Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த‌ புதுமைகள் 5 : முப்பத்தெட்டு ஆண்டுகளின் பிணி நீங்கியது

38 ஆண்டு பிணியாளர் நலமடைதல்

Image result for jesus heals a man lying for 38 yearsயோவான் 5 : 1..16

யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். [இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள். ஏனெனில் ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.]

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார்.

“ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.

அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள்.

அவர் மறுமொழியாக “என்னை நலமாக்கியவரே, ‘உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்’ என்று என்னிடம் கூறினார்” என்றார்.

“‘படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.

பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.

ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள். இயேசு அவர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்” என்றார். இவ்வாறு அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.

***

பெத்சதா என்பதற்கு இரக்கத்தின் இல்லம் என்பது பொருள். ஒரு காலத்தில் வசீகரமாக இருந்த அந்த மண்டபம் பின்னர் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் புகலிடமாகிப் போனது. அங்கே உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் படுத்துக் கிடந்தனர்.

வேகமாக நகர்கின்ற பாதங்களோடு மனிதர்கள் அந்த இடங்களைக் கடந்து செல்வார்கள். யாரும் நின்று நிதானிப்பது இல்லை. அங்கே இருக்கின்ற குளம் ஒரு நோய் நிவாரணியாய் அங்குள்ள மனிதர்களுக்கு இருந்தது. இந்த மனிதனும் தனது நோயைத் தீர்த்துக் கொள்ள மக்களால் தூக்கி வரப்பட்டவனாய் இருக்க வேண்டும்.

ஆண்டுகள் செல்லச் செல்ல தனிமையாகிறான். எந்த தீர்வும் இல்லாமல் தவிக்கிறான். அந்த சூழலில் தான் இயேசு அங்கே வருகிறார். அவருக்கு அங்குள்ள நோயாளிகளின் நிலமை தெரியும். நேராக இந்த மனிதனின் முன்னால் நிற்கிறார். நலம் பெற விரும்புகிறாயா ? என கேட்கிறார். அவனுக்கு நலமளிக்கிறார். அது யூத தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

அவர்களுக்கு 38 ஆண்டுகள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த நபர் நலமானதன் மகிழ்ச்சி தெரியவில்லை. ஆனால் ஒரு ஓய்வு நாள் சட்டம் மீறப்பட்டதை அவர்கள் எதிர்க்கின்றனர். உண்மையில் இறைவன் ஓய்வுநாளை மனிதனுக்காய் படைக்கிறார். அவன் உலக வேலைகளை விடுத்து தன்னோடு இணைந்திருக்க அந்த நாளை அவர் தருகிறார். சட்டமோ மக்களை ஆயிரத்தெட்டு தேவையற்ற சட்டங்களைப் போட்டு சாகடிக்கிறது. அந்த நிலமையை இயேசு வெறுத்தார்.

இந்த அற்புதம் பல்வேறு சிந்தனைகளை நமக்குள் எழுப்புகிறது.

1. அந்த நபர் முப்பத்தெட்டு ஆண்டு காலம் அதே இடத்தில் இருக்கிறார். “நாம் காதேசு பர்னேயாவினின்று புறப்பட்டு செரேது ஓடையைக் கடப்பதற்கு ஆன காலம் முப்பத்தெட்டு ஆண்டுகள்” என்கிறது உபாகமம்/இணைச்சட்டம் 2 :14. இஸ்ரயேல் மக்களுக்கு, அருகிலேயே இருக்கும் இடத்தை அடைய 38 ஆண்டுகள் ஆகின்றன. இந்த உவமையிலும் அதே போல, அருகிலேயே இருக்கும் குளத்தில் இறங்க முடியாமல் 38 ஆண்டுகள் வாடுகிறார் ஒரு நபர். இறைவனின் விருப்பம் இருந்தால் தூரமும் அருகே வரும், இல்லையேல் அருகே இருப்பதும் தூரமாகும்.

