைப்பின் கைகளில் தன்னை அர்ப்பணித்தாள். தேவையான பணம் வரத் துவங்கியது.

ஏழு வயதான ஆக்னஸிற்கு அந்த நிகழ்வுகளெல்லாம் மனதில் ஆழமான காயத்தை உண்டுபண்ணின.

வாழ்வுக்காக தனது அன்னை பட்ட துயரங்கள் அவளுடைய மனதின் காயத்தை ஆழப்படுத்தின.

ஆனால் தாய், தன் பிள்ளைகளுக்கு கவலை ஏதும் வரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். ஒரு இழப்பு வேறு இழப்புகளுக்கு குடும்பத்தை இட்டுச் செல்லக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.

தன் பிள்ளைகளுக்கு நல்ல செய்திகளையும், போதனைகளையும் தவறாமல் வழங்கிக் கொண்டே இருந்தாள்.

அவர்களுடைய இறை விசுவாசம் தந்தையின் மரணத்திற்குப் பின் இன்னும் அதிகமானது. தந்தையைச் சார்ந்து இருந்த குடும்பம், விண்ணகத் தந்தையை முழுவதுமாய் சார்ந்து இருந்தது.

ஆக்னஸ் திருஇருதய ஆலயத்திலும், அங்கே அமைந்திருந்த நூலகத்திலும் நிறைய நேரம் செலவிட்டாள். விவிலியத்தை முழுமையாக ஊன்றிப் படிப்பதில் ஆர்வம் காட்டினார்.

“ஏழைகளுக்கு நீங்கள் எதையெல்லாம் செய்தீர்களோ அதையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்னும் இயேசுவின் போதனை ஆக்னஸை பெரிதும் கவர்ந்தது.

நோயுற்றிருப்பவர்களைச் சந்திக்கும் போதும், சிறையில் இருப்போரைப் பார்வையிடும் போதும், தாகமுற்றிருப்போருக்கு தண்ணீர் வழங்கும் போதும், நோயுற்றவருக்கு ஆறுதல் தரும் போதும் இறைவனுக்கே அவற்றைச் செய்கிறீர்கள் என்னும் இயேசுவின் போதனையை உள்ளத்தில் இருத்தி ஆக்னஸ் சிந்தித்து வந்தாள்.

ஜெஸ்யூட் எனும் கிறிஸ்தவப் பிரிவைச் சார்ந்த சகோதரிகள் அவர்களுடைய ஆலயத்தில் ஒரு முறை வந்தபோது அவர்கள் மூலமாக சமூகப் பணிபற்றி நிறைய தெரிந்து கொண்டாள்.

ஏழைகளுக்குப் பணி செய்வதற்காகவே பலர் இருப்பது அவளுடைய ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் அதிகப்படுத்தியது.

அந்த ஆர்வத்தை அப்படியே ஏந்திக் கொண்டு ஸ்கோப்ஜியிலுள்ள மரியன்னை ஆலயத்தில் ஆக்னஸ் நீண்ட நேரம் செபமாலை செய்தாள்.

பின் தன்னுடைய தாயிடம் சென்றாள்.

“அம்மா நான் இன்னும் அதிகமாக இயேசுவின் பணிகளைச் செய்யவேண்டும் என விரும்புகிறேன்”

“நல்லது. அதிகம் செபம் செய், அதிகம் விவிலியம் வாசி, அதிக நேரம் ஆலயத்தில் இரு” அன்னை அறிவுரை கூறினாள்.

“இல்லை அம்மா, நானும் ஜெஸ்யூட் சகோதரிகளைப் போல, துறவறத்தில் ஈடுபட்டு பணி செய்யப் போகிறேன்” ஆக்னஸ் சொன்னாள்.

தாய் திடுக்கிட்டாள்.

ஆக்னஸை நிமிர்ந்து பார்த்தாள். பன்னிரண்டே வயதான தனது மகளுக்கு துறவறத்தில் நாட்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தாயால் ஜீரணிக்க முடியவில்லை.

“நீ சின்னப் பெண். இப்போதைக்கு துறவறம் பற்றி சிந்திக்க வேண்டாம். உன்னுடைய கடமைகளை சரிவர செய். துறவறம் பற்றி பின்பு யோசிக்கலாம்” தாய் சொல்ல, ஆக்னஸ் முகவாட்டத்துடன் சென்றாள்.

தாய் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆக்னஸ் ஏதோ ஒரு வேகத்தில் தன்னிடம் வந்திருக்கிறாள். இன்னும் சில வருடங்கள் சென்றால் வாழ்வின் மீதான உற்சாகமும், சுவாரஸ்யங்களும் அவளை வந்தடையும். அதன் பின் அவளுக்கு துறவறம் பற்றியெல்லாம் யோசிக்கவே பிடிக்காது என நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பது அப்போது தாய்க்குத் தெரிந்திருக்கவில்லை.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s