Posted in Articles

இயேசு ஒரு மனிதரே !

Image result for Jesus as man

கிறிஸ்தவத்தின் மையம் இயேசு மனிதன் என்று நம்புவதே. இயேசு தனது புவி வாழ்க்கையில் முழுமையான ஒரு மனிதனாக, மனித இயல்புகளோடு வாழ்ந்தார் என்பது மட்டுமே கிறிஸ்தவ வாழ்வின் தூய்மையை உறுதிப்படுத்தவும், கிறிஸ்தவ வாழ்வில் நிலைப்படுத்தவும் வலிமையளிக்கிறது.

மனித பலவீனங்களோடு வந்த இயேசு பாவங்களை முழுமையாக விலக்கி ஓர் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதும், நம்மைப் போலவே பல்வேறு சோதனைகளுக்கு உட்பட்டாலும் அந்த சோதனைகளை வெற்றி கொண்டார் என்பதுமே நமது வாழ்வில் நாம் தூய்மையைக் கடைபிடிக்க நமக்கு முழுமையான வலிமையைத் தருகிறது.

என்னைப் பின்செல்

என்பதே இயேசுவின் போதனை. இயேசு எதையெல்லாம் வாழ்நாளில் கடைபிடித்தாரோ அதை மட்டுமே போதித்தார். பழைய ஏற்பாடுகள் எல்லாம் சட்டங்களை மட்டுமே வகுத்துக்கூறுகையில் இயேசு மட்டுமே வாழ்க்கையை வாழ்ந்து நாமும் அதைப் போல வாழ நமக்கு ஊக்கமளிக்கிறார்.

நமது வாழ்வின் இடறல் தருணங்களில் நாம் இதை மனதில் கொள்தல் மிகவும் அவசியம். இயேசு கடவுளாய் மண்ணுலகில் வந்திருந்தால் , “ அவருக்கென்ன அவர் கடவுள். அவரால் இச்சையின்றி வாழ முடியும், அவரால் சுயநலமின்றி வாழமுடியும், அவரால் உலக ஆசைகள் அனைத்தையும் வெறுத்து வாழமுடியும்” என சொல்ல முடியும். ஆனால் இயேசு நம்மைப் போலவே வாழ்ந்தார் எனும்போது நாம் சந்திக்கும் அனைத்து விதமான சோதனைகளையும் அவரும் சந்தித்தார் என்பதே பொருளாகிறது.

அனைத்து விதமான தீய வழிகளிலும் செல்ல வாய்ப்பு இருந்தும், ஒப்பிட முடியாத தூய்மை நிலையில் வாழ்க்கை நடத்திய இயேசு நமக்கு முன்னால் ஒரு திறந்த ஆன்மீக அகராதியாய் இருக்கிறார்.

உணவுக்கான சோதனை வருகையில், “மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும்” என அதை அடக்கியவர் இயேசு.

புகழுக்கான சோதனையும், வசதியான வாழ்க்கைக்கான சோதனையும் வருகையில் அந்த சோதனைச் சாத்தானை துணிவுடன் துரத்தியவர் இயேசு.

நமது வாழ்விலும், சோதனைகள் நெருங்கும்போது இயேசுவை நினைப்போம்.

பிறரை ஏமாற்ற முயலும் போது, பொய் சொல்லும் போது, இச்சைப் பார்வை வீசும் போது, கடமை செய்யத் தவறும் போது, பெற்றோரை இகழும் போது என ஒவ்வோர் தருணங்களிலும்  “இயேசு மனித இயல்பில் தானே வாழ்ந்தார், இந்த சூழலில் அவர் இப்படி நடந்து கொண்டிருப்பாரா ? “ என ஒரு கேள்வியை உள்ளுக்குள் எழுப்புங்கள். அது உங்களை வழிநடத்தும்.

இயேசு கடவுள் என்று நம்புவது கிறிஸ்தவ வாழ்வின் துவக்கம். அவர் மனிதனாய் வாழ்ந்தார் என்பதை நம்புவதே கிறிஸ்தவ வாழ்வின் பயணம்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...