Posted in Mother Teresa

அன்னை 2 : மழலை ஆன்கஸ்

Related image

மழலை ஆன்கஸ்

ஆகஸ்ட் 26, 1910.

வரலாறு இந்த நாளை ஒரு மயிலிறகால் எழுதியிருக்க வேண்டும். ஏனெனில் இந்த நாளில் தான் அன்னை தெரசா என்று பின்னாளில் உலகினரால் அன்போடு அழைக்கப்பட்ட ஆக்னஸ் கொன்சகா பொஜாக்சியு பிறந்தாள்.

யூகோஸ்லோவாக்கியாவிலுள்ள ஸ்கோப்ஜி என்னுமிடத்தில் வசித்து வந்தனர் நிக்கோலா, டிரானே தம்பதியினர். இவர்கள் அல்பேனியர்கள், இடம்பெயர்ந்து ஸ்கோப்ஜியில் வசித்து வந்தனர். ஆக்னஸின் தாய் வெனிஸ் நாட்டைச் சார்ந்தவர்

இந்த ஸ்கோப்ஜி மெசபடோனியாவிலுள்ள ஒரு நகரமாகும். இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்து வந்த இந்த நகரத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

நிக்கோலா ஒரு கட்டிட நிறுவனத்தின் பங்குதாரராய் இருந்தார். எனவே குடும்பத்திற்குத் தேவையான வருமானம் தங்குதடையின்றி வந்து கொண்டிருந்தது.

கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்தது அவர்களுடைய வாழ்க்கை. சுற்றத்தோடு உறவும், நட்பும் கொண்டிருந்த தம்பதியினருக்கு  மூன்றாவது மகளாக வந்து பிறந்தாள் ஆக்னஸ்.

அவளுக்கு ஒரு அக்கா ஒரு அண்ணன். ஆக்னஸின் அண்ணன் லாசர் 1907ம் ஆண்டு பிறந்தார். இரண்டாவதாக ஒரு அக்கா அகதா 1904ம் ஆண்டு பிறந்தார்.

பிறந்த அடுத்த நாளே ஆக்னஸ் திருமுழுக்கு பெற்றாள். திருமுழுக்கு என்பது கிறிஸ்தவ மதத்திற்குள் நுழைவதற்கான ஆன்மீக அனுமதி.

இருபத்து ஏழாம் தியதி திருமுழுக்கு பெற்றுக் கொண்ட தினத்தையே ஆக்னஸ் தன்னுடைய பிறந்த நாளாகப் பாவிக்க ஆரம்பித்தாள்.

அழகும், அறிவும் நிறைந்த பெண்ணாக வளர்ந்தாள் ஆக்னஸ். பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் ஆக்னஸ் பெற்றோரைப் பெருமைப்படுத்தினாள்.

ஆக்னஸின் வீட்டைச் சுற்றிலும் இயற்கை தன்னுடைய கம்பீர பச்சையை வஞ்சனையின்றி வழங்கியிருந்தது. ஆக்னஸிற்கு அந்த தோட்டங்களில் விளையாடுவது பிடித்தமான பொழுதுபோக்காகவும் இருந்தது.

ஐந்து வயதான போது ஆக்னஸ் நற்கருணை பெற்றுக் கொண்டாள்.

நற்கருணை என்பது கிறிஸ்தவத்தின் மிக முக்கியமான நிகழ்வு. நற்கருணையில் இயேசு இருக்கிறார் என்பது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

இயேசுவின் இறுதி இரவு உணவின்போது கோதுமை அப்பத்தை எடுத்து பிட்டு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுத்தார். அப்போது “ இது எனது உடல். இதை வாங்கி உண்ணுங்கள்” என்று கூறினார்.

அந்த நினைவாக ஆலயங்களில் நற்கருணை வழங்கப்படுகிறது. நற்கருணை உண்பவன் கிறிஸ்துவையே உண்கிறான். எனவே உள்ளத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அவன் தீய வழிகளில் நடக்கக் கூடாது என்பதே பொருள்.

அதனாலேயே ஆக்னஸ் தன்னுடைய ஐந்தாவது வயதில் நற்கருணை பெற்றுக் கொண்ட பின் ஆக்ன்ஸ் இறைவிசுவாசத்தில் ஆழமானாள்.

தன்னுடைய ஆறாவது வயதில் உறுதிப்படுத்தலும் பெற்றுக் கொண்டாள். உறுதிப்படுத்தல் என்பது கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதிப்படுதலாகும்.

ஆக்னஸ் படித்தது இயேசுவின் திரு இருதய ஆலயப் பள்ளியில். பள்ளிக்கூடத்தில் ஆக்னஸ் படு சுட்டி. அழகிலும் திறமையிலும் ஆசிரியர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவள்.

ஆக்னஸ் வீட்டிலும் செல்லப்பிள்ளையாய் வளர்ந்தார். அவருடைய அன்னையோடு ஆழமான அன்பு கொண்டிருந்தார். அன்னையின் சொல்லைத் தட்டியதேயில்லை.

