Posted in Mother Teresa

அன்னை 1 : கருப்புப் பகல்

Image result for Mother Teresa diedகருப்புப் பகல்

செப்டம்பர் 5 1997.

வரலாற்றின் பக்கங்களில் ஒரு கருப்புப் பகலாக விடிந்தது இந்த தினம். அன்றைய தினம் விடிந்தபோது யாரும் அறிந்திருக்கவில்லை அன்று அன்னை தெரசா தன்னுடைய மண்ணுலகப் பணியை முடித்துக் கொண்டு விண்ணுலகிற்குப் பயணமாவார் என்று.

ஏற்கனவே 1983ம் ஆண்டு முதன் முதலாக நெஞ்சுவலி அன்னையைத் தாக்கியது. அப்போது அன்னை ரோம் நகரில் இருந்தார். கத்தோலிக்கர்களின் மத வழிகாட்டியான போப் இரண்டாம் ஜான்பால் அவர்களைச் சந்திக்க அன்னை ரோம் நகருக்குச் சென்றிருந்தார்.

நெஞ்சு வலிக்கு நாடுகள் குறித்த கவலை இல்லையே. அங்கே அன்னை முதல் தாக்குதலுக்கு ஆளானார்.

ஆறு வருடங்கள் கடந்தபின் மீண்டும் ஒருமுறை அன்னையை நெஞ்சுவலி வந்து சந்தித்தது. இரண்டாம் முறை தாக்குதலுக்கு ஆளானபின் அன்னைக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதன்பின் கடின வேலைகள் ஏதும் செய்யக் கூடாது என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டும், அன்னையால் வெறுமனே இருக்க முடியவில்லை.

ஏழைகளுக்காகவும், வறியவர்களுக்காகவும், கைவிடப்பட்டவர்களுக்காகவும் துடித்துக் கொண்டிருந்த இதயம் தன்னுடைய துடிப்பை நிறுத்தும் வரை ஏழைகளுக்காகவே இயங்கிக் கொண்டிருந்தது.

ஏன் நீங்கள் உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளக் கூடாது ? இனிமேலாவது சற்று ஓய்வு எடுக்கக் கூடாதா என்றார்கள் மருத்துவர்கள். அவர்களிடம் அன்னை சொன்னார்

நான் விண்ணகம் செல்வது போல கனவு கண்டேன். விண்ணக வாசலில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நீ மண்ணுக்கு செல். விண்ணுலகில் சேரிகள் இல்லை. உன் பணி மண்ணுலகில் என திருப்பி அனுப்பப்பட்டேன். எனவே என் இறுதி மூச்சு வரை பணி செய்வதிலிருந்து பின் வாங்க மாட்டேன். வியக்க வைக்கும் உறுதியுடன் சொன்னாள் அன்னை.

சில நாட்களுக்கு முன்பு தான் அன்னையின் பிறந்த நாள். எண்பத்து ஏழாவது வயதிற்குள் அன்னை அடியெடுத்து வைத்து ஒரு வாரம் தான் கடந்திருந்தது.

நெஞ்சுவலி மீண்டும் அன்னையை கொடூரமாய்த் தாக்கியது. கடந்த ஆண்டு மூன்று முறை மருத்துவமனைக்கு அன்னையை அனுப்பிய நெஞ்சு வலி இந்த முறை அனுப்பவில்லை.

இரவு “இயேசுவே உம்மை நேசிக்கிறேன்” உதடுகள் முனகின.

இயேசுவே.. இயேசுவே… இயேசுவே… அன்னை மூன்று முறை அழைக்கிறார்.

சுற்றி நிற்கும் சகோதரிகளின் கண்கள் அணை உடைக்கின்றன.

ஏழைகளோடு ஏழையாக சுற்றித் திரிந்த அன்னை இன்று நகர முடியாமல் உதடுகளை மட்டும் அசைத்து இறைவனிடம் இறுதி செபத்தை நிறைவேற்றுவதை அவர்களால் கலங்காத கண்களால் பார்க்க முடியவில்லை.

அசைந்து கொண்டிருந்த அன்னையின் உதடுகள் உறைகின்றன. மரணம் வந்து மரியாதைக்குரிய அன்னையை அழைத்துச் செல்கிறது.

அன்னை பணியாற்றிய கல்கத்தா நகரம் கண்ணீர்க் கடலில் மிதக்கிறது.

அன்னையின் இல்லத்தைச் சுற்றி மக்கள் குவிகின்றனர். மக்களைத் தேடித் தேடி ஓடிய அன்னையைத் தேடி வர மக்களுக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பாகத் தோன்றுகிறது அந்த நிகழ்வு.

உலகம் முழுதும் அன்னையின் மறைவுச் செய்தி ஓர் துயரப் புறாவாய் பறந்து திரிகிறது. உலகிலுள்ள தலைவர்கள் அனைவரும் சோகத்தை வார்த்தைகளில் கோத்து கண்ணீர் மாலையை அளிக்கின்றனர்.

