Posted in Mother Teresa Kaaviyam

அன்னை தெரேசா காவியம்

அன்னை தெரேசா காவியம்

 

Related image

1.

ஆகஸ்ட் 26,1910.

வரலாறு
தன் மேல் கொட்டப்பட்ட
தூசுகளைத் தட்டி விட்டு
இந்த நாளை
ஓர்
மயிலிறகால் எழுதியது.

இது தான்
அன்னை தெரசா என்று
அகில உலகமும்
அன்போடு அழைக்கும்
ஆக்னஸ்
அவனியில் அவதரித்த நாள்.

தீக்குழியில் தாமரைகள்
பூப்பதில்லை,
அவை
தடாகத்தின் ஆழத்தில் தான்
பாதங்களைப் பதிக்கும்.

விதைகள் பதர்களானால்
விளைச்சல் இருப்பதில்லை.
ஆக்னஸ்
நல்ல
நிலத்தில் விதைக்கப்பட்டவள்.

அவள் தந்தை
நிக்கோலா,
தாய் டிரான·பைல்,
இருவரும்
வாழ்வின் அடித்தளத்தை
மண்ணில் கட்டாமல்
மனித நேயத்தில் கட்டியிருந்தார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபை
அவர்களின்
பணி வாழ்வை நன்றாக
பக்குவப் படுத்தியிருந்தது.

பிறந்த
மறு நாளே ஆக்னசுக்கு
திருமுழுக்கு தரப்பட்டது.
கிறிஸ்தவ மதத்துக்குள் நுழையும்
ஆன்மீக அனுமதி அது.

லாசர்
அகதா,
இருவரும் ஆக்னஸின்
உடன்பிறந்தோர்.

ஆக்னஸின்
தந்தையோ, தாயோ,
ஏழைகள் தங்கள்
வாசல் தீண்டி வரும் வரை
காத்திருப்பதில்லை,
அவர்களின்
வீடு தேடிச் சென்று
வழங்குவதையே
வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

ஆக்னஸ்
அன்னையிடம்
தாய்ப்பாசத்தோடு
தரணிப் பாசமும் கற்றாள்,

தந்தையிடமிருந்து
பொருள்களை விட
அதிகமாய்
மதிப்பீடுகள் பெற்றாள்.

இறை நம்பிக்கையில்
இணைந்து,
நம்பிக்கை எல்லாம்
இறையில் வைத்தாள்.

குடும்பம்,
அவளுக்கு முதல் ஆலயம்.
ஆலயம்
அவளுக்கு முதல் குடும்பம்
என்றானது.

தினசரி காலை
ஆலய வழிபாடு,
அவளுக்கு
அத்தியாவசியத் தேவையானது.

குடும்பம்
அதற்குக் கூட்டு நின்றது.

தத்தித் தத்தி
நடக்கத் துவங்கியபோதே,
பகிர்தலில் பரிமளித்தாள்,
சுய நலம் எனும்
புலி நகம்
தன்னைத் தீண்ட
அவள் சம்மதம் தரவில்லை.

குடும்பம்
ஆன்கஸின் மனநிலங்களில்
வைக்கோல் வளர்க்காமல்
கதிரை மட்டுமே
கொத்துக் கொத்தாய் வளர்த்தது.

ஆக்னஸ்,
பால் பற்கள் விழும் முன்
இறைவன் பால் விழுந்தாள்.

ஆக்னஸிற்கு
ஐந்து வயது தாண்டிய பின்
ஒரு பொழுதில்
நற்கருணை வடிவில்
இயேசுவை ஏற்றுக் கொண்டாள்.

அது
அவள் மனதுக்குள்
அணை கட்டி வைத்திருந்த
ஆன்மீக ஆறுகளை எல்லாம்
மதகு திறந்து
முதுகு காட்டிப் பாய வைத்தது.

2

Image result for mother teresa youthஆக்னஸின் பெற்றோர்
பிள்ளைகளின் மனதில்
அன்பின் அஸ்திவாரத்தை
ஆழமாய்த் தோண்டினர்.

நற்செயல்கள்
விளம்பரங்களுக்கானதல்ல,
விளம்பரங்களுக்காய்
வெளி வருவது நற்செயல் அல்ல.

நீ
செய்யும் நற்செயல்
கடலில் வீசப்பட்ட கல் போல
கரைப் பார்வைக்கு
மறைந்தே இருக்கட்டும்.
கடலுக்கும் உனக்குமான
ரகசிய ஒப்பந்தமாய்
நற்செயல்கள் நிறைவேறட்டும்.

பிறரோடு பகிர்ந்து கொள்ளாத
எதையும்
நீ தனியாய்
சொந்தமாக்கக் கூடாது.

இவையெல்லாம்
அந்த
அறிவுரை அலைகள்
நிறுத்திச் சென்ற
சில துளிகள்.

ஆக்னஸின் அன்னையும் தந்தையும்
ஒற்றுமையின்
ஓடையில் நீந்திய மீன்கள்.

என்றும்
வழக்கிடும் வழக்கத்தைக்
கொண்டிருந்ததில்லை.

அவர்களின் வாழ்க்கையே
ஆக்னஸிற்கு
முன்னால் செல்லும்
விளக்குத் தூண் ஆனது.

3.

Image result for mother teresa youthஒரு முறை
ஆக்னஸின் நண்பர் கூட்டத்தில்
ஒரு
தீய சிந்தனைத் தோழி இருப்பதை
தாய் கண்டாள்.

அதை
மகளுக்குப் புரியவைக்க
அன்னை ஓர்
நடைமுறை விளக்கம் கொடுத்தாள்.

அன்னை
ஆன்னஸை அழைத்தாள்.
ஆக்னஸ் வந்தாள்
மேகம் கண்ட தோகை போல
அவள் விழிகள் விரிந்தன.

அவளுக்கு முன்னால்
ஒரு கூடை நிறைய
ஆப்பிள் பழங்கள் பளபளத்தன.

அன்னையின் கையில்
ஓர்
அழுகிய பழம்.

அன்னை அந்த அழுகிய பழத்தை
நல்ல பழங்களுக்கு நடுவே
கூடையில் வைத்தாள்.

ஆக்னஸ் குழம்பினாள்.

பூமாலையில் யாரேனும்
கருவாடு வைத்துக்
கட்டுவார்களா ?
கெட்டதைக் கீழே விட்டு விடலாமே
என்றாள்.

பரவாயில்லை.
இதை
உன் அறையில் பாதுகாத்து வை
நான்
பார்க்கச் சொல்லும் வரை
திறந்து பார்க்காதே என்றாள்.

ஆக்னஸ்
அன்னை சொல் தட்டியதில்லை.
தட்டவில்லை.

சில நாட்களுக்குப் பின்
ஆக்னஸ் அழைக்கப்பட்டாள்
கூடையை எடுத்து வா.
அன்னை சொன்னாள்.

ஆக்னஸ் எடுத்துவந்த
கூடையில்
ஆப்பிள்கள் எல்லாம்
அழுகிப் போயிருந்தன !

சில நாட்களுக்கு முன்னால்
அழகிய நிலை.
இப்போது அழுகிய நிலை.

வெளியே கொட்டு என்றாள்
அன்னை
கொட்டினாள் ஆக்னஸ்.

தாய்
மெதுவாய் பேச ஆரம்பித்தாள்.

பார்,
ஒரு கெட்டுப் போன ஆப்பிள்
ஒரு கூடை ஆப்பிளையும்
கெட்டுப் போக வைத்து விட்டது !

ஒரு கூடை
ஆப்பிள்கள் சேர்ந்து
ஒரு ஆப்பிளை
நல்ல ஆப்பிளாக்க முடியவில்லை.

இப்படித் தான்
நட்பும்.

தீய நட்பு
தூய உள்ளங்களையும்
துருப்பிடிக்க வைக்கும்
கீழ்ப்படிதலுள்ள மனங்களையும்
கீழ்த்தரமானதைச் செய்ய வைக்கும்.

எனவே
நட்பைத் தெரிந்தெடுப்பதில்
கவனம் தேவை.

ஆக்னஸின் கண்கள் விரிந்தன
உள்ளுக்குள்
அன்னை சொன்ன பாடம்
உறைத்தது.

4

ஒரு முறை
வீட்டிImage result for mother teresa youthல் அமர்ந்து
தோழிகளோடு
பேசிக் கொண்டிருந்தாள்
ஆக்னஸ்

அதில் ஒரு தோழி
அங்கில்லாத ஒருத்தியைப் பற்றி
அவதூறை
அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.

தாய் சென்று
அறையில் எரிந்துகொண்டிருந்த
விளக்கை அணைத்தாள்.

ஆக்னஸ் வியந்தாள்.
ஏனம்மா ?
எரியும் விளக்கை
அணைக்கும் அவசியம் என்ன ?
என்றாள்.

புறணி பேசும் இடத்தில்
வெளிச்சம் எதற்கு ?
குருட்டுச் செயல்களுக்கு
இருட்டே வெளிச்சம்
என்றாள். தாய்

ஆக்னஸின் பஞ்சு நெஞ்சம்
பற்றிக் கொண்டது.
இன்னொரு செய்தியைக்
கற்றுக் கொண்டது.

5.

Image result for mother teresa youthபால்ய காலம்
ஆக்னஸ¤க்கும்
நட்புகளையும், சிரிப்புகளையும்
மட்டுமே
சம்பாதித்துத் தந்தது.

பெரிய வீடும்,
வீட்டைச்சுற்றிய இயற்கையும்
அவளுக்குள்
சந்தோசத்தை ஏராளமாய்
சேகரித்து வைத்தது.

வயதுக்கு மீறாத
மழலைத்தனம் முகத்தில் மிளிர,
உள்ளுக்குள் மட்டும்
வயதுக்கு மீறிய
பக்தியும், பணிவும்.

ஆலய பாடல் குழுக்களில்
பாடினாள்,
ஆண்டவனுக்காய் பாடுவதில்
மனம் முழுதும்
ஆனந்தப் பூக்கள்
ஆனந்தமாய் முளைத்தன.

திரு இருதய ஆலயத்தில்
அவள்
ஆரம்பக் கல்வி கற்றாள்.

பள்ளிக்கூடப் பாடங்களில்
முதல் தரம் வாங்கினாள்,
கடமைகளின்
கால்களும் உடைபடாமல்
காத்துக் கொண்டாள் !.

ஊருக்குச் நல்ல பிள்ளையாய்
வீட்டுக்கு செல்லப்பிள்ளையாய்
ஆக்னஸ்
வளர்ந்தாள்.

அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில்
ஓர் ஏழை விதவை,
கூடவே
விலக்க இயலா வறுமையும்,
இருட்டில் தவழும்
ஏழு குழந்தைகளும்.

அவள் வீட்டைவிட்டு
வெளிச்சம் வெளியேறி
வெகு நாட்களாகியிருந்தது.
வறுமை
உள்புகுந்தும்
வருடங்களாகியிருந்தது.

ஆக்னஸின் தாய்
அந்த வீட்டை
தன் இரண்டாம் குடும்பமாய்
பாவித்தாள்,
ஆக்னஸோ
அவ் வீட்டிற்கு உதவுவதில்
எட்டாம் குழந்தையானாள்

பூவோடு சேர்ந்த
பூ,
இருமடங்கு வாசம் வீசியது.

ஆக்னஸிற்கு
ஒன்பது வயதான போது தான்
அவர்கள் குடும்பத்தை
ஓர்
முரட்டுப் புயல்
முட்டிக் கவிழ்த்தது.

தந்தையின்
மரணச் செய்தியின் வடிவில்.

6

Image result for mother teresa drawingsதந்தையின் மரணம்
ஆக்னஸின் பிஞ்சு மனசில்
தூக்க இயலா துயரத்தை
தூக்கி வைத்தது.

தாயின் இதயத்திலோ
அது
அதிர்ச்சிக் கூடாரத்தை
அடித்து வைத்தது.

அந்தக் கூடாரத்தை விட்டு
தாய்
வெளியேறவே
மாதங்கள் பிடித்தன.

உள்ளுக்குள் உட்கார்ந்து
அழுது கொண்டிருந்தவளை
வாழ்க்கை தான்
வலுக்கட்டாயமாய்
வெளியே இழுத்துப் போட்டது.

வந்து கொண்டிருந்த
வருமான நதி
மரணக் கரையோடு
வற்றிப் போய் விட்டது.

இது வரை தெரிந்திராத உலகம்
மெல்ல மெல்ல
தன் நக விரல்களை
நீட்டத் துவங்கியது.

நிர்ப்பந்தங்களின்
சங்கிலியில் கட்டப்பட்ட
அவள்
நிராயுதபாணியாய் நின்றாள்.

ஆனாலும்
அவளுடைய இறை விசுவாசமும்
உறுதியும்
அடுத்த பாதம் எடுத்து வைக்க
சின்னதாய் ஓர்
வெளிச்சப் பொட்டை
காலின் அருகே போட்டது.

குழந்தைகளின் முகத்தில்
கவலைகளின்
நிழல் விழக்கூடாது என்பதற்காய்
அவள்
வெளிச்சம் விளைவிக்க
ஆரம்பித்தாள்.

சுய தொழில் துவங்கினாள்.
தன்
கருணை மனதுக்குப் பின்னால்
கிடந்த
கலை மனதை தூசு தட்டினாள்.

கலாச்சார ஆடைகளை
அவள்
கைகள் பின்னத் துவங்கின,

அலங்கார
வேலைப்பாடுகள்
அவள் விரலுக்குள்ளிருந்து
வெளிவரத் துவங்கின.

பாறை,
நேரம் நெருங்கிய போது
தன் மேல் போர்த்தப்பட்டிருந்த
உதிரிகளை
உதிர்த்து விட்டு
சிற்பமாய் நிமிர்ந்தது.

கட்டாயம் ஒன்று
அவள் கட்டுகளை உடைத்து
மீண்டும்
வாழ்வுக்குள் கூட்டி வந்தது.

ஒரு மரணம்
தந்த ரணம்
மெல்ல மெல்ல அந்த வீட்டை விட்டு
விலகி,
சகஜ நிலைக்குள்
வரத் துவங்கியது.

அப்போது தான்
அடுத்த செய்தி அடியெடுத்து வைத்தது.

7

Image result for mother teresa drawings
பன்னிரண்டே வயதான
தன்
செல்ல மகள் ஆக்னஸ்
பணி வாழ்வுக்குள் செல்ல
பிரியப்பட்டாள்.

ஊருக்கு வந்திருந்த
‘ஜெஸ்யுட்’ சகோதரிகள்
தங்கள்
இறைப்பணி வாழ்வு பற்றியும்
பயணங்கள் பற்றியும்
உரையாற்றினார்கள்.

எல்லா சிறகுகளுக்கும்
தனித்தனி வானத்தை
கடவுள் விரித்துள்ளார்,
அதை
கட்டாயம் நாம் கண்டுணரவேண்டும்.

இந்த
வார்த்தைத் தூண்டில்களால்
தூண்டப்பட்டாள் ஆக்னஸ்.

உள்ளுக்குள்
உறைந்திருந்த
மனித நேயத்தின் முகம்
மெல்ல மெல்ல
மிதக்கத் துவங்கியது.

இந்தியா, ஆப்பிரிக்கா
போன்ற நாடுகளில்
சகோதரிகள் ஆற்றிய பணி
ஆக்னஸையும்
பணிசெய்யப் பணித்தது.

ராகங்கள் ஒன்று கூடி
ஓர்
புல்லாங்குழலைப் புனைந்தன.

தாயிடம் சொன்னாள்.

தாய்
ஆக்னஸை மேலும் கீழும்
பார்த்தாள்.

இன்னும் நீ
மேகமாகவில்லை,
மழையாகும் ஆசை
இப்போதெதெற்கு ?

நாட்கள் செல்லட்டும்,
நீ
இப்போது சின்ன செடி,
வேர்களை நன்றாய் வளர்த்துக் கொள்.
விதைகள் விளைவிக்க
இன்னும் பல
பருவங்களை நீ பார்க்கவேண்டும்.

உணர்ச்சிகளின் உத்தரவுகளில்
நீ இடும்
முடிவுகள் எல்லாம்
நிஜத்தின் பாரங்கள்
மோதும் போது உடைந்து விடும்.

எனவே,
இப்போது கடமையின்
கை பிடித்து நட,
இறைவனைக்
கடை பிடித்து நட.

காலம் வரும்போது
கடவுள் தீர்மானிப்பார்.

நிகழ்ந்து முடிந்தவற்றையே
நம்மால்
உணர முடிவதில்லை,
அவரோ
நிகழும் முன்னரே அதை
அகத்தில் அறிந்திருக்கிறார்.
என்றாள்

ஆக்னஸ்
ஒத்துக் கொண்டாள்.
கூடவே
உள்ளுக்குள்
பணிவாழ்வின் ஆசையையும்
உறைய விடாமல் பாதுகாத்தாள்.

தாய் மெல்ல மெல்ல
நிம்மதி மூச்சு விட்டாள்,
ஆனால்
அதற்கு ஆறாண்டு நீளமே இருந்தது!

8

Image result for mother teresa drawings
தன்னை
இறைப்பணிக்காக
அற்பணிக்கவேண்டும்
எனும் எண்ணம்
ஆக்னஸின் தராசு மனசுக்குள்
ஒவ்வொரு நாளும்
சில எடைக்கற்களை
போட்டு நகர்ந்தது.

பதினெட்டாவது வயது
தன்
கைகளைக் குலுக்கிக்
கடந்து போன ஓர் காலைப் பொழுதில்
ஆக்னஸ்
தாயிடம் மீண்டும்
தன் விருப்பத்தை வைத்தாள்.

நான்
பணி வாழ்வுக்காய்
பயணிக்கப் போகிறேன்.

கன்னியர் இல்லத்தில் சேரப் போகிறேன்.
என் பணியை
இந்தியாவில் துவங்குவேன்.
அனுமதியும்
ஆசீர்வாதமும் கொடுங்கள்.

பதுக்கி வைத்திருந்த
ஆசைகள்
ஆக்னஸின் அனுமதியோடு
அன்னை முன் விழுந்தன.

தாய் இதை
எதிர்பார்த்திருந்தாலும்
தடாலடியாய் விழுந்த
தீர்மான அனுமதிகளால்
அவளை
சோகச் சூறாவளி
சுருட்டிக் கொண்டது.

கன்னியாய் வாழப் போகிறேன்,
இந்தியாவில் தான்
இருக்கப் போகிறேன்,
என்னும் இரண்டு தீர்மானங்களும்
அவளை
அழுகைக்குள் இறக்கின.

தனியறையில் புகுந்து
தாழிட்டுக் கொண்டாள்.
மணித்துளிகள் கரைய,
மெளனம் மட்டுமே எங்கும்
தூவப்பட்டிருக்க
ஆக்னஸ்
கதவுக்கு வெளியே காத்திருந்தாள்.

அவளுக்குள்
இன்னும் அந்த உறுதி
இறுதியானதாய் இருந்தது !

இருபத்து நான்கு
மணி நேரமாயிற்று,
தாய்
தாழ் திறந்து வெளியே வர.

வந்தவள் விழிகளில்
கண்ணீரின் சுவடு இருக்கவில்லை.
தெளிவின்
தீர்க்கம் தெரிந்தது.

வழியனுப்பினாள் தாய்.
போய் வாழ், மகளே.

எது நடந்தாலும்
பின் வாங்காதே
இயேசுவோடு நட, பின் தங்காதே.

ஆக்னஸ் ஆனந்தித்தாள்.
தாய்
அதிசயித்தாள்.

பாடுகள் படப் போவதை
பூக்களைப் பெறுவது போல
புன்னகைத்துக் கொண்டே
தவமிருந்து தேடுகிறாளே
தன் மகள் ?

ஆக்னஸ¤க்கோ,
பணி செய்வதே
புன்னகை தருவதாய் இருந்தது.
புன்னகை கொடுப்பதே
பணியாய் இருந்தது !.

0

ஆக்னஸின் சகோதரர்
சந்தேகத்தோடு கேட்டார்,
நீ
உண்மையாகவே
இறைப்பணிக்காய் செல்கிறாயா ?

சரிவரத் தெரிந்து கொள்ளாத
பாதை
சரிவுக்கு வழிவகுக்கும்.

ஆக்னஸ்
பட்டென்று பதில் எழுதினாள்.

அண்ணா,
நீ
பணிசெய்யும் அரசனுக்கோ
இருபது இலட்சம் மக்கள்
எனும்
எண்ணிக்கைக் கணக்கு.

நான் நேசிக்கும்
அரசருக்கோ
அவர் நிர்ணயிப்பதே இலக்கு.

9

Image result for mother teresa drawings
ஆக்னஸின் வழிகள்
அவளால் ஏற்கனவே
முடிவு செய்யப்பட்டிருந்தன.
“லோரிடோ”
கன்னியர் இல்லத்தில்
இணைந்து,
இந்தியாவில் சென்று பணியாற்றுதல்.

ஆயரிடம் பேசினாள்,
கன்னியரிடம் பேசினாள்.
தனக்குள் வாழும்
இறைவனிடம் பேசினாள்.

புறப்படும் நாளும் வந்தது.

“ஸ்கோபே” என்ற
தன் ஊரை விட்டு,
செப்டம்பர் 26,1928 ல்
பயணம் துவங்கினாள்.