2. “நலம் பெற விரும்புகிறீரா ?” என இயேசு கேட்கிறார். விந்தையான கேள்வியாய் தோன்றினாலும் அது சில சிந்தனைகளை நமக்குள் எழுப்புகிறது. 38 ஆண்டுகள் எழும்ப முடியாமல் கிடக்கும் ஒருவனுடைய ஒரே தேவை எழும்பி நடப்பது மட்டுமே என நாம் நினைப்போம். ஆனால் இயேசுவோ அதை ஊர்ஜிதப்படுத்த விரும்புகிறார். 38 ஆண்டுகளாய் பழகிப் போன ஒரு சூழலில் இருந்து வெளியே வருவது விருப்பமா என்பதை பரிசோதிக்கிறார்.

நாமும் நமது வாழ்வில் பல நீண்ட காலமாக ஒரு பாவத்தில் படுத்துக் கிடக்கலாம். அந்தப் பாவம் நமக்கு ரொம்பவே பழகிப் போயிருக்கலாம். அந்தப் பாவத்தை விட்டு வெளியே வர நமக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதை நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

3. நலம் பெறுதல் உடல் பலகீனத்திலிருந்து விடுபடுதல் எனில், படுத்தே கிடக்கும் நபர் எழும்ப வேண்டும், நடக்க வேண்டும், தனது விஷயங்களை தானே கவனிக்க வேண்டும், பிச்சை எடுக்கக் கூடாது, தூய்மையாய் இருக்க வேண்டும் என பல ‘தேவைகள்’ ! நலம் பெறுதல் என்பது பாவத்திலிருந்து வெளியே வருதல் என வைத்துக் கொண்டால், நாம் பாவத்தின் படுகுழியிலிருந்து எழும்ப வேண்டும், அந்தப் பாவத்தை விட்டு விலக வேண்டும், மீண்டும் அந்தப் பக்கம் போகக் கூடாது, நல்ல வழியில் நடக்க வேண்டும். இப்படி பல விஷயங்கள். இதற்கு நாம் தயாரா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

4. இயேசு அவர் முன்னால் வந்து “நலம் பெறுகிறாயா ?” என கேட்டபோது அவர் மூன்று ஷயங்களைச் சொல்கிறார். ஒன்று, தன்னால் குளத்தில் இறங்க முடியவில்லை எனும் ஆதங்கம். இரண்டு, மற்றவர்கள் உதவி செய்யவில்லையே எனும் கவலை, 3 மற்றவர்கள் தடையாக இருக்கிறார்கள் எனும் பரிதவிப்பு. அவனுடைய பார்வையில் நலம் பெற அது ஒன்றே வழி. நலம் பெற விரும்புகிறாயா எனும் இயேசுவின் கேள்வியை அவன் அப்படித் தான் புரிந்து கொள்கிறான். தன்னை குளத்தில் சரியான நேரத்தில் இறக்கி விட இயேசுவின் உதவி கிடைக்கும் என நினைக்கிறான்.

நாமும் நம் முன்னால் இயேசு வந்து நிற்கும் தருணங்களில், அவருடன் நேரடியாக ஒரு விஷயத்தைக் கேட்காமல் நம்மால் முடியவில்லை, பிறர் உதவவில்லை, பிறர் நமக்குத் தடையாக இருக்கிறார்கள் என்றே பேசுகிறோம். இயேசுவைப் பற்றிக்கொண்டால் மற்ற 1008 கவலைகள் தேவையில்லை. நாம் இயேசுவைப் பற்றிக் கொள்கிறோமா, அந்த கவலைகளைப் பற்றிக் கொள்கிறோமா ?

5. “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என இயேசு சொல்கிறார். அவனுடைய உடல் வலுவடைகிறது. இதுவரை அவனைச் சுமந்த படுக்கையை இப்போது அவன் சுமக்கிறான். இதுவரை பாவத்தின் கட்டில் கிடந்தவன், இப்போது பாவத்தை அவன் கைகளில் அடக்கி வைக்கிறார். இயேசு நலம் தரும்போது நாம் புதுப் பிறப்பெடுக்கிறோம். புது சிருஷ்டியாகிறோம். அப்போது பழையன ஒழிகின்றன, எல்லாம் புதிதாகின்றன. பாவத்தை நாம் அடக்கி ஆள்வோம் என்பதை இது விளக்குகிறது.