அன்னையின் மறைவு உலுக்கி எடுத்து விட்டது. துயரத்தில் இருக்கிறேன். அன்னை இறுதி மூச்சு வரை இறைவனின் பிம்பமான ஏழைகளுக்குப் பணியாற்றியவள் என்று போப்பாண்டவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஜாக்குவாஸ் தன்னுடைய இரங்கல் செய்தியில், இன்றைய தினம் உலகில் அன்பும், கருணையும், வெளிச்சமும் சற்று குறைந்துவிட்டது. காரணம் அன்னை மறைந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

தெரசா ஒப்பிட முடியாத ஒரு பெரும் பணியாளர் என்று அமெரிக்கா ஜனாதிபதி பில் கிளிண்டன் இரங்கல் தெரிவித்தார்.

இங்கிலாந்தின் டோனி பிளேர் தன்னுடைய இரங்கல் செய்தியில் அன்னை மனுக்குலத்திற்கு முன்னுதாரணமாகவும், பணிசெய்யும் தூண்டுதல் வழங்குபவருமாய் இருக்கிறார். அன்னை எளியவர்களிடையே பணி செய்து உயர்ந்தவர் என குறிப்பிட்டிருந்தார்.

உலகம் முழுவதிலுமிருந்து பாரபட்சமின்றி அனைவரும் அன்னையின் மறைவுக்காய் கண்ணீர் வடித்தனர். இந்தியா அன்னைக்காக மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரித்தது.

மதங்களைத் தாண்டிய மனித நேயத்தை தன்னுடைய துணிச்சலான, பணிவான பணியினால் உணர்த்தியவர் அன்னை தெரசா என்பதை உலகமே ஏற்றுக் கொண்டதன் பிரதிபலிப்பாய் இருந்தது அது.

அன்னையின் உடல் அங்கிருந்து கல்கத்தாவிலுள்ள புனித தாமஸ் ஆலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னையின் உடலுக்கு கண்ணீரையும், பூக்களையும் கலந்து அர்ப்பணித்தனர்.

நேதாஜி உள் விளையாட்டரங்கில் அன்னைக்கு இறுதி மரியாதை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தலைவர்கள் இரங்கல் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

எல்டன் ஜாண் இசை நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கானோர் அன்னைக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். உலக நாடுகளின் தலைவர்களும், அன்னையின் பணியினால் தொடப்பட்ட ஏழைகளும் என அரங்கம் சமத்துவக் கலவையாய் நிரம்பி வழிந்தது.

இறுதிச் சடங்கில் ஓர் அனாதைக் குழந்தை அன்னை யின் பாதத்தில் மலர்கொத்து ஒன்றை வைக்க, உடனுழைப்பாளர் ஒருவர் வத்தி ஒன்றை வைக்க, கொஞ்சம் தண்ணீரை ஒரு கைதியும், இயேசுவின் இரத்தத்தை நினைவூட்டு வகையில் திராட்சை ரசத்தை ஒரு தொழுநோயாளியும், இயேசுவின் உடலை நினைவூட்டும் வகையில் ஒரு அப்பத்தை ஊனமுற்ற நபர் ஒருவரும் அன்னையின் உடலுக்கு காணிக்கை வைத்தனர்.

பார்வையாளர்களின் இதயம் கசிந்தது. “நான் ஒரு பென்சில் மட்டுமே. என்னைக் கொண்டு வரைபவர் இயேசுவே” என சொன்ன அன்னை இறைவனிடம் சரணடைந்து விட்டார்.

ஏழைகளிலுள்ள பரம ஏழைகளைத் தேடி வந்த அன்னை தெரசாவிற்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட உச்சபட்ச ஆடம்பர விழா அன்னையின் வாழ்க்கை மனித வரலாற்றில் நிகழ்த்திய பாதிப்பை படம்பிடித்தது.

அன்னை நிச்சயமாய் இந்த ஆடம்பரத்தை விரும்பியிருக்க மாட்டார். என்று அன்னையின் பணியை ஆழமாய் அறிந்தவர்கள் கவலைப்பட்டனர்.

அரசு மரியாதை அன்னைக்கு வழங்கப்பட்டது. பதினைந்து ராணுவ வண்டிகளுடன் அன்னையின் இறுதி ஊர்வலம் நடந்தது.

ஆலயத்திலிருந்து , நேதாஜி அரங்கிற்குச் சென்று, நேதாஜி அரங்க நிகழ்வுகள் முடிந்தபின் அன்னையின் உடல் அன்னையின் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அன்னை ஆரம்பித்த “மிஷனரீஸ் ஆப் சாரிட்டி” தலைமை அலுவலகத்தில் அன்னையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாள்காட்டி செப்டம்பர் 13, 1997 என்றது.

ஒரு மரணம் உலகையே உலுக்கி எடுத்தது. ஒரு மரணம் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு வரவைத்தது. ஒரு மரணம் இந்திய நாட்டின் மனங்களையெல்லாம் துயரக் கடலில் இறக்கி வைத்தது.

அப்படி இந்த அன்னை தெரசா செய்தது தான் என்ன ? அரசியல் புரட்சியா ? மாவீர சாதனையா ? மாபெரும் தொழில் புரட்சியா ? ஒன்றுமில்லை.

ஏழைகளின் குடிசையில் தவழ்ந்ததும், தொழுநோயாளிகளை தூக்கி அரவணைத்ததும், அருவருப்பென நிராகரிக்கப்பட்டவர்களை மார்போடணைத்துக் கொண்டதும் தான்.

அன்னை யார் ? அவர் இந்த பணிகளையெல்லாம் செய்யக் காரணம் என்ன ? அன்னை இந்தியாவைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன ?

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s