Posted in Articles

அடுத்தவரோடு ஒப்பிடாதே

Image result for few young man

இளைஞர்களின் மனவலிமையைச் சோதிப்பதற்காக பத்து இளைஞர்களை ஒரு அறையில் அமரவைத்தார்கள். அந்த அறையில் இருந்த கரும்பலகையில் மூன்று கோடுகள் வரையப்பட்டிருந்தன. நீளமாக ஒன்று, அதைவிடச் சிறிதாக இன்னொன்று, மிகவும் சிறிதாக மூன்றாவது.

அந்த அறையிலிருந்த பத்து இளைஞர்களில் ஒன்பது பேருக்கு ரகசியமாய் ஒரு செய்தி தரப்பட்டிருந்தது. வரையப்பட்டிருக்கும் கோடுகளில் பெரிய கோடு எது என்று கேட்டால் இரண்டாவது பெரிய கோட்டைக் காட்ட வேண்டும் என்பதே அது. ஆனால் இந்த ரகசிய ஏற்பாடு பத்தாவது நபருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

பயிற்சியாளர் வந்து அவர்கள் முன் நின்றார். இந்த கரும்பலகையில் வரையப்பட்டிருக்கும் கோடுகளில் பெரிய கோடு எது என்று கேட்டார். அறையிலிருந்த அனைவருமே இரண்டாவது பெரிய கோட்டைக் காட்டி அது தான் பெரிய கோடு என்றார்கள். பத்தாவது நபருக்கு ஆச்சரியம் ! இதெப்படி முதல் கோடுதானே பெரியது ? ஏன் இரண்டாவது கோட்டைக் காட்டுகிறார்கள் ? அல்லது என் பார்வையில் ஏதேனும் திடீர் பழுதா ? குழம்பிக் கொண்டிருந்தவரைப் பார்த்து பயிற்சியாளர் கேட்டார்.

!எது பெரிய கோடு ? முதலாவதா, இரண்டாவதா அல்லது மூன்றாவது கோடா ?. அந்த இளைஞர் சில வினாடிகள் மெளனமாய் நின்றான். பின் சொன்னான். இரண்டாவது கோடுதான் பெரியது !.

இன்றைய இளைஞர்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் பலவேளைகளில் வருவதில்லை. கூடியிருப்பவர்கள் தவறுசெய்தால் அந்த தவறோடு ஒன்றிப் போய்விடும் பழக்கம் உடையவர்களாகத் தான் அவர்கள் பலவேளைகளில் இருக்கிறார்கள்.

தம்முடைய செயல்களை நிர்ணயம் செய்ய அடுத்தவர்களின் செயல்களை ஒப்பீடு செய்கிறார்கள். சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு பைனான்சியரிடம் பணம் போட்டிருந்தால் இவர்களும் போடுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து தோற்றுப் போவது தனியாய் தோற்றுப் போவதை விட நல்லது என்று கருதுகிறார்கள்.

இந்த தயக்கமும், உண்மையை உண்மை என்று தானே ஒத்துக் கொள்ள மறுக்கின்ற மன பலகீனமும் சமுதாயத்தின் சரிவுகள். இவை சமுதாயத்தைச் சரிசெய்யும் இளைஞனின் பணியை வெகுவாகப் பாதிக்கின்றன.

இறைவன் நம்மை அவருடைய சாயலாகப் படைத்தார். கடவுள் வார்த்தை வடிவமானவர். எல்லாரிலும் இறைவன் இருக்கிறார் என்பதை பறைசாற்றவே ஆணும் பெண்ணுமாக இரண்டு மனிதர்களைப் படைத்த கடவுள் அவர்களைத் தன் சாயல் என்கிறார். இறைவன் சாயல்களுக்கு அப்பாற்பட்டவர் அவருக்கு அனைவரின் சாயலும் இருக்கிறது என்பதை இறை வார்த்தை நமக்கு விளக்குகிறது. எனில், இறைவனின் சாயலாக இருக்கும் நாம் ஏன் தயங்குகிறோம் ?

உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம் ஒருவகை என்றால், தவறிழைத்தால் நான் தவறுசெய்தேன் என்று ஒத்துக் கொள்தல் அதைவிடப் பெரிய நிலை. பிறருடைய விமர்சன அம்புகளோ, ஏளன வார்த்தைகளோ நம்மை சவக்குழிக்கு அனுப்புவதில்லை என்னும் உள்ள உறுதி உடையவர்களே நிமிர்ந்து நிற்கிறார்கள்.