ஒரு புதிய பயணம்,
எதுவும் கூட இல்லை
இறைவனும்
பணி செய்ய வேண்டும் என்னும்
இதயமும் தவிர.

அன்று
இரயில் நிலையம் முழுதும்
உறவினர், நண்பர், தாய்
என
வழியனுப்பல் கூட்டம்
கைக்குட்டைகளோடு வந்திருந்தது.

செடியை விட்டு
குருவி பறந்தாலே
கவலைப்படும் குடும்பம் அது.
கிளையே
ஒடிந்தது போல கவலைப்பட்டது.

அழக்கூடாது
என்று
நாள் கணக்காய் முடிவெடுத்திருந்த
முடிவுகள் எல்லாம்
இரயில் நிலையத்தில்,
பாறையில் விழுந்த
படிகச் சிமிழாய் உடைந்தன.

சகோதரன் கண்களில்
வரப்பை மீற
காத்துக் கொண்டிருந்தது
கலப்படமில்லாத கண்ணீர்.

தாயின் இதயமோ
இரண்டாவது இழப்பென
கதறித் துடித்தது.
ஆனாலும்
ஆண்டவனுக்காய் என்பதால்
ஆறுதல் பரிசாய்
ஆனந்தமும் இருந்தது.

ஆக்னஸ்
புறப்படும் இரயில் வந்தது.

அவள்
இரயிலின் உள்ளே செல்ல
அத்தனை கண்களும்
அதுவரை
நிறுத்தி வைத்திருந்த
கண்ணீரின் கதவை
இமைகள் திறந்து விட்டன.

கண்காணா பூமியில்
இந்தப் பூ
எப்படி வாழப் போகிறதோ ?

உள்ளத்து உறுதியில்
பாதி கூட
உடலில் இல்லையே,

தெப்ப வாழ்வையே தாங்க முடியா
தாமரை
வெப்ப நிலத்தில் எப்படி
வாழப் போகிறதோ ?
என
தாய் விடாமல் வருந்தினாள்.

இரயில் மெல்ல மெல்ல
நகரத் துவங்கியது.
ஆக்னஸின் உதடுகளிலும்
உப்புக் கரித்தது.

கைகள்
இரயிலுக்கு வெளியே நீண்டு
பிரியா விடை கையசைத்தலை
துவங்கின.

இரயில் நகர்ந்து கொண்டிருந்தது.
இரயிலின் நீளம்
மறையும் வரை
சன்னலுக்கு வெளியே
ஆக்னஸின் கைகள்
அசைந்து கொண்டே இருந்தன.

அது தான்
தாய்
தன் மகளை
கடைசியாய் கண்ட வினாடி.

10

Image result for mother teresa drawings
அந்த பயணம்
மிகவும் நீளமானது.

அயர்லாண்ட் சென்று
மூன்று மாதம் தங்கி
ஆங்கிலம் கற்று விட்டு
இந்தியா செல்வதாய் ஏற்பாடு.

பயணத்தில்
தனிமையின் வெறுமை
மனதை பிசைந்தது
வழியெங்கும் தாயின்
வழியனுப்பல் கண்ணீர்
விழிகளுக்குள் எரிந்து கொண்டே
இருந்தது.

ஆனாலும்
ஆக்னஸின் இதயம்
இரயிலைப் போல
தடம் மாறாமல் தொடர்ந்தது.

டப்லின்
என்னுமிடத்திலுள்ள
கன்னியர் இல்லத்தில்
இந்தியா போவதற்கான கன்னியர்
காத்திருந்தனர்.

ஆக்னஸ¤ம்
அந்தக் கூட்டத்தில் இணைந்தாள்.

மூன்று மாதங்கள்
அங்கே அவளுக்கும்
பயிற்சிகள் நடந்தன.

அங்கே தான்
ஆக்னஸ்
தெரசா என்னும் புதுப் பெயரை
தத்தெடுத்து சொந்தமாக்கினாள்.

பதினாறாம் நூற்றாண்டில்
வாழ்ந்த
புனித தெரசா என்னும்
கன்னியரின் நினைவாக.

டிசம்பர் 1,1928
தெரசாவின்
இந்தியாவை நோக்கிய
பயணம் துவங்கியது.
ஜனவரி 6,1929
அந்த
சமாதானப் புறாவை
கல்கத்தாவுக்குள்
கால் பதிக்க வைத்தது !.

11

Image result for mother teresa drawings
ஜனவரியில்
கல்கத்தா வந்த
வெள்ளைக் குயிலுக்கு
மேய் மாதம்
டார்ஜிலிங் மடத்தில் வைத்து
இறை பயிற்சி ஆரம்பமானது.

தெரசா
உள்ளுக்குள் ஏராளம்
ஆன்மீகப் பூக்களை
அறிமுகம் பெற்றாள்.

செபமும்,
பாடல்களும்
இறை சன்னிதியும்
மறைக் கல்வியும்
அவளை
கவலை இல்லா தேசத்துக்கு
கப்பலேற்றி வைத்தது.

ஓர்
புது வித அனுபவத்தின்
பொது விளக்கமாய் நின்றாள்.

கிடைத்த நேரங்களிலெல்லாம்
விவிலியம் வாசித்தாள்.
ஆலயத்துள் இருப்பதில்
ஆனந்தம் கொண்டாள்.

புனிதர்களைப் படித்தாள்,
நல்ல மனிதனாவதே
புனிதனாவதன் முதல் படி
என்பதை
புனிதர் வாழ்க்கை அவளுக்கு
படம் போட்டுக் காட்டியது.

முதலாண்டுப் பயிற்சி
இவ்வாறு
இனிமைப் பொழுதுகளோடு
முடிந்தது.

இரண்டாவது ஆண்டுப் பணி
தெரசாவுக்கு
ஏழைகளோடும்
நோயாளிகளோடும்
பணி செய்யும் பக்குவத்தை
படிப்பித்தது.

தெரசாவை
இல்லத்தில் இருந்த
அத்தனை கன்னியரும் நேசித்தனர்.

வாசனை கரைத்த
காற்றுக்கு எதிராய்
எந்த நுரையீரல் தான்
திரை போடக் கூடும் ?

தெரசாவின் உதடுகள்
புன்னகைக் காடுகள்.
அவை
ஒருபோதும்
காய்ந்து போகவில்லை.

வாழ்வில் பணி செய்வோர்
மத்தியில்,
பணி செய்வதையே
வாழ்வாய் கொண்டிருந்தாள்
அவள்.

பயிற்சிக் காலம் முடிந்தபின்
நிஜங்களின் சாலை
அவளை
ஓர் மருத்துவ மனையில் நிறுத்தியது.

முதல் பணி.
மருத்துவ செவிலி !

தெரசா மகிழ்ந்தாள்.
நோயாளிகளை நேசித்தாள்.
அவர்களின்
கதறல் கதைகள் கேட்டாள்
ஆறுதல் தோள் கொடுத்தாள்.

சின்ன வயதில்
தாயோடு பணியாற்றிய
தருணங்களை
அவை நினைவுக்குள் உருட்டின.

நோயாளிகளின்
கண்களில் தேங்கிக் கிடந்த
உப்பு நீரில்
கடவுளே மூழ்குவதாய் தெரிந்தது
அவளுக்கு.

அந்த
கண்ணீர் துடைப்பதே
கரங்களின்
பணியெனக் கண்டாள்.

அந்தப் பணி
தெரசாவுக்குள்
சொல்ல முடியா சாந்தியை
நிறைத்தது.

ஆனால்
தெரசாவுக்குப் பிடித்த
அந்தப் பணி
பாதியிலேயே நிறுத்தப்பட்டது !

12

Image result for mother teresa drawingsகன்னியர் இல்ல அன்னையின்
ஆணையின் பேரில்
தெரசா
கல்கத்தா கன்னியர் இல்லத்தில்
மீண்டும் கரை ஒதுங்கினாள்.

வாழ்க்கை மாற்றங்கள்
தெரசாவை
விரக்திப் படுத்தவில்லை.
“இறைவன் சித்தம்” என்னும்
ஒற்றை வார்த்தைக்குள்
ஆறுதல் பானம் அருந்தினாள்.

கல்கத்தாவில்
அவளுக்காய் காத்திருந்ததோ
புனித மேரி கல்லூரியின்
ஆசிரியர் பதவி.

மேலிட உத்தரவுகளை
தெரசா தட்டவில்லை,
இட்ட பணியை
ஒத்துக் கொண்டாள்.

1937, மேய் மாதம்
தெரசா
வாழ்வில் ஓர் மைல் கல்.
அப்போது தான் அவள்
கன்னியர் பட்டத்தை
பெற்றுக் கொண்டாள்.

பள்ளிக் கூடத்தின்
இருக்கைகளில் இருந்தாலும்
தெரசாவின்
சிந்தனைகள் எல்லாம்
வீதிகளிலேயே விழுந்து கிடந்தன.

பூமியில் மாற்றம்
ஏற்படுத்த நினைத்தவளுக்கு
பூமியின் மாற்றங்கள்
குறித்து பாடம் எடுப்பது
உள்ளுக்குள் உறுத்தலாகவே
இருந்தது.

ஆனாலும்
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
சேரிகளில் சுற்றினாள்,
ஏழைகளை சந்தித்தாள்
நோயாளிகளோடு அருகிருந்தாள்.

இருக்கும் காசையெல்லாம்
வறுமை கரங்களில்
வைத்து விட்டுத் தான்
இல்லம் திரும்புவாள் தெரசா.

1944 ம் ஆண்டு
புனித மேரி பள்ளி,
தெரசாவை
பள்ளி முதல்வராய்
பணி மாற்றியது !

வாழ்க்கை மாற்றங்கள்
தனக்குள்
நிற மாற்றங்கள் நிகழ்த்தினாலும்
தெரசாவுக்குள்
நிலைமாற்றம் நேரவில்லை.

தாய்க்கு அவ்வப்போது
தகவல்கள் அனுப்பினாள்.
கூடவே குடியிருக்கும்
நேசத்தையும் அனுப்பினாள்.

மகிழ்ச்சி கொள் தாயே
இதோ
உன் மகள்
இயேசுவில் இன்புற்றிருக்கிறாள்.

தாயும் பதில் அனுப்புவாள்
பார்க்க முடியவில்லையே
எனும்
புலம்பல்களை அல்ல.
பாதை தவறாதிரு என்னும்
பலமான வார்த்தைகளை.

தெரசா
ஆசிரியர் பணியை
அழகாய் செய்து வந்த போதும்
அவளுடைய
ஆழ்மனதுக்குள் ஆண்டவர்
வேறு விதமாய் பேசினார்.

போ,
பணிசெய்.
உன் பணி அறைகளில் அல்ல
அறைகளே இல்லாமல்
தெருக்களில் அலைபவர்களில்.

போ
அங்கே போய் பணி செய்.

நாளுக்கு நாள்
உள்ளுக்குள் உருவான
அந்த வார்த்தைகளுக்கு
நாவுகள் நீளமாயின
தெரசாவின்
காதுகள் கூர்மையாயின.

13

Image result for mother teresa drawings
கல்கத்தா தெருக்களின்
கண்ணீர் வாழ்க்கை
தெரசாவின் இதயத்தில்
ஓர்
அதிர்ச்சிப் புயலை
ஆரம்பித்து வைத்தது.

நிர்வாணத்தை மட்டுமே
உடுத்தி நடக்கும்,
புழுதிப் பூக்களாக
பாலகர்கள்.

மரணமும் ஜனனமும்
அரையடி இடைவேளையில்
தினசரி நடக்கும்
சாதாரண சங்கதிகளாக.

பிய்த்தெறியப்பட்ட
பிச்சிப் பூக்களாக
வீதி ஓரங்களில்
அனாதை மழலைகள்.

சாவுக்கும்
வயிற்றுக்குமிடையே
நடக்கும்
மாரத்தான் ஓட்டத்தில்
ஓடி ஓடி
இரைத்துப்போன மூச்சுகள்.

என,
தெரசாவின் கண்களுக்குள்
ஓர்
அதிர்ச்சி மாநாட்டை
நடத்திக் காட்டியது
அந்த வீதி.

இது வரை கேட்டிராத
சேதிகளைச் சொன்னது
சேரி.

ஒரு நாளைய
பார்வையாளனுக்கே
பாராங்கல் பாரம் எனில்
ஜனனம் முதல்
சுமப்பவனுக்கு ?

தெரசாவின்
சிந்தனைக் கானகத்தில்
பல
சிற்றோடைகள் முளைத்தன.

நான் செய்வது
சரியா ?

ஆலயத்தின் விழிமூடி
பழுதில்லா பொழுதுகளோடு
புகழ் பாக்களில்
கழ்¢வது சரியா ?

இது மட்டும் தான்
என் பணியா ?
இறையழைத்தல் இதுதானா ?

அத்தனை சேரிகளையும்
ஒரே இரவில்
மாளிகையாக்க முடிந்தால்….
எனும்
வண்ணக் கனவுகளை
தெரசா காணவில்லை.

முடிந்தவரை கையை
நீட்டுவோம்,
ஒரு துளியில்
அன்பின் அருவியை
ஆரம்பித்து வைப்போம்.
என்றே கருதினாள்.

ஆனாலும்
தெரசாவின் கனவுகளை
எந்த அதிகாலையும் வந்து
முடித்து வைக்கவில்லை.

இரவுக்குள் இமையிறக்கி
அவை
கனவுகளாகவே கிடந்தன.

14

Image result for mother teresa drawings1946, செப்டம்பர் 9 !

இரயில் வண்டி
தன் இரும்புச் சக்கரங்களை
தண்டவாள முகங்களில்
தயவின்றித் தேய்தபடி
ஓடிக்கொண்டிருந்தது.
உள்ளே தெரசா.

தெரசாவின்
ஆன்மீக சன்னலில்
புதிய சூரியன் உதித்தது.
உள்ளுக்குள்
இறைவனின் குரல் ஒலித்தது
ஏழைகளுக்காய் பணி செய்.

டார்ஜிலிங் நோக்கிய பயணம்.

தடதடத்த இரயிலுக்குள்
படபடத்தது தெரசாவின் இதயம்.

தெரசாவுக்குள்
குரல் ஒலித்ததும்
ஏராளமாய்க் குழம்பினாள்.

நான் செய்வது பணி தானே ?
கன்னியர் இல்லத்திலே
கல்விப் பணி செய்கிறேன்.

வேறென்ன செய்து விட முடியும்
நான் ?
இந்த
வலுவற்ற, பொருளற்ற நான் ?

தான் கேட்டது
ஏதோ பிரம்மையின்
வார்த்தை வடிவமாய் இருக்கலாம்.
அல்லது
எப்போதோ சிந்தித்தவற்றின்
சொல்வடிவமாக இருக்கலாம்
ஆனாலும்
உடனே முழங்கால் படியிட்டாள்

தன் பணி என்ன
என
தெளிவாய்ச் சொல்ல
இயேசுவை இறைஞ்சினாள்.

எட்டு நாட்கள்
இறைவன் தெரசாவோடு பேசினார்
செபத்துக்குள்
மூழ்கிப் போன தெரசா
தன்னைச் சுற்றிய உலகம்
மங்கலாகிப் போல

உள்ளுக்குள் ஓர் உலகம்
பிரகாசமாய் விரிய
காட்சி ஒன்றைக் கண்டாள்.

சிலுவையில் இயேசு,
சிலுவைக்கு அருகிலே அன்னை மரி.
அன்னை மரியின்
வலக்கரம்
தெரசாவின் வலக்கரத்தையும்
இடக்கரம்
தெரசாவின் தோ¨ளையும்
தொட்டுக் கொண்டிருக்கின்றன.

சிலுவை இயேசு
சிரமத்தோடு பேசினார் .

நீ
என் பிரியத்துக்குரியவள்.
என்னைத் தேடி
இந்தியா வரை வந்த நீ
இன்னும்
ஓரடி எடுத்துவைக்க தயங்குவதேன்.

உன்
பாதுகாப்பு பறிபோய்விடுமே
எனும் பதட்டமா ?

நீ
துயரப்படுவாய் என்னும்
தயக்கமா ?

நீ
செய்யும் பணிக்காய்
இன்னும் பலர் கிடைப்பார்கள்.

உன்னை நான்
யாரும் செய்யாத பணிக்காய்
தேர்ந்து கொண்டேன்.
காலை, மாலை தெரியாமல்
வேலை என்பதும் அறியாமல்
சாலையிலே
என் மக்கள் கிடக்கிறார்களே.

அவர்களுக்கு
நான் யாரென்பது தெரியாது.
அதனால் அவர்கள்
அனுமதிப்பதில்லை.
நீ போ
உன் பணிகளால் புரிய வை.

போ…
ஏழைகளுக்குள் வாழும்
பரம ஏழைகளுக்காய் போ.
அதுவே
எனக்குப் பிடித்தமான
தினசரி செபம் !.

அவர்களுக்காய்
உன்னை அனுப்புகிறேன்.
உன்
பலவீனத்தில் என் பலத்தை
புகுத்துவேன்.

நீ
என் நேசத்துக்குரியவள்
என்
விருப்பத்தை நிராகரிக்காதே.
போ….

நீ
என்னில் நிலைத்திருப்பாய்.

உன் தயக்கங்கள்
நீ
உன்னை எவ்வவு நேசிக்கிறாய்
என்பதை நிறுக்கும்
தராசுகள்.

உன் தயக்கங்கள்
உன்னை
என்னிலிருந்து அகற்றத் துடிக்கும்
பிசாசுகள்.

இந்த வார்த்தைகளே
தெரசாவுக்குள் தெளிவாய் கேட்டன
மீண்டும்
மீண்டும்… மீண்டும்….

தெரசா முடிவெடுத்தாள்.
காலை எடுத்து
சாலையில் வைக்க !

ஒத்துக் கொள்கிறேன் ஆண்டவரே
என்னை
ஒடுக்கப்பட்டோருக்காய்
ஒப்படைக்கிறேன்.

தெரசா குரலுயர்த்திச் சொன்னதும்
தெளிவாய் தெரிந்த காட்சி
கலைந்து போயிற்று.

அதன் பின்
தெரசா காட்சி எதையும் காணவில்லை.

15

Image result for mother teresa drawingsஇறுதியில்
தெரசா முடிவு செய்தாள்.
தன் பணி
பாதுகாப்பாய் இருப்பதல்ல
பாதுகாப்புக்காய் இருப்பது.

தன் முடிவை
அயர்லாந்த்-ல்
லாரிடோ கன்னியர் இல்ல
தலைமை கன்னியரிடம்
கடிதத்தில் தெரிவித்தாள்.

என் பணி
ஏழைகளின் ஏழையரை
சார்ந்தது,
அதற்காய் நான் போக வேண்டும்.

கன்னியர் இல்லம் விட்டு
தனியே போய்
பணி செய்ய வேண்டும்.

தலைமைத் தாய் அதிசயித்தாள்.
வயலில் கூட
புயல் மையம் கொள்ளுமா ?
என
புருவப் பிடரி சிலிர்த்தாள்

ஆனாலும் தடுக்கவில்லை.
கொடுக்கும் மனநிலையை
கொடுக்குக் கால்களால்
கொட்டித் துரத்தவில்லை.

இறைவனின் அழைப்பு
உள்ளுக்குள் நிகழ்ந்தால்
நான்
கண்டிப்பாய் வழியனுப்புவேன்.

சமுதாயப் பணி
கருங்கல் குவியலில் நடப்பது போல
கடினமானது !

அதுவும் பெண்கள் என்றால்
அதே பாதையில்
இரவில் நடப்பது போல
இரட்டைக் கடினமானது !

கவனமாய் கால்வை.
கால்வைத்த பின்பும் கவனி !

எங்கள் இதயங்களில் நீ
எப்போதும் இருப்பாய்,
தேவைகள் வந்தால் தயங்காமல்
இல்லக் கதவைத் தட்டு.

மறுபரிசீலனை செய்தால்
மீண்டும் வா
எங்களிடமே.

என் அனுமதி தந்துவிட்டேன்
இனிமேல்
ரோம் -அனுமதிக்க வேண்டும்.

வாழ்த்துக்களோடு
வந்த கடிதம்
தெரசாவை நிமிர்த்தியது.

அடுத்த கட்டமாக
அனுமதி மனு
ஆயரின் பார்வைக்கு வந்தது.

16

Image result for mother teresa drawings
கத்தோலிக்கத் திருச்சபை
தெரசாவின் விருப்பங்களை
வாசலில் வந்து
வரவேற்றுச் செல்லவில்லை.

கத்தோலிக்க மதம்
எப்போதுமே
மீறல்களை மறுதலிக்கும்.
இல்லையேல்
தீவிரமாய் பரிசீலிக்கும்.

அதன் வேர் அப்படி
சுமார்
இரண்டாயிரம்
ஆண்டுகளின் ஆழத்தில் கிடக்கிறது
அதன் வேர்.

தெரசாவின்
விண்ணப்பத்தையும்
முதலில் அது மறுதலித்தது.

பின்பு அதை
பரிசோதனைச் சாலைக்கு
மாற்றி வைத்தது.

தெரசாவுக்கோ
உள்ளுக்குள்
சொல்லாமல்
சிலுவைகள் முளைத்தன.

அனுமதி கிடைக்குமா ?
தனியே போய்
தரையோடு தவழ
கத்தோலிக்கத் திருச்சபை
கதவு திறக்குமா ?
இல்லை கண்டிக்குமா ?

