இயேசு செய்த புதுமைகள் 9 : கை சூம்பியவரை குணமாக்குதல்

லூக்கா 6 : 6..11
மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்.
இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார். அவர் எழுந்து நின்றார்.
இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார்.
பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
*
இயேசு தொழுகைக்கூடத்திற்கு வந்து கற்பிக்கிறார். அப்போது அங்கே இருந்த வலக்கை சூம்பிப் போன நபரை குணமாக்குகிறார். இதைக் கண்ட பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் மீது கொலை வெறி கொள்கின்றனர்
இயேசு செய்த சின்ன அதிசயங்களில் ஒன்று இது. ஆனால் இந்தப் பகுதியும் நமக்கு பல்வேறு ஆன்மீகப் புரிதல்களைத் தருகிறது.
1. இயேசு ஓய்வுநாளை அதற்குரிய புனிதத்துடன் அனுசரிக்கிறார். ஓய்வுநாளை இறைவன் படைத்தது மனிதனுடைய உலக வேலைகளிலிருந்து தற்காலிக ஓய்வு கொடுக்க. அந்த ஓய்வு நாள் தனக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும், வலுப்படுத்திக் கொள்ளவும் பயன்பட வேண்டும் என இயேசு விரும்புகிறார். அவர் எல்லா ஓய்வுநாட்களிலும் ஆலயத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆலயத்தில் தனக்கு வரவேற்பு இருக்காது என்பது தெரிந்தாலும் அவர் ஆலயத்துக்குச் செல்வதை நிறுத்தவில்லை. காரணம் ஆலயம் என்பது இறைவனுக்கும் தனக்குமான தனிப்பட்ட உரையாடல் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். கூடவே ஏழை எளிய மக்களோடு உறவாடவும், இறையரசைப் பற்றி அறிவிக்கவும் அவர் ஆலயத்திற்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
நமது வாழ்க்கையில் நாம் ஓய்வுநாளை இறைவனோடு செலவிடுகிறோமா ? அன்றைய தினம் விடுப்பில் இருக்கிறோம், ஆனால் இறைவனோடு இருக்கிறோமா ? ஆலயத்தில் நம்மை வரவேற்கும் மக்கள் இல்லாவிட்டாலும் நாம் ஆலயத்துக்கு வருகிறோமா ? நம்மீது குறை கண்டுபிடிக்கும் மக்கள் நிரம்பியிருந்தாலும் நாம் ஆலயத்துக்கு வருகிறோமா ? எனும் சிந்தனையை நமக்குள் எழுப்புவோம். ஆலயம் என்பது இறைவனோடு இணைந்திருக்கும் தருணம். பிறருடைய விமர்சனங்களுக்காக நாம் இறைவனோடு கொண்ட உறவை பலவீனப்படுத்தாமல் இருப்போம்.
2. இயேசுவின் மீது குறை கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காகவே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் காத்திருந்தது ஒரு கூட்டம். அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என காத்திருந்தது இன்னொரு கூட்டம். அவரிடமிருந்து நல்ல போதனைகளைப் பெற வேண்டும் என காத்திருந்தது பிறிதொரு கூட்டம். இப்படி ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் இயேசுவிடமிருந்து ஒவ்வொரு எதிர்பார்ப்புகள். அவரை ஒரு மேஜிக் மேனாகவோ, செலிபிரடியாகவோ நினைத்தும் மக்கள் அவரைத் தேடி வந்தார்கள்.
நாம் இயேசுவை எப்படி அணுகுகிறோம் ? இயேசு என்றால் பாவங்களிலிருந்து மீட்பவர் என்று பொருள். நாம் நமது பாவங்களிலிருந்து விடுதலை பெற இயேசுவை அணுகுகிறோமா ? அல்லது அவரிடமிருந்து உலக ஆசீர்வாதங்களைப் பெறவேண்டுமென நெருங்குகிறோமா ? அல்லது அவரை ஒரு சிந்தனை வாதியாக, ஒரு இறைவாக்கினராக சுருக்கி விடுகின்றோமா ? சிந்திப்போம். அவர் இறைவன் என்பதை மட்டுமே மனதில் இருத்துவோம்.