நாம் எப்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம் ? நம்மைச் சுற்றி இருப்பவர்கள் செய்வதை நாமும் செய்கிறோமா ? இல்லை எது சிறந்ததோ, எது சரியானதோ அதைச் செய்கிறோமா ?. சுற்றியிருப்பவர்கள் தவறான திசையை நோக்கிச் செல்கிறார்கள் எனில் சரியான திசை தெரிந்திருந்தாலும் நாம் தவறான திசைக்குச் செல்லத் துணிவோமா ?

இயேசு துணிச்சலாய் இருந்தார். சதிகாரர்களில் சபையில் துணிச்சலுடன் சத்தமிட்டார். ஆலயத்தில் கடைகளை விரித்திருந்தவர்களிடம் ‘இது என் தந்தையில் இல்லம். செபத்துக்கான தளம், கடைவிரிக்கும் இடமல்ல’ என்று கர்ஜித்தார். தன் உயிரைப் பறிக்கும் அதிகாரம் படைத்த அரசனிடமும், நான் கடவுளின் மகன். என்று துணிந்து சொன்னார். சிலுவைச் சாவு குறித்த அச்சத்தில் நான் தச்சன் மகன் தான் கடவுளின் மகன் அல்ல என்று கதறவில்லை.

துணிச்சல். உண்மைக்குச் சான்று பகரும் துணிச்சல். இதைத் தான் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். ‘உண்மைக்குச் சான்று பகர்தலே எனது பணி’ என்ற இறைவாக்குக்கு ஏற்ப துணிந்து நிற்க முயல்வோம். கூடியிருப்பவர்கள் விஷம் குடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் குடிக்க வேண்டியதில்லை. எது நல்லது எது அல்லது என்பதைப் பகுத்தறியும் வலிமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நம்மைப் பார்த்து இயேசு சொல்கிறார் ‘கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்’

இறையில் உறைவோம்
துணிவைப் பெறுவோம்.

உண்மையை உண்போம்
பரிசுத்தத்தைப் பரிமாறுவோம்.

Posted in Bible Poems

வழிகாட்டும் என் தெய்வமே

Image result for jesus christmas star

பல்லவி

வழிகாட்டும் விடிவெள்ளியே
குடில் மீது ஒளிகாட்டுதே

புவி மீது இறை மைந்தன் வரவானதே
இறைவார்த்தை நிறைவேறவே – இனி
நிலவாழ்க்கை நிலைமாறவே.

அனுபல்லவி

கருவாகி திருவாகி இறையாகி உருவாகி
குடிலோடு எருவோடு மரியன்னை மடியோடு
புல்லணை வந்தானவா – எம்
புவிதேவன் என்றானவா

சரணம்

உனைத்தேடும் இடையர்கள் மனம் கேட்கிறேன்
பணிகின்ற ஞானியர் குணம் கேட்கிறேன்
பட்டம் புகழ் வாழ்வில் வீணாகிடும்
உந்தன் வரம் வந்தால் வானாகிடும்.

உனைத்தேடும் இடையர்கள் மனம் கேட்கிறேன்
வினை தீர்க்க எனைச் சேர்த்தவா – முன்
அணை தனை அணைத்திட்டவா

எழிலோடு தொழுவோடு அழியாத புகழோடு
விழியோடு பிழைதன்னை அழிக்கின்ற தழலோடு
குடில் மீதில் விடிவானவா – எம்
இடி சோக முடிவானவா

Posted in Articles

மூன்று ரகசியங்கள்

Image result for kids pray

மூன்று முக்கியமான விஷயங்களை படு ரகசியமாய் செய்யுங்கள் என கிறிஸ்தவம் போதிக்கிறது. ரகசியமாய் செய்யும் இந்த செயல்களே நமது விசுவாசத்தின் ஆழத்தை நிறுத்துப் பார்க்கும் அளவைகளாகவும் இருக்கின்றன என்கிறது கிறிஸ்தவம்.

அப்படியென்ன மூன்று விஷயங்கள்.

1. செபம் : செபிக்கும்போது ரகசியமாய் செபியுங்கள் என்கிறார் இயேசு. காரணம் அன்றைய சமூகத்தில் ஆன்மீகவாதிகள் என சொல்லிக் கொண்டவர்கள் தெரு முனைகளில் நின்று கத்தி கூச்சலிடுவதையே வழக்கமாய் கொண்டிருந்தார்கள். அதுவே இறைவன் விரும்புவது என தங்களுக்குள்ளேயே நினைத்துக் கொண்டார்கள்.

அவர்களுடைய எதிர்பார்ப்பு, தான் மிகப்பெரிய ஆன்மீக வாதி என மக்கள் கருத வேண்டும் என்பதும் அதற்குரிய மரியாதையையும், வணக்கத்தையும் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.