தெரசாவின்
நித்திரைகளிலெல்லாம்
இயேசு
ஏழைச் சிறுவர்களாய்
தெரிந்தார்.

தெருவோரத்தில்
மரண வேதனையில் முனகினார்.

திருச்சபையோ
தெரசாவின் மனுவை
இன்னும்
மதிப்பீடு செய்து கொண்டிருந்தது.

தெரசாவின் சிந்தனைகளை
வந்தனை செய்கிறேன்,
ஆனால்
ஒரு பெண்ணால் இது
சாத்தியமாகுமா ?

சாலைகளின் வரைபடதே
தெரியாது
இந்த சமுதாயத்தின்
வரைபடம் தெரியுமா இந்த
அயல் தேசப் பெண்ணுக்கு ?

தனியே அனுப்புதல்
உசிதமா ?

வேறு கலாச்சாரத்தில்
வேர்விட்ட செடி இது.
இந்திய பூமியில்
இந்த அன்னிய பூ
வாடாமல் சமாளிக்குமா ?

சந்தேகக் கேள்விகளை எல்லாம்
தெரசாவின் உறுதி
உடைத்துத் தள்ளியது.
மேலிடத்தின் புருவங்களை
நெற்றிக்கு
வெளியே உயர வைத்தது.

அந்த உறுதி
ஒப்பந்தப் படிவத்துக்கு
உதவியது.

திருச்சபை அனுமதித்தது.
அன்பின் பணிகளை
எப்போதுமே அது
அடக்கிப் பார்க்க
ஆசைப்பட்டதில்லை.

பாதுகாப்பை நினைத்து
பயந்தது,
உறுதியின் வெளிச்சத்தில்
ஒப்புக் கொண்டது.

தெரசா
திருச்சபையில் தொடர்ந்து கொண்டே
தனிச்சபை ஒன்றை
பணிக்காய் துவங்கலாம் என
அனுமதி வழங்கியது.

தெரசா மகிழ்ந்தாள்.
வழிகாட்டும் தன் வாழ்க்கை
இலட்சியத்துக்கு
வழிமொழிந்த திருச்சபைக்கு
நன்றி மேல் நன்றி சொன்னாள்.

17

Image result for mother teresa drawings
இல்லத்திலிருந்து
வெளியேறிய தெரசாவுக்கு முன்
தெரு தான் இருந்தது.

தலைக்கும்
வானத்துக்கும் இடையே
வேறு கூரை
முளைத்திருக்கவில்லை.

பூமிக்கும்
பாதத்துக்கும் இடையே
செயற்கைத் தரை
செய்யப்படவில்லை.

மடத்தை விட்டு
மண்ணுக்கு வந்த தெரசா,
மலையைப் புரட்ட வந்த
முயலாய் உணர்ந்தார்.

கத்திகள் பற்றி கற்றுக் கொள்ளாமல்
அறுவை சிகிச்சை
அறைக்குள் நுழைந்தது போல
ஓர் உணர்வு.

மலைபோன்ற புரியாமைகள்
தெரசாவைச் சுற்றி
வேலிகளை நட்டன
குழிகளை வெட்டின

தரையில் நடக்க
ஆசைப்பட்ட நிலவு
வீதிக்கு வந்ததும்
வியர்க்கத் துவங்கியது.

எங்கே துவங்குவது ?
எப்படித் துவங்குவது ?

தெரசா வருந்தவில்லை.
ஆண்டவனோடு இருந்ததால்
சிங்கத்தின் மீதிருக்கும்
சிற்றெறும்பாய் உணர்ந்தாள்.

எந்தத் தடையும்
தடையின்றி உடையும் என்பதை
உறுதியாய் நம்பினாள்.

கடவுளின் சித்தம் இல்லையேல்
பூமியில் மிச்சம் இல்லை.
என்பதை
தெரிந்து வைத்திருந்தார்
தெரசா.

விளங்காத கேள்விகளுக்கு
விடையாக
உள்ளத்தில் இயேசு
விளக்கோடு நின்றிருந்தார்.

தெரசாவின் பணி
இருக்கையை விட்டிறங்கி
தெருவுக்குள் நுழைந்தது.

18

Image result for mother teresa drawingsவலிகளிலேயே
வலிமையான வலி
நிராகரிக்கப்பட்ட நிலையே.

ஒரு கருணைப் பார்வை
ஒரு ஆறுதல் வார்த்தை
ஒரு தோழமை அருகாமை

வேறென்ன வேண்டும்
இந்த
மானிட உணர்வுகளுக்கு ?

பணி என்றாலே
அது பொருளாதாரம் சார்ந்தது
என்பதை
வரலாற்றில் திருத்தியவள்
தெரசா.

காசுகளை வீசுதல்
கருணையல்ல,
நேசத்தைப் பூசுதலே
கருணை.

இருப்பதில்
சில பருக்கைகளை
விரல் தொடா தூரத்திலிருந்து
விட்டெறிந்து விட்டு
தொலைந்து போவதை விட,
கூடவே கொஞ்சம்
கருணையும் கலந்து
விரல் தொடு என்றாள் தெரசா.

சேரிக்குச் சென்றாள்.

சேரிப் பெண்களின்
சேலைத் தரத்தில் ஓர்
சேலை அணிந்தாள்.

வெண்மையும் நீலமும் கலந்த
தூய்மை ஆடை.

பலர் கேலியாக
பார்த்தனர்,
சிலர் கேள்வியோடு
பார்த்தனர்
சேரி
அவளை அன்னையாய் பார்த்தது.

தனக்கு ஏதும்
தெரியாதே என்று
அன்னை உணர்ந்தது அப்போது தான்.

19

Image result for mother teresa drawingsமருத்துவம் கற்றால்
பணி இன்னும் பரவலாகுமே
என
பாட்னா பயணமானார்
கன்னியர் நடத்தும் மருத்துவமனைக்கு.

வேகமும், தாகமும்
தெரசாவைத் துரத்த,
ஓராண்டுக்கான கல்வி
நான்கே மாதங்களில்
மனதில் குடியேறிற்று.

0
சேரிக்குத் திரும்பிய அன்னை
சேரியிலேயே
ஓர்
குடிசை வீட்டில் குடியேறினார்.

அது
தென்றல் காற்று பட்டாலே
தடுமாறுவதாய் இருந்தது.
மாதம்
ஐந்து ரூபாய் வாடகை.

0

உடல் என்பது
உனக்குச் சொந்தமானதல்ல,
அது
இறைவனின் ஆலயம்.
அங்கே
புழுதிகளைப் பூட்டாதே
என்பாள் அன்னை.

சாதம் சமைத்து
அதிலே
ஊப்புத் தெளித்து
உண்டு வந்தது பட்டினிக் கூட்டம்.

அன்னையும்
அப்படியே உண்டாள்.
வாடத் துவங்கினாள்.

கன்னியர் இல்ல சகோதரிகள்
அவளை அழைத்தனர்.

வாடிப் போன பயிர்களுக்கு
கொழுகொம்பு நீ
நீயே தரையில் சாய்ந்தால்
பணி
பாதிக்கப் படும் அல்லவா ?

அன்னை யோசித்தாள்.
சேவை செய்யப் போதுமான அளவு
சாப்பிட ஒப்புக் கொண்டாள்.
கன்னியர் கண்கலங்கினர்
தெரசாவுக்காய்,
தெரசா கலங்கினாள் மக்களுக்காய்.

20

Image result for mother teresa drawingsதெரசா
வங்காள மொழி
கற்று வைத்திருந்தாள்.

அந்த பாடம்
அந்த
சின்னக் குடிசைக்கருகில்
பாலர்களுக்கு பரிமாறப்பட்டது.

தெரசாவின்
பள்ளிக் கூடம் அதுவாயிற்று
அந்த வெள்ளைக் குயில்
இந்திய தேச மொழியில்
சாதகம் செய்யத் துவங்கியது.

தெரசாவின்
குடிசைப் பள்ளியை
ஆரம்பித்து வைத்தார்கள்
ஐந்து மாணவர்கள்.

சில மாதங்களுக்கு முன்
கூப்பிடு தூரத்திலிருந்த
பள்ளியின் முதல்வர்
இப்போது
குடிசையில் தவழ்ந்து
எழுத்தறிவிக்கிறார்.

மேஜைகளோ, இருக்கைகளோ
இருக்கவில்லை,
அழுக்குத் தரையில் ஆங்காங்கே
கரப்பான் பூச்சிகள்
கவனித்துக் கொண்டிருந்தன.

எலிகள் அவ்வப்போது
எட்டிப் பார்த்து
நாட்டியமாடிப் போயின.

கல்கத்தா வெயில்
எரிமலை உருக்கி
அந்த
பனிமலை மேல் கொட்டியது.

நேற்று வரை
படுக்கை இருந்தது.
மின் விசிறிகள் இருந்தன
கொசுக்களும் நுழையாத
வலைகள் இருந்தன.
இப்போது எதுவுமே இருக்கவில்லை

திடீரென்று
சொர்க்கத்தின் சன்னல் வழியே
நரகத்துக்குள்
நழுவி விழுந்து விட்ட அவஸ்தை.

ஆனாலும்
ஆனந்தம் இருந்தது.

நான் பசியாய் இருக்கிறேன்
உணவளி
என்று
இயேசு சொன்னது
இதயத்தில் எதிரொலித்தது.

தான் துன்பப்படுபதாய்
தோன்றவில்லை தெரசாவுக்கு
அதுவே அன்னையின்
தூய பணியின் அடையாளம்

0

ஐந்து சிறுவர்களோடு
அன்னை துவங்கிய பள்ளி
இரண்டு நாளுக்குப் பின்
இருபத்தைந்தானது
ஆண்டு இறுதியில்
நாற்பத்தொன்றானது !

21

Image result for mother teresa drawingsபள்ளிக்கு வந்த
சேரிச் சிறுவர், சிறுமியர்
சுத்தம் என்பதை
கற்றிருக்கவில்லை.

தெரசா
அவர்களை குளிப்பாட்டினாள்.
அவர்களுக்கு
கல்வியோடு தூய்மையையும்
கற்றுக் கொடுத்தாள்.

அன்பு, பரிவு
என போதுமான துளைகள் இட்டு
அவர்களைப்
புல்லாங்குழல் ஆக்கினாள்.

காலம் கொஞ்சம் கடந்தபின்
தெரசாவின் பள்ளி
ஓர்
சின்ன கட்டிடத்துக்கு
இடம் மாறியது !

0

கல்வி சொல்லும்
நேரம் முடிந்ததும்
அன்னை
தெருவோர மக்களை சந்தித்தாள்
குருடர்ளிடம்
நேசத்தோடு பேசினாள்
தொழுநோயாளிகளை தொட்டு
தூய்மைப் படுத்தினாள்,
குப்பைக் கூடை
மனிதர்களை கரங்களில் ஏந்தினாள்.

நிமிர்ந்து நிற்கத்
திரணியற்ற அத்தனை ஜீவன்களும்
அன்னையிடம்
ஈனக் குரலில்
ஒன்றை மட்டும் கேட்டன.

ஏதேனும் எனக்கு
தின்னத் தருவாயா ?

6

தெரசாவின் பணிகள்
புன்னகையில் துவங்கி
புன்னகையில் முடிந்தன.

கன்னியர் இல்லப் பணிகள்
தெரசாவுக்கு
பாதுகாப்பான,
இறை புகழ்ச்சிக்கான
இல்லமாய் இருந்தது.

ஆனால்,
தன் இறையழைப்பின்
உள்ளே உலவிய
தனி அழைத்தலுக்கு மட்டும்
தலையசைக்க முடியவில்லை.

அது தான்
தெரசாவை
தனியே வெளியேற வைத்தது.

தன் பணிக்கு
மிஷனரிஸ் ஆப் சாரிடி
என்று பெயரிட்டழைத்தாள்.

ஏழைகளில் ஏழைகளுக்காய்
அதை
இதயபூர்வமாய் ஏற்படுத்தினாள்.

முதல்க் கட்டமாக
வறியவரைச் சந்தித்தாள்
அருகிருந்து உரையாடினாள்.

பலராலும் வீசி எறியப்பட்ட
பரிதாபக் காசுகளை விட
அருகிருந்து பேசிய
தெரசாவில்
பரிவின் பேச்சுகள்
மனதின் வறுமையைக் கழுவின.

நோயாளிகளை சந்தித்தாள்
அவர்களுக்கு
நம்பிக்கையையும்
இறை அன்பையும்
அறிமுகம் செய்தாள்.

தின
மருந்துகளை மட்டுமே
தெரிந்து வைத்திருதவர்களுக்கு
மனம்
திருந்துதல் பற்றியும்
விளக்கங்கள் கொடுத்தாள்.

ஒரு இந்து
நல்ல
இந்துவாக மாற வேண்டுமென்றும்

ஒரு இஸ்லாமியர்
சிறந்த
இஸ்லாமியர் ஆகவேண்டும் என்றும்,

ஒரு கிறிஸ்தவன்
நல்ல
கிறிஸ்தவன் ஆகவேண்டும் என்றும்

புது
மனிதக் கொள்கையை
மனதினில் கொண்டிருந்தாள்
அந்த
நல்ல கிறிஸ்தவப் பெண்.

பகலின் சாலைகள்
அந்த
வெள்ளைப் புறாவை
வித்தியாசமாய் பார்த்தன.

22

Image result for mother teresa drawings1950 ம் ஆண்டு
தெரசாவின்
மிஷனரீஸ் ஆப் சாரிட்டி-எனும்
தெருச் சபைக்கு
திருச்சபையின் அங்கீகாரம்
தரப்பட்டது.

அந்தச் சபைப் பணியாளர்க்கு
வழக்கமான
மூன்று உறுதிமொழிகளோடு
நான்காவதாய் ஓர்
உறுதி மொழியும் தேவைப்பட்டது.

ஏழைகளைப் போல் உடுத்தி,
ஏழைகளைப் போல் உண்டு
ஏழைகளோடு ஏழையாய்
வாழ வேண்டும் என்பதே அது !

அதுவே
சபைக்கு முதுகெலும்பாகவும்
முன்னால் நிற்பதாகவும் ஆனது !

தரையோடு தவழாமல்
மண்புழுக்களைப் பராமரித்தல்
சாத்தியமில்லை என்பதை
அன்னை
அறிந்து வைத்திருந்தார்

0

அன்னையின் பணி
மனிதர்களைச் சார்ந்தே இருந்தது.
அது
மதம் பூசியவருக்கு மட்டும்
மருந்து பூசுவதாக இருக்கவில்லை.

எனவே
அனைத்து மத அன்பர்களும்
அன்னையை
அன்னையாய்க் கண்டார்கள்.

காரணம்
அன்னை
மனிதனை மனிதனாய்க் கண்டாள்.
அவள் பணி
சேகரிப்பதாய் இருக்கவில்லை
செலவழிப்பதாய் இருந்தது.

ஆலயங்களில் அன்னை
அழைக்கப்பட்டாள்,
மேடைகளில் அமர்த்தப்பட்டாள்,
கலந்துரையாடல்களில்
கலந்து கொண்டாள்…

மேடைகளுக்குத் தக்கபடி
பாடிக் கொண்டிருக்கவில்லை அவள்

எந்தக் கிளையில் அமர்ந்தாலும்
குயிலுக்கு
ஒரே குரல் தானே !

இனியது என்பது
மனித நேயமே என்பதை
எங்கும் அன்னை
எடுத்துச் சொன்னாள்.

23

Image result for mother teresa drawingsமத பீடங்களைப்
பற்றிக் கொண்டிருப்பதை விடுத்து
மதிப்பீடுகளை
பற்றிக் கொள்ளுங்கள்.

அடையாளக் கிறிஸ்தவர்களை
தெரசாவின் போதனை
ஆணிகளில் அறைந்தது.
சாலை வாழ்வுக்காய்
ஆலய மனிதர்களை தயாராக்கியது.

0

கடல் எல்லைகளையும்
அரசியல் எல்லைகளையும்
தாண்டி
அன்னையின் செயல்கள்
பலரின்
சிந்தனைக் குகைகளில்
சிங்கமாய் கர்ஜித்தன !

0

முதல் வார
பணி அனுபவங்களை
அன்னை இப்படிச் சொல்கிறாள்.

ஐந்து ரூபாய் மீதியோடு
வீதி வாழ்க்கைக்கு வந்தேன்.
அப்போது எனக்கு 38 வயது.
கொஞ்சம் உணவில்லையேல்
இரண்டு நாட்கள்
சிலருக்கு ஒரு நேர உணவளித்தேன்
ஓரிரு நாளில்
பணம் கரைந்து விட்டது.

எத்தனை நேரம் தான்
சுடு மணலில்
பனித்துளி தாக்குப் பிடிக்கும் ?

எனக்கு முன்னால்
திசைகள் எல்லாம்
திறந்து கிடந்தன.
ஆனால் பாதங்களில் ஆணிகள்.

அன்று கண்ணீர் விட்டு செபித்தேன்.
இறைவா,
நீ வழி காட்டு
இல்லையேல்
சகதிப் பாதையில் சமாதியாவேன்.

மறு நாள்
என் வீட்டுக் கதவில்
இயேசு வந்தார் மனித வடிவில்
கையில் ஓர் கவர்.

உங்கள் பணிக்கு என் உதவி
வந்தவர் தந்தார்.
உள்ளே ஐம்பது ரூபாய்கள் !

என்
பணிக்குக் கிடைத்த
முதல் ஆதரவு.
பின் வாங்காதிருக்க
பரமன் அனுப்பிய
பாதுகாப்புப் பெட்டகம் !
24

 

 

 

Image result for mother teresa drawingsஅன்னையின் பணிவாழ்வால்
ஈர்க்கப்பட்ட
பழைய மாணவி ஒருத்தி
அன்னையை
சந்தித்தாள்.

அவளுடைய உள்ளமும்
அன்புப் பணிகளுக்காய்
ஏங்கியது,
ஏழைகளைத் தாங்கும் வரை
தூங்குவதில்லை என்றாள்.

அன்னை அவளைப் பார்த்தாள்.
அவளுடைய
உடலெங்கும்
பணக்காரத்தனம் பளிச்சிட்டது.

அன்னை சொன்னாள்,
உன் முடிவால்
உளம் மகிழ்கிறேன்.
ஆனால் இப்போது வேண்டாம்.

நீ
மலர்வாழ்வில் வளர்ந்தவள்
இது உலர் வாழ்வு.
நீ பச்சையம் சார்ந்தவள்
விறகு வாழ்க்கை சாத்தியமா ?

போ,
முடிவை மறுபரிசீலனை செய்.
சேரி வாழ்வு சரிவருமென்றால்
வா.

ஆனால்
அந்த வங்காள வனிதை
மீண்டும் வந்தாள்.
உடலில் பணக்காரத்தனத்தின்
சுவடுகளே இல்லை.
கண்களில் கருணையின் சுவடிகள்.

1949 மார்ச் 19 ல்
அவள்
தெரசாவின்
முதல் சபைத் தோழியானாள்.

ஓராண்டில் அந்த சபை
ஏழு பெண்கள் என்றானது !

1950 ல்
தெரசாவின் சபை
போப்பால் அங்கீகரிக்கப்பட்டபோது
அதில்
இயேசுவின் சீடர்களைப் போல
பன்னிரண்டு பேர்

25

Image result for mother teresa drawingsஉதவிக்கு வரும்
ஏழையர் எண்ணிக்கை
உதிரிப் பூக்கள் போல
அதிகரித்தது.

அன்னைக்கு
பெரிய தங்குமிடம் ஒன்று
அவசியமானது.

ஆண்டவர் அருளினார்.
பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்த
ஓர்
இஸ்லாமிய நல்மனிதரின்
வீடு
சின்ன விலையில்
அன்னைக்கு தரப்பட்டது.

அதுவே அன்னை இல்லம்.

0
பெண்கள் மட்டுமே
அங்கத்தினராய் இருந்த சபை
பின்
ஆண்களுக்காகவும்
ஆரம்பிக்கப் பட்டது.

மனிதராய் வாழவே
மறுத்து விடும் சமுதாயத்தில்
அன்னை
புனிதராய் வாழ்ந்து
புதுப்பிறப்பெடுத்தாள்.

வாழும் புனிதை என
வையகம் அவளை
வாயார அழைத்து
தங்கள்
நாவை அழகுபடுத்திக் கொண்டது.

விண்ணவனின் விரல் இதோ
என அறிவித்து
திருச்சபை
பெருமைப் பட்டுக் கொண்டது

0
அன்னையின் பணிகள்
தேவை என்ற போது
தானாய் சென்று உதவியது.

இயற்கைச் சீற்றங்கள்
அண்டை மாநிலங்களை
அழித்தபோது
அன்னையின் உதவும் கரம்
கூடவே இருந்தது.

0

1948 ல்
போப்பாண்டவரின் அங்கீகாரம்
தெரசாவுக்குக் கிடைத்தது.

மடத்தை விட்டு வெளியேறி
தனியே ஓர்
பணி ஆரம்பிக்கும் அனுமதி !

தனியே இருந்தாலும்
கத்தோலிக்க கன்னியராகவே
இருக்கலாம் என்னும்
இரட்டை அனுமதி.

 

26

Image result for mother teresa drawingsஅன்னை
கல்கத்தாவில் ஓர்
இல்லம் ஆரம்பிக்க நினைத்தார்.
சாவை சமீபிக்கும்
அனாதையருக்கு
கடைசிகாலத்தில் கருணை தர.