3. அங்கே இருந்த மனிதர் ஒருவருக்கு வலது கை சூம்பிப் போன நிலையில் இருந்தது. வலது கை சூம்பிப் போனால் ஒரு மனிதன் முக்கியமான மூன்று வேலைகளைச் செய்ய முடியாது. ஒன்று, உழைத்தல். தனது வாழ்க்கைக்கான உழைப்பை அவனால் செலவிட முடியாது. இரண்டு, துதித்தல். இறைவனை போற்றிப் புகழவும், பாடவும், கைகள் தட்டி ஆராதனை செய்யவும் அவனால் முடியாது. மூன்று, அரவணைத்தல். பிறரை அன்புடன் அரவணைக்க அவனால் முடியாது ! இந்த மூன்று விஷயங்களையும் செய்ய விடாமல் அவனது குறைபாடு தடுத்தது.
நமது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயம், ஒரு பாவம் நம்மை இந்த விஷயங்கள் செய்ய விடாமல் தடுக்கலாம். அதை இறைவன் சரிசெய்ய வல்லமை உடையவராக இருக்கிறார்.
4. சூம்பிய கை மனிதரை இயேசு ஏன் சுகமாக்குகிறார் ? ஒரு வார்த்தையில் விடை சொல்ல வேண்டுமெனில் “அன்பினால்” என சொல்லலாம். இயேசுவின் அன்பு அந்த நபரைக் கண்டவுடன் செயல்வடிவம் பெறத் துடித்தது. அவருடைய அன்பினை அடக்கி வைக்க எந்த தாழ்ப்பாளும் கிடையாது ! அன்பு என்பது அளந்து கொடுப்பதல்ல, அளவில்லாமல் கொடுப்பது. நாள் கிழமை பார்த்து கொடுப்பதற்கு அன்பு ஒன்றும் மாத ஊதியம் அல்ல. அன்பு என்பது பொங்கிப் பிரவாகம் எடுப்பது, சொட்டுச் சொட்டாய் வடிவதல்ல. அன்பு என்பது அடைமழை போன்றது, அது சாரலோடு சமரசம் செய்து கொள்வதல்ல.
ஓய்வு நாள் என்பது இறைவனோடு இருப்பது. இறைவனோடு இருப்பது என்பது அன்போடு இருப்பது. அன்போடு இருப்பது என்பது அன்பின் செயல்களோடு இருப்பது. வாரத்தின் ஏழு நாட்களும், நாளில் 24 மணி நேரங்களும் நாம் அன்பில் இருக்க வேண்டும். அன்பை தள்ளி வைக்கக் கூடாது, அள்ளி வைக்க வேண்டும். அன்பை தள்ளி வைப்பது என்பதும், மனிதத்தைக் கொள்ளி வைப்பது என்பதும் ஒன்று தான். நமது வாழ்க்கையில் அன்பினை எந்த கணமும் வழங்க தவறாமல் இருப்போம். பிறர் கேட்டால் மட்டுமல்ல, கேட்காமலும் வழங்குவோம்.
5. “ஓய்வு நாளில் எது செய்வது முறை ? நன்மை செய்வதா ? தீமை செய்வதா ? ” என இயேசு கேட்கிறார். பதில் எல்லோருக்குமே தெரியும். சட்டங்களை முழுமையாக அறிந்த, கடவுளைப் பற்றி காலா காலமாய் படித்து வருகின்ற மறை நூல் அறிஞர்களும், பரிசேயத் தலைவர்களும் அமைதியாய் இருக்கின்றனர். உண்மையை அறிந்திருந்தும் அதை பேசாமல் இருப்பது பொய் பேசுவதற்கு சமம். நன்மை செய்ய அறிந்திருந்தும் செய்யாமல் இருப்பதும் பாவம் என்றெல்லாம் நமக்கு விவிலியம் போதிக்கிறது. ஆனால் சுற்றி இருந்தவர்கள் அமைதியாய் இருக்கின்றனர். ‘நீ நேற்று வந்தவன், நாங்கள் இந்தத் தொழுகைக் கூடத்தின் மூத்த தலைவர்கள்” எனும் இறுமாப்பு கூட இருந்திருக்கலாம். அவர்கள் அமைதி காத்தார்கள். இயேசுவின் கேள்விக்கு ஒரு பதிலைக் கூடச் சொல்லாமல் அதிகபட்ச உதாசீனத்தை வெளிப்படுத்தினார்கள். அப்போது இயேசு சினத்துடன் அவர்களை பார்க்கிறார்.
