Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 7 : தொழுநோய் நலமாதல்

இயேசு செய்த புதுமைகள் : தொழுநோய் நலமாதல்

Image result for Jesus heals a leper

மத்தேயு 8 :1..4; மார்க் 1:40..45, லூக்கா : 5:12..16

இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து,

“ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார்.

இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.

இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்றார்.

***

மிக எளிமையான புதுமை போல தோன்றினாலும் அன்றைய வாழ்க்கைச் சூழலோடு ஒப்பிடும்போது இது மிகவும் வித்தியாசமான அற்புதம். காரணம் அந்த நோய் !!!

தொழுநோய் என்பது பாவத்தின் விளைவான நோய் என்பது அன்றைய நம்பிக்கை. அத்தகைய நோய் உடையவர்கள் மக்களின் அருகே வரக்கூடாது, தொழுகைக்கூடங்களில் நுழையக் கூடாது, பொது இடங்களில் உலவக் கூடாது என்பதெல்லாம் அன்றைய சட்டங்கள். ஊருக்கு ஒதுக்குப் புறமாக தொழுநோயாளிகள் குகைகள் போன்ற இடங்களில் வாழ்வார்கள்.

இங்கே ஒரு தொழுநோயாளி இயேசுவின் அருகே வந்து தன்னைக் குணமாக்க வேண்டுகிறான், இயேசுவும் அவனுக்கு குணமளிக்கிறார். பின்னர், மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்த அறிவுறுத்துகிறார்.

இந்த உவமை நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.

1. அந்தத் தொழுநோயாளியின் செயல் நமக்கு சில ஆன்மீக வழிகளைக் காட்டுகிறது. முதலாவது, அவன் இயேசுவைக் காண வேண்டும் என மனதில் ஆழமாய் எழுதுகிறான். அத்தகைய சிந்தனை எளிதல்ல. எல்லா செயல்களும் மனதில் தான் முதலில் ஒரு விதையாய் விழும். இயேசுவைக் காணவேண்டும் எனும் அவனுடைய சிந்தனையும் அப்படியே. அந்த சிந்தனையை அருகில் இருந்த தொழுநோயாளி நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் எதிர்த்திருக்கலாம், ஆபத்துகளைப் பற்றிச் சொல்லி பயமுறுத்தியிருக்கலாம். ஆனால் அவனோ தனது சிந்தனையில் உறுதியாய் இருக்கிறான்.

நாம் இயேசுவை சந்திக்க வேண்டும் என விரும்புகையில் நமது சிந்தனை எப்படி இருக்கிறது. ஆழமாய் மனதில் அதை சுமக்கிறோமா ? யார் என்ன செய்தாலும் அந்த சிந்தனை நம்மை விட்டு அகலாமல் இருக்கிறதா ? நமது சிந்தனை முழுதும் இயேசுவைச் சந்திக்கும் ஆவலால் நிரம்பியிருக்கிறதா என சிந்திப்போம்.

2. இரண்டாவதாக, அவன் இயேசுவைத் தேடி வருகிறான். இயேசுவைத் தேடி வருவது எளிதல்ல. காரணம் இவனுடைய நோய் அப்படி. பிறர் பார்க்கும் போது இவன் ஒரு “தொழுநோயாளி” என தெரியவேண்டும். அதற்காக கோணி உடுத்து, தலைமுடி கலைந்து தான் திரியவேண்டும். அப்படி வரும்போது மக்கள் எல்லாரும் அவனைக் காண்பார்கள். இவன் ஒரு தொழுநோயாளி என்று அறிந்து கொள்வார்கள். மக்கள் கூட்டத்தில் ஒரு தொழுநோயாளியைக் கண்டால் அவர்கள் கல்லால் எறிந்து கொன்று விடும் வாய்ப்பும் உண்டு. மக்கள் அவனை விரட்டும் வாய்ப்பும் உண்டு. மக்கள் அவனைக் கண்டு அருவருப்புடன் ஒதுங்கி ஓடும் வாய்ப்பும் உண்டு. அந்த சூழலிலும் அவன் இயேசுவைக் காண வருகிறான்.

இயேசுவை நாடும் நமது மனநிலை எப்படி இருக்கிறது ? பிறருடைய பேச்சுகள் நமக்கு தடையாய் இருக்கின்றனவா ? பிறரைக் குறித்த பயம் நமக்குத் தடையாய் இருக்கிறதா ? பிறருடைய வெறுப்பு நமக்குத் தடையாய் இருக்கிறதா ? சிந்திப்போம்.

