Posted in Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 1 : கானாவூர் திருமணம்

இயேசு செய்த புதுமைகள் 1 : கானாவூர் திருமணம்

Image result for wedding in canaயோவான் 2: 1 முதல் 11 வரை

மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.

திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.

பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,

“எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

=====

இயேசு தனது வாழ்நாளில் ஏராளம் புதுமைகளையும், அற்புதங்களையும் செய்தார். அவற்றில் முதலாவது புதுமை தான் இது !

இயேசுவின் சிறு வயது வாழ்க்கையைக் குறித்து எதுவும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இயேசு சின்ன வயதில் மண்ணினால் ஒரு பறவையைச் செய்து அதைப் பறக்க விட்டார், அப்போது அதற்கு உயிர் வந்தது என புனைக் கதைகள் பேச்சு வழக்கில் உண்டு. அதே போல, அவர் சின்ன வயதில் இந்தியாவின் மலைப்பகுதிகளில் வந்திருந்தார் என்றும் புனைக் கதைகள் உலவுவதுண்டு.

ஆனால் அவையெல்லாம் கற்பனைகளின் கை பிடித்து வருகின்ற கதைகள் மட்டுமே. இயேசு முதன் முதலாய் செய்த அற்புதம் கானாவூரில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது தான். அதைத் தான் தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட நமது பைபிள் பதிவு செய்திருக்கிறது.

இயேசு எத்தனையோ புதுமைகளைச் செய்தார். இறந்தவர்களை உயிர்ப்பித்தார், முடவனை நடக்க வைத்தார், பிறவிக் குருடனை பார்க்க வைத்தார், ஆறாயிரம் பேய்கள் கொண்டிருந்த இலேகியோன் என்பவரிடமிருந்து பேய்களை விரட்டினார். அவையெல்லாம் பிரமிப்பூட்டும் அதிசயங்கள்.

அவற்றில் எதையும் இயேசு தனது புதுமைகளின் துவக்கமாகக் கொள்ளவில்லை. பெரிய தலைவர்கள் மத்தியிலோ, அதிகாரிகள் முன்னிலையிலோ, பெரிய இடங்களிலோ அவர் அந்தப் புதுமையை செய்யவில்லை. சமூகத்திற்கு மிகவும் முக்கியமான செயலை அவர் செய்யவும் இல்லை. ஒரு திருமண வீட்டின் தேவையை, சாதாரண தொழிலாளர்கள் மத்தியில் செய்தார். தனது சீடர்கள் தன்னை நம்பவேண்டும் என்பது அவருடைய சிந்தனைகளில் ஒன்றாய் இருந்தது. யோவான் நற்செய்தியாளர் இதை ஒரு “அரும் அடையாளம்” என்கிறார்.

அரும் அடையாளம் என்பது வெறும் அதிசயச் செயல் மட்டுமல்ல. அதன் உள்ளே சில ஆன்மீக மறை பொருட்கள் மறைந்திருக்கும். இந்த கானாவூர் புதுமையிலும் சில சிந்தனைகளை இறைவன் நமக்காய் ஒளித்து வைத்திருக்கிறார்.

திருமணம் என்பதையே இயேசுவுக்கும் திருச்சபைக்கும் உள்ள உறவாக விவிலியம் நமக்குச் சொல்கிறது. இரசம் என்பதை இயேசுவின் இரத்தம் என்றும் விவிலியம் நமக்குச் சொல்கிறது. இந்த உவமை, இறைவனுக்கும் நமக்கும் இடையேயான பந்தத்தை கூறுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த புதுமை சொல்லும் சில விஷயங்களை சிந்திப்போம்.

Image result for wedding at cana clip art1. “இரசம் தீர்ந்து விட்டது” என்பது பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முடிந்து விட்டது என்பதையும், இயேசுவே புதிய இரசத்தைப் பரிமாறுபவர் என்பதையும் குறிப்பிடுகிறது. பழைய ஏற்பாடு நிறைவுற, இயேசுவின் புதிய ஏற்பாடு துவங்குவதை குறிப்பால் இந்த புதுமை உணர்த்துகிறது. பழைய இரசம் என்பதை இறைவாக்கினர்கள் பரிமாறிய இறைவார்த்தைகளையும், புதிய ரசம் என்பது இயேசு தரும் வார்த்தைகளையும் குறித்து நிற்கிறது.

