Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 6 : முடக்குவாதமுற்றவரை நலமாக்குதல்

இயேசு செய்த புதுமைகள் : முடக்குவாதமுற்றவரை நலமாக்குதல்
மார்க் 2:1..12

Image result for Jesus heals a paralyzed man

சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.

உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது?

மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.

அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

***

இயேசு கப்பர்நகூமுக்கு வருகிறார். அது தான் இயேசுவின் போதனைகளின் தலைமை இடம். அங்கே தான் பேதுருவின் வீடு இருக்கிறது. பேதுருவின் வீட்டில் இந்த நிகழ்வு நடந்திருக்க சாத்தியக் கூறுகள் அதிகம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இங்கே இயேசு வருகை தந்திருக்கிறார். ஒரு முடக்குவாதக்காரனை நான்கு பேர் கட்டிலோடு தூக்கி வருகின்றனர். இயேசுவின் அருகே செல்ல முடியவில்லை. எனவே அவர்கள் அந்த வீட்டின் கூரையை பிரித்து கட்டிலோடு திமிர்வாதக்காரனை இயேசுவின் முன்னால் இறக்குகின்றனர்.

வந்தவர்கள் இயேசுவிடம் எதையும் சொல்லவில்லை. எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் கூறவில்லை. ஆனால் இயேசு அனைத்தையும் அறிகிறார். அந்த மனிதனின் உள்ளத்தையும் அறிகிறார். எனவே, அவரைச் சுகமாக்குகிறார்.

“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என இயேசு சொன்னதால் பரிசேயர்கள் அவர் மீது கோபம் கொள்கின்றனர். மக்களோ அவரிடம் ஈர்ப்பு கொள்கின்றனர்.

இந்த புதுமை பல சிந்தனைகளையும், புரிதல்களையும் நமக்குத் தருகிறது.

Image result for jesus heals withered hand man1. இந்தப் புதுமை மத்தேயு, மார்க், லூக்கா எனும் மூன்று நற்செய்திகளிலும் வருகிறது. லூக்கா நற்செய்தியில் இயேசு வீட்டில் அமர்ந்து போதித்துக் கொண்டிருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ஊர்களிலுமிருந்து இயேசுவைக் காண மக்கள் வருகின்றனர். பிணி தீர்க்க வேண்டும், பேய் விரட்ட வேண்டும், இயேசுவைப் பார்க்க வேண்டும் என எத்தனையோ விருப்பங்களோடும், தேவைகளோடும் மக்கள் வருகின்றன. ஆனால் இயேசு தனது முதன்மையான பணியை விட்டு விலகவில்லை. “இயேசு அங்கே அமர்ந்து மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார்”. முக்கியமான வேலை என்பது நற்செய்தி அறிவிப்பதே ! விண்ணரசுக்காய் மக்களை தயாராக்குவதே இயேசுவின் தலையாய பணி. எனவே அதை முதலில் நிறைவேற்றுகிறார். கூட்டமோ, மக்களுடைய எதிர்பார்ப்புகளோ அவரை திசைதிருப்பவில்லை.

நமது வாழ்விலும் நான்கு பேர் அமர்ந்திருக்கும் இடத்தில் நமது சிந்தனை, பேச்சு எப்படி இருக்கிறது ? எதைச் சார்ந்து இருக்கிறது ? நாம் நற்செய்தியை அறிவிக்கும் மனதோடு இருக்கிறோமா ? அல்லது நேரத்தை வீணடிக்கும் கூட்டத்தில் இருக்கிறோமா என சிந்திக்க வேண்டும்.

Image result for jesus heals withered hand man2. முடக்குவாதக் காரர் ஒருவரை கட்டிலோடு சுமந்து கொண்டு இயேசுவிடம் வருகின்றனர் நான்கு பேர். அவர்கள் சகோதரர்களாக இருக்கலாம், உறவினர்களாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த முடக்குவாதக் காரரை தொந்தரவு செய்யாமல் அவரை அப்படியே தூக்கிக் கொண்டு இயேசுவிடம் வருகிறார்கள்.

நாம் இயேசுவிடம் ஒரு நபரைக் கொண்டு வரும்போது அவரை அவருடைய இயல்போடும், அவருடைய தற்போதைய சூழலோடும் அப்படியே கொண்டு வரவேண்டும். அவரை நலமாக்கும் பணி இயேசுவுக்கே உரியது. இயேசுவிடம் ஒருவரைக் கொண்டுவர நாம் எந்த தயாரிப்பையும் செய்யத் தேவையில்லை என்பதை இந்த நிகழ்வு விளக்குகிறது.