நகராட்சிக்குச் சென்று
மனு தந்தாள்,
அந்த
நகராட்சியில் இருந்தவர்கள்
மனசாட்சியோடு இருந்தவர்கள்
பதில் தந்தார்கள்.

கல்கத்தா காளிகோவிலில்
மதிலோரமாய் கிடக்கிறது
ஓர்
பாழடைந்த கட்டிடம்.

குற்றங்கள் செய்வோருக்கு
குத்தகைக்கு விடப்பட்டது போல,
சிதிலமாய்க் கிடந்தது
அது.

அன்னை ஆனந்தித்தாள்.
நகரின் அருகிலேயே
ஓர் இல்லம் என்றால்
துரிதப் பணி சாத்தியம் என்று
மகிழ்ந்தாள்.

அந்த
காளிகோயிலுக்கு
ஆயிரமாயிரம் பக்தர்கள்
கால நேரம் பாராமல்
கடவுளைத் தொழுவதுண்டு.

952ம் ஆண்டுல்
அன்னை
அந்த இல்லத்தை தூய்மையாக்கி
“தூய இல்லம்”
என்று பெயரிட்டாள்.

அங்கே
ஆதரவற்ற வயோதிகர்கள்
தூக்கி வரப்பட்டார்கள்,
துடைக்கப்பட்டார்கள்

மதம் கடந்த நிலையில்
அவர்களுக்கு
கடைசி ஆசைகள் நிறைவேற்றப் பட்டன.

காளி கோயில் நிர்வாகிகள்
முகம் சிவந்தனர்.
வேல் விளையும் நிலத்தில்
சிலுவைச் சாகுபடியா என
சினந்தனர்.

செய்யப்படும்
பணிகளைப் பாராமல்
பணி செய்யும் மனிதர்களைப் பார்த்து
மதிப்பிட்டனர் நிர்வாகிகள்.

ஆதரவுக்கு நீளாத
சுண்டு விரல்கள்
எதிர்ப்பு என்றதும்
ஏராளம் நீண்டன.

காவல் அதிகாரி
காளி பக்தர்.
காலி செய்து விட்டுதான்
மறு வேலை என்று சொல்லி
கால் வைத்தார் இல்லத்தில்.

உள்ளே
அலட்சியப் பார்வையை வீசிய
அதிகாரி
அதிர்ந்து போனார்.

அங்கே
புண்களோடு படுத்திருந்த
மூதாட்டியரை
சில
மென்கரங்கள் துடைத்துக் கொண்டிருந்தன.

அனாதை வயோதிகர்களின்
கரம் பிடித்து
கதை கேட்டுக் கொண்டிருந்தனர்
சிலர்.

அருவருப்பான
பல முகங்களுக்கு அருகில்
ஏராளம்
புன்னகையோடு
அமர்ந்திருந்தனர் இன்னும் சிலர்.

வாழ்வில்
முதல் முறையாய் அவர் பார்த்தார்.
சபிக்கப்பட்ட தலைமுறை
வரங்கள் வாங்குவதை.

சிரமங்களை தாங்குவதே
பரமனுக்கான பணி என்பதை.

அந்த
இறுதி மூச்சு மக்களின்
முதல் புன்னகையை
அப்போது தான் பார்க்கிறார்.

கண்கள் உடைய
உள்ளம் உறைய
வெளியே வந்தார்.

நிர்வாகிகள் கேட்டனர்
வெளியேறுவார்களா ?

அதிகாரி கேட்டார்.

கன்னியர்கள்
வெளியேறுவார்கள்
மற்றோரை
உங்கள் இல்லங்களில்
ஏற்றுக் கொள்வீர்களா ?

கன்னியர்களை துரத்துவேன்
நீங்கள்
அந்தப் பணிகளை
தொடர முடியுமா ?

‘பாவமில்லாதவன் கல்லெறியட்டும்’
என்று
இயேசு சொன்னபோது
வெறிச்சோடிப் போன
ஆலய முற்றம் போல

காளி கோயில் முற்றம்
முழுதும்
கால்களை விட்டு விட்டு
சுவடுகள் மட்டும் தனியாய் இருந்தன.

காவலரைப் பார்த்து
காளி புன்னகைத்தாள்.

அந்த இல்லம் வளர்ந்தது.
பின்னாளில்
மருத்துவ ஊர்திகள்
மருத்துவர்கள்
செவிலிகள் என
பணி செழித்தது.

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோரை
பராமரித்தது.

தெரசாவும்
உடன் கன்னியரும்
கல்கத்தா வீதிகளில் நடந்து
அனாதையாய்
சாவை சமீபித்துக் கொண்டிருக்கும்
சாலை வாசிகளை,
இல்லத்துக்கு எடுத்து வருவார்கள்.

சாவுக்கு முந்தைய அறையில்
அவர்களுக்கு
புன்னகையும் ஆறுதலும்
பரிமாறப் பட்டன.

மறுக்கப்பட்டிருந்த
மருத்துவமும் சுகாதாரமும்
சாவுக்கு முன்
சாத்தியமாயின.

கண்மூடும் முன் அவர்கள்
கருணையோடு
அறிமுகம் செய்து கொண்டார்கள்.
நேசத்தின் விளக்கத்தை
நேரில் கண்டார்கள்,
முதலும் மொத்தமுமாக !

அதில் பாதி பேர் பிழைத்துக் கொண்டனர்
மீதி பேர்
மகிழ்வோடு மரணத்தை
அழைத்துச் சென்றனர்.

பிழைத்துக் கொண்டவர்கள்
முதியோர் இல்லங்களுக்கும்,
பராமரிப்பு நிலையங்களுக்கும்
இடம் மாறினர்.

அழைக்கப் பட்டோர்
அடக்கப் பட்டனர்.

0

கல்கத்தா சாலைகளில்
அந்த
ஆம்புலன்ஸ் வாகனம் நகர்கிறது.
உள்ளே வெள்ளை நிற ஆடைகள்.

அதன் இலக்கு,
காளிகத் தில் இருக்கும்
மரித்துக் கொண்டிருப்போரின் நிலையம்.

அவர்கள்
நுழைகிறார்கள்.

இறந்து போனவர்களை
வெள்ளை துணிகளில்
இறுகப் பொதிந்து,
இறுதி வழியனுப்பலுக்காய்
செல்கின்றனர் சகோதரியர்.

வாழ்வின் கடைசி வினாடிகளில்
ஒருவனின்
கரம் பிடித்து கூட இருக்கும்
தோழமை உணர்வு
மிக உயர்வானது !

இல்லத்தில் வார்த்தைகள்

என் கரம்
உன்னைக் குணப்படுத்தும்.

0

27

Related image

‘சிசு பவன்’ என்னும்
குழந்தைகள் நிலையம்
ஒன்று
அன்னையால் ஆரம்பிக்கப் பட்டது.

தெருவோரத் தளிர்களும்,
மருத்துவமனைப்
பின் வாசல் மழலைகளும்,
பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட
பிஞ்சுகளும்
இங்கே வளர்க்கப்பட்டனர்.

யாரும்
மழலைகளை சிதைக்காதீர்கள்
வளர்க்க முடியாதெனில்
என்னிடம் தாருங்கள்
அந்த பிஞ்சு இயேசுக்களை
என
அன்னை அனாதைகளை சேகரித்தாள்.

விலாசம் விசாரிக்கப்படாமலேயே
அவர்கள்
அந்த மேகத்துக்குள்
அடைகாக்கப் பட்டனர்.

அங்கே அண்டியவர்கள்
யாருமே
நிராகரிப்பப்பட்டதில்லை
என்பதே ஆச்சரியச் செய்தி !

அந்த ஊற்று நதியானது.
இந்தியாவில் மட்டுமே
இன்று
நாற்பதுக்கும் மேற்பட்ட
சிறுவர் நிலையங்கள் !

0
3

0

சாந்தி நகர்

0

தொழுநோய்
சாத்தானின் மக்களுக்காய்
ஆண்டவன் கொடுத்த
சாபம் என்று
மதக் கூட்டங்கள்
நம்பிக் கிடந்தன.

தொழுநோயாளிகள்
துரத்தப்பட்டனர்,
அவர்களின் அலுவல்கள்
பிடுங்கப்பட்டன.

தெருநாய்களைப் போல
வாழ்ந்து
மிருகங்களைப் போலவே
இறக்கும் நிலை அவர்களது.

தொழுநோயாளி
ஆண்டவனால் துரத்தப்பட்டவனல்ல,
அவன்
நோயால் நெருக்கப் பட்டவன்.

தொழுநோய் சாபமல்ல
வியாதி.
என
அன்னை சொன்ன விளக்கங்களை
பூட்டிக் கொண்ட காதுகள்
புரிந்து கொள்ள மறுத்தன.

காலங் காலமாய்
வந்தனை செய்து வரும்
தெய்வத்துக்கெதிராய்
நிந்தனை வெய்வதாய்
அன்னையை நாவுகள் நிந்தித்தன.

அன்னையும்
சகோதரிகளும் கலங்கவில்லை.

தொழுநோயாளிகளை தொட்டனர்
நோயாளிகளோ
ஆச்சரியத்தின் உச்சத்தில்
தழுதழுத்தனர்.

மேனியில் கல்லால் அடிக்கும்
கூட்டத்துக்கிடையே
கையால் துடைக்கும் கூட்டமா
என கண்ணீர் விட்டனர்.

அன்னை
பிரச்சாரத்தை நிறுத்தவில்லை.

தொழுநோயாளிகளை
கருணையால் தொடுங்கள் …
என
நன்கொடைகள் சேகரித்தனர்.

சாந்தி நிலையம்
இவ்விதம்
சாத்தியமானது.

அங்கே
தொழுநோயாளிகள்
பராமரிக்கப் பட்டனர்.
நிலங்களில் உழைத்தனர்
மீண்டும்
மனித வாழ்வுக்கு மீண்டு வந்தனர்.

 

 

28

Related imageரோமின்

அனுமதிக்கதவுகள்
அன்னையின் பணிகண்டு
அகலமாய் திறந்தன.

1965 ல்
அன்னையின் இயக்கம்
போப்பாண்டவரால் அங்கீகரிக்கப்பட்டது.

அன்னை
பாரதத்துக்கு வெளியே சென்றும்
பணியாற்றலாம் என
எல்லைகளை விரிவாக்கியது.

அன்னை ஆனந்தித்தாள்.
அன்பின் ஆறு
தேசம் தாண்டி பாயப் போவதை
எண்ணி
பாசத் தாய் பூரித்தாள்.

மூன்று ஆண்டுகளில்
அனுமதி தந்த ரோமிலேயே
ஓர்
இல்லம்
நேசத் தாயால் நிறுவப்பட்டது.
0

எண்பதுகளின் ஆரம்பத்தில்
உலகம்
எய்ட்ஸ் என்னும்
புது நோய்கண்டு பதறியது.

நோய் இருப்பதாய் நம்பப்பட்டவர்கள்
அருவருப்பாய்
பார்க்கப்பட்டனர்,
சமூக அந்தஸ்திலிருந்து
அகற்றப்பட்டனர்.
தொட இயலா தூரத்துக்கு
துரத்தப்பட்டனர்.

நோயின் விளைவுகள் தெரியாத
அந்த
ஆரம்ப நாட்களிலேயே
அன்னை அவர்களை அரவணைத்தார்.

அவர்கள்
அகற்றப்பட வேண்டியவர்களல்ல
ஆதரவளிக்கப் பட வேண்டியவர்கள்
ஏனெனில்
அவனும் ஆண்டவன் பிம்பமே
என்றார்.

0

நியூயார்க்
சான் பிரான்சிஸ்கோ
அட்லாண்டா …
போன்ற
அமெரிக்க பெருநகரங்களில்
அன்னையின்
எயிட்ஸ் நோயாளிகள் பராமரிப்பகம்
இருக்கிறது.
0
அன்னையை ஆச்சரியமாய்
பார்த்தனர்
அடையாளக் கிறிஸ்தவர்கள்.

எங்கிருந்து வந்தது
இந்த துணிச்சல் ?
ஏதோ தேசத்தில் பிறந்து
இந்திய தேசத்தின் தெருக்களில்
இறங்க
எங்கிருந்து வந்தது வேகம் ?

அன்னையிடம்
இருந்தது ஒரே பதில் தான்.
ஆண்டவன் பால் கொண்ட
அளவற்ற நம்பிக்கையும்
பாசமும்.

வீடுகளில், தெருக்களில், பணிகளில்
எங்கும்
செபத்தைப் புறந்தள்ளி
பணிகளை அள்ளிக்கொண்டதில்லை
அன்னை.

செபித்தாள்.
தூங்கும் முன் ஒரு மணி நேரம்
இறைவனைப் புகழ்ந்தார்கள்,
பணிவேளைகளில்
பரமனை வேண்டினார்கள்.

அன்னை
ஓர் உதாரணம்.
இறை நம்பிக்கை இருந்தால்
எதுவும் செய்யலாம் என்பதற்கான
உதாரணம்.

 

29

 

Related imageஅன்னையிடம்
கேள்வி ஒன்று வைத்தார்கள்.

எது
உன்னை பணிசெய்யத் தூண்டியது.

அன்னை சொன்னாள்
இயேசுவின் வார்த்தைகள்.

நான் பசியாயிருந்தேன்
என்னை உடுத்தினீர்கள்,
தாகமாய் இருந்தேன்
பருகத் தந்தீர்கள்,
அன்னியனாய் இருந்தேன்
அரவணைத்தீர்கள்,
சிறையிலிருந்தேன்
சந்திக்க வந்தீர்கள்…

இதெல்லாம் எப்போது நிகழ்ந்தன ?

சின்னஞ்சிறிய
சகோதரன் ஒருவனுக்கு
இவற்றை செய்தபோதெல்லாம்
எனக்கே செய்தீர்கள்.

நான்
அனாதையின் கண்களில்
ஆண்டவனைக் காண்கிறேன்,
நோயாளியின் புண்களிலும்
ஆண்டவனைக் காண்கிறேன்.

0

அன்னையின் கையில்
சில அடையாள அட்டைகள்
இருக்கின்றன.

அமைதியின் கனி செபம்.
செபத்தின் கனி விசுவாசம்
விசுவாசத்தின் கனி அன்பு
அன்பின் கனி பணி
பணியின் கனி சாந்தம்.

அன்னையை
நாடி வருவோர்க்கெல்லாம்
அன்னை அதை அளிக்கிறாள்.

இது
என்னுடைய அட்டை.

0

உலகமெங்கும்
அன்னையின் சபைக்கு
கிளைகள் விரிந்தன.
ஆதரவுகள் பெருகின.

அத்தனை கிளைகளுக்கும்
ஆணிவேரான
‘அயலானுக்கு அன்பு’
என்பது
நட்ட இடத்திலிருந்து
நகர்த்தப்படவில்லை.
0

அன்னையால் துவங்கப்பட்ட
ஐம்பது திட்டங்கள்
இந்தியாவில் இயங்குகின்றன.
குழந்தைகள் நிலையம்,
தூய இல்லம்,
தொழுநோயாளியர் நகர்,
சிறைப்பட்டோர் நலன்,
மருத்துவம்…

இவை…
அவற்றில் சில.

 

30

Related image
1928 ல்
தன் தேசம் விட்டு வெளியேறிய அன்னை
1991 ல்
மீண்டும் தன் நாடு சென்றாள்.
ஒரு பணி இல்லம் திறக்க.

அதற்கு முன்
வாழ்க்கை எத்தனையோ மாற்றங்களை
வண்டி வண்டியாய்
கொட்டியிருந்தது.

ஆனாலும்
அன்னை தாய் நாடு சென்றதில்லை.

உலகத்தை
குடும்பமாய் பார்த்தபின்
அன்னைக்கு
குடும்பம் விரிவடைந்தது.

தாயாரின் மறைவிற்கு கூட
அன்னை
கடல் கடந்து சென்று
கண்ணீர் விடவில்லை.

0

அன்னையின் பணிகள்
விரிவடைய
கத்தோலிக்கத் திருச்சபை
தன்னார்வக் கன்னியரை
அன்னையின் சபைக்கு
அனுப்ப முன் வந்தது.

அன்னையின் பணி
இந்திய தீபகர்ப்பத்துக்கு
வெளியேயும் தீபம் ஏற்றியது.

வெனிசுலா முதல் ஜோர்தான் வரையும்
இத்தாலி முதல் தான்சானியா வரையும்,
அமெரிக்கா முதல் ரஷ்யா வரையும்
என
தேசங்கள் பலவற்றில்
நேசப் பணி நிறுவப்பட்டது.

0
அன்னையில்
மனித நேய விதை விடுத்த
உலகளாவிய மரத்துக்கு
இன்று
ஐநூறுக்கும் மேற்பட்ட கிளைகள் !
ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கிளிகள்.

ஆண்டுதோறும்
ஐந்து இலட்சம் இல்லங்கள்
உணவளிக்கப் படுகின்றன,
தொன்னூறாயிரம்
தொழுநோயாளிகள்
உணர்வு அளிக்கப் படுகிறார்கள்.

31

Related imageஅன்னை சொல்கிறார்.

பட்டினியின் எல்லையை
நம்மில் பலர்
கண்டிருக்கமாட்டோம்.

பசியின் கண்ணீரோடு
நம் பலரின் கண்களுக்கு
பரிச்சயம் இருக்காது.

நான் பார்த்தேன்,

ஒருமுறை
அழுக்கு வீதியின்
ஓரத்தில்
ஓர் ஏழைச்சிறுமியைக் கண்டேன்.

அவள் கண்களில்
பட்டினியின் பரிதாபப் பார்வை
ஆயிரம் கண்களோடு
விழித்துக் கிடந்தது.

வாழ்வின்
முதல் பக்கத்தில் நிற்கும் சிறுமி.
வலியில்
கடைசிக் கட்டைத்தையும்
தோளில் சுமக்கும் துயரம்
இதயத்தைத் தாக்க,
ரொட்டி ஒன்றை கொடுத்தேன்.

அந்தச் சிறுமி,
அதை
வேக வேகமாய் வாங்கி
மெல்ல மெல்ல
தின்னத் துவங்கினாள்.

அவள் கண்கள் முழுதும்
ஓர்
பேரரசைப் பிடித்த
சக்கரவர்த்தியின் சந்தோசம்.

அவளை அரவணைத்துக் கொண்டே
நான் கேட்டேன்,
ரொட்டியை
விரைவாய் தின்றால்
விரைவிலேயே பசி போய் விடுமே ?

சிறுமி
கலவரத்துடன் பதிலளித்தாள்.

ரொட்டி தீர்ந்து விட்டால்
மீண்டும் பசிக்குமோ
என
பயமாய் இருக்கிறது.

*

பாருங்கள்,
உங்கள் பணி வீதியில் கிடக்கிறது.
நீங்களோ
வானம் பார்த்து நடக்கிறீர்கள்.

*

32

Image result for mother teresa drawings

ஒருமுறை
சாலையின்
சோதனைச் சாவடி கடக்கும் போது
ஓர் முரட்டுக் கேள்வி
முன் வந்து நின்றது.

ஏதேனும்
ஆயுதம் வைத்திருக்கிறாயா ?

புன்னகையோடு சொன்னேன்
ஆம்,
விவிலியமும்,
செப புத்தகங்களும்.

*

ஒருமுறை
புனித
‘குழந்தை தெரசா பள்ளி’ க்கு
அன்னை தெரசா வந்தார்.

பள்ளிக்கூடம்
சுத்தத்தைத் அவிழ்த்து விட்டு
அழுக்கைச் சுற்றியிருந்தது.

தெரசா
பார்த்தார்.
பின் விலகிச் சென்றார்.

மாணவர்களுக்கு
ஒன்றுமே விளங்கவில்லை.

சிறிது நேரத்தில்
தெரசா திரும்ப வந்தார்.
புத்தகம் இருக்கவேண்டிய கையில்
பக்கெட், துடைப்பான்.

வகுப்பறையில் இருந்த
இருக்கைகள் எல்லாம்
முற்றத்துக்கு இடம் மாறின.

தெரசா தரையை
கழுவத் துவங்கினார்.

மாணவர்களுக்குள்
ஓராயிரம் தீப்பொறிகள்.
இதுவரை
கண்டிராத காட்சி.

படிப்பிப்பதும்
படிக்கட்டு கழுவுவதும்
ஒரே மனிதனால் சாத்தியமா ?

ஆசிரியரின் பணி
அறியாமை அகற்றுவதா
அழுக்கை அகற்றுவதா ?

கேள்விகள் வட்டமிட்டாலும்
மாணவர்களுக்குள்
ஓர்
மின்னல் மையம்
முத்தமிட்டது.

பணி என்பது
பணிவில் துவங்குவது.
எந்தப் பணியும் இழிவல்ல.

சட்டென்று
மாணவர்களும்
அறை கழுவ ஆயத்தமாயினர்.

புழுதிப் போர்க்களமாய்
கிடந்த அறை
மணித்துளிகளில்
சுத்தத்தின் மொத்தமாய்
சிரித்தது.

தாழ்வாரத்தில்
அடித்த அந்த மின்னல்
தாழம் பூக்களை
மொத்தமாய் மலரவைத்துப் போனது.