6. அவனுக்கு தன்னை நலமாக்கியவர் யார் எனும் உண்மை தெரியவில்லை. ஆலயத்தில் இயேசு அவனை இரண்டாம் முறையாகச் சந்தித்த பின்பே அது தெரியவருகிறது. நாமும் பல வேளைகளில் இறைவனின் அருள் வரங்களைப் பெற்றுக் கொண்டபின் அவரை மறந்து விடுகிறோம். ஆசீர்வாதம் தந்தவரைத் தேடாமல் நமது உற்சாகத்தின் போக்கிலேயே ஓடுகிறோம். வரம் தந்தவரை நாம் உடனடியாக பற்றிக் கொள்ளும் மனதைத் தேடவேண்டும்.

7. “இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்கிறார் இயேசு. உடல் நோயை நான் நீக்கிவிட்டேன். இந்த வாழ்க்கை இன்னும் சில காலம் தான். உனக்கு முடிவில்லா வாழ்வு வேண்டுமெனில் நீ பாவம் செய்யக் கூடாது. அது தான் அதிக கேடானது. 38 ஆண்டைய உன் வேதனை மிக சொற்பமே. என இயேசு அவனுடைய நிலை வாழ்வுக்கான வழியைச் சொல்கிறார். உடல் நோய்களுக்கான தேடல் மட்டுமே நம்மிடம் எப்போதும் இருக்கிறது, நிலை வாழ்வுக்கான தேடலே தேவை என இயேசு வலியுறுத்துகிறார்.

8. உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் அந்த குளத்தங்கரையில் கிடந்தனர் என்கிறது விவிலியம். ஆலயத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட மக்களினமாக அது இருக்க வேண்டும். அந்த நிராகரிக்கப்பட்ட மக்களைத் தேடிச் செல்பவராய இயேசு இருக்கிறார். பெரியவர்களை அல்ல, எளியவர்களையே இயேசு தேடிச் சென்றார். நமது வாழ்க்கை எளியவர்களைத் தேடிச் செல்கிறதா ? அல்லது பெரியவர்களின் சகவாசத்தை விரும்புகிறதா என்பதை சிந்திப்போம்.

9. அந்த நிகழ்வில், இயேசு ஒரு மனிதரைத் தேடிப் போய் நலமாக்குகிறார். அவருடைய உள்ளத்தை இயேசு அறிந்திருக்க வேண்டும். தான் இறைமகன், இறைவனுக்கு இணையானவர் என்பதை அந்த புதுமையின் மூலம் அவர் விளக்குகிறார். அதனால் யூதர்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதை அவர் பொருட்படுத்தவில்லை. அந்த இடத்தில் இருந்த மற்ற நோயாளிகளை அவர் சுகமாக்கவும் இல்லை. இயேசுவின் திட்டம் என்ன என்பது பல வேளைகளில் நமக்குப் புரிவதில்லை. ஆனால் நாம் அவரை ஆத்மார்த்தமாய்த் தேடினால் எவ்வளவு பெரிய கூட்டத்திலும் அவர் நம்மைத் தேடி வருவார் என்பதும், நமக்கு வாழ்வை நல்குவார் என்பதும் இதனால் விளங்குகிறது.

10. “தண்ணீக் கலங்கும் போது” குளத்தில் இறங்கினால் தான் சுகம் கிடைக்கும் என அந்த நபர் நினைத்தார். நாமும் பலவேளைகளில் ஒரு தீர்வை மனதில் வைத்திருக்கிறோம். அதைத் தவிர வேறு தீர்வு இல்லை என நினைக்கிறோம். நாம் நினைக்கும் வகையில் தான் கடவுளால் நமக்கு உதவ முடியும் என நினைக்கிறோம். ஆனால் இறைவனோ நாம் சற்றும் எதிர்பாராத வியப்பான வழிகளில் நமக்கு உதவுவார். அவருடைய வழிகள் நாம் நினைப்பது போல அல்ல என்பதையும் இந்த நிகழ்வு விளக்குகிறது.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம். பாவத்தின் கட்டிலை விட்டு எழுந்து, வாழ்வுக்கான வழிகளில் பயணிப்போம்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s