Image result for wedding at cana clip art2. இயேசு திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் ! நமது வாழ்க்கையில் இயேசுவை அழைத்தால் மட்டுமே அவரிடமிருந்து அற்புதங்களை பெற்றுக் கொள்ள முடியும். குறைவு வரும்போதல்ல, வாழ்க்கை நிறைவாய் இருப்பதாய் நாம் நினைக்கும்போதே இயேசுவை அழைக்க வேண்டும். இயேசு நமது வாழ்க்கையில் இடையில் வருபவராகவோ, அழையா விருந்தாளியாகவோ இருக்கவே கூடாது.

Image result for wedding at cana clip art3. அன்னை மரியாள் இயேசுவிடம், “இரசம் தீர்ந்து விட்டது” என்கிறார். இயேசுவின் பிறப்பு முதல், அவருடைய சிறுவயது வாழ்க்கை பயணம் வழியாக இயேசுவை முழுமையாய் புரிந்து கொண்டவர் அன்னை மரியாள். அவருக்குத் தெரியும், இரசம் குறைவுபட்டால் யாரால் நிவர்த்தி செய்ய முடியும் எனும் உண்மை. எனினும் அவர் இயேசுவிடம் “என்ன செய்ய வேண்டும்” என சொல்லவில்லை, என்ன தேவை என்பதை மட்டுமே சொல்கிறார். இறைவன் அதை நாம் நினைக்காத வகையில் நிறைவேற்றித் தருகிறார். நமது வாழ்க்கையிலும் நமக்கு ஏற்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்ய ‘இயேசுவிடம்’ மட்டுமே செல்ல வேண்டும் எனும் சிந்தனையை அன்னை மரியாவின் செயல் உணர்த்துகிறது.

Image result for wedding at cana clip art4. “எனது நேரம் இன்னும் வரவில்லையே” எனும் இயேசுவின் வார்த்தையில் அவரது பணிவாழ்வுக்கான துவக்கம் வரவில்லை எனும் பொருள் மறைந்திருக்கிறது. எனினும் இயேசு தனது பணிவாழ்க்கையை அங்கே தொடங்குகிறார். அதன்பின் அன்னை மகன் உறவில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பதை மரியாவும் உணர்ந்திருக்கக் கூடும்.

Image result for wedding at cana clip art5. “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என ஊழியர்களிடம் சொன்னார் அன்னை மரியா. மரியாவுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர்களின் வீடாய் அது இருக்கக் கூடும். எனவே மரியாவுக்கு ஊழியர்களுக்கு வேலையிடும் அதிகாரம் இருந்திருக்கலாம். இனிமேல் தனது பணி ஒன்றும் இல்லை, இயேசு என்ன சொல்கிறாரோ அது செயல்படுத்தப்பட வேண்டும் எனும் மரியாவின் சிந்தனை நமக்குப் புலனாகிறது. நமது வாழ்க்கையிலும், அதிசயங்கள் காணப்பட வேண்டுமெனில் “இயேசு சொல்வதையெல்லாம்” செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதே அவசியம்.

Image result for wedding at cana clip art6. அங்கிருந்த ஆறு கற்தொட்டிகளிலும் நீர் நிரப்ப இயேசு சொன்னார். ஊழியர்கள் உடனே வேலையில் இறங்கினர். அங்கே தண்ணீர் குறைவு படவில்லை. திராட்சை ரசம் தான் தேவை ! ஆனாலும் ஊழியர்கள் எந்த கேள்வியையும் கேட்காமல் தண்ணீரை நிரப்பினர். அதுவும் பாதியளவோ, முக்கால் அளவோ அல்ல விளிம்பு வரை நிரப்பினார்கள். தங்களுடைய பணியை முழுக்க முழுக்க செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். நமது வாழ்விலும், இயேசு சொல்கின்ற விஷயங்களை ஏன், எதற்கு என கேட்காமல் அப்படியே பின்பற்ற வேண்டும் எனும் ஆன்மீகப் பாடம் இதில் உண்டு.