மாணவர்கள்
புத்தகம் திறக்கும் முன்
ஓர்
பாடம் கற்று முடித்தனர்.

33

Related imageஒரு முறை
ஒரு மனிதர்
தன் தலையில் ஓர் மூட்டையுடன்
அன்னையைத் தேடி
வந்தான்

அவன்
தலையிலிருந்த மூட்டையிலிருந்து
இரண்டு குச்சிகள்
வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.

உற்றுப் பார்த்த அன்னை
உறைந்தே போனாள்,
மனசுக்குள்
பாம்பு ஒன்று
பல்பதித்ததாய் பதறினாள்.

நீட்டிக் கொண்டிருந்தவை
குச்சிகளல்ல,
மனித கால்கள் !

வந்தவன்
வருந்தினான்.

அன்னையே
இந்தக் குருடனை
நீயும் நிராகரித்தால்
இவனை
நான் குப்பைக் கூடையில் தான்
கொட்ட முடியும்.

என்
உயிரின் தோள்களுக்கு
இவனைச் சுமக்கும்
வலு
இனியும் இல்லை என்றான்.

அன்னையின் விழிகள்
தீத் துண்டு விழுந்த
பனிக்கட்டியாய்
உருகி வழிந்தன.

வினாடி நேரமும் தாமதிக்காமல்
அந்த
ஜீவனுள்ள மனிதப் பொதியை
மார்போடு அணைத்தாள்.

வார்த்தைகளும்
சோகமும்
ஒன்றையொன்று விழுங்க,
வந்தவனும் அழுதான்.

34

Related imageஅன்னை சொல்கிறாள்,

குப்பைக் குவியலில்
ஒரு முறை
சாவின் வழியில்
ஒரு பெண்ணைக் கண்டேன்.

அவளுடைய
உடலிலிருந்து
சதைகள் எல்லாம் கரைந்து போய்
வெகு நாட்கள் ஆகியிருந்தன.

தோலுக்கும்
எலும்புக்கும் இடையே
வேறெதுவும் இல்லை.

உடம்பெல்லாம்
சாக்கடை எலிகள் கடித்த
காயங்கள்.

எறும்புகள் மொய்த்திருந்தன
அவளுடைய
மிச்சம் மீதி தேகத்தையும்,
அதை
துடைத்து விடும் வலிமையும்
அவள் விரல்களுக்கு இருக்கவில்லை.

அவளை அள்ளி எடுத்து
மருத்துவமனைக்கு ஓடினேன்.
அங்கே
அவளுக்கு மருத்துவம் மறுக்கப்பட்டது.

இவள் சாவு
நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
இனிமேல்
நிச்சயம் பிழைப்பு இல்லை
என கைவிரித்தனர்
காக்கும் மருத்துவர்.

நானோ உறுதியாய் இருந்தேன்.
அவளுக்கு
வைத்தியம் பார்க்காவிடில்
வாசல் விட்டு எழமாட்டேன்
என
பிடிவாதம் பிடித்தேன்.
கடைசியில் வென்றேன்.

அவள்
பிழைத்துக் கொண்டாள்.
நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்.
கலங்கிய கண்களோடு
நன்றி சொன்னாள்.

பிள்ளைகள் இல்லையா
பாதுகாக்க ?
கரம் வருடி கேட்டேன்.

நிமிட நேர மெளனத்துக்குப் பின்
பதில் சொன்னாள்.

இருக்கிறான்
அவனை கடைசியாய் பார்த்தது
அவன்
என்னை
குப்பை மேட்டில் எறிந்த போதுதான்.

35

Related imageஅன்னை சொல்கிறாள்,

ஒருமுறை
முதியோர் இல்லம் ஒன்றுக்கு
சென்றிருந்தேன்.

இல்லம்
பரம சுகமாய்
சிரமங்கள் இல்லாமல்
இருந்தது.

எங்கும்
முதுமை முத்திரையிட்ட
முகங்கள்.

தேவையான உணவு
தொலைக்காட்சிப் பெட்டி
மின்விசிறி
என
வசதியான வாழ்க்கை.

ஆனால்
எந்தக் கண்களிலும்
புன்னகை இல்லை.

அடிக்கடி ஈரமாகிக் கொண்டிருந்த
அத்தனை கண்களும்
வெறித்துக் கொண்டே இருந்தன
வாசலை.

விட்டுப் போன
மகன்
ஒருமுறையேனும் வருவானென்னும்
தவறான நம்பிக்கையில்

*
ஒரு முறை
அன்னை தெரசாவும்
சகோதரிகளும்
நற்கருணை வழிபாட்டுக்காய்
புறப்பட்டனர்.

நற்கருணை என்பது
அப்பத்தின் வடிவில்
ஆண்டவனை தரிசிப்பது.

இயேசுவின்
இறுதி இரா உணவு சொன்ன
அடையாளத்தில்
ஆண்டவனைக் காண்பது.

வழியில்
அன்னையின் கண்கள்
இரண்டு முதியோர்கள்
சாகும் தருவாயில்
சாலையோரம் கிடப்பதைக் கண்டன.

அன்னை
நின்றாள்.
நீங்கள் செல்லுங்கள்.
என் பணி இங்கே இருக்கிறது
என்றார்.

பலர் கோபப்பட்டனர்
அன்னை
வழிபாட்டுக்கு வராததால்.

அன்னை சொன்னாள்.
நான்
நற்கருணை வடிவில்
இயேசுவைக் காணத் தான்
வந்து கொண்டிருந்தேன்

வழியிலேயே
அவரை
மனித வடிவில் கண்டு கொண்டேன்.
36

Image result for mother teresa drawingsசாக்கடைக்கும் சாலைக்கும்
இடையே
ஓர் பெண் சாகும் தருவாயில்
பாயில் சுருட்டப்பட்டு
போடப்பட்டிருக்கிறாள்.

அன்னை
அவளை அணுகி
அவளை துடைத்து
கரங்களைப் பிடித்து
அழுக்கோடு அணைத்துக் கொள்கிறாள்.

அவளுடைய கண்கள்
ஓர்
பிரபஞ்சப் பிரயாசையில்
கேட்கின்றன.

யார் நீ ?

அன்னை சொன்னாள்
கடவுள் உன்னை நேசிக்கிறார்
அதனால்
நானும் உன்னை நேசிக்கிறேன்.

அவள் விழிகள்
மின்னின.

இதென்ன விந்தை ?
என்னை நேசிக்க ஒருத்தியா ?

எங்கே
இன்னொரு முறை சொல்லுங்கள் ?

அவளுடைய
உதடுகள் அசைகின்றன.

நான்
உன்னை நேசிக்கிறேன்.
அணைத்துக் கொண்டே
மீண்டும் சொல்கிறாள் அன்னை.

பளீரென ஓர் பிரகாசப் புன்னகை
அந்த மரணவாசல் மங்கையிடம்.
இது வரை இல்லாத
நிம்மதியின் சம்மதம்
கண்களுக்குள் அசைகிறது.

அதற்குள் அவளை
மரணம் கூட்டிச் செல்க்¢றது.

*

மரணத்துக்கும்
மனிதர்களுக்கும் இடையே
சில
மில்லி மீட்டர் இடைவெளியில்
ஒரு மனிதன் கிடக்கிறான்.

அவன்
சுவாசப் பைகள்
இறுதி மூச்சை கஷ்டப்பட்டு
உள்ளிழுக்கின்றன.

அவனுக்கும்
இரண்டடி தொலைவில்
மனிதர்கள் நடக்கின்றார்கள்.

அன்னை
அவனை அணுகினாள்.
அருகில் அமர்கிறாள்.

அவன் அதிர்ச்சியடைகிறான்.
என்னது ?
அதற்குள் நான் செத்துவிட்டேனா
அருகிலே
தேவதை தரிசனம் தெரிகிறதே.

அன்னை
அவனை அணைத்தாள்.
புன்னகைத்தாள்.
அவன் அன்னையின்
தூய இல்லத்துக்கு
தூக்கிச் செல்லப்பட்டான்.

அங்கே அவன்
தூய்மையாக்கப்பட்டு
தூய உடை அணிவிக்கப்பட்டான்.
இன்னும் அவன்
பிரமிப்பிலிருந்து பிரியவில்லை.

அன்னை
அவன் கைகளைப் பிடித்தாள்.
கவலைப்படாதே
ஆண்டவர் உன்னை நேசிக்கிறார்.
நானும் உன்னை நேசிக்கிறேன்.

அவனுடைய
கண்கள் கசிந்தன.
கைகள் கூப்பினான்.

உள்ளே இருந்த
மிச்சம் மீதி உயிரையும்
இரண்டு
உதடுகளிலும் ஊற்றி பேசினான்.

அன்னையே
நான் வாழும்போது
தெரு நாய் போல வாழ்ந்தேன்.
சாகும் போது
சம்மனசு போல உணர்கிறேன்.

அதற்கு மேல் பேச
அவன்
சுவாசம் சம்மதிக்கவில்லை.

37

Related imageஒரு குடும்பம்
பலநாட்களாய் பட்டினியாய்க்
கிடப்பதாய்
அன்னை அறிந்தாள்.

இருந்த அரிசியில் கொஞ்சம்
எடுத்துக் கொண்டு
அன்னை அந்த
குடிசைக் கதவைத் தட்டினாள்.
அது ஒரு இந்து வீடு.

உள்ளே
தாயும், நான்கு குழந்தைகளும்
பட்டினிப் படுக்கையில்.
அங்கே
அடுப்பு இருந்த தடமே தெரியவில்லை.

குழந்தைகளின்
இருண்டு கிடந்த கண்களில்
பசி
கூடு கட்டிக் காத்திருந்தது.

அன்னை
தன்னிடமிருந்த அரிசியை
அவர்களுக்குக் கொடுத்தார்.

அதைக்கண்ட
குழந்தைகள் குதூகலித்தனர்
தாய் தழுதழுத்தாள்.

அந்த அரிசியில் பாதியை
மடியில் கட்டிக் கொண்டு
படி தாண்டி ஓடினாள்.

சிறிது நேரத்தில்
திரும்பி வந்தாள்.
மடியிலிருந்த அரிசி
மாயமாகி இருந்தது.

புரியாத அன்னை கேட்டாள்
எங்கே சென்றீர்கள் ?

அடுத்த வீடு.
இஸ்லாமியர் ஒருவருடையது
அவர்கள் சாப்பிட்டு
நாட்கள் சில ஆயின.

கொஞ்சம் அவர்களுக்காய்
கொடுத்தேன் என்றாள்.

மதங்களைக் கடந்த
மனித நேயப் பார்வை
ஏழைகளிடம் இருப்பதை
அந்த
வறுமைத் தாய் செயலால் சொன்னாள்.

0

38

Related image
சாவின் வாசலில்
அனாதைச் சிறுவன் ஒருவன்.

அன்னை
அவனை அள்ளி எடுத்தாள்.
யாரும்
அவனை சொந்தம் கொண்டாடவில்லை.

அன்னையை
சிறுவன் பார்த்தான்.
அந்தப் பார்வை அன்னையை
அழவைத்தது.

இவன்
கடவுளின் பிள்ளை.
யாருக்கும்
இவன் உயிரைப் பறிக்கும்
உரிமை இல்லை என்றாள்.

அணைத்துக் கொண்டே
தன்
இல்லம் சென்றாள்.
*

புகழ் பெற்ற
சி.என்.என் பத்திரிகையாளர்
ஓர்
விளம்பரப் புன்னகையோடு
அன்னையிடம் கேட்டான்.

உங்கள்
சமுதாயப் பணிக்கான
தூண்டுகோல் என்ன ?

அன்னை
புன்னகைத்தாள்.
நான் சமுதாயப் பணி செய்வதாய்
யார் சொன்னது ?
நான் செய்வது இறைப்பணி.

வினாடி நேர
மெளனத்துக்குப் பின்
அன்னை சொன்னாள்.

இறைவனின் அன்பை
எல்லோருக்கும் அளிக்கவேண்டும்.

உங்கள் பணி வேறு.
நீங்கள்
உங்கள் பணியில்
இறைவனைச் சொல்லுங்கள்.

எழுதுவதும்,
மனதில் எழுவதும்
சாத்தானின் சங்கதிகளாக இராமல்
கடவுளின்
கருத்துக்களாக இருக்கட்டும்.

தவறான செய்திகளை
தவிர்த்து,
உண்மையை, நேர்மையை
கடைபிடியுங்கள் என்றாள்.

கேள்வி கேட்டவனின்
எச்சில்
தொண்டையில் சிக்கியது.

40

Related image

சாலையோரத்தில் ஓர்
மரணத் தருவாய் பெண்.

அன்னை
வழக்கம் போல் அவளை
அணைத்துக் கொண்டாள்.

அவள்
மெல்லிய புன்னகையோடு
முனகினாள்.

அன்னை காது கொடுத்தாள்.
அதிர்ந்தாள்.

பசிக்கிறது,
உணவு கொடு,
வலிக்கிறது
ஐயோ சாகப் போகிறேனே…

என்னும் வார்த்தைகளை
எதிர் பார்த்துக் காத்திருந்த
காதுகளுக்குள்
விழுந்தன இரண்டு வார்த்தைகள்.

“மிக்க நன்றி.”

அதுவே
அவளுடைய
மிச்சமிருந்த உயிரின் உச்சரிப்புகள்.

41

ஒரு முறை

அன்னையின் இல்லத்துக்கு வந்தது
சர்க்கரை
பற்றாக்குறை.

அந்தச் செய்தி
எப்படியோ
குழந்தைகளின் காதுகளுக்கும்
சென்றிருக்கிறது.

ஒரு நாள் காலையில்
வாசலில்
சிறுவன் ஒருவன்.

அன்னை அவனை தழுவினாள்.
அவன் குரல்
மெல்ல
அன்னையின் பெயரை உச்சரித்தன.

கைகளில்
ஒரு சின்ன பொட்டலத்தில்
கொஞ்சம் சர்க்கரை.

அன்னைக்கு விளங்கிற்று.
சிறுவன்
தன் அன்பைப் பகிர வந்திருக்கிறான்.

அன்னை அதை
பெற்றுக் கொண்டபோது
சிறுவனின் தாய் சொன்னாள்.

உங்களுக்கு
சர்க்கரை பற்றாக்குறை இருப்பதாகவும்
அதனால்
மூன்று நாட்கள் எனக்கு
இனிப்பு வேண்டாம்
அதைக் கொடுங்கள்
அன்னையிடம் கொடுக்கிறேன்
என்று வந்திருக்கிறான்.
என்றாள்.

அன்னையை
ஆச்சரியம் ஆட்கொண்டது.
பனித்துளிக்குள் ஓர்
பெருங்கடல் படுத்திருக்கிறதா
என வியந்தாள்.

கேட்டாள்,
உனக்கு என்ன வயது.

“நான்கு.”

42

Image result for mother teresa drawingsஒருமுறை
பதினைந்து டாலர் பணம்
ஒருவரிடமிருந்து
அன்னைக்கு வந்திருந்தது.

அதை அனுப்பிய
மனிதனுக்கோ
படுக்கையே உலகம்.

அவன் உடலில்
பிரயாசைப்பட்டாகிலும்
அசைக்க முடிந்த அங்கம்
அவன் வலக் கை விரல்கள்
மட்டுமே.

அதையும் அவன்
புகை பிடிக்க மட்டுமே
பயன் படுத்திக் கொண்டிருந்தான்.

அன்னைக்கு
அவனிடமிருந்து
பணத்தோடு ஒரு கடிதமும்
வந்திருந்தது.

இது
என் ஒருவார கால
புகை பிடிக்கும் செலவு.

ஒருவார காலம்
அதை
ஒத்திவைத்து இந்தப் பணத்தை
பத்திரப் படுத்தி அனுப்புகிறேன்.

அந்தக் கடிதம்
அன்னையைத் தொட்டது.

43

ஒரு முறை
அமெரிக்கப் பல்கலைக் கழக
பேராசிரியர்கள் பதினான்கு பேர்
கல்கத்தா கூட்டுக்குள்
அன்னையைத் தேடி வந்தார்கள்.

உரையாடலின் இடையே
ஒருவர்
அன்னையே
எங்கள் இதயங்களிலிருந்து
இறக்கி விட முடியாத
வாசகங்கள் சிலவற்றை
ஏற்றி வையுங்கள்.

அன்னை சொன்னாள்.
யாரைச் சந்தித்தாலும் புன்னகையுங்கள்
உங்கள்
இல்லங்களில் எல்லோரையும்
சந்திக்காமல் தூங்கப் போகாதீர்கள்.

0

“உங்களுக்கு திருமணமாகிவிட்டதா ?”
இன்னொரு
எதிர்பாரா கேள்வி வந்தது
அன்னையின்
எதிர் புறமிருந்து.

அன்னை சொன்னாள்.
“ஆம்”
நான் இயேசுவின் மணவாட்டி.

44

நிதித் தேவைகளை
எப்படி நிறைவேற்றுகிறீர்கள் ?

அன்னையை நோக்கி
ஒரு
வினாவை வீசினார் ஒருவர்.

அவருடைய
தேகம் முழுதும் பணக்காரத் தனம்
பளிச்சிட்டது.
அவர் ஒரு
பன்னாட்டு நிறுவனத்தின் பங்காளி.

அன்னை அவரை நோக்கி
பதில் வினாவை
நீட்டினார்.

யாருடைய அழைத்தல்
உங்களை இங்கே
அழைத்து வந்தது ?

யாரும் அழைக்கவில்லை
வரவேண்டும் என்று
உள்ளுணர்வு சொன்னதால்
உள்ளே வந்தேன்.
பதிலிறுத்தான் அவன்.

அன்னை புன்னகைத்தாள்.
இப்படித் தான்
தேவைகள் பூர்த்தியாகின்றன.

உங்களைப் போல
பலரை
ஆண்டவன் இங்கே அனுப்புகிறான்.

உள்ளத்தின்
உள்ளுக்குள் நுழைந்து
அழைக்கும் குரல்
ஆண்டவனுக்கு மட்டுமே உள்ளது.

வந்தவன் நெகிழ்ந்தான்.
அழைப்பை ஏற்றான்.
18.
ஆஸ்திரேலியாவில்
ஓர் ஏழை முதியவர் ருந்தார்

அவர்
உறவினர்களால்
ஒட்டு மொத்தமாக
வெட்டி விடப்பட்டவர்.

மரத்திலிருந்து
ஒடித்தெறியப்பட்ட கிளை போல
வாடிப் போயிருந்தது
அவருடைய
தேகமும். மனமும்.

வீடு
இருட்டுக்குள் இளைப்பாறிக் கிடந்தது.
அறைகளெங்கும்
தூசுகள் தவமிருந்தன.

அன்னை அவரை சந்தித்தாள்.

நான்
இந்த வீட்டை சுத்தம் செய்ய
அனுமதியுங்கள்….
அன்னை கேட்டாள்.

வேண்டாம்,
புழுதி வாழ்க்கை பழக்கமாயிற்று
எனக்கு
சுத்த வாழ்க்கை எதற்கு ?
முதியவர் மறுத்தார்.

அன்னையின் தொடர் வற்புறுத்தல்
அவரை
சம்மதிக்க வைத்தது.

அன்னையும் சகோதரிகளூம்
வீட்டைக் கழுவினர்.
புழுதியை புறந்தள்ளினர்.

அறைகளில் இருந்த
கறைகளைக் கழுவியபோது
கண்களுக்குள் விழுந்தது
அந்த அழகிய விளக்கு.

இதை நான் ஏற்றி வைக்கிறேன்.
இது
இருட்டை கொஞ்சம் துரத்தட்டும்
என்றாள் அன்னை.

யாரும் தேடிவராத
ஓர்
கிழட்டு ஜீவனுக்கு
வெளிச்சம் எதை வழங்கப் போகிறது
வேண்டாம்.

முதியவர் விரக்தியில்
விழி நனைந்தார்.

இல்லை,
இனிமேல் உங்களைத் தேடி
சகோதரிகள் வருவார்கள்.

தினசரி
இந்த விளக்கு ஏற்றப்படும்
என்றாள் அன்னை.

வருடங்கள் ஓடின.
ஒரு நாள்
அந்த முதியவரிடமிருந்து
ஓர் கடிதம் வந்து
கதவைத் தட்டியது.

நன்றி அன்னையே…
நீங்கள்
ஏற்றி வைத்த விளக்கு
இன்னும் அணையவில்லை.

என்
தனிமைக் கூட்டை கலைத்து
என்னை
புன்னகைக் காட்டுக்குள்
பூக்க வைத்தமைக்கு நன்றி.

அன்னை சிலிர்த்தாள்.
ஒரு சின்ன செயல்
ஓர் ஆன்மாவை
எப்படி ஆனந்தப் படவைத்திருக்கிறது
என
ஆனந்தித்தாள்.

45

Image result for mother teresa drawings

அன்னையின் பணியை
அங்கீகாரம் செய்து
வரிசையாய்
விருதுகள் வந்து விழுந்தன.

அன்னை
அவற்றில் வந்த பணத்தையெல்லாம்
வறுமை வயிறுகளுக்கான
பருக்கைகளாய்
உருமாற்றினார்.

உலகின் உயரிய விருதான
நோபல் பரிசு
அன்னைக்கு அளிக்கப் பட்டபோது
உலகமே ஆனந்தித்தது.

