இயேசு செய்த புதுமைகள் : நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்
லூக்கா 7 : 1 முதல் 10 வரை
இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.
அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.
இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்; “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்.”
இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.
நூற்றுவர் தலைவன் என்பவன் குறைந்தபட்சம் நூறு படை வீரர்களின் தலைவன். ரோம அரசைச் சார்ந்தவர். ரோமர் இனத்தைச் சேர்ந்தவர். அவர் யூதரான இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கிறான். அதுவும் இயேசு ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் அவரது ஊழியர் குணமாவார் எனும் நம்பிக்கை.
அந்த நம்பிக்கை இயேசுவை வியப்புக்குள்ளாக்கியது. அவர் அந்த ஊழியனை ஒரு வார்த்தை கூட வெளிப்படையாய் சொல்லாமல் குணமாக்குகிறார் !
இந்த நிகழ்வு பல ஆன்மீகச் சிந்தனைகளை நமக்குத் தருகிறது.
1. அந்த நூற்றுவர் தலைவன் ஒரு சிறந்த மனிதனாக காட்சியளிக்கிறார்.
முதலாவதாக, இன பேதத்தை அவர் கடக்கிறார். தான் ஒரு ரோமர், இயேசு ஒரு யூதர் எனும் எல்லைகளைக் கடக்கிறார். யூத மக்களோடு தொடர்பில் இருக்கிறார். யூதர்களுக்கு நன்மைகள் செய்கிறார்.
இரண்டாவதாக, பொருளாதார பேதங்களைக் கடக்கிறார். தனது வீட்டில் பணி செய்யும் ஒரு வேலைக்காரனுக்காக தனது நிலையை விட்டு இறங்கி வருகிறார். தனது வேலைக்காரருக்கு, தானே வேலைக்காரனாய் மாறிப் போகிறார்.
மூன்றாவதாக தனது அந்தஸ்து, புகழ் போன்றவற்றைக் கடக்கிறார். அனைத்தையும் விட்டு விட்டு ஒரு ஏழை ஊழியனுக்காக மனமிரங்கி வருகிறார். தனது அந்தஸ்துக்கு சரிக்குச் சமமானவர்களை மட்டுமே மக்கள் மதிப்பது வழக்கம். இங்கே நூற்றுவர் தலைவன் அந்த மதில் சுவரையும் உடைக்கிறார்.
நான்காவதாக, மத பேதங்களைக் கடக்கிறார். யூத மதத்தையும், யூத கடவுளையும் மதித்து அவர்களுக்காக தொழுகைக் கூடம் கட்டிக் கொடுக்கிறார்.
இப்படி பல வகைகளில் அன்பும், ஈகையும், சமத்துவமும் கலந்த ஒரு நல்ல பண்புடைய மனிதராக அவர் காட்சியளிக்கிறார்.
2. யூதர்களின் தலைவர்களோடு அவருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. யூதத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். எனவே தான் இயேசுவிடம் பரிந்துரை செய்ய அவர் யூத மதத் தலைவர்களை அணுகுகிறார். அவர்களும், இயேசுவிடம் வந்து அவருக்காகப் பரிந்துரை செய்கின்றனர்.
இயேசுவை நேரில் சந்திக்க தனக்கு அருகதையில்லை என்று நம்பியதால் அந்த நூற்றுவர் தலைவர் யூதத் தலைவர்களை அணுகினார். பின்னர் நண்பர்களை அனுப்பினார். இன்றைய சூழலில் நாம் இறைவனிடம் நேரடியாகவே நமது விண்ணப்பங்களை வைக்க இறைவன் நமக்கு உரிமை அளித்திருக்கிறார். இயேசுவின் உயிர்ப்பு நமக்கு அந்த வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறது. நம்முடன் கூடவே பயணிக்க தூய ஆவியானவரை இயேசு தந்திருக்கிறார்.
3. யூதத் தலைவர்கள் நூற்றுவர்த் தலைவனை எப்படிப் பார்த்தார்கள் என்பது வியப்பான விஷயம். நூற்றுவர் தலைவனை அவர்கள் அன்பானவராகப் பார்த்தார்கள். ரோமர்களுக்கும், யூதர்களுக்கும் எப்போதுமே பனிப்போர் தான் நடக்கும். வெறுப்பு தான் உமிழப்படும். ஆனால் இவரை அவர்கள் அன்பானவராகப் பார்த்தார்கள்.
தொழுகைக் கூடம் கட்டிக் கொடுத்த பெருந்தன்மை உடையவராகப் பார்த்தார்கள். ஈகைக் குணம் அவருக்கு இருந்தது என்பதை இயேசுவிடம் சொல்கின்றனர். மிக முக்கியமாக, இயேசுவிடமிருந்து நன்மைகள் பெற, “தகுதியானவராக” பார்த்தார்கள். இப்படி அவரைப்பற்றிய புகழுரைகளை இயேசுவிடம் எடுத்து வைத்தார்கள்.
