Posted in Articles

அன்பு

Image result for father shouting at son

வலியிலேயே அதிகமான வலி நிராகரிப்பு தான் அல்லது நிராகரிப்பு குறித்த பயம் தான். வாழ்க்கை உறவுகளினால் கட்டி எழுப்பப் படுகிறது. நம்முடைய வாழ்வில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை வைத்தே நம்முடைய வாழ்க்கையின் ஆனந்தம் நிர்ணயிக்கப் படுகிறது.

ஒருவர் அழகாய் இருக்கிறார் என்பதனால் நீங்கள் அவரை அன்புசெய்வதில்லை, நீங்கள் அன்பு செய்வதால் அவர் அழகாய்த் தெரிகிறார். என்று ஒரு மிகப் பிரசித்தி பெற்ற சொலவடை உண்டு. இழக்கும் வரை இருந்ததின் மதிப்பு தெரியாது என்பார்கள். அதிலும் திரும்பப் பெற முடியாத உயிரின் இழப்பெனில் அந்த ஈடுகட்ட முடியாத இழப்பு நமக்குள் ஏற்படுத்தும் வடு காலம் முழுவதும் மறைவதில்லை.

பேருந்தில் ஏறுகையில் தெரியாமல் யாருடைய காலையேனும் மிதிக்க நேர்ந்தால். ‘சாரி… ‘ என்று கண்ணியமாக சிறு புன்னகையுடன் கேட்க நாம் மறுப்பதில்லை. அவரும் பரவாயில்லை என்ற பார்வையை வீசிவிடுவார் பெரும்பாலும். ஆனால் நெருங்கிய உறவுகளிடம் பலநேரங்களில் அந்த அன்பைப் பகிர மறந்து விடுகிறோம்.

ஒரு கதை உண்டு..

ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.

அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.

இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.

‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’ அவருடைய வார்த்தையில் அனலடித்தது. சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.

இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார். நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.

உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை
‘என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது..’ என்றார்.

சிறுவன் திரும்பினான். சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான். வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.

‘இதென்ன ?’ தந்தை வியந்தார்.

இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன். பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன். அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்… சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.

சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.

குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம். அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.

பணத்துக்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டிருப்பது ஆனந்தத்தின் நிமிடங்களை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால் அலுவலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும். குடும்பம் அப்படியல்ல. ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் நிமிண்டும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது. எனவே தான் ஏழைகளால் மகிழ்ச்சியாய் இருக்க முடிந்த அளவுக்கு பணக்காரர்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

இறைவன் அன்பாக இருக்கிறார் என்கிறது விவிலியம். அன்பினால் உருவாகும் செயல்கள் எல்லாம் இறைவனின் இயல்புகளாய் இருக்கின்றன. நல்ல செயல்களானாலும் அவை அன்பு கலக்காவிடில் இறைவன் பார்வையில் அவை இழுக்கானவையே.

விவிலியம் அன்பை மிக அழகாக 1 கொரிந்தியர் 13ம் அதிகாரத்தில் இப்படி விளக்குகிறது

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.

என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது

குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.
அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...