அந்த விழாவிலும்
தனக்கு பூங்கொத்துகள் தரவேண்டாம்
என்
அனாதைக் குழந்தைகளுக்கு
ஆகாரம் கொடுங்கள்.

எனக்கு
போர்வைகள் வேண்டாம்
அவற்றை
ஆதரவற்ற என் மக்களுக்குப்
போர்த்துங்கள் என்றாள்.

ஆடம்பர அடையாளங்களை
விடுத்து
அவசியமானதை
எடுப்போம் என்றாள் அன்னை.

அப்படியே,
பூங்கொத்துக்காய்
ஒதுக்கி வைத்திருந்த பணம்
பலரின்
கண்ணீர் முத்துக்களைத்
துடைக்க அனுப்பப்பட்டது.

46

போர் பற்றி
பரிசீலிக்காதீர்கள்.

அது
வெற்றியை தருவதேயில்லை.
ஆயுதங்கள் செய்யும்
காயங்களைப் பார்த்தால்
போரின் வீரியம் புலப்படும்.

அமைதியையே அனுமதியுங்கள்
போரை
புறக்கணியுங்கள்.

இது 1991ல்
புஷ் க்கும் சதாமுக்கும்
அன்னை அனுப்பிய விண்ணப்பம்.

வன்முறை வழிகள்
வாழ்வுக்கு யாரையும்
இட்டுச்செல்வதில்லை என்பதே
அன்னையின் நம்பிக்கை.

47

வீணாக்கப்படும் உணவைப் பார்த்தால்
உள்ளுக்குள்
கோபத்தின் தீ நாக்குகள்
உள்ளுக்குள் எழுகின்றன.

எத்தருணத்திலும்
கோபப்படுவதை
நான் விரும்பியதில்லை
ஆனால்
எத்தியோப்பியாவைப் பார்த்தபின்
எரிமலை எழுவதை
தடுக்க முடியவில்லை.

தயவு செய்து
உணவை வீணாக்காதீர்கள்.

இது
வாஷிங்டனில் அன்னை சொன்ன
வார்த்தைகள்.

48

கனவொன்று கண்டேன்.
சுவர்க்கம் செல்வதாக,

சுவர்க்க வாசலில்
எனக்கு
அனுமதிக் கதவுகள்
திறக்க மறுத்தது.

கதவுக்கு வெளியே
காத்திருந்தன கட்டளைகள்.

போ.
பூமிக்குத் திரும்பிப் போ.
இங்கே சேரிகள்
இல்லை.
ஆண்டவனோடான அன்பு
அயலானோடான அன்பு
இரண்டையும்
ஒன்றாய் பார்த்த உன்னதம்.
இதுவே
அன்னை வாழ்வின் மகத்துவம்.

49

அன்பு

0Image result for mother teresa drawings
அன்பு செய்வதும்
அன்பு செய்யப்படுவதுமே
கடவுள் இட்ட
நமக்கான பணி.

சுவர்க்கத்தின் சாலை
மண்ணில் மீதான
மனிதத்தின் பாதையே.

நாம் இங்கே
கட்டி எழுப்பும் மதிப்பீடுகள்,
மனித இதயங்கள்,
மோட்ச வாசலில்
மதிப்பு மிக்கதாய் இருக்கட்டும்.

0
இந்தியா அழகான தேசம்.

மெல்லிய மலர்கள்
கரம் நீட்டும் மரங்கள்.
சில்லெனும் நதிகள்
முகில் தட்டும் மலைகள்

எல்லாம் அழகு.
ஆனால்
அத்தனை அழகையும்
விஞ்சும் அழகு
அயலானில் இருக்கிறது.

0
அன்புக்கு
எல்லைகளே இல்லை.
சிலுவையில் இயேசு
காட்டியது
அன்பின் உச்சகட்ட வெளிப்பாடு,

மன்னிப்பைக் கற்றுக் கொள்ளாத
மனிதனால்
அன்பு செய்தல் இயலாது.

0

நாம்
எதையெதை சாதித்தோம்
என்பதல்ல,
எவ்வளவு அன்பை
தினசரி செயல்களில் காண்பித்தோம்
என்பதே
கடவுளுக்கான நம் அன்பை
அளக்கும் அளவீடுகள்.

0

அன்பு என்பது கனி,
அது
எல்லோருக்கும்
கைக்கெட்டும் தூரத்தில் தான்
காய்த்திருக்கிறது.

அதை எட்டிப் பிடிக்கும்
கரத்தை உருவாக்க,
செபமும்,
தியானமும்,
தியாகமுமே தேவை.

0

அன்பு
பெரிய செயல்களில்
வெளிப்படுவதில்லை.
சின்னச் சின்ன நிகழ்வுகளில்
அவை
வெளிவரும்.

உன் அன்பு
ஊருக்கெல்லாம் பயன்பட வேண்டும்
அன்பு செலுத்த
நீ பயப்படுதல் வேண்டாம்.

0

கடவுளை வாழ்த்துவதும்,
அவருக்கு
நன்றி சொல்வதும்
இன்றியமையான இரண்டு
செயல்கள்.

புன்னகையோடு பிறரை தீண்டு.
அன்பின் துவக்கம்
அதில் தான் துளிர்க்கும்.

புன்னகையில் தான்
சமாதானம் தன்
முதல் பாதச்சுவடை பதிக்கிறது.

0

பென்சில் எதையும்
சுயமாய் எழுதிக் கொள்வதில்லை
விரல்களே
வழிகாட்டுகின்றன.

நான்
ஒரு பென்சில்,

என்னைக் கொண்டு
இறைவன் எழுதுகிறார்
அவருக்குப் பிடித்தமான
அன்பின் வாசகங்களை.

0

துயரத்தில் இருப்போனை
சந்தித்து உரையாடுவதும்,

தனிமையின் உலகத்தில்
தள்ளாடுபவனை
தோள்சேர்த்து நடப்பதும்,

கூரை இல்லாமல் கரைவோர்க்கு
குடையாவது கொடுப்பதும்,

இல்லையேல்
பார்வையில்லா மனிதனுக்கு
பிரியமானதை படித்துக் காட்டுவதும்…

இவையே
கடவுளின் அன்பை
அன்னியனுக்கு
அறிமுகப்படுத்தி வைக்கும்
ஆன்மீகம்.

0
சமுதாய ஓட்டங்களின்
கடிகார அழைப்புகளால்,
நாம்
இல்லத்தின்
அத்தியாவசிய அரவணைப்பை
மறுதலித்து விடுகிறோம்.

வேர்களை வெட்டிவிட்டு
கனிதேடி
கிளைகளில் தாவுதல்
பயந்தருவதில்லை.

வீடுகளில்
அன்புப் பணியை ஆரம்பியுங்கள்.

0
அன்பு
வார்த்தைகளின் வெளிப்பாடு அல்ல.
அது
இதயத்தின் நிலைப்பாடு.

உண்மையான அன்பு
காயம் தரும்,
உன்னை
பாதுகாப்பு வளையத்துக்கு
வெளியே தள்ளூம்.
பெற்றுக் கொள் புன்னகையுடன்.

அந்த
வலிகளின் விளைநிலத்தில்
தான்
உண்மை ஆனந்தம் உற்பத்தியாகும்.

இயேசுவின்
சிலுவைச் சாவுக்கு
நாம் சொல்லும்
அர்ப்பண வாக்கியமாகவே
அப்பணியை நாம்
ஒப்புக் கொள்ளவேண்டும்.

0

கடவுள் காதுகளில்
அன்பின் வார்த்தைகளுக்கு மட்டுமே
அனுமதி கிடைக்கும்.

சுத்தமான அன்பு கலக்காத
அத்தனை செயல்களும்,
அத்தனை பணிகளூம்
வேரற்ற நிலத்தில் வீழும்
வீணான வியர்வைகளே.

0

என்னைப் பொறுத்தவரை,
அன்பில்லாத் தனிமையே
உயிர் கொல்லும் வலி,
மற்றதெல்லாம்
உடல் கொள்ளும் வலி.

அன்பிலிருந்து
துண்டிக்கப்பட்ட மனிதர்கள்,
நேசத்தின் தேசத்திலிருந்து
நாடு கடத்தப் பட்டவர்கள்,
இவர்கள்
உண்மையிலேயே ஏழைகளே.

சிலருக்கு
வயிற்றுக்கானது வழங்கப்படுவதில்லை.

இவர்களுக்கோ
நிம்மதிக்கானது நல்கப்படுவதில்லை.
0

நம்மால்
பெரிய செயல்களைப்
புரிதல் இயலாமல் போகலாம்
ஆனால்
சின்னச் சின்ன செயல்களை
பெரிய அன்போடு செய்ய முடியும்.

துளியளவு அன்போடு
செய்யப்படும்
கடலளவு பணியை விட,
கடலளவு அன்போடு
செய்யப்படும்
துளியளவு பணியே சிறந்தது.

0

அன்பின் வார்த்தைகள்
மிகவும் சாந்தமானவை
ஆனால்
அது
உருவாக்கும் எதிரொலியோ
எல்லைகளே இல்லாதது !

0

வரமுறைகள் இன்றி
அன்பு பகிர்தலே
ஆனந்தத்தின் அடிப்படை.

பொருளாதார
நெருக்கங்களால்
அந்த
ஆனந்த அருவிக்கு
அணைகட்டல் இயலாது !

0
நீங்கள்
ஏராளம் அன்பை
பெற்றுக் கொண்டவர்கள்,
கொஞ்சம் இரக்கத்தை
ஏழைகளுக்காகவும்
இறக்கி வையுங்களேன்.

உங்கள் அன்பு
குறைவு படப் போவதில்லை,
ஏனெனில்
நீ அறுக்க அறுக்க
கடவுள்
விலகாத அன்பை உன்னில்
விதைத்துக் கொண்டிருக்கிறார்.

0

அன்பு,
அளப்பதிலல்ல.
அளிப்பதில்.

0

50

குடும்பம் & குழந்தைகள்Image result for mother teresa drawings

0
சமுதாயத்தில்
நம்
புன்னகை விழாப் பிரதேசங்கள்
பரவக் காரணம்,
வீட்டுக்குள் நாம்
புன்னகை பயிரிடாததே.

குடும்பத்தோடான
உறவின் வெளிச்சமே
வீட்டுக்கு வெளியே
நம்
நேசத்தின் நீளத்தை நிர்ணயிக்கும்.

சேர்ந்திருப்போரை
நேசியுங்கள் முதலில்.
பின்
நேசம் கிடைக்காத மனிதரைச்
சார்ந்திருங்கள்.

0
குடும்ப வாழ்க்கையே
அடித்தளம்.

அர்பண உணர்வும்,
கீழ்ப்படிதல் குணமும்,
நிஜமான நேசமும்
ஏடுகளில் அல்ல
வீடுகளில் வளரவேண்டும்.

அடைகாக்கப்படாத
முட்டைகள்
உடையும்போது
சிறகு சிலிர்ப்பதில்லை.
0

மழலைகளின் பாடசாலை
இல்லம்,
அவர்களின் ஆரம்பப் பாடம்
பெற்றோரின் வாழ்க்கை.

அஸ்திவாரங்கள்
ஆழமானவையாய் இருக்க
வாழ்வை
செம்மைப் படுத்துங்கள்.

அழுகிய பழங்களையே
அறிமுகப் படுத்தி விட்டு
அழகிய பழங்களுக்காய்
சோணியோடு காத்திருத்தல்
நியாயமில்லையே.

அயலானை அன்பு செய்வதே
வாழ்வியல் பாடத்தின்
ஒரே வரி என்பதை
பிள்ளைகளுக்குப்
புரிய வையுங்கள்.

0

குழந்தைகள்
புன்னகையின் வல்லமையை
பாடபுத்தகத்தின் பக்கங்களில்
படிப்பதில்லை,
அவற்றைப் பயிற்றுவிப்பது
பெற்றோரின் பணி.

கவலைகளின் கதவுகள்
இல்லாத இல்லங்கள் இல்லை.
ஆனால் அவை நம்மை
உள்ளே இருத்திப்
பூட்டி விட்டுப் போகாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்.

வன்முறையோடு வாதிடாமல்,
புன்னகை பூண்டு
போராட பாலகரைப் பழக்குங்கள்.

0
யாரேனும் நோயாளி
உங்கள் இல்லத்தில் இருந்தால்
அருகில் இருங்கள்.

அவர்கள் கரம் பிடித்து
ஓர்
புன்னகையோடு அருகிருங்கள்.

அதுவே
மனப் பிணி தீர்க்கும்
உன்னதப் பணி.
0

வீதிகளின் முதியோரை தேடும் முன்
நம்
வீடுகளின் முதியோரைத் தேற்றுவோம்.

சேரிகளின் துயரத்தைத்
தீர்க்கும் பணி தேவை தான்
ஆனால்,
குடும்பத்தின்
துயரத்தைத் துரத்துவதே
அடிப்படை என ஆகட்டும்.

இல்லத்தில் பெற்றுக் கொள்ளாத
எதையும்
வீதிகள் விற்றுச் செல்ல முடியாது.

குடும்பத்தில் கற்றுக் கொள்
அதை
சேரிகளுக்குள் வினியோகி.

நமக்கான ஆலயம்
அன்பை தளும்பத் தளும்ப
ஊற்றி நிறைத்த குடும்பங்கள் தான்.

0
ஆதரவற்றோராய்
உன் இல்லத்தில் யாரேனும்
விடப்பட்டால்,
உன் வாழ்க்கை
மறுகணம் இறக்கிறது.

குடும்ப வாழ்க்கையில் தான்
வாழ்வின்
மகத்துவமே இருக்கிறது.

0
வாழ்க்கை குறித்த
அன்னையின் வார்த்தைகள் இவை.

வாழ்க்கை ஓர் வாய்ப்பு
பயன்படுத்திக் கொள்.

வாழ்க்கை அழகானது
மனமார ரசி.

வாழ்க்கை ஒரு சொர்க்கம்
சுவைத்துப் பார்.

வாழ்க்கை ஓர் கனவு
புரிந்து கொள்.

வாழ்க்கை என்பது சவால்
எதிர்கொள்.

வாழ்க்கை என்பது பணி
சரியாய் முடி.

வாழ்க்கை ஓர் விளையாட்டு
விளையாடு.

வாழ்க்கை விலையுயர்ந்தது
கவனித்துக் கொள்

வாழ்க்கை என்பது செல்வம்
பாதுகாத்துக் கொள்

வாழ்க்கை என்பது அன்பு
மகிழ்.

வாழ்க்கை ஒரு ரகசியம்
தெரிந்து கொள்.

வாழ்க்கை ஒரு உடன்படிக்கை
நிறைவேற்று.

வாழ்க்கை கவலைகளால் ஆனது
கடந்து வா.

வாழ்க்கை ஓர் பாடல்
பாடு.

வாழ்க்கை தடைகளால் ஆனது
ஒத்துக் கொள்.

வாழ்க்கை ஒரு துயரம்
தயங்காதே.

வாழ்க்கை ஒரு சோதனை
தைரியம் கொள்.

வாழ்க்கை என்பது வாழ்க்கை
சேமித்து வை.

வாழ்க்கை என்பது அதிர்ஷ்டம்
எட்டிப்பிடி.

வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது
அழித்து விடாதே.

51Image result for mother teresa drawings

பெண்கள் & கருக்கலைப்பு
0

வாழ்க்கை.
கடவுள் நமக்களித்த பரிசு.
அது
கருவிலேயே நமக்கு
கடவுளால் நல்கப்படுகிறது.

நசுக்கப்படும்
ஒவ்வொரு
பிறக்கும் முன் இறக்கும்
குழந்தையின் கதறலும்
கடவுள் காதை எட்டும் !

0

கருவில் உருவாகும் போதே
கடவுளின்
பிம்பத்தை அழிக்காதீர்.

குழந்தைகளை
ஏற்றுக் கொள்பவன்,
இயேசுவையே ஏற்றுக் கொள்கிறான்.

எல்லா குழந்தைகளும்
இயேசுவின் பிம்பங்களே,
சிசுக்கொலை என்பது
இயேசுவை மீண்டும்
சிலுவையில் அறைதலே.

0

ஏழைகளின் வாழ்வின்
ஒரே மகிழ்ச்சி குழந்தைகள்.
அவர்களின்
வருத்தத்தின் வடுக்களை
பிடுங்கி எறியும் வல்லமை
மழலைப் புன்னகைக்கு உண்டு.

வறுமைக்குப் பயந்து
கருக்கலைப்பு செய்தலே
ஏழ்மையின் உச்சம்.

0

சட்டங்களாலோ
சந்தர்ப்பங்களாலோ
அல்ல,
இதயத்தின் ஆழத்தில் சிந்தியுங்கள்.

கடவுளின் பரிசை
பாதி வழியிலேயே
திருப்பி அனுப்பலாமா ?

கர்ப்பம் வரை வந்த
கருணை மழையை
கருணைக் கொலை செய்யலாமா ?

கடவுளின் உயிர் மூச்சை
நிர்ப்பந்தமாய்
நிறுத்தலாமா ?

கரங்கள்,
உயிர்கொலைக்காய் உயர்வதை
வெறுக்கிறேன்,

0

பிறக்காத பிள்ளைகள்
கடவுளோடு
கலந்து இருப்பவர்கள்.

மருத்துவ மனைகள்
அவர்களின்
உயிரை எடுக்க வேண்டாம்.
முகவரியற்ற மழலைகளை
என்
கரங்களில் கொடுத்து விடுங்கள்.

எங்கள்
குழந்தைகள் விடுதி
ஆயிரக்கணக்கான மொட்டுகளை
விரியவைத்து
பூமியின் வாசனையை
நுகரவும் வைத்திருக்கிறது.

0

கருக்கலைப்பு,
சுயநலத்துக்காய்
நடத்தப்படும்
பாவத்தின் படுகொலை.

கருக்கலைப்பை
அங்கீகரிக்கும் நாடுகள்
படுகொலையைப்
பகிரங்கமாய் ஆதரிக்கிறன்றன.

வன்முறைக்கு
வரவேற்புப் பத்திரம்
வாசிக்கின்றன,
சாவை
சரியெனச் சொல்கின்றன

0

போர்களில் பாலகர்கள்
கொல்லப்படுவதற்குக் கவலைப்படும்
சமூகம்,
கருவறையில் நடக்கும்
கதறல் கொலைகளுக்கு
நியாயம் கற்பிப்பதெப்படி ?

0

கருக்கலைப்பை
நியாயப் படுத்தும் தேசம்
வன்முறையை வரவேற்கிறது,

0

பெண்கள்
இல்லத்தின் இதயம்.

மகளிர் தங்கள் மகத்துவத்தை
உணரவேண்டும்,
அன்பு செய்வதும்
அன்பு செய்யப்படுவதுமே
உலக சமாதானத்தின்
இசையை
திசைகள் எங்கும் இசைக்கும்.

52

செபம் & மதம்

0
கடவுள் ஒருவரே,
அவரே
அனைத்திற்கும் ஆண்டவர்.

ஒரு இந்து
நல்ல
இந்துவாக மாற வேண்டும்.

ஒரு இஸ்லாமியர்
சிறந்த
இஸ்லாமியர் ஆகவேண்டும்.

ஒரு கிறிஸ்தவன்
நல்ல
கிறிஸ்தவன் ஆகவேண்டும்.

இதுவே
என் மன விருப்பம்.
0

செபத்தின் இறுதி நிலைRelated image
அல்ல அன்பு.
அன்பு தான்
செபத்தின் முதல் நிலையே !

ஆண்டவரோடான
அன்பின் முதல் நிலை.

0

எல்லா பிணிகளுக்கும்
மருத்துவ நிலையங்கள்
முற்றுப் புள்ளி வைக்கலாம்.
ஆனால்,
கைவிடப்பட்ட மனங்களின்
காயத்தை
எந்த மாய மருந்தும்
காய வைக்காது.

அவர்களுக்குக் கைகொடுப்பதே
ஆன்மீகத்தின்
அத்தியாவசியப் பணி.

0

செபியுங்கள்.
அதுதான்
உள்ளக் கவலைகளுக்கும்,
உலகத்தில்
உள்ள கவலைகளுக்கும்
ஓரு சிறந்த மருந்து.

அதிக
அதிகமாய் செபி.

செபம்,
வார்த்தைகளின் நீளத்தால்
அளக்கப்படுபதில்லை,
அது
மனதின் ஆழத்தில் முளைத்தால்
மட்டுமே
மதிப்பளிக்கப்படும்.

0

தூய்மையான இதயமே
செபத்தின் முதன்மைத் தேவை.
தூய்மையான இதயத்தில்
மட்டுமே துவங்கும் அன்பின் சேவை.

0

ஓய்வில்லாத
பரபரப்புத் தேடல்களில்
ஆண்டவன் அகப்படுவதில்லை.
அவர்
அமைதியான
ஆழ்மன செபங்களில் தரிசனம் தருவார்.

அமைதியான செபங்களே
வீதிப் பணிக்கான
வீரியம் தருபவை.

அதிகமாய் பெற்றுக் கொள்ளும்
இறை அருள்,
அதிகமாய்
சமூக இருள் அகற்ற உதவும்.

0

இறைவா,
என்றும் உன்னில் நிலைத்திருக்க
வரம் தா.
ஏழைகளுக்கு உதவ
ஏராளம் கரம் தா.

உம்
வானக வரமான
பூமியின் பாலகர்களை
அன்பில் வளர்க்கும் வரம் தா.