இயேசு சொன்னார், செபிக்கும்போது கதவைத் தாழிட்டு விண்ணகத் தந்தையிடம் செபம் செய். மறைவாய் இருக்கும் செபமே இறைவனுக்கு நிறைவாய் இருக்கும் செபம். எனவே மனதைத் திற கதவைப் பூட்டு. இதுவே செபிக்கும் வழி. என்றார் இயேசு.

நமக்குத் தேவை மனிதரின் மரியாதையா, இறைவனின் இணையற்ற கருணையா ?

மனிதனின் அங்கீகாரமெனில் வித விதமான அங்கிகளுடன் வீதிகளில் கூச்சலிடலாம். இறைவனின் இரக்கமெனில் அடைபட்ட அறைகளில் மனதைத் திறக்கலாம்.

2. நோன்பு : நோன்பு இருக்கும் போது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் இயேசு.

நான் நோன்பு இருக்கிறேன் என பறைசாற்றி மனிதனின் மரியாதையைப் பெற்றீர்களெனில் உங்களுக்கு இறைவனிடம் எந்த பலனும் இல்லை. உங்கள் நோன்பும் வீண். என்பதே இயேசுவின் தெளிவான போதனை.

இயேசு நோன்பைக் குறித்து ஒரே ஒரு கட்டளை மட்டுமே கொடுத்திருக்கிறார். அதாவது “நோன்பு இருக்கும் போது பிறருக்குத் தெரியப்படுத்தாதே”.

நாம் எப்படி இருக்கிறோம் ? நாளைக்கு ஃபாஸ்டிங் பிரேயர் என தம்பட்டம் அடிக்கிறோமா ? வெள்ளிக்கிழமை நான் சாப்பிடறதில்லை என பறை சாற்றித் திரிகிறோமா ?

மனுமகன் மறைந்தபின் சீடர்கள் நோன்பு இருப்பார்கள் என இயேசு நாம் நோன்பு இருக்க வேண்டும் என்பதைப் பேசுகிறார். எனவே நோன்பு இருப்பது அவசியமானதே. அதுவே உடல் நமக்குக் கட்டுப்பட்டிருக்கிறதா உடலுக்கு நாம் கட்டுப்பட்டிருக்கிறோமா என்பதைக் கண்டறியும் வழியும் கூட.

ஆனால் அதை நமக்கும் இறைவனுக்குமான ஒரு உடன்படிக்கையாய் வைத்துக் கொள்வோம்
அடுத்த முறை நோன்பு இருக்கும் போது நோயில் இருப்பது போல காட்டிக் கொள்ளாதிருப்போம். உண்ணா நிலை இறைவனின் விண்ணகக் கதவைத் திறக்கட்டும், மனிதனின் பாராட்டுச் சன்னலை திறக்க வேண்டாம்.

3. உதவி : பிறருக்கு உதவி செய்யும் போது யாருக்கும் சொல்ல வேண்டாம் என்பது இயேசுவின் கட்டளை. “வலது கை செய்வதை இடது கை அறிய வேண்டாம்” என்கிறார் அவர்.

ஒருவருக்கு ஒரு தேவையெனில் யாருக்கும் தெரியாமல் சென்று அவருக்கு உதவவேண்டும். அப்போது தான் இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்.

மனிதனிடம் விளம்பரம் செய்து விட்டு உதவிகளை வழங்கினால் விண்ணக வரம் இல்லை என்பதை இயேசு தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.

சகோதரர் சேக் பூனன் சபையினர்,  தனது சபை மக்கள் யாருக்கேனும் தேவை இருக்கிறது என்பதை அறிந்தால், உதவி தேவைப்படும் அந்த நபருக்குக் கூட தெரியாமல் அவருக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். இதுவே இயேசு போதித்த உதவும் வழி.

மனிதனின் கை தட்டலா, விண்ணக நிலை எட்டலா ? எது தேவை என்பதை தீர்மானிக்க வேண்டியது நாமே !

இந்த மூன்றுமே இரகசியமாய் செய்ய வேண்டுமென இயேசு சொன்னவை.

இன்றைய கிறிஸ்தவம் இந்த மூன்றையும் செய்கிறதா என்பது முதல் கேள்வி.
செய்ய வேண்டிய விதத்தில் செய்கிறதா என்பது இரண்டாவது கேள்வி.

நம்மை நாமே படிப்போம். இயேசுவின் உரைப்படி நடப்போம்.

Posted in Articles

பிறருக்காய் செபிக்கலாமா ?