Image result for jesus heals withered hand man3. வீட்டில் நுழைய முடியவில்லை. வாசலும் நிரம்பி வழிகிறது. சன்னல், கதவுகள் எல்லாம் மக்கள் கூட்டம். அந்த நபரைத் தூக்கி வந்தவர்கள் அந்த கூட்டத்தையும் தொந்தரவு செய்யவில்லை. உடனே இயேசுவைக் காணவேண்டும் எனும் ஆர்வம் அவர்களிடம் இருந்தது. இயேசு போதனையை முடிக்கட்டும் என்றோ, எப்போதாவது வெளியே வரட்டும் காத்திருப்போம் என்றோ நினைக்கவில்லை. உடனடியாக இயேசுவை நெருங்க வேண்டும் எனும் ஆர்வம் அவர்களுக்குள் கொப்பளித்தது. அத்தகைய ஆர்வமே இறைவன் விரும்புவது !

நாம் ஒரு நபரை கிறிஸ்துவிடம் அழைத்து வருகையில் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறோம். விழா நாளுக்காக காத்திருக்கிறோமா, ஓய்வு நாளுக்காக காத்திருக்கிறோமா, அல்லது நமது வேலை முடியட்டும் என காத்திருக்கிறோமா ? சிந்திப்போம். இறைவனிடம் அழைத்து வருகையில் எந்தத் தாமதமும் இருக்கக் கூடாது என்பதே இந்த நிகழ்வு சொல்லும் பாடம் !

Image result for jesus heals withered hand man4. இயேசுவை நெருங்க அந்த நோயாளியும், நான்கு பேரும் வருகையில் மக்கள் அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. அந்த நபர்களுடைய தேவையையும், தேடலையும் மதிக்கவில்லை. இயேசுவை அவர்கள் சந்திப்பதற்குக் குறுக்கே இருக்கின்றனர்.

நாம் எப்படி இருக்கிறோம். இயேசுவைக் காணவேண்டும் என ஆர்வமாய் இருக்கும் மக்களுக்கு உதவி செய்பவர்களாக இருக்கிறோமா ? அவர்களுக்கு தடையாய் இருக்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசுவைக் காணவேண்டும் என வருகின்ற மக்களுக்கு பாதையாக இருக்க வேண்டுமே தவிர, தடையாய் இருக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Image result for jesus heals withered hand man5. முடக்குவாதக்காரரைத் தூக்கி வந்தவர்கள் வீட்டின் கூரையைப் பிரித்து கட்டிலோடு அவரை இயேசுவின் முன்னால் இறக்குகின்றனர். வீட்டு உரிமையாளரிடம் கேட்ட வேண்டுமென்றோ, மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ அவர்கள் யோசிக்கவில்லை. அந்தக் கணம் இயேசுவை அடைய வேண்டும் என்பதே அவர்களுடைய ஒரே சிந்தனையாய் இருந்தது. பிறர் தங்களைத் திட்டுவார்களோ ?, பிறர் ஏளனமாய் பார்ப்பார்களோ ? என்றெல்லாம் சற்றும் யோசிக்கவில்லை.

நம்முடைய சிந்தனைகள் எப்படி இருக்கின்றன ? இயேசுவை அடையும் முயற்சி அடுத்த நபர்களுடைய கருத்துகளினால் முடங்குகிறதா ? அடுத்தவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுத்து நமது ஆன்மீகப் பயணத்தை மாற்றிக் கொள்கிறோமா ?

Image result for jesus heals withered hand man6. நான்குபேர் ஒரு முடக்குவாதக் காரரை தூக்கி வருகின்றனர். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு அந்த நபருக்கு சுகம் கொடுக்கிறார். பிறருடைய நம்பிக்கைகள், பிறருடைய வேண்டுதல்கள், பிறருடைய முயற்சிகள் இவை கூட ஒரு மனிதனுக்கு மீட்பைக் கொண்டு வர முடியும் என்பதன் வெளிப்பாடே இது ! நோவாவினால் அவரது குடும்பம் மீட்கப்பட்டது போல, இந்த நான்கு நபர்களினால் முடக்குவாதக்காரர் மீட்கப்படுகிறார்.

நாமும் பிறருக்காக செபிக்க, பிறரை இயேசுவிடம் கொண்டு வர, பிறரை இயேசுவுக்குள் வழிநடத்த அழைக்கப்படுகிறோம். குறைந்தபட்சம் நமது குடும்பம், நமது சகோதரர்கள், நமது உறவினர்கள், நமது பிள்ளைகள், இவர்களை இறைவனுக்குள் கொண்டுவருதல் அவசியம். அத்தகைய முயற்சிகளில் வழுவாதிருப்போம்.