இயேசுவின் சினம் விவிலியத்தில் சில இடங்களில் தான் வெளிப்படுகிறது. இறைவனின் ஆலயத்தின் புனிதம் கெட்டபோது அவர் சவுக்கால் அடித்து விற்பனையாளர்களை விரட்டினார். ஏழைகளை ஒடுக்கும் சூழலையும், மனிதம் மறுக்கப்படும் சூழலையும் கண்டபோதெல்லாம் அவர் சினமடைந்தார். தனது மீட்பின் திட்டத்துக்கு எதிரே நண்பரே வந்தாலும், “அப்பாலே போ சாத்தானே” என சினமடைகிறார். ஆனால் எந்தக் காலத்திலும் இயேசுவின் சினம் சுயநலத்துக்காகவோ, எளியவர்களின் அறியாமைக்காகவோ, திறமையின்மைக்காகவோ எழுந்ததே இல்லை. சினம் தவிர்க்கப்பட வேண்டிய தருணங்கள் எவை ? சினமடைய வேண்டிய தருணங்கள் எவை ? என்பதையெல்லாம் இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.
6. மக்களுடைய பிடிவாத மனதைக் கண்டு இயேசு வருந்துகிறார். கோபமும், வருத்தமும் இயேசுவோடு இணைந்தே பயணிக்கின்றன. மக்கள் மனித நேயமில்லாமல் இருக்கிறார்களே என கோபமடைகிறார். இதன் மூலம் தங்களுடைய மீட்பை இழந்து விடுவார்களே என வருந்துகிறார். இறைவனுடைய வார்த்தையை கேட்கும் போதெல்லாம் நாம் அதை நிராகரிக்கத் துவங்கினால் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் கடினமடையும். இறுகத் துவங்கும். காலப்போக்கில் நமது இதயம் இறுகிப் போய் இறை வார்த்தைகள் சற்றும் சலனப்படுத்தாமல் சென்று விடும். அப்போது நாம் கடின இதயம் உடையவர்களாக மாறிப் போய்விடுவோம். எத்தனை விதைகள் விழுந்தாலும் வேர் இறக்க முடியாத பாறையைப் போல இதயம் மாறிவிடும்.
கடின இதயம் இறைவனின் மீட்பை விட்டு நம்மை விலக்கி விடும். இறைவன் நமக்காய் வைத்திருக்கும் இறையரசை நாம் பெற்றுக் கொள்ளாமல் இருக்க கடின இதயம் காரணமாகிவிடும். மக்களின் கடின இதயம், இயேசுவின் இதயத்தை இளக்கியது. அவர் வருந்தினார். நாம் நமது இதயத்தைக் கடினப்படுத்தாமல் காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இறை வார்த்தைகளுக்கு செவி கொடுப்பவர்களாகவும், இறை வார்த்தையைச் செயல்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.
7. “கையை நீட்டும்” என்றார் இயேசு ! கொஞ்சம் வியப்பான விஷயம். எது அவனால் செய்ய முடியாதோ, அதைச் செய்யச் சொல்கிறார் இயேசு. சூம்பிப் போய் நீட்ட முடியாத கை அது. நீட்டு என்றார். படுக்கையோடு கிடந்த ஒருவனை எழும்பு என்றார். கூனியை நிமிர் என்றார். எது முடியாது என மனிதர் நினைக்கின்றனரோ அதைச் செய்யச் சொல்கிறார் இயேசு. ‘இதெல்லாம் முடியாது’ என முடங்குபவர்கள் இறைவனின் அற்புதத்தைக் காண முடியாது. அவரது அழைப்பை ஏற்று அதன்படி செயல்படுபவர்களே அதிசயங்களைக் காண்பார்கள். அந்த சூம்பியக்கை மனிதர் கையை நீட்டாமல் இருந்திருந்தால் அப்படியே தான் இருந்திருப்பார். கையை நீட்டியதால் முழுமை அடைந்தார்.