0

செபியுங்கள்,

இறை விருப்பம் அறியும்
விளக்குக்காகவும்,
இறை விருப்பத்தை
ஏற்றுக் கொள்ளூம்
பக்குவம் வேண்டுமென்றும்,
ஏற்றுக் கொண்டதை
செயல் படுத்தும்
இதயம் வேண்டுமென்றும்

செபியுங்கள்

0

அனைத்தையும் இழந்தாலும்
ஆனந்தப் படுங்கள்,
இயேசு இதயத்தில் இருந்தால்.

அனைத்தும் இருந்தாலும்
கவலைப் படுங்கள்
அவர் அகத்தில் இல்லையேல்.

0

தூய்மையற்ற இதயம்
ஆண்டவனை தேடி அலையும்.
தூய்மையான இதயம்
அவரை
அயலானில் கண்டு பிடிக்கும் !.

செபமே
கலவை எண்ணங்களை
சலவை செய்து,
இதயத்தை தூய்மையாக்கும்.

0

நாம் செயல்களை
இறைவனின் கண்கள் காணத்தவறாது.
இறைவனின் செயல்களை
நம் கண்களால்
காண இயலாது.

உறுதியாய் ஒன்று
சொல்லச் சொன்னால்,
கடவுள்
தவறு மட்டும் செய்வதே இல்லை.
என்பேன்

0

விசுவாசத்தின் செயல் நிலை
அன்பு.

அன்பின் செயல் நிலை
பணி,

அந்த பணிகளின் வழியே
நாம்
இறைமகன் இயேசுவோடான
உறவைப் புதுப்பிக்கிறோம்.

0

கடவுளைத் தேடும் கண்களை
கண்டிருக்கிறீர்களா ?
இல்லை
பார்வையில்லா விழிகளோடு
பாதைகளைத் தாண்டியிருக்கிறீர்களா ?

உண்மை இது தான்,
கண்கள் உங்களுக்கு இருக்கின்றன
ஆனால்
காண வேண்டுமென்று
விரும்பும் வரை
நீங்கள் எதையும் காண்பதில்லை !

பசித்திருப்பவனில்
இயேசு இருக்கிறார்
அவர் அன்பை சம்பாதியுங்கள்.

0

ஒப்புரவு,
இதயத்தை துப்புரவு செய்யும்.
இறைவனோடு
உட்காரச் செய்யும்.

இயேசுவோடு
நமக்கிருக்கும் அன்பை
வெளிப்படுத்தும்
செயல்களே வாகனங்கள்.

நேர்மையான வாழ்க்கையே
ஆண்டவன் அன்பை
பிரதிலிக்க வேண்டும்.
வார்த்தை சுமக்கும்
பல்லக்குகள் அல்ல.

0

யாரும்
அனாதைகள் அல்ல.
ஆண்டவர் அன்பு செய்கிறார்
அனைவரையும்.

அதை
உலகம் முதலில் உணரட்டும்

0

மனிதர்களுக்காக
மண்ணில் புனிதர்களாக
வாழ்வதே,
வானகத் தந்தைக்கு
நாம் இசைக்கும் வாழ்த்துக் கீதம்.

இறையழைத்தல்
உனக்குள் நடந்தால்
ஒற்றை வாக்கியத்தால் ஒத்துக் கொள்,
அதற்கான
வாழ்க்கையை வகுத்துச் செல்.

செபம்,
அதுவே முதலும் முதன்மையும்.

0
சிலுவையில்
உயிர் பிரியும் நேரத்தில்
இயேசு

ஒற்றை வார்த்தை உதித்தார்
“தாகமாயிருக்கிறேன்”.

அது ஆன்மீக தாகம்.
இறைப்பணிக்கு மனிதர் தேவையெனும்
கடவுளின்
தேடலில் வார்த்தைகள்.

அனைத்தையும் இறைவனில்
அற்பணித்து விடுதலே
அற்புத செபம்.

0

அமைதி என்பது
ஆண்டவனோடு ஒன்றித்திருத்தல்.
செபம்
இறைவனோடு பேசுதல் மட்டுமல்ல
கடவுள் பேசுவதை
கேட்பதும் செபமே.

அமைதி தான்
நம்மைச் சுற்றி இருக்கும்
புகை மண்டலங்களை விலக்கி
ஆண்டவனை
கண்களுக்குக் காட்டுகிறது.

அமைதி தான்
நம்மைச் சுற்றிக் கிடக்கும்
சத்தங்களைக் கழுவி
தேவ வார்த்தைகளை
தெளிவாய் செவிகளுக்குள்
விழ வைக்கிறது.

அமைதி தான்
நம்மை நாமே கண்டெடுக்கும்
ஒரு தளம்.
சுயத்தை இதயத்தில் ஓடவிடும்
ஆடுகளம்.

அமைதியான புலன்களே
இறைவன் தங்கும் கலன்கள்.

இறைவன் வாழ்கிறார் என்பதை
விவிலியம் சொல்லலாம்
ஆனால்
நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும்.
செயல் எனும் கருவிகளால்.

எல்லோராலும் எல்லாம் செய்ய
இயலாது,
ஆனால்
எல்லோரும் சேர்ந்தால்
இயலாதென்பதே இருக்காது.

0

மதம் என்பது
உணர்வு நிலை.
இறைவனை உணரும் நிலை.
பரமனை புகழும் நிலை.
அது
தொட்டுப் பார்த்துத் தெரிவதல்ல.

மதம் என்பது
ஓர் வாழ்க்கை முறை.
தலைமுறை தலைமுறையாய்
இது
தவறாய் தான்
புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

மதம் என்பது மனநிலை.
எந்த
சட்டங்களும்
அது தரும் மகிழ்விலிருந்து
மனிதனைப் பிய்த்தெறிய முடியாது.

0

கடவுளுக்கு
ஏராளம் பெயர்கள்
ஈஸ்வரன் என்றும் அல்லா என்றும்.
ஆனால்
அத்தனை கடவுளர்களும்
விடுப்பது
ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும்.

அன்பு செய்,
அன்பு செய்யப்படு.

மதம் மனிதனின்
சுதந்திர உரிமை.
அதை உடைக்காதீர்கள்.
மதம்
மனிதனின் வாழ்க்கைப் பாதை
ஆணைகளால் அடைக்காதீர்கள்.

0

தியாகம்
தன்னளவில் சாதாரணம்.
இறையில் இணையும்போது
அது
விண்ணளவு
விஸ்வரூபம் கொள்கிறது.

இயேசு
என்ன தருகிறாரோ அதை
அப்படியே பெற்றுக் கொண்டு,
எதைப் பெற்றுக் கொள்வாரோ
அதை
அப்படியே அளிப்பதே
என் வாழ்வின் இரு வரி விளக்கம்

0
செபம்
நம்பிக்கையை ஊட்டும்
நம்பிக்கை
அன்பை வேண்டும்
அன்பு
தொண்டு செய்யத் தூண்டும்
செபியுங்கள்.

0

இறைவா,
உலகெங்கும் சென்று
மனிதம் பரப்பச் சொன்னாய்.

பணி தேவையான இடத்தில்
எங்களை
தங்கச் சொன்னாய்.

சேரமறுக்கும் செங்கல்களை
சாந்தியின் சாந்து கொண்டு
சேர்த்துக் கட்டி
அன்பின் ஆலயங்கள்
கட்டியெழுப்பச் சொன்னாய்.

வலிமை கொடு எங்களுக்கு.
உயிராய் இருக்கவும்.
உதிராதிருக்கவும்.

0

நம்முடைய இதயம்
எந்த அளவுக்கு திறக்கிறதோ
ஆண்டவன்
ஆசீர் அந்த அளவுக்கு
உள் சென்று உட்காரும்.

மனசை மூடி வைக்காதீர்கள்
திறவுங்கள்
தேவன் நுழையட்டும்.

அன்பின் சிம்மாசனங்களை
ஆயத்தமாய் வையுங்கள்
ஆண்டவன் வந்து ஆளட்டும்.

0
இயேசுவே,
எங்களை
சாவின் சாலையிலிருந்து
வாழ்வின் வீதிக்கு
வழிநடத்தும்.

உடலின் தேவைகளிலிருந்து
உண்மையின் தேடல்களுக்கும்,

அவநம்பிக்கையின்
தயாரிப்பு சாலையிலிருந்து
நம்பிக்கையின்
நகரத்துக்கும்,

பயத்தின்
பள்ளத்தாக்கிலிருந்து
விசுவாச வானத்துக்கும்,

விரோதத்தின் இருளிலிருந்து
அன்பின் தெளிவிற்கும்,
வழிநடத்தும்.

உலகம்
ஆயுத மேடைகளை அழித்து
அமைதியின் அறைகளை
நிறுவட்டும்.

ஆமென்.

53

மரணம்
மரணம் நம்மை
அதிர்ச்சிக் கடலில்
அமிழ்த்தக் கூடாது.
நாம்
புனித வாழ்க்கை வாழவில்லை
என்பது மட்டுமே
நம்மை
அதிர்ச்சிக்குள் அமிழ்த்தட்டும்

நான்
எனக்களிக்கப்பட்ட
வாழ்க்கையின் தடையங்களைத்
திரும்பிப் பார்க்கிறேன்.

சிலருக்கு
ஆறுதலை அறிமுகப் படுத்தியதும்,

பலருக்கு
புன்னகைக்கக்
கற்றுக் கொடுத்ததும்

இனியும்
இயலும் நாள்கள் வரை
இதையே தொடரும்
இதயம் இருப்பதும்,
என்
பிறப்பைக் கொஞ்சம் அர்த்தப்படுத்தலாம்.

54

வறுமைச் சமுதாயம்

0Image result for mother teresa drawings
நம் நிராகரிப்பின்
மிச்சம்
ஆகாரம் தீண்டாத வயிறுகள்.
ஆனாலும்,
ஏழ்மையின்
உச்சமோ,
அன்பு தீண்டா மனங்களே.

இரண்டும் சேர்ந்த மனிதர்களை
காக்காமல் கடப்பது,
இறைவனின் அன்புக்கு
எதிரான செயல்.

0
ஒவ்வொரு முறை
ஏழையின் பசி தீர்க்கும் போதும்,
ஆதரவாய் அருகே
வந்தமரும் போதும்,
பாயில் படுத்திருக்கும்
நோய் தீர்க்கும் நிமிடங்களிலும்,
தொழுநோயாளியை
தொட்டுத் தழுவும் போதும்,
நாம்
இறைவனுக்கே இவற்றைச் செய்கிறோம்.

ஒருவன்
ஏழ்மையில் பிறந்து
ஏழ்மையிலேயே இறப்பது
கடவுளின் விருப்பத்தினாலல்ல,
நம்
பகிர்தலின் விருப்பமின்மையால் தான்.

ஏழைக்கு உணவோ
குளிருக்காய் ஆடையோ,
புண்ணுக்கு எண்ணையோ,
அனாதைக்கு அன்போ
நீ
மறுதலித்து நகரும் போதெல்லாம்,

நீ
ஆண்டவனை
அடையாளம் காணாமல்
அகன்று போகிறாய்.

0

ஏழ்மையின் சாலையை
நீ
கடக்க நேரும்போதெல்லாம்,
ஒரு முறை
அந்த ஏழையின்
உண்மையை உள்ளுக்குள் உணர்.

உண்மை உணர்தலே
உதவி புரிதலில் முதல் படி.

0

இதயத்தில் இதை
அழுத்தமாய் எழுதுங்கள்.

ஏழைக்குத் தேவை
உங்கள் அனுதாபமல்ல,
அன்பு.

அவனுக்கு,
மனிதனுக்கான மரியாதையை
மறுதலிப்பது
மனித நேயம் அல்ல.

ரொட்டி கொடுக்கும் கைகளை
விட
தட்டிக் கொடுக்கும் உள்ளமே
முதல் தேவை.

0

பாதையோர ஏழையைப்
பார்த்தால்,
ஆகாயம் பார்த்து
அகன்று போகாதே,

குறைந்த பட்சம்
ஓர்
புன்னகையை கொடுத்துப் போ.

0

பிச்சையிடுதல்
அன்பின் வெளிப்பாடு அல்ல,
அது
அனுதாபத்தின் அடையாளம்.

அன்போடு
உதவு.
உதவும் போதும் அவனை
உன்னைப் போலவே கருது.

கடவுள்
ஆனந்தத்துடன் வழங்குவோரை
ஆசீர்வதிக்கிறார்.

வழங்கும் பொருள்
புன்னகை சேர்க்கும் போது
பலமடங்கு
உயர்வடைகிறது.

0

இறைவனின் மகிழ்ச்சியை
இதயத்தில் நிறுத்துங்கள்,
சந்திப்போருக்கெல்லாம்
அதை
வஞ்சகமின்றி வழங்குங்கள்.

0

ஏழ்மை
மதிக்கப்பட வேண்டியதோ
அனுமதிக்கப் பட வேண்டியதோ
அல்ல.

அது ஓர் அவலம்.
சமுதாய நீதி காக்கப்பட வேண்டும்.

காந்திய பார்வை
காக்கப் படவேண்டும்
மனித வள மேம்பாடுகள்
வளர வேண்டும்.

அன்னையின்
அரசியல் பார்வை இது.

0

பசியை
ஓர் ரொட்டித் துண்டு
வெட்டி எறிய இயலும்.

ஆனால்
அன்பில்லா வறுமையை
நிரப்புதலோ மிகவும் கடினம்.
அதற்கு
அற்பண உள்ளங்கள் வேண்டும்.

0

கடவுள்,
பூமி மக்கள் முழுவதும்Image result for mother teresa drawings
உடுத்தவும் உண்னவும்
போதுமான வளங்களை
பரிசளித்திருக்கிறார்.

நம்மில் பலர்
நாய்களையும் பூனைகளையும்
கவனிக்கும் பரபரப்பில்
பாதையோர ஏழைகளை
பொருட்படுத்தவும் மறந்து விடுகிறோம்.

0
நாம் ஏழைகளுக்குக்
கொடுத்திருப்பதை விட,
ஏழைகள்
நமக்குத் தந்திருப்பதே அதிகம் !

அவர்கள் இதயம்
வலிமையானது,
அவர்களின் நாவுகள்
சாபங்களை வெளியிடுவதுமில்லை,
குற்றச்சாட்டுகளை
கோத்து வைப்பதுமில்லை.

0

சாலைகளில் நிற்கும் போது
சுவரொட்டிகளில்
சிரிக்கும்
விளம்பரங்களைப் பார்க்கிறீர்கள்.

கடைகளின்
இடைகளில்
தொங்க விடப்பட்டிருக்கும்
புத்தகங்களைப் புரட்டுகிறீர்கள்.

ஏன்
கீழே குனிந்து
சாலை மனிதனைப் பார்க்க
மறுக்கிறீர்கள் ?

இது அன்னை
நம்மை நோக்கி நீட்டும்
ஓர் வினா !

நம் விடைகளோ
விடைபெற்றுப் போய்விட்டன.

0

கருணையில் செய்யப்படும்
தவறுகள்,
கருணையின்றி செய்யப்படும்
அதிசயங்களை விட
உயர்வானதே.

எனவே,
கருணைச் செயல்களை
ஆரம்பியுங்கள்,
தவறு நேருமோ எனும்
இடறலைத் துரத்துங்கள்.

அயாலானுக்கானத மட்டுமே
மனதின் கூடைகளில்
நிறைத்து வையுங்கள்.
அப்போது உங்கள்
முகமும் வாசனை வீசும்.

புனிதம் என்பது
புன்னகையோடு செய்யப்படும்
பரமனின் பணியே.

0

தேசமெங்கும்
தேவைகள் இருக்கின்றன.
தேடிச் செல்லும்
கைகள் தான் இல்லை.

அவசியமேற்படும் நேரங்களில்
அரசாங்கத்தை
எதிர்பார்க்காதீர்கள்.

நீங்களே
முதல் சுவடு எடுத்து வையுங்கள்
மனிதனுக்கு மனிதன்
உதவும் வேகத்தில்
எந்த அரசும் உதவ முடிவதில்லை.

மயில் ஆடும் வரை
மழைமேகம் காத்திருப்பதில்லை.

55

பணியாளர்க்கான அறிவுரைகள்Image result for mother teresa drawings

0

யாரையும் சபிக்காதீர்கள்,
வசைச் சொற்களை
யார் முகத்திலும் வீசாதீர்கள்.

எல்லோரும்
பரமனின் புனிதக் கைகள்
செய்து வைத்த
சிற்பங்களே.

தவறுகளைக் கண்டுபிடித்து
பட்டியல் தயாரிப்பதோ,
புறணி பேசும்
கூட்டம் சேர்ப்பதோ,
யாரையும் காயம் செய்வதோ
அல்ல நம் பணி.
நம் பணி, பணி செய்வதே !

பாவங்களைக் கழுவும்
பரமனே
சீடர்களின் பாதங்களைக்
கழுவினார்…
பணி வாழ்வு
பணிவு வாழ்வு என்பதைச் சொல்லவும்,

தன்னைத் தாழ்த்துவதே
உயர்வானது என்பதை
உணர வைக்கவும்.

எங்கோ வானில் பறப்பதல்ல
நம் பணி.
ஏழையோடு ஏழையாய் பிறப்பதும்
ஏழைக்காய்
ஏழ்மையோடு இறப்பதுமே.

0

ஒரு
சிறு புன்னகை
பெற்றுத் தரும் பேறுகளை
கற்றுக் கொள்வதில் இருக்கிறது
வாழ்வின் விளக்கம்.

0

ஏழ்மை அழகானதல்ல,
ஆனால்
அந்த ஏழ்மையிலும்
வாழ்வின் மீது மனிதன்
வைத்திருக்கும்
புன்னகை கலந்த நம்பிக்கை
மிகப் பெரிது !

ஏழைகளை நேசியுங்கள்
ஏழ்மையை அல்ல.

சாலையோரத்தில் கிடப்பதால்
மனிதர்கள்
ஏழைகள் ஆவதில்லை.
ஏழைகளாய் இருப்பதால்
அவர்கள்
சாலை வாசிகள் ஆகிறார்கள்.

அவர்களிடையே
அரசியல் மாற்றங்கள் குறித்த
அறிவு இருப்பதில்லை,
இலக்கியங்கள் குறித்த
விவாதங்கள் எழுவதில்லை

அவர்களுக்கு
விஞ்ஞானத் தொழில் நுட்பங்கள்
விளங்குவதில்லை.
ஆனால்
நாளைகளைக் குறித்த
நம்பிக்கைகள் இருக்கின்றன.

அவர்களை நேசியுங்கள்.
அவர்களின்
நம்பிக்கை மரத்தடியில்
கொஞ்சம்
நிழலையேனும் நிறுத்திச் செல்லுங்கள்.

0

சேரிகளில் சில
சிரிப்புச் சத்தங்களை
எழ வைப்பதை விட
அழகிய பணி ஏது ?

0

எயிட்ஸ் நோயாளிகளை
தீர்ப்பிடாதீர்கள்.
அவர்களின்
வாழ்க்கையை விமர்சிக்காதீர்கள்.

உதவுங்கள்.
கூடுகளிலிருந்து
கொத்தி விரட்டப்பட்ட
சிறகில்லா பறவைகள் அவர்கள்.

தரையிலிருந்து பிடுங்கி வீசப்பட்ட
தாவரங்கள்.

அதுவும்
சொந்த வீட்டிற்கே
அன்னியமாகிப் போகும் அவஸ்தை
வலிகளிலேயே
பெரிய வலி.

உங்கள் பணி
விசாரணைக் குழு வைப்பதல்ல,
ஆறுதல் அளிப்பது.

யாரும்
ஒதுக்கப்படுதல்
ஆண்டவனுக்கு உகந்ததல்ல.

0

தாழ்மையான இதயத்தை
உங்களிடம்
தங்க வைத்துக் கொள்ளுங்கள்.

அப்போது தான்
பாராட்டுப் பருந்துகள்
உங்களை
கொத்திச் செல்வதுமில்லை.

எதிர்ப்பு எருதுகள்
உங்களை
குத்திக் கொல்வதும் இல்லை.

0

இல்லாமை ஒரு குறையல்ல.
நாம்
பொருளாதார அடர்த்தியை வைத்தே
மகிழ்வை
எடையிடுகிறோம்.

அது தவறு.
பலருக்கு
அது புரிவதில்லை.
தொலைக்காட்சி
இல்லையென்றால் கூட
மகிழ்வாய் இருக்க இயலாது
என்கிறார்கள்.

56

அன்னையிடம்
ஒரு முறை ஒரு பேட்டி கண்டனர்.

“காலையில் செய்வது என்ன ”

செபம்

“எப்போது ?”

நாலரை மணிக்கு

“அதற்குப் பின் ?”

செபம் தந்த வலிமையில்
இறைமகன் இயேசுவோடு
பணிக்குச் செல்வோம்…

” உங்கள் பணியின் ஆன்மீகப் பின்பலம் ?”

மனிதனில்
இறைவனைக் காண்பது

“பெண்களால் தான் இது முடியுமா ?

உங்களாலும் முடியும்.

” அன்னை என்றால் தானே அதிக ஆதரவு ? ”

உதவிக் கரங்கள் வருவது
என்னைக் கண்டல்ல,
எங்கள் பணிகளைக் கண்டே..