Image result for wedding at cana clip art7. தண்ணீர் நிரப்பப்பட்டபின் இயேசு ஒன்றுமே செய்யவில்லை. ஒரு சின்ன செபம் கூட செய்யவில்லை. கொஞ்சம் மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொடுக்கச் சொன்னார். அவ்வளவு தான் ! அதையும் அவர்கள் அப்படியே செய்தனர். தண்ணீரை எடுத்துக் கொண்டு போகச் சொல்கிறாரே என தயங்கவில்லை. தண்ணீரைக் கொண்டு கொடுத்தால் பந்தி மேற்பார்வையாளர் கோபப்படுவாரே என நினைக்கவில்லை. அடுத்தவர்களின் சொற்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், கட்டளையை அப்படியே கடைபிடித்தனர். நமது வாழ்விலும் இயேசுவின் போதனைகளை செயல்படுத்த நினைக்கும் போது, “அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ ?” எனும் சிந்தனையே தேவையில்லை.

Image result for wedding at cana clip art8. இயேசு தண்ணீர் ஊற்றச் சொன்னது, “தூய்மைச் சடங்குகளுக்காக” வைக்கப்பட்டிருந்த தொட்டி. அதிலுள்ள தண்ணீரைக் கொண்டு பல்வேறு தூய்மைச் சடங்குகளை யூதர்கள் செய்வதுண்டு. அதைப்பற்றி விவிலியம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. அந்த சடங்குகளுக்கான பாத்திரத்தை இயேசு தனது புதுமையினால் உடைக்கிறார். சட்டங்களையும் சம்பிரதாயங்களையும் தகர்க்கவே வந்தேன் எனும் இயேசுவின் சிந்தனை அதில் வெளிப்படுகிறது. யூதர்கள் சடங்குகளுக்கு மிகவும் அவசியம் என நினைத்திருந்ததில் இயேசு திராட்சை ரசம் உருவாக்குகிறார். பாறை என்பது இறைவனைக் குறிப்பது. பாறையில் குடைந்து செய்யப்பட்ட பானைகள் இயேசுவையும், அதிலிருந்து புறப்படும் இரசம் அவரது இரத்தத்தையும் குறிக்கும். பழைய சட்டங்களை தனது இரத்தத்தினால் புதிதாக எழுதுகிறார் இயேசு !

Image result for wedding at cana clip art9. “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என பந்தி மேற்பார்வையாளர் கேட்கிறார். அதற்கான பதில் அந்த மணமகனுக்குத் தெரியாது எனினும் அவன் அதை வெளிக்காட்டவில்லை. அந்த பெருமையை தானே எடுத்துக் கொள்கிறான். இறைவன் நமது வாழ்வில் செய்கின்ற பல அதிசயங்களை, ஆசீர்வாதங்களை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் ? நமது திறமையென்றா ? நமது உழைப்பென்றா ? நமது தகுதியென்றா ? சிந்திப்போம். இறைவன் தருகின்ற அனைத்துக்குமான மகிமையை இறைவனுக்கே தரவேண்டும். இறைவன் தராத ஒன்றும் நமது வாழ்வில் இல்லை என்பதையும் உணர்வோம்.

Image result for wedding at cana clip art10. நமது வாழ்வில் இயேசு எப்படி இருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எல்லோரையும் போல ஒரு விருந்தினராகவா ? அல்லது நமது வாழ்க்கையே அவரில் மையம் கொண்டிருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். கானாவூரில் ஒரு சாதாரண விருந்தாளியாய் வந்தார் இயேசு. அங்கும் அதிசயம் நடந்தது. நமது வாழ்வின் மையமாக அவர் இருந்தால் நடப்பதெல்லாமே அதிசயமாய் தான் இருக்கும். காரணம், நமது ஒவ்வொரு வினாடியும் அதிசயத்தின் பாகமே. நமது வாழ்க்கையின் மையமாய் இறைவனை மாற்றுவோம் !

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s