ஆக்னஸை அவருடைய வீட்டில் யாரும் பெயர் சொல்லி அழைப்பதில்லை அரும்பு எனும் பொருளின் கோக்ஹா என்றே அழைத்தார்கள்.

ஆக்னஸ் நல்ல குரல் வளம் கொண்டிருந்தாள். தினமும் தவறாமல் செபம் செய்வது அவளுடைய வழக்கமாக இருந்தது.

அவர்களுடைய ஆலயத்தின் பாடகர் குழுவில் ஆக்னஸ் சேர்ந்தாள். இசையுடன் இறைவனைப் புகழ்வது அவளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

ஆக்னசின் அக்காவும் நல்ல இசை ஞானம் உடையவர். எனவே இருவரும் இசைக் குழுவில் சேர்ந்து இறைவனைப் புகழ்ந்து வந்தனர்.

தினமும் செபம் செய்வது, ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் ஆலயம் செய்வது போன்ற அனைத்து விதமான மத ஒழுக்கங்களையும் ஆக்னஸ் மன விருப்பத்துடன் நிறைவேற்றி வந்தாள்.

வீட்டில் கடைக்குட்டிக்குரிய செல்லத்துடனும், ஆலயத்தில் துடிப்பான இறைபக்தியுடனும் வளர்ந்த ஆக்னஸ் அனைவருக்கும் பிரியமான பெண்ணாக வளர்ந்ததில் ஆச்சரியமில்லை.

சிறுவயதிலேயே மிக நல்ல பழக்கங்களைக் கொண்டிருந்தார் ஆக்னஸ். தினமும் குடும்பத்தினர் அனைவரும் ஆலயம் சென்று இறைவனைத் தொழும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

அந்த நாட்களின் நற்கருணை வாங்க வேண்டுமெனில் அதற்கு முன் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை எதுவும் சாப்பிட்டிருக்கக் கூடாது. குறிப்பாக காலையில் நற்கருணை வாங்க வேண்டியிருந்தால் முந்தின நாள் நள்ளிரவுக்குப் பின் எதுவும் உண்ணக்கூடது என்னும் வரைமுறை இருந்தது.

ஆக்னஸ் அதை தவறவிட்டதேயில்லை. ஆனால் அவளுடைய அண்ணன் லாசர் இரவில் அனைவரும் தூங்கியபின் பூனைபோல சென்று இருக்கின்ற இனிப்பு வகைகள், பழங்கள் என ஒரு கை பார்த்து விடுவார். இதை ஆக்னஸ் ஒரு நாள் கவனித்தாள்.

அண்ணன் செய்த தவறை பெற்றோரிடம் சொல்லி தண்டனை வாங்கித் தராமல் நேராக அண்ணனிடமே சொல்லி தவறைத் திருந்த வைத்தாள்.

லாசரும் தங்கையின் நாசூக்கான போதனையினால் பாதிக்கப்பட்டு அதன்பின் அந்த தவறைச் செய்யவில்லை.

ஆக்னஸின் தாய் பிறர் உதவிப் பணிகளில் தயக்கம் காட்டாதவர். அவர்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஏழை விதவை வறுமையில் வாடிக்கொண்டிருந்தாள்.

அவர்களுக்குச் சொந்தமான குடிசை இருட்டுக்குள் கிடந்தது. ஏழு குழந்தைகள். அவர்களுடைய பசியைத் தீர்க்கும் வழியில்லாத நிலை.

ஆக்னஸின் தாய் அந்தக் குடும்பத்தினரைப் பரிவோடு பார்த்துக் கொண்டாள். தேவைப்பட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வந்தாள்.

தாயின் இந்த முன் உதாரணம் ஆக்னஸை வசீகரித்தது. ஆக்னஸ் அந்த இல்லத்தினரோடு மிகவும் நெருங்கிப் பழகினாள். அந்த சிறு வயதிலேயே அவர்களுக்கு துணையாய் இருக்க விரும்பினாள்.

ஆக்னஸிற்கு அன்னை பல அறிவுரைகள் வழங்குவாள். பெரும்பாலும் அந்த அறிவுரைகள் எல்லாமே மனித நேயத்தை மையப்படுத்தியதாகவே இருந்தன.

இயேசுவின் போதனைகளை ஆக்னஸ் மிகவும் ஆர்வத்துடன் படித்து வந்தாள்.

நீ நல்ல செயல்கள் செய்யும் போது அதை விளம்பரப் படுத்தக் கூடாது, சுயநலமான செயல்களை செய்யக் கூடாது, பிறருக்கு உதவி செய்வதில் தயங்கக் கூடாது என்றெல்லாம் அன்னை நிறைய அறிவுரைகளை ஆக்னஸிற்கு அடிக்கடி வழங்குவார்.

தாய் சொல்லைத் தட்டாத ஆக்னஸ் அன்னை சொல்வதையெல்லாம் கவனமாய் கேட்டுக் கொண்டிருப்பாள்.

தாய் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருக்க, தந்தை ஆக்னஸுடன் அளவளாவி, கதைகள் பேசி பொழுதைப் போக்குவார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s