3. அந்த தொழுநோயாளி இயேசுவைச் சந்திக்க வந்த அந்த சந்திப்பே அவனது வாழ்க்கையின் கடைசி நாளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இயேசுவை சந்தித்தபின் ஒருவேளை நலம் பெறாமல் போனால் அவன் நிச்சயம் வீடு திரும்ப முடியாது. மக்களின் கையால் அடிபட்டே இறந்திருப்பான். ஆனாலும் அவன் தைரியமாக, தனது உயிரையும் துச்சமென மதித்து அவர் இயேசுவை சந்திக்க வருகிறார்.

நமது வாழ்க்கையில் நமக்கு ஒரே ஒரு நபரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாரை சந்திப்போம் ? இயேசுவையா அல்லது பிரியத்துக்குரிய இன்னொருவரையா ? நம் உயிரே போனாலும் பரவாயில்லை எனும் சூழலில் இயேசுவை சந்திக்க வருவோமா ? என சிந்திப்போம்.

4. அவன் இயேசுவை கடவுள் என கண்டு கொள்கிறான். அருகில் வந்து இறைவனின் பாதத்தில் விழுகிறான். “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” ( லூக்கா ) என்கிறான். இயேசுவை ஆண்டவரே என அழைத்து அவரை இறைவன் என அறிக்கையிடுகிறார். சுற்றியிருக்கும் மக்களைப் பற்றியோ வேறு எதைப்பற்றியுமோ அவன் யோசிக்கவேயில்லை.

நாம் இயேசுவை ஆண்டவர் என அறிந்து அவரது பாதம் பணிகிறோமா ? தேவைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரே தேவன் என புரிந்து கொள்கிறோமா ? வெறும் அறிவாக அல்ல, ஆத்மார்த்த உணர்வாக அவரை பற்றிக் கொள்கிறோமா ?

5. “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என அவன் சொல்கிறான். தொழுநோய் என்பது இறைவனிடம் இருந்து வந்தது எனும் நம்பிக்கை அப்போது உண்டு. அந்த நோயாளியும் அதையே நம்பினான். இறைவனிடமிருந்து வந்தது இறைவனால் தான் போகும் என அவன் விசுவசித்தான். அதனால் அதான் அது இறைவனுக்கு சித்தமா ? என கேட்கிறான்.

இயேசுவும் கெத்சமெனே தோட்டத்தில், “தந்தையே உமக்குச் சித்தமானால்” என வேதனையோடு வேண்டினார். நமது வாழ்க்கையிலும் ஒவ்வொரு செயலையும், “நீர் விரும்பினால்” எனும் சித்தாந்தத்தோடு அணுக வேண்டும். நீர் விரும்பினால் எனக்கு இந்த வேலையைக் கொடும், நீர் விரும்பினால் நான் இந்த செயலைச் செய்ய அனுமதியும் என கேட்போம். இது இறைவன் சித்தமா ? என ஒவ்வொரு செயலையும் கவனமாய்ச் செய்யும் போது நாம் ஆன்மீகத்தில் ஆழமாய் வளர்வோம்.

6. இயேசு கைநீட்டி அவரைத் தொடுகிறார் ! தொழுநோய் உடைய ஒருவரை தொட்டால், தொட்டவரும் தீட்டுப் பட்டவர் ஆகிவிடுவார் என்பதே சட்டம். ஆனால் இங்கே தொட்டவர் தூயவராய் இருந்ததால், தொடப்பட்டவரின் தொழுநோய் நீங்கிவிடுகிறது. இருவருமே தூய்மை நிலையில் திரும்புகின்றனர். இயேசுவின் தொடுதல் எப்பேற்பட்ட கறைகளை உடையவனையும், எப்பேற்பட்ட பாவியையும் தூய்மையாய் மாற்றும் வல்லமை படைத்தது.

நாம் தொடுகிறோமா ? தொடக்கூடாது என ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் எத்தனையோ பேர் நமது வாழ்க்கையில் இருக்கலாம். பசியாய் வரும் திருநங்கையாய் இருக்கலாம், சாதீய அடக்குமுறையில் அடிபட்டவராய் இருக்கலாம், மனநோய் பாதித்த ஒரு மனிதராய் இருக்கலாம், தூய்மையற்ற ஒரு முதியவராய் இருக்கலாம், நோய்களோடு இருக்கின்ற ஒரு நபராய் இருக்கலாம். நாம் தொடுகிறோமா ? அவர்கள் மீது கரிசனை காட்டுகிறோமா ? அவர்கள் மீது பச்சாதாபம் படுவது எளிது, பாசத்தால் தொடுவது கடினம். அத்தகைய தடைகளை உடைக்க உறுதி கொள்வோமா ?

7. நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக என்கிறார் இயேசு. என்னிடம் வருபவர்களை நான் புறம்பே தள்ளிவிடுவதில்லை என்பவர் இறைவன். தன்னிடம் வந்தவரின் நோயைத் தீர்த்து அனுப்பி வைக்கிறார். தொழுநோயோடு வந்தவன், புதுப்பிறப்பெடுக்கிறான். இப்போது அவனுடைய பழைய வாழ்க்கை அழிய, புதிய வாழ்க்கை துவங்குகிறது.

நமது வாழ்க்கை இயேசுவை ஏற்றுக்கொண்டபின் எப்படி இருக்கிறது ? புதுப்பிறப்பெடுத்திருக்கிறோமா ? நமது வாழ்க்கை தூய்மை அடைந்திருக்கிறதா ? பழைய கோணிகளை அறுத்தெறிந்து விட்டு புதிய ஆடைகளை அணிய விரும்புகிறோமா இல்லை மீண்டும் அந்த பழைய பாவங்களைப் போர்த்துக் கொண்டே படுத்துக் கிடக்கிறோமா ? இயேசுவின் வார்த்தை வலிமையானது, அதை வாசிக்கிறோமா ? நேசிக்கிறோமா ? கேள்விகள் நமக்குள் நம்மை அடையாளம் காட்டட்டும்.

8. குருவிடம் காட்டி காணிக்கையைச் செலுத்த இயேசு சொல்கிறார். இயேசுவே குருக்களின் முதன்மைக் குரு. இயேசு தூய்மையாக்கிய ஒருவரை இன்னொருவர் பரிசோதிக்கத் தேவையில்லை. இயேசுவோ இங்கே சட்டங்களை மதிக்கிறார். குருவின் ஒப்புதல் தான் அந்த மனிதரை தொழுகைக் கூடத்துக்கும், மக்களின் கூட்டத்துக்கும் கொண்டு வரும் என்பதை இயேசு அறிவார். எனவே தான் குருவிடம் காட்டச் சொல்கிறார். இங்கே இயேசுவின் பணிவும், பரிவும் தெளிவாகிறது.

நமது சிந்தனைகள் எப்படி இருக்கின்றன. இயேசுவின் வார்த்தையால் நலம்பெற்றபின் சட்டங்களை ஒட்டு மொத்தமாய்ப் புறக்கணிக்கிறோமா ? திருச்சபை எனும் அமைப்பை உதாசீனம் செய்கிறோமா ? இல்லை குணமான பின் இன்னும் தீவிரமாய் இறைபணி செய்கிறோமா ? இயேசு உள்ளத்தில் வந்தபின், இறைவார்த்தைகள் புது அர்த்தம் பெறும். அதை விட்டு விடாமல் தொடர்ந்து பற்றிக் கொள்ள வேண்டும்.

9. இந்த செய்தியை எவருக்கும் சொல்லவேண்டாம் என இயேசு சொன்னார். ஆனாலும் அவன் அதைப்பற்றி சொல்கிறான். “நீ எப்படி நலம் பெற்றாய் ?” எனும் கேள்விக்கான பதிலாய் அவன் சொல்லியிருக்கலாம். அன்று இயேசுவோடு இருந்த மக்கள் கூட இந்த அற்புதத்தைப் பற்றி ஊரெல்லாம் சொல்லியிருக்கலாம். எது எப்படியோ, அந்த நிகழ்ச்சி ஊரெங்கும் பரவிவிட்டது.

இயேசுவின் வார்த்தைகள் ஊரெங்கும் பரவுவதும், அவருடைய நற்செய்தி எங்கும் அறிவிக்கப்படுவதும் கிறிஸ்தவத்தில் வெகு சகஜம். இன்றைய சூழலில் நமக்கு இறைவார்த்தையைப் பரப்பக் கூடாது என இறைவன் எந்த தடையையும் போடவில்லை. நாம் எவ்வளவு ஆர்வம் கொள்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

10. இந்த நிகழ்வுக்குப் பின் இயேசு தனிமையான இடங்களில் இருந்தார். தந்தையோடு அதிகம் செபத்தில் இருந்தார். இயேசுவின் வருகையின் முக்கிய நோக்கம் மக்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை மீட்பதே. மக்களுடைய உடல் நோய்களிலிருந்து மீட்பதல்ல. நோய் தீர்க்கும் பணிக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து தனது போதனைகளை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விடக் கூடாது என அவர் விரும்பினார்.

இன்று நமது தேடல் என்னவாய் இருக்கிறது ? ஆன்மிகத் தேடலா ? உடல் சார் நோய்களின் தேடலா ?
மறு வாழ்வுக்கான தேடலா, இந்த உலகுக்கான தேடலா ?
சிந்திப்போம். நமது செல்வங்களை விண்ணகத்தில் சேமித்து வைக்க இயேசு சொன்னார். அதையே நாடுவோம்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s