Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 8 : பேதுருவின் மாமியார் குணமாதல்

இயேசு செய்த புதுமைகள் 8 : பேதுருவின் மாமியார் குணமாதல்

Image result for Jesus heals peters mother in law

மத்தேயு 8:14..17; மார்க் 1:29..34, லூக்கா 4:38..41

இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினர். இவ்வாறு,

‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்;
நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’

என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.

***

பேதுருவின் மாமியாரை இயேசு நலமாக்கும் இந்த நிகழ்வு மத்தேயு, மார்கு, லூக்கா எனும் மூன்று நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்க் கிடக்கிறார். கடுமையான காய்ச்சல். அன்றைய காலத்தில் காய்ச்சல் என்பது மிகக்கொடிய வியாதி. கொடிய காய்ச்சல் என்பது மரணத்தை நோக்கிச் செல்லக் கூடிய அளவு கொடியது.

லூக்கா நற்செய்தியாளர் மருத்துவர். அவருடைய நூலில், “சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார்” என குறிப்பிடுகிறார்.

இயேசு அங்கே வருகிறார். காய்ச்சலை விரட்டுகிறார். மாமியார் குணமாகிறார்.

இந்த நிகழ்வு, நமக்கு சில ஆன்மீகப் புரிதல்களைத் தருகிறது.

1. இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே என்றொரு பாடல் உண்டு. அதே போல, இயேசு பேதுருவின் வீட்டுக்கு வருகிறார். அங்கே புதுமை நடக்கிறது. கடும் காய்ச்சலாய்க் கிடக்கும் அவருடைய மாமியாருக்கு நலம் கிடைக்கிறது. மகிழ்ச்சி நிரம்புகிறது.

நமது வாழ்க்கையிலும் இயேசுவை முதலில் அழைக்க வேண்டும். இயேசு ஒரு இல்லத்தில் வருவது தான் முதல் தேவை. அவர் வந்தபின் எல்லாமே சரியாகிவிடும். நமது தேவை, இயேசுவை நமது இல்லத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அழைத்து வருவது மட்டுமே.

2. இயேசுவும் பேதுருவும் இணைந்தே பயணித்தபோதும், பேதுரு தனது சொந்த விஷயங்களுக்காக இயேசுவிடம் வேண்டுதல் வைக்கவில்லை. பேதுருவின் மாமியார் கடும் காய்ச்சலாய் கிடந்த விஷயம் இயேசுவுக்கு தெரிவிக்கப்படவில்லை. இயேசு அவருடைய வீட்டிற்கு வந்து பார்க்கும்போது தான் விஷயம் தெரிய வருகிறது.

நமது வாழ்க்கையிலும் இயேசுவை எதற்காக அணுகுகிறோம். ஏதேனும் நோய் தீர்க்கும் விஷயங்களுக்காய் அணுகுகிறோமா, அல்லது அவரை அணுகியதால் நோய்கள் விலகுகின்றனவா ? இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஒன்று, நமது தேவைக்காய் அவரைத் தேடுவது, இரண்டு அவரைத் தேடியதால் நமது தேவைகள் நிறைவேறுவது. முதலில் கடவுளையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் தேடுங்கள் எனும் இறைவாக்கு நம்மில் செயலாகிறதா ?

3. இயேசு பேதுருவின் மாமியாரின் அருகே வந்து நிற்கிறார். காய்ச்சலைக் கடிந்து கொள்கிறார். காய்ச்சல் நீங்குகிறது. “இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று” என்கிறது லூக்கா நற்செய்தி. நோய்களெல்லாம் இயேசுவின் கட்டளைக்குள் தான் கட்டுப்பட்டு இருக்கின்றன என்பதை இந்த நிகழ்ச்சி பறை சாற்றுகிறது.

பேய்களை கடிந்து கொண்டு விரட்டியவர் இயேசு. காற்றையும் கடலையும் கடிந்து கொண்டு அடக்கியவர் இயேசு. இப்போது நோய்களையும் கடிந்து கொண்டு அதற்கும் ‘தான் எஜமான்’ என நிரூபிக்கிறார் இயேசு. நமது வாழ்க்கையில் நடக்கின்ற எல்லாமே இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை உணர்கிறோமா ?

4. நோய் நீங்கியதும் பேதுருவின் மாமியார் இயேசுவுக்குப் பணிவிடை செய்கிறார். கடுமையான காய்ச்சலாய் கிடந்தவர். இயேசுவினால் நோய் நீங்கப்பட்டதும் தனது வாழ்க்கையை பணி செய்வதற்காகவே அற்பணிக்கிறார். நமது வாழ்க்கையில் கிடைக்கின்ற ஆரோக்கிய நாட்கள் இறைவனுக்காக கொடுக்கப்பட வேண்டியவை.

நமது வாழ்க்கையை சிந்திப்போம். இறைவனிடமிருந்து பெறுகின்ற ஆசீர்வாதங்களால் நமது சுயநல தேவைகளை நிறைவேற்றுகிறோமா ? இறை சித்தத்தை நிறைவேற்றுகிறோமா ? நமது ஆசீர்வாதங்களை இறைவனின் மகிமைக்காய் பயன்படுத்துகிறோமா ? சிந்திப்போம்.