நாமும் நமது வாழ்வில் பல ஆண்டுகளாக விட முடியாத ஏதேனும் ஒரு பாவம் இருக்கலாம். அது விடவே முடியாது என நாம் நினைக்கலாம். ஆனால் அதைத் தான் இயேசு விடச் சொல்கிறார். இயேசு சொல்லும் போது அதை நாம் நம்பி விட்டு விட முன்வரும் போது அதை முழுமையாய் விலக்க முடியும். இதையெல்லாம் விடவே முடியாது என நினைத்தால் நமது பாவம் விட்டு விட முடியாததாகி நம்மோடு பின்னிப் பிணைந்து விடும்.
8. சூம்பியக் கை அவனுடைய உடலோடு தான் இருந்தது. ஒரு பாகமாகத் தான் இருந்தது. ஆனால் அது முழுமையாய் இல்லை. குறைபாடுள்ளதாய் இருந்தது. அந்தக் குறைபாட்டை இயேசு நிவர்த்தி செய்கிறார். நமது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு ஆன்மீகக் குறைபாடு நம்மிடம் இருக்கலாம். அது நம்மை மற்ற உறுப்புகளைப் போல, அல்லது இயேசு எனும் திராட்சைச் செடியின் மற்ற கிளைகளைப் போல பயன் தர முடியாமல் போகலாம். அதை இயேசு சரி செய்தால் நாம் ஆன்மீக வளர்ச்சி அடைந்து முழுமை பெறுவோம்.
நம்மிடம் குறைபாடு இருக்கிறது என்பதை மறைக்காமல் இயேசுவிடம் வந்தாலே போதும் அவர் அதை சரி செய்கிறார். சூம்பியக்கையை அந்த மனிதர் மறைத்து வைத்திருந்தால் இயேசு அங்கே அதிசயங்களைச் செய்திருக்க மாட்டார். நமது தேவைகளை இறைவனின் பார்வையில் வைப்போம்.
9. சூம்பியக் கை என்பது உயிர் போகும் விஷயமல்ல. நாளையோ, நாளை மறுநாளோ கூட நலமாக்கலாம். அவசரமில்லை. அன்றைய தினம் ஓய்வுநாள். ஓய்வுநாள் முடிந்தபின்பு கூட சரிசெய்யலாம். ஆனால் இயேசுவோ அத்தகைய தேவையற்ற கட்டுப்பாடுகளுக்குள் விழவில்லை. ஒரு நபருக்குத் தேவை இருக்கிறது என்பதை அறிந்ததும் உதவுகிறார். குழியில் விழுந்த ஆடுமாடுகளை தூக்கி விடும் பரிசேயத்தனம், நோயில் விழுந்த மனிதனை தூக்கி விடுவதை எதிர்க்கிறது. இது போலித்தனம் என்பதை இயேசு தனது செயல் மூலம் வெளிப்படுத்துகிறார்.
நமது வாழ்வில் நமக்குத் தெரிந்த எத்தனையோ நபர்கள் தேவையில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு தேவை இருக்கிறது என்பதை நாம் உணர்கிறோம். அவர்களுக்கு உடனே நாம் உதவுகிறோமா ? அடுத்த வாரம் பாத்துக்கலாம் என உதாசீனம் செய்கிறோமா ? அடுத்தவர்கள் மீது வரவேண்டியது பரிதாபமல்ல, பாசம். அலட்சியமல்ல அன்பு ! மனதை பரிசீலனை செய்வோம்.
10. பரிசேயர்கள் இயேசுவின் மீது கொலை வெறி கொள்கின்றனர். கடவுளைப் பற்றி அறிந்தவர்கள் கடவுளையே கொலை செய்ய முயல்கின்றனர். இயேசுவின் மீது அன்பு கொள்ளலாம், அல்லது அவரைக் கொலை செய்யலாம் அவ்வளவு தான். ‘என்னை அன்பு செய்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்’ என்கிறார் இயேசு. அன்பு செய்யாதவன் அதை மீறுகிறான். அது பாவமாகிறது. பாவம் இயேசுவைச் சிலுவையில் அறைகிறது. எனவே தான் சொன்னேன், இயேசுவை அன்பு செய்யலாம் அல்லது கொலை செய்யலாம். நாம் என்ன செய்கிறோம் ? நம் பாவத்தால் அவரை வீழ்த்துகிறோமா ? அன்பினால் அவரை வாழ வைக்கிறோமா ?
இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.
Like this:
Like Loading...