Image result for jesus heals withered hand man7. “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்கிறார் இயேசு. அந்தக் காலத்தில் தீராத ஊனம் என்பது பாவத்தின் விளைவு என நம்பினர் மக்கள். அந்த ஊனமுற்ற நபரும் அத்தகைய குற்ற உணர்வுடன் இருந்திருக்க வேண்டும். எனவேதான் இயேசு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என அவனுடைய குற்ற உணர்வைப் போக்குகிறார். தான் இறைமகன், பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உடையவர் என்பதையும் அந்த இடத்தில் வெளிப்படுத்துகிறார்.

நாமும், நமது எல்லைக்குட்பட்ட விஷயங்களில் எந்த விதத் தாமதமும் இல்லாமல் மன்னிப்பை பிறருக்கு வழங்கும் ஆவல் கொண்டவர்களாய் இருக்க வேண்டும். மன்னிப்பு வழங்குவதில் எந்த விதமான தயக்கமும் கொள்ளக் கூடாது. பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. ஆனால் நம்மிடம் பகை கொள்ளும் அனைவரையும் மன்னிக்கும் உரிமை நமக்கு உண்டு. அதை செயல்படுத்த வேண்டும்.

Image result for jesus heals withered hand man8. பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் அனைவரும் ஒரு விஷயத்தைச் சரியாகப் பேசுகின்றனர். அதாவது கடவுள் தான் பாவங்களை மன்னிக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். ஆனால் யார் கடவுள் என்பதில் அவர்களுக்கு குழப்பம். இயேசுவை கடவுளாய் ஏற்க அவர்களுக்குத் தயக்கம். நம்மைச் சுற்றியும் ஏராளமான மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் இயேசுவை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

நமது மனநிலை எப்படி இருக்கிறது ? இயேசுவை அறிகின்ற அறிவு மட்டுமா ? அவரே மீட்பர் என பற்றிக் கொள்ளும் மனமுமா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவு நம்மை மீட்பதில்லை, அடைக்கலமே நம்மை மீட்கும்.

Image result for jesus heals withered hand man9. “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது? ” என இயேசு கேட்டார். மனிதர்களுக்கு இரண்டுமே கடினம். இருந்தாலும் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என சொல்வது எளிது என்பதே அவர்களுடைய சிந்தனை. காரணம், அதை யாரும் சோதித்துப் பார்க்க முடியாது. எழுந்து நட என்று சொன்னபின் எழுந்து நடக்காவிட்டால் திட்டம் தோல்வி என எல்லோருக்கும் தெரியவரும். ஆனால் உண்மையில், ‘பாவங்களை மன்னிப்பதே’ கடினம். காரணம், அதற்குத் தான் இயேசு சிலுவையில் அறையுண்டு மரிக்க வேண்டியிருக்கிறது !

நமது தேவை என்னவாய் இருக்கிறது ? நமது உடல் நோய் தீர்வதா ? பாவம் தீர்வதா ? எதை முதன்மையாய்க் கருதுகிறோம். எதைத் தேடுகிறோம் ? உடல் நோய் தீர்வதை பிரமிப்புடன் பார்த்து, மீட்பின் திட்டத்தை எளிதாய் எடுத்துக் கொள்கிறோமா ? பாவங்கள் மன்னிக்கப்படுவதே மிகப்பெரிய செய்தி என்பதை புரிந்து கொள்வோம்.

Image result for jesus heals withered hand man10. மற்றவர்கள் மனதுக்குள் தீயன சிந்திப்பதை இயேசு அறிகிறார். அதைக் கண்டதும், ஏன் இப்படி உங்கள் மனதில் சிந்திக்கிறீர்கள் என கேள்வி விடுக்கிறார். நமது மனம் ஒரு நல்ல செயலைக் காணும்போது பொறாமையும் எரிச்சலும் கொள்கிறதா ? அல்லது மகிழ்ச்சியடைகிறதா ?

பிறர் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும்போது நமது மனம் என்ன சொல்கிறது ? மகிழ்கிறதா ? அல்லது வெறுக்கிறதா என்பதை பரிசீலனை செய்வோம். நமது மனம் ஆன்மீகத்தில் வளருமானால் பிறருடைய நலனில் மகிழ்வோம் என்பதைப் புரிந்து கொள்வோம்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s