5. அது ஒரு ஓய்வு நாள். இயேசு ஓய்வு நாளை நன்மை செய்வதற்காகப் பயன்படுத்தி வந்தவர். மக்களோ இன்னும் சட்டத்தின் பிடியிலேயே இருந்தார்கள். “பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர்” என்கிறது பைபிள். ஓய்வு நாளாகையால் மாலையில் மக்கள் இயேசுவிடம் வருகின்றனர். அவர்களை இயேசு குணமாக்குகிறார்.

இயேசு மக்கள் மீது அன்பும், பரிவும் கொண்டிருந்தார். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்கள் மீது அன்பாய் இருக்கிறார். சட்டத்தின் பிடியில் இருந்தாலும், அறியாமையின் பிடியில் இருந்தாலும் அவர்கள் மீது அவர் கோபம் கொண்டதே இல்லை. நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது ? எளியவர் மீது அன்பு மிகுதியாய் இருக்கிறதா ? என சிந்திப்போம்.

6. இயேசு தன்னிடம் அழைத்து வரப்பட்ட பேய்பிடித்தவர்களை சுகமாக்கினார். பேய்களும், “நீர் இறைமகன்” என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார் என்கிறது லூக்கா நற்செய்தி.

நீர் இறைமகன் என தனது சீடர் சொன்னபோது மகிழ்ந்த இயேசு, பேய்கள் அவற்றைச் சொன்னபோது விரட்டினார். பேய்கள் இறைவனால் துரத்தப்பட்ட வான தூதர்கள். லூசிபரின் குழுவினர். அவர்களுக்கு இயேசுவைத் தெரியும். ஆனால் அவர்களுடைய சான்றிதழ் இயேசுவுக்குத் தேவையற்ற ஒன்று. மக்களின் புரிதலையே அவர் ஏக்கத்துடன் எதிர்பார்த்தார். அவர் இறைமகன் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா ? அறிக்கையிடுகிறோமா ?

7. நமது ஆன்மீக வாழ்க்கையில் நாம் காய்ச்சலால் அவதிப்படுகிறோம். காய்ச்சல் வந்தால் நமது உடல் சோர்வடைகிறது. நம்மால் எழும்பி நடமாட முடிவதில்லை. வழக்கமான பணிகளைச் செய்ய முடிவதில்லை. ஆரோக்கியம் இருப்பதில்லை.

ஆன்மீக வாழ்க்கையின் பலவீனத்தை மாற்ற ஆன்மீக உணவை உட்கொள்ள வேண்டும். இயேசுவின் தொடுதல் வேண்டும். இயேசுவின் அருகாமை வேண்டும். ஆன்மீக உணவு நிரம்புகையில், மனம் வலுவடையும், செயல்கள் தெளிவடையும்.

8. காய்ச்சல் தருகின்ற முக்கியமான பலவீனம் ‘சுவையின்மை”. எது சாப்பிட்டாலும் சுவையற்ற நிலை. நமது வாழ்க்கையில் பல வேளைகளில் ஆன்மீக உணவு சுவையில்லாமல் போய்விடுகிறது. அதற்குக் காரணம் நாம் இயேசுவை விட்டு விலகிச் செல்வது தான். இறைவன் வரும்போது, நமது காய்ச்சல் விடைபெறுகிறது. அப்போது ஆன்மீக உணவு நமக்கு வலுவூட்டும், சுவையூட்டும்.

9. காய்ச்சலுக்கான காரணம் பாக்டீரியா, வைரஸ் என ஏதோ ஒன்று இருக்கலாம். உடலின் வெப்பம் வெளி அடையாளம் மட்டுமே. வெளி அடையாளத்துக்கு மருந்து சாப்பிட்டால் உள்ளே இருக்கின்ற நோய் தீர்வதில்லை. நோய் முழுமையாகத் தீர வேண்டுமெனில் நோய்க்கான காரணத்தை அறிந்து அதை முழுமையாய் அகற்ற வேண்டும்.

நமது வாழ்க்கையிலும் பல செயல்கள் நமது ஆன்மீக பலவீனத்தின் வெளிப்பாடே. நமது வாழ்க்கையின் பாவச் செயல்களுக்கான உண்மையான காரணத்தை அறிந்து அதை விலக்க வேண்டும். அதற்கு இறைவனின் உதவியை நாடவேண்டும்.

10. இயேசுவும் சீடரும், ” சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்” என்கிறது மார்கு நற்செய்தி. சீமோனும் அந்திரேயாவும் வீட்டை பகிர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மாமியாரும் அதே வீட்டில் இருக்கிறார். பகிர்தலின் முக்கியத்துவத்தை இயேசு இந்த நிகழ்ச்சி வாயிலாக புரிய வைக்கிறார் எனலாம்.

நமது வாழ்க்கையில் பகிர்தல் எப்படி இருக்கிறது ? நமது சகோதரர்களோடு பகிர்தலில் ஈடுபடுகிறோமா ? இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ்கிறோமா ? என சில கேள்விகளைக் கேட்போம். பகிர்தல் குணம் கிறிஸ்தவர்களுக்கு நிச்சயம் இருக்க வேண்டும் என்பதை இயேசு விரும்புகிறார். எனவே நமது வாழ்வில் பகிர்தலை முக்கியமாகக் கொள்வோம்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s