Image result for joint prayer to jesus

நமக்கு ஏதாவது தேவையிருந்தால் நாம் இறைவனில் நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டுமா அல்லது பிறருடைய நம்பிக்கை நம்முடைய தேவைகளை நிறைவேற்றுமா ? எனும் கேள்வி பல வேளைகளில் நம்மை அலைக்கழிப்பதுண்டு.

உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று, நம்பு அப்போது இறைவனின் மாட்சியைக் காண்பாய், நம்பிக்கையுடன் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்றெல்லாம் இயேசு விவிலியம் வாயிலாக நம்மிடம் பல இடங்களில் சொல்கிறார்.

எனில், நம்முடைய நம்பிக்கை மட்டும் தானா ? ஒருவேளை நம்பிக்கையே இல்லாத ஒருவன் இறைவனின் வியத்தகு செயல்களின் வாசனையை நுகர முடியாதா ?

இந்தக் கேள்விக்கு விடையை விவிலியம் ஒரு இடத்தில் மிகவும் அழகாகத் தெளிவு படுத்துகிறது.

திமிர்வாதக் காரன் ஒருவனை இயேசுவின் முன்னால் கட்டிலோடு தூக்கி வருகின்றனர் நான்குபேர். அவர்கள் இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள். இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து போதித்துக் கொண்டிருக்கிறார். கூட்டம் மிக அதிகம். யாரும் உள் நுழைய முடியாது.

தூக்கி வந்தவர்கள் யோசித்தனர். வீட்டின் கூரை மீது ஏறி கூரையைப் பிரித்து அவனை கட்டிலோடு இயேசுவின் முன்னால் இறக்கினார்கள்.

“இயேசு அந்த நோயாளியைக் கட்டிலோடு தூக்கி வந்த அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு” அவனைச் சுகமாக்கினார் !!!

இயேசு நமது நம்பிக்கை வலுவடைய வேண்டியதன் தேவையை அழுத்தம் திருத்தமாய் சொல்லும் அதே வேளையில் நமக்காய் பிறர் கொண்டிருக்கும் நம்பிக்கை கூட நம்மைக் காப்பாற்றும் என்பதை இந்த நிகழ்வின் மூலமாக நமக்கு விளக்குகிறார்.

நம்பிக்கை இல்லாமல் செய்யும் எந்த செயலுமே முழுமையான பலனைத் தருவதில்லை. நாம் பல வேளைகளில் பல இடங்களில் நம்பிக்கை வைக்கிறோம், பல வேளைகளில் நம்முடைய நம்பிக்கைகள் போலி பைனான்சியர்களைப் போல சிதைக்கப்படுகின்றன.

ஆனால் இறைவன் மேல் வைக்கும் நம்பிக்கை எப்போதும் வீணாவதில்லை. இறையில் வைக்கும் நம்பிக்கை என்பது முழுமையாய் சரணடைதலே.

நம்பிக்கை கொள்வோம், நமக்காகவும் பிறருக்காகவும் இறையின் நிறையில் நம்பிக்கை கொள்வோம்.

Posted in Articles

சின்ன வயசிலேயே பெரிய ஆளாயிட்டான்.

Image result for Rich young man in car

“இந்த சின்ன வயசிலேயே அவன் பெரிய ஆளாயிட்டான்”

“சின்னப் பையன் அவன், இன்னிக்கு கார் வீடு வசதி ன்னு ஓகோன்னு இருக்கான்”

“அவனுக்கு என்னை விட அனுபவமும், திறமையும் வயதும் கம்மி ஆனாலும் அவனுக்கு உயர் பதவி கிடைத்திருக்கிறது.”

இப்படிப்பட்ட உரையாடல்கள் இல்லாத வாழ்க்கையைக் காண்பது மிக மிக அரிது.

நம்மை விட வயதில் சிறியவர்கள், நம்மை விட உயர்ந்த இடங்களுக்குச் செல்வதை நம்மால் செரித்துக் கொள்ள முடிவதில்லை, பல வேளைகளில்.

உற்ற நண்பர்களாய் இருக்கும் இருவரைப் பிரிக்க வேண்டுமெனில் அவர்களில் வயதில் குறைந்த ஒருவனைக் குறித்து மற்றவனிடம் உயர்வாய் பேசினால் போதும்.

அலுவலகத்தில் எனில் சின்ன வயதுக் காரனுக்கு பதவி உயர்வு கொடுத்தால் போதும். அல்லது பாராட்டு வழங்கினால் போதும்.

பொறாமை என்னும் ஆயுதத்தைப் போல உள்ளுக்குள் சென்று விஸ்வரூபமெடுத்து ஆளைக் கொல்லும் ஆயுதங்கள் வேறு இல்லை. பொறாமை நம்முடைய வாழ்வின் சாலைகளில் பல்வேறு முகமூடிகளைப் போட்டுக் கொண்டு அலைகிறது.