” நீங்கள் மகத்துவமானவர்”

இல்லை.
பலவீனமானவள்.
இறைவன் பலப்படுத்துகிறார்.

” சிறப்பான தகுதிகள் ஒன்றுமே இல்லையா ?”

நான் வெறும் பென்சில்
எழுதுபவர் இறைவனே !

” ஏழைகள் ? ”

ஆண்டவனின் பிம்பங்கள்
நான்
இயேசுவோடு இருப்பதை
உறுதிப் படுத்தியவர்கள்.

” என்ன மாற்றம் செய்தீர்கள் ”

மதங்களைக் கடந்த மனிதர்களை
ஒன்றிணைத்தோம்
மனிதப் பணிக்காக.

” எப்படி உதவுவீர்கள் ”

சின்னச் சின்ன செயல்கள்.
தளும்பத் தளும்ப நேசம்.

” மதங்கள் பற்றி.. ”

எல்லா மதங்களையும் நேசிக்கிறேன்.
நான்
கிறிஸ்துவில் வசிக்கிறேன்.

” மதமாற்றம் பற்றி..”

நான் எண்ணிக்கையில்
நம்பிக்கை உள்ளவள் அல்ல.
பணிகளில் மட்டுமே கவனம்.
மாற்றம் என்பது
மனங்களில் எழுவது.

“கருக்கலைப்பு பற்றி…”

குழந்தையைக் கொல்லும் தாய்
வன்முறையின் உச்சம்.
தேசத்தின் அவமானம்.

” பணக்காரத்தனம் பற்றி..”

அதிகமாய் உள்ளவன்
அதிக அலுவல்களில் இருப்பான்
குறைவாய் உள்ளவன்
சுதந்திரமாய் இருக்கிறான்
கொடுப்பதிலும்.

” பிடித்த இடம்..”

மரணப் பிடியில் உள்ளோர்க்காய்
உள்ள தூய இல்லம்.

” ஏழைகள் எப்படி மகிழ முடியும்..”

பணம் மகிழ்வைத் தரும் என்பது
தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும்
தவறான பாடம்.

” எதிர்காலத் திட்டம்…”

இன்றைய நாளை
இறைப் பணிக்காய் ஒப்படைப்பதே
இப்போதைய தினசரித் திட்டம்.

57Image result for mother teresa drawings

அன்னை தன் வாழ்நாளில்
24 புத்தகங்கள் எழுதினார்
எல்லாமே
அன்பு தேவை என்பதையே
அறிவுறுத்தின.
0
பத்மஸ்ரீ,
போப்பாண்டவரின் அமைதிக்கான விருது,
நல்ல சமாரியன் விருது,
கென்னடி விருது,
ஜவஹர்லால் நேரு விருது,
கொருனா டத் விருது,
டெம்பில்டன் விருது,
மாகிஸ்ட்ரா விருது,
ஆல்பர்ட் ஸ்விட்சர் விருது,
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கெளரவ டாக்டர் விருது,
நோபல் பரிசு,
பெல்ஜியத்தின் புரூசல்ஸ் பல்கலைக்கழக கெளரவ டாக்டர் விருது,
பிரசிடன்ஸியல் மெடல்,
கெளரவ அமெரிக்க குடியுரிமை ( இந்த பெருமை பெறும் உலகின் 4வது நபர் ),
காங்கிரசனல் தங்கப் பதக்கம்.

அவை அன்னை பெற்ற விருதுகள்
0
1.

நிராகரிப்புகளும்
மறுதலிப்புகளும்
புதிதல்ல.

இயேசுவின்
ஜனன காலத்தில்
ஜன்னல்களை அடைத்துக் கொண்டன
வீடுகள்.

கதவுகளே இல்லா
தொழுவம் மட்டுமே
கரம் கொடுத்தது.

போதனைக் காலத்தில்
போதகர்களால் புறக்கணிக்கப் பட்டார்.

மரண காலத்தில்
மனம் கவர்ந்த மனிதர்களாலேயே
மறுதலிக்கப் பட்டார்.

திடீரென
சீசரும், பரபாசும்
பாசத்துக்குரியவர்களாகி விட
இயேசு
பரிதாபத்துக்குரியவராக்கப் பட்டார்.

புறக்கணிப்புகள்
தவிர்க்க முடியாதவை என்பதும்,
நிராகரிப்புகள்
நிலைப்பதில்லை என்பதும்
இயேசுவின்
வாழ்வும், உயிர்ப்பும் சொன்ன
வாழ்வியல் பாடங்கள்.

எனவே,
நிராகரிப்புகள் எண்ணி
கரங்களை நறுக்கிக் கொள்ளாதீர்கள்
நீட்டுங்கள்.
ஏழையின் விரலுக்கு
எட்டும் வரை.

பரமனே சொல்கிறார்
தூய இதயம் உள்ளோரே
பாக்கியவான்கள்.

58

நல்ல செயல்கள்
நடைபெறும் இடங்களிலெல்லாம்
எதிர்ப்புக்கள்
எழுவதும் வழக்கம் தானே.

அன்னையை நோக்கியும்
எதிர்க்க மட்டுமே பழக்கப்பட்ட
எதிர்வினைவாதிகள்
எதிர்ப்புகளை உதித்தனர்

அன்னையின் தூய பணியை
குறிவைத்துக் குதித்தன
குறை சொல்லும்
கங்காருக் குட்டிகள்.

அன்பளிப்புப் பணத்தை எல்லாம்
அமுக்கிவிட்டாள் அன்னை
என்று ஒரு புறம் கூச்சல்.

கருக்கலைப்பு,
விவாகரத்து
கூடாதென்று கூறுதல்
சமுதாயக் குற்றமென்று
இன்னொரு புறம் பாய்ச்சல்,

நடுத்தர வர்க்கத்தினரை
நிராகரிக்கிறாள்
என்று இன்னொரு
கூட்டத்தினரின் குற்றச் சாட்டு…

பழி சொல்ல மட்டுமே
பழக்கப்பட்ட பரம்பரையினர் சிலர்
இங்கெல்லாம்
ஏன அன்னை பணிபுரியவில்லை
என
பட்டியல் நீட்டி கேள்விகளை வீசியது.

இவர்களில் பலர்
அன்னை
தனியாய் பணிசெய்யத் துவங்கியபோது
கேலிக் குரலை
பரிமாறி மகிழ்ந்தவர்கள்.

அன்னை கலங்கவில்லை.

நன்மைகள் செய்ய நினைத்தால்
சமுதாயம் உன்னை
எட்டி உதைக்கும்…
ஆனாலும் நல்லதே செய்…

என்னும் கொள்கையை
உறுதியாய் பற்றியிருந்தாள்.

எனவே
அன்னையை நோக்கி எறியப்பட்ட
அம்புகள் எல்லாம்
முனை ஒடிந்து
தலை குனிந்தன.

59

அன்னையின் பணி
அர்த்தமற்றது என்றுImage result for mother teresa drawings
கூச்சலிட்டது
குறை கூறும் கூட்டம்.

பொறுத்தலிலும்
ஒறுத்தலிலும் பரிமளிக்கும்
அன்னை
உறுத்தாமல் பதில் தந்தாள்

ஏன் மீன் வழங்குகிறாய்
தூண்டில் வழங்கலாமே
மீன்
தர்காலிகத் தப்பித்தல்.
தூண்டில்
நிரந்தர நிவாரணம்.
என்கிறீர்கள்.

புரிகிறது !

ஆனாலும்,
நான் தீண்டும் மக்களுக்கு
தூண்டில் தூக்கும்
வலுவே வரவில்லை.

இன்று அவர்களுக்கு
மீன் கொடுக்கிறேன்.

நாளை அவர்களுக்கு
தூண்டில் தூக்கும்
வலு வரும் போது
உங்களிடமே அனுப்புகிறேன்.
அவர்களுக்காய்
தூண்டில் தயாரித்து வையுங்கள்.

60

அந்த அறை
வெள்ளை ஆடை சகோதரிகளால்
நிறைந்திருக்கின்றன.

எண்பத்து இரண்டு வயதான
அன்னை
தரையில் அமர்ந்து
சுவரில் சாய்ந்திருக்கிறாள்.

அவளுடைய கைகள்
விவிலியத்தைப் புரட்டுகின்றன.
உதடுகள்
அழுத்தமாய் வாசிக்க
விரல்கள்
வரிகளின் மேல் ஊர்கின்றன.

அவள் கண்களில்
அணையாத ஆன்மீகத் தாகம்.

செபத்துள் நுழைந்து
செபத்தில் கலந்து
செபத்தால் கரைந்து போகிறாள்.

வயது
அவளை மாற்றிவிடவில்லை.
இறைவனில் இன்னும்
இளமையாய் நகர்கின்றன
நாட்கள்.

0
வரவேற்பு அறை
பார்வையாளர்களுக்காய் கொஞ்சம்
வசதியோடு இருக்கிறது.

அன்னை
புன்னகையோடு வருகிறாள்.
புன்னகையோடு பேசுகிறாள்.
புன்னகையோடு விடை பெறுகிறாள்.

பார்வையாளர்கள்
அன்பளிப்புகளை
அன்னையின் கரத்தில் வைக்கிறார்கள்.

அன்னையிடம்
அந்த புன்னகை மாறவில்லை.

நேரடியாக
இல்லத்திலிருக்கும்
ஆலயத்தில் செல்கிறாள்.
உதடுகள் நிறுத்தாமல் செபிக்கின்றன.

61

பால்யம் முதலே
பலவீனமான உடலும்
பலமான மனமும்
அன்னைக்குச்
சொந்தமானதாய் இருந்தன.

வலிமையானோர் பலர்
பணிசெய்ய வருவதில்லை,
பணிசெய்யும் பலர்
வலிமையானோராய் இருப்பதில்லை.

அன்னையும்
பஞ்சு உடம்பும்
நெஞ்சுவலியால் அவதிப்பட்டது.
ஏழைகளுக்காய்
துடித்துக் கிடந்த இதயம்
தனக்குள் வலிக்கத் துவங்கியது.

1983 லும், 1989 லும்
இருமுறை
இதய வலி அவளை
மருத்துவமனைக்குள் அடைத்தது.

1989 ல்
இறைவனுக்காய் துடித்த
இதயம்
சுயமாய் துடிக்க சுமையானதால்
‘பேஸ்மேக்கர்’ பொருத்தப்பட்டது.

அதன் பின் வந்த
வருடங்கள்
நோய்களை தவறாமல்
தந்து கொண்டிருந்தது.

1996 இ
அன்னையை மூன்றுமுறை
மருத்துவ மனைக்கு அனுப்பியது.
நெஞ்சு வலிக்காக.

அன்னையின்
தலையைச் சுற்றி
ஒளிவட்டம் இருந்ததில்லை
ஆனால்
உள்ளுக்குள் ஒளி நீரூற்று
ஒளிந்திருந்தது.

அது
கண்களின் வழியாய்
கருணை வடிவில் வழிந்தது.

அன்னை
கோபப்பட்டு யாரும்
பார்த்ததில்லை,
நாள் முழுதும் கூடவே இருக்கும்
சகோதரிகள் உட்பட.

அன்னை
எந்த செயலைச் செய்தாலும்
அதை
இயேசுவின் பெயரால் செய்தாள்.
செயல்களின்
துவக்கத்திலும்
முடிவிலும்
ஆண்டவரிடம் அதை
அற்பணித்தாள்.

62

1990 ம் ஆண்டு
அன்னை தெரசா
நேரடிப் பணிகளிலிருந்து
சற்றே
ஓரமாய் வரவேண்டியதாயிற்று.

மனம் முடிவெடுத்ததை
உடல் ஒத்துக் கொள்ளவில்லை.
ஓய்வுக்காய் அன்னை
ஓரமாய் நின்றாள்.
ஆனாலும் முடிவெடுத்திருந்த மனம்
முடித்து வைத்துக் கொண்டிருந்தது
பணிகளை.

ஆறாண்டுக்கு ஒருமுறை
நடக்கும்
பணித் தலைமை தேர்வில்
எப்போதுமே அன்னையே
அமர்த்தப் படுவாள்.

1997 மார்ச் 13 ல்
அன்னை
சகோதரி நிர்மலாவை
அந்த பணிக்காய் அமர்த்தினார்.

முதன் முதலாய்
இயக்கம்
அன்னையைத் தவிர
இன்னொரு சகோதரியிடம்
ஒப்படைக்கப் பட்டது.

63

1997 செப்டம்பர் மாதம் 5ம் நாள்
அந்தImage result for mother teresa drawings
கருணைக் கதிரவன்
அணைந்து போயிற்று !

இயேசுவே
உன்னை நேசிக்கிறேன்.

என
அன்னையின் உதடுகள்
மெல்ல மெல்ல முணுமுணுத்தன
உறையும் வரை.

இந்த நூற்றாண்டின்
மனித நேய பிரமிப்பு
மரணத்தைத் துணைக்கு
அழைத்துக் கொண்டது.

கல்கத்தா கலங்கிற்று,
உலகத்தின் எல்லைகளெல்லாம்
கல்கத்தாவோடு சேர்ந்து
கலங்கின.

கோடி உதடுகள்
மரித்துப் போகாத
மரணம்
செத்துப் போக சாபமிட்டன.

மரணமே, மரணமே !
ஏன் இந்தக்
கட்டாயக் கடமை உனக்கு ?

பிரபஞ்சத்தில் சிலருக்குச்
சாவு வேண்டாமென்று
சம்மதிக்க உனக்கு
என்ன சம்பளம் வேண்டும் ?

அந்த
ஒற்றை மெழுகுவர்த்தி
ஊருக்கெல்லாம்
வெளிச்சம் ஏற்றிவைத்ததும்
ஏன் அதன்
திரியைத் திருடிக் கொண்டாய் ?

அப்படியென்ன
உயிர் தாகம் உனக்கு ?
எத்தனையோ கோடி
உயிர்களைத் தின்னும் நீ
இந்த
ஒற்றை உயிரை மட்டுமேனும்
விட்டு வைத்திருக்கக் கூடாதா ?

உன்
உயிர்ப்பசியை
கொஞ்ச நாளேனும்
ஒத்திவைத்திருக்கக் கூடாதா ?

அனாதைகளை
அரவணைத்த அன்னையை
இழந்து,
இதோ
இந்தியா அனாதையாய் நிற்கிறதே.

வீதி
விரல் பிசைந்து கிடக்கிறதே

என
மனித மனங்களெல்லாம்
திசைகள் முழுதும்
ஒப்பாரிகளை ஒப்புவித்தன.

நிஜம் நிறைவேறிவிட்டது !
மரணம் நிஜம்.

நிஜம் நிறைவேற்றப் பட்டது !
அன்பு நிஜம்.

ஒப்பந்தம் இடப்பட்ட பின்
ஓரமாய் போடப்பட்டது
பேனா !
ஒப்பந்தப் படிவம்
பாதுகாக்கப் பட்டது.

தெரசாவின் பணி
பரவிற்று.

64

அன்னையின் மரணம்
இந்தியாவை அழ வைத்தது.

சாலையோர மக்கள்
தங்கள் கண்களில் ஒன்று
களவாடப் பட்டது போல துடித்தனர்.

அன்னை இல்லத்துக்கு முன்
வந்து குவிந்த மக்களின்
நொந்து போன மனம்
வெந்து கொண்டிருந்தது.

அரசு முறை அடக்கம்
என
அரசாங்கம் அறிவித்தது.

பிரம்மாண்ட மரியாதையுடன்
அன்னை
அடக்கம் செய்யப் பட்டாள்.

மரணம் வரை
எளிமையை மட்டுமே
எடுத்துக் கொண்ட அன்னைக்கு
மரணத்துக்குப் பின்
ஆடம்பர அடக்கம்.

தன்னை
எளிமையாய் அடக்க வேண்டுமென
அன்னை
சகோதரிகளிடம் சொல்லியிருந்தார்.

ஆனால்
தேசம் தன் தாயை
கெளரவிப்பதைக் கடமையாய்க் கண்டது.

பூமி ஓர்
தாயை இழந்தது.
வானம் ஓர் விண்மீனை
சம்பாதித்துக் கொண்டது.

0

அன்னையின் மறைவு
உலகத் தலைவர்களை
உலுக்கிப் போட்டது.

அனைத்து தலைவர்களும்
அன்னைக்காய்
இரங்கல் கண்ணீர் சுரந்தார்கள்.

0

அனைத்தையும்
கிறிஸ்துவின் கண்களால் கண்டாள்
அன்னை.

திருச்சபையின்
மகள்,
கடைசி நாள் வரை
கடை கோடி மக்களுக்காய்
மூச்சு விட்டவள்.

என
போப்பாண்டவர்
புகழாரம் சூட்டினார்.

65

இங்கிலாந்து இளவரசிImage result for mother teresa drawings
டயானாவும்
கல்கத்தாவின் அன்னையும்
நண்பர்கள் என்பது வியப்பு !

பூக்களை முகத்தில் கொட்டி
புன்னகை வாரிக் கட்டி
கவர்ச்சியாய் கண்சிமிட்டும்
டயானா.

உள்ளத்தில் மலர்களை விதைத்து
கண்களில் கருணையை நிறைத்து
உதடுகளில்
நேசத்தை விரிக்கும் அன்னை.

டயானா இந்தியா வந்து
அன்னையை
சந்தித்தார்.
அன்னை டயானாவின் கரம்பற்றினார்.
ஏழைக்கு உதவும்
உன் உள்ளம் உயர்ந்தது
என்றார்.
டயனா சிலிர்த்தாள்.

இறைவனின் திட்டம்
மனிதருக்கு தெரிவிக்கப்படுவதில்லை.

வாழ்வின் உச்சத்திலிருந்
டயானா
சாலை விபத்தில் பலியாக,

சில நாட்களில்
சாலை வாழ்விலேயே
வாழ்வின் மிச்சத்தை செலவிட்ட
அன்னையும் மறைந்தாள்.

அன்னையின் உடல்
அடக்கம் செய்யப்பட்ட நாளில்
அன்னையின்
நாள்காட்டியில்
கண்ணீர்க் குறிப்பொன்று காணப்பட்டது.

இன்று
தோழி டயானாவுக்காய்
செபிக்கும் நாள்.

66

அன்னையின் மறைவு
‘மிஷனரிஸ் ஆப் சாரிடி’ யின்
முழு நிலவை
இழந்தது.

ஆனால் அதற்குள்
அன்னை
கருணை வானம் முழுதும்
கணக்கில்லா நேச நிலாக்களை
உருவாக்கி இருந்தாள்.

அன்னை என்னும் ஓடம்
இலக்கை அடைந்து விட்டது.
நதி தொடர்ந்து
நடந்து கொண்டே இருக்கிறது.

நேற்றைய
அன்னையின் இடத்தில்
இன்று இன்னொரு நிலவு.
நாளை மற்றொன்று….

நிறுத்தங்களில் பலர்
இறங்கிக் கொள்வார்கள்
ஆனால்
பயணம் தொடரும்.

தூர தேசம் வந்து
தனி ஆளாய்
பணி வாழ்வைத் துவங்கிய ,

புகைப்படத்தில்
புன்னகைக்கும் அன்னை
நம்மை நோக்கி
சொல்வதெல்லாம் இது தான்.

அயலானை அன்பு செய்
அப்போது தான்
வாழ்க்கை அர்த்தப்படும்.

67

அன்னையின் மரணத்துக்குப் பின்
அன்னைக்கு
புனிதப் பட்டம் தரவேண்டும்
என்றும்,
அன்னையின் பெயரால்
அற்புதங்கள் நடப்பதாகவும்
பரபரப்புச் செய்திகள் பரிமாறப்பட்டன.

மரணம் நேர்ந்து
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு தான்
புனிதர் பட்டம் பற்றி
பரிசீலனை நடக்கும்.

அன்னையின் பெயரால்
இரண்டு அற்புதங்கள் நடந்ததை
சாட்சியோடு
நிரூபிக்க வேண்டும்.

இவையெல்லாம்
புனிதர் பட்டத்தின் விதிமுறைகள்.

மோனிகா பெஸ்ரா
எனும் இந்தியப் பெண்ணுக்கு
புற்று நோய்
அன்னையின் படத்தால் விலகியதாய்
மருத்துவர்கள் நிரூபித்தனர்.

இன்னும் சில அற்புதங்கள்
நடந்ததாய்
ஆவணங்கள்
ரோமுக்கு விரைந்தன.

புனிதர் பட்டத்தின்
முன் நிலையான
‘பியூட்டிபிகேஷன்’
2002 ல்
அன்னைக்கு அளிக்கப்பட்டது.

இனியராய்
வாந்த அன்னை
புனிதரானார்

இறைவனின் திட்டம்
போப் பிரான்சிஸ் மூலம்
கிடைத்த‌
புனிதர் பட்டம்.

அன்னை
பட்டங்களுக்காய்
பணியாற்றியவரல்ல‌
பட்டினிகளுக்காய் பணியாற்றியவர் !

வாழும்போதே
புனிதராய் வாழ்ந்தவர்.

நம் பணி
அன்னையின் பணியை தொடர்வதே.

0

நிறைவுற்றது

Image result for mother teresa drawings

One thought on “அன்னை தெரேசா காவியம்

  1. ஆழமான வரிகள் எண்ணில் அன்னையை
    பற்றி மேலும் தியானிக்க வைத்தது ❤ நன்றிகள் பல 🙏

    Like

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s