Posted in Bible People

பைபிள் மாந்தர்கள் 147 : அழகுவாசல் முடவன்

Image result for beautiful gate bible

இயேசுவின் சிலுவை மரணத்துக்குப் பின் சீடர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். இயேசுவோடு கூட நடந்தபோது நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள் எல்லாரும் இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு அறைகளில் பதுங்கினார்கள்.

மூன்றாவது நாள். இயேசு உயிர்த்துவிட்டார். முதலில் மதலேன் மரியாளுக்குக் காட்சியளித்த இயேசு, அதன்பின் எம்மாவூஸ் சென்ற இரண்டு சீடர்களுக்குக் காட்சியளித்தார்.

ஆனாலும் பேதுருவும் அவருடன் இருந்த சில சீடர்களும் தங்கள் பழைய வேலையான மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பினார்கள். ஆனால் இயேசு மீண்டும் அவர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்து நம்பிக்கையூட்டினார். பின்னர் தூய ஆவியானவரை உலகிற்கு அனுப்பி சீடர்களை நிரப்பினார். அதன்பின்பு தான் சீடர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் துவங்கினார்கள்.

ஒருநாள் மூன்று மணியளவில் செபம் செய்வதற்காக பேதுருவும், யோவானும் ஆலயத்துக்குச் சென்றார்கள். மூன்று மணிக்கு செபம் செய்வது என்பது அவர்களுடைய வழக்கமாய் இருந்தது. இயேசு சிலுவையில் உயிர்விட்ட நேரமும் பிற்பகம் மூன்று மணி என்பதால் மாலை மூன்றுமணி என்பது அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் நினைவு கூரத் தக்க ஒன்றாக மாறிவிட்டிருந்தது.

ஆலயத்தில் அழகுவாயில் என்னுமிடத்தில் ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அழகுவாயில் என்பது எருசலேம் தேவாலயத்தின் முதல் வாயில். அவன் பிறவியிலேயே கால்கள் வலுவில்லாத ஒரு முடவன். பிழைப்புக்கு வேறு வழி ஏதும் இல்லாததால் ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

தினமும் காலையில் சிலர் அவனைத் தூக்கி வந்து ஆலய வாசலில் இருத்துவார்கள். மாலையில் அவனைத் தூக்கிக் கொண்டு செல்வார்கள்.

பேதுருவும், யோவானும் ஆலயத்தில் செபிப்பதற்காக உள்ளே வந்தபோது வாசலில் அமர்ந்திருந்தான் அவன்.

‘ஐயா… காலில்லாத ஏழைக்கு உதவுங்களேன்…’ அவன் பேதுருவைப் பார்த்து தர்மம் கேட்டான். பேதுருவும், யோவானும் நின்றார்கள்.

பேதுரு அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே சொன்னார் ‘என்னைப் பார்’. அவன் ஆவலுடன் அவர்களைப் பார்த்தான்.

‘உனக்குத் தர எங்களிடம் ஒன்றும் இல்லை’ பேதுரு சொல்ல, அவனுடைய முகம் வாடிப்போயிற்று. பேதுரு ஒரு வினாடி யோசித்தார். இயேசு முடவர்களுக்கோ, பிணியாளிகளுக்கோ பிச்சையிட்ட நினைவு அவருக்கு இல்லை. அவர் நலமளித்தார். ஆறுதல் அளித்தார். அன்பை அளித்தார். ஆனால் பணம் அளித்ததாய் அவருக்கு நினைவில்லை.

பேதுரு அவனை மீண்டும் உற்றுப் பார்த்தார்.

‘உனக்குத் தர பொன்னோ, வெள்ளியோ என்னிடம் இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட’ என்று கூறி அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.

சுமார் நாற்பது ஆண்டுகளாக வலுவில்லாமல் கிடந்த அவனுடைய கால்கள் சட்டென்று வலுவடைந்தன. அவனுடைய கணுக்கால்கள் நேராகின. அவன் நின்றான். வாழ்க்கையில் முதன் முறையாக அவன் இரண்டு கால்களினால் நிற்கிறான். அவன் ஆனந்தக் கூச்சலிட்டான். அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது.

‘ஏய்… இவன் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முடவன் அல்லவா ? இப்போது எப்படி நிற்கிறான் ?’

‘அவன் தானா இது ? அல்லது வேறு யாராவதா ?’

‘அவனுடைய கையைப் பிடித்து அந்த மனிதர் எழுப்பி விடுவதை நான் பார்த்தேன்’ மக்களிடையே செய்தி காட்டுத் தீ போல பரவியது.

பேதுருவையும், யோவானையும் கூட்டத்தினர் மொய்த்துக் கொண்டார்கள். இயேசுவைப் பிரிந்தபிறகும் சீடர்களால் அதிசயச் செயல்கள் செய்ய முடிகிறதே என்று மக்கள்

ஆச்சரியமடைந்தார்கள்.

‘ஏன் ஆச்சரியப் படுகிறீர்கள். அவனைக் குணமாக்கியது நாங்களல்ல, இயேசு கிறிஸ்துவின் பெயர் தான் அவரைக் குணமாக்கியது. அவர் தான் உண்மையான கடவுளின் மகன். அவரை நீங்கள் பிலாத்துவிடம் ஒப்படைத்தீர்கள். பிலாத்து விடுவிக்க விரும்பிய போது கூட நீங்கள் இயேசுவுக்கு எதிரானீர்கள். அவர் உங்களுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டார்.’

பேதுரு பேசப் பேச கூட்டத்தினர் மெளனமானார்கள்.

‘நீங்கள் அதை அறியாமையினால் தான் செய்தீர்கள். இது நடக்கவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் தான். நீங்கள் கொலை செய்த இயேசு உயிர்த்துவிட்டார். அதற்கு நாங்கள் சாட்சிகள். அவரைக் கண்டவர்கள் அனைவரும் சாட்சிகள். இனிமேலாவது மனம் மாறி இயேசுவின் வழியில் நடவுங்கள்’ பேதுரு உரத்த குரலில் மக்களை அழைத்தார்.

மக்கள் கூட்டத்தினரிடையே மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ந்தது. சுமார் ஐயாயிரம் பேர் அப்போதே இயேசுவின் வழியில் செல்லப்போவதாக வாக்களித்தனர். கிறிஸ்தவத்தின் ஆரம்பம் அங்கே ஆழமாக நடப்பட்டது.

இயேசு வாழ்ந்த போதும் அந்த முடவன் அங்கே தான் இருந்திருப்பான். அப்போது அவனை ஏன் இயேசு குணமாக்கவில்லை என எழுகின்ற கேள்விகளுக்கு விடை இப்படி வெளிப்பட்டது.  தூய ஆவியால் நிரப்பப்படும்போது நற்செய்தி அறிவிக்கும் துணிச்சலும், அதிசயங்களும் பிறக்கும் என்பதை இந்த நிகழ்வு விளக்குகிறது.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s