பொறாமை உறவுகளை சேதப்படுத்துகிறது, உடலைச் சேதப்படுத்துகிறது, மனதை சேதப்படுத்துகிறது, வாழ்க்கையின் அர்த்தத்தை சேதப்படுத்துகிறது.

பொறாமை என்று முளைத்தது ?

ஆதாமின் காலத்திலேயே பொறாமை முளைத்தது என்கிறது விவிலியம். ஆதாமின் மூத்த மகன் காயீன், இளைய மகன் ஆபேல்.

கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் போது இளையவன் ஆபேல் நல்ல ஆடுகளைக் கொண்டு வருகிறான், மூத்தவன் காயீன் கெட்டுப் போன காய்கறிகளைக் கொண்டு வருகிறான்.

கடவுள் ஆபேலின் தூய மனதை ஏற்றுக் கொள்கிறார், அவனுடைய பலி அங்கீகரிக்கப்படுகிறது. காயீனின் களங்கமான மனம் நிராகரிக்கப்படுகிறது. பலி ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

காயீன் பொறாமை கொள்கிறான்.

எப்படி என்னை விட இளையவனின் காணிக்கையைக் கடவுள் ஏற்றுக் கொண்டு என்னை நிராகரிக்கலாம் ? என காயீனின் மனம் கொதிக்கிறது.

முடிவு ? பாசத்துடன் அண்ணனுடன் வயல்வெளிக்குச் செல்லும் தம்பி, அண்ணனாலேயே கொடூரமாய் கொலை செய்யப்படுகிறான். விவிலியம் கூறும் முதல் கொலை.

பொறாமை வாழ்க்கையின் அடித்தளத்தை அசைக்கிறது என்பதை விவிலியம் துவக்கத்திலேயே வெளிப்படுத்துகிறது. பொறாமையற்ற மனம் சாத்தியமானால் வாழ்க்கை துயரங்களைத் துவைக்கிறது.

இயேசு சொல்கிறார்,

நீ ஆலயத்தில் காணிக்கை செலுத்த வரும்போது “உன் சகோதரனோடு மனத்தாங்கல் இருப்பதாக நீ கண்ணுற்றால் காணிக்கையை செலுத்தும் முன் சென்று உன் சகோதரனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்”. கடவுளுக்கான காணிக்கையை தூய மனதுடன் செலுத்துதல் தான் முக்கியம் என்பதையே இயேசு வெளிப்படுத்துகிறார்.

ஏனெனின், மனிதனோடான உறவில் கடவுளைக் காணச் சொன்னதே இயேசுவின் போதனைகளின் சாராம்சம்.

சகோதரனோடு வெறும் மனத்தாங்கல் இருந்தால் கூட அதை நிவர்த்தி செய்து விட்டு ஆலயம் வரச் சொன்னார் இயேசு. இன்றைய வாழ்வில் சகோதரனோடு பேசாமல், நண்பர்களை எதிரிகளாகப் பாவித்து, அலயாரோடு சண்டையிட்டு, அலுவலகத்தில் பொறாமை வளர்த்து ஆலயம் வந்து காணிக்கை செலுத்துபவர்களாகத் தான் இருக்கிறோம்.

இயேசு தெளிவாகச் சொல்கிறார்,

என்னை நோக்கி ஆண்டவனே ஆண்டவனே என்று சொல்பவன் எல்லாம் விண்ணரசில் சேரமாட்டான். தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்”.

அன்னை தெரசா சகோதரிகளுடன் ஒருநாள் ஆலயம் சென்று கொண்டிருந்தார். நேரமாகிவிட்டது. வழியில் ஒரு ஏழை சாலையோரம் கிடக்கிறான். கவனிக்க ஆளில்லை, ஈக்களையும், நாய்களையும் தவிர. அன்னை இறங்கிக் கொள்கிறார். சகோதரிகள் தடுக்கின்றனர். “முதலில் ஆலயம் வாருங்கள். பிரார்த்தனை முடிந்து வந்து இவரைக் கவனிக்கலாம். இவர் எங்கேயும் போய்விடப் போவதில்லை”.

அன்னை கண்ணீரோடு மறுத்தாள்.
இல்லை. ஆண்டவனை வழியிலே விட்டு விட்டு என்னால் ஆலயம் வர முடியாது

ஆலயம் செல்லும் அவசரத்தில்
ஆண்டவனைப் புறக்கணிக்காமல் இருப்போம்
விண்ணரசு வசப்படும்.