நாம் ஒரு நபருக்காக இயேசுவிடம் வேண்டும்போது என்ன செய்கிறோம் ? அந்த நபருடைய நல்ல குணாதிசயங்களைப் பட்டியலிட்டு, அவர் இயேசுவின் இரக்கத்துக்கு, “தகுதியானவர்” என சான்றளிக்கிறோமா ? அது தவறு ! தகுதியற்ற நமக்குத் தரப்படுவது தான் இறைவனின் இரக்கமும், கிருபையும். எனவே எனக்குத் தகுதி இருக்கிறது, அடுத்தவருக்குத் தகுதி இருக்கிறது என நாம் இயேசுவிடம் சொல்லாதிருப்போம். தகுதியற்ற எமக்கு இரக்கம் தாரும் என இறைஞ்சுவோம்.
4. நூற்றுவர் தலைவரைப் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து சொன்னது இயேசுவை வசீகரித்திருக்க நியாயமில்லை. ஆனாலும் ஊழியனுக்காக தலைவர் கொண்ட மனதுருக்கம் அவரை வசீகரித்திருக்க வேண்டும். அவர் அவர்களோடு சென்றார்.
நாம் இயேசுவிடம் வேண்டுகின்ற முறை தவறாக இருந்தால் கூட, மனம் சரியாக இருந்தால் இயேசு மனமிரங்குகிறார். இப்படித் தான் கேட்கவேண்டுமென அவர் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு கேட்கவேண்டும் என விரும்புகிறார்.
5. அந்த நூற்றுவர் தலைவனோ, தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். அவன் தனது ஈகையையோ, தொழுகைக் கூடம் கட்டியதையோ, அன்பாய் நடந்து கொள்வதையோ, தனக்கு தகுதி உண்டு என்பதையோ அவன் முன்னிலைப்படுத்தவேயில்லை. மாறாக இறைவன் முன்னால் தன்னைப் பற்றிச் சொல்லும் போது தகுதி என்பது அறவே இல்லாத மனிதராக தன்னை வெளிப்படுத்துகிறார்.
தான் தகுதியானவர் என நினைக்கும்போது ஒருவர் தகுதி இழக்கிறார்.
தனக்குத் தகுதி இல்லை என ஒருவர் நினைக்கும் போது தகுதி பெறுகிறார்.
தான் தாழ்மையானவன் என நினைக்கும் போது ஒருவனுக்குள் கர்வம் வருகிறது
தான் கர்வமானவனோ என கலங்கி இறைவனிடம் வருகையில் அவனுள் தாழ்மை எழுகிறது.
கிறிஸ்தவத்தின் வியப்பான கதை இது ! நாம் இறைவனிடம் வரும் போது உலக சாதனைகளின் பட்டியலோடு அல்ல, நமது பலவீனத்தின் யதார்த்தத்தோடு வருவோம்.
6. நூற்றுவர் தலைவன் அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதையும், அதிகாரத்தால் சாதிக்க முடிவதையும் அறிந்திருந்தான். அவனுக்குக் கீழே இருக்கும் படை வீரர்களைப் பார்த்து போ என்றால் போவார்கள், வா என்றால் வருவார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால் அவனால் ஊழியரின் நோயைக் குணமாக்க முடியவில்லை. காரணம் அதற்கான அதிகாரம் அவனிடம் இல்லை. ஆனால் அந்த அதிகாரம் இயேசுவிடம் உண்டு என்பதை அவன் நம்பினான். இயேசுவின் ஒற்றை வார்த்தை போதும் என்பதை ஆழமாக விசுவசித்தான்.
7. இயேசு அவனுடைய விசுவாசத்தை வியந்தார். தான் போதிக்காத, புதுமைகள் செய்யாத பிற இன மனிதனின் விசுவாசம் அவரை வியப்பில் ஆழ்த்தியது. விவிலியத்தில் இரண்டு முறை தான் இயேசு “வியப்புற்றார்” எனும் வார்த்தை வருகிறது.
ஒன்று இஸ்ரயேயில் குறைவான விசுவாசத்தைக் காணும் போது வருகிறது. “அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் ( மார்கு 6:6 )”. இன்னொரு முறை இந்த நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தைக் கண்டு அவர் வியப்புறுவதாய் வருகிறது. ஒன்று யூதமக்களின் விசுவாசமின்மை, இன்னொன்று பிற இனத்தவரின் ஆழமான விசுவாசம். இந்த முரணே வியக்க வைக்கிறது.
நாமும் இறைவன் மீது அசைக்க முடியாத விசுவாசம் வைக்கும் போது அவரது மனம் மகிழ்ச்சியினால் அசைக்கப்படும்.
8. “ஒரு வார்த்தை சொன்னால் போதும்” என நூற்றுவர் தலைவர் சொன்னார். இயேசுவோ ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அந்த ஊழியரை சுகமாக்குகிறார். நாம் நினைப்பதற்கும் மேலாக இயேசுவின் வல்லமையும், ஆற்றலும் உண்டு என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகிறது.
நாம் இயேசுவிடம் வரும்போது நமது தேவையைச் சொல்வதே சரியான வழி. அதை இறைவன் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இயேசு அந்த ஊழியரை சந்தித்ததில்லை, என்ன நோய் என்பதைப் பார்த்ததில்லை, எத்தனை நாள் நோய் என ஆராய்ச்சி செய்யவில்லை. அவர் மனதில் நினைத்த போதே அந்த நோய் அலறி ஓடி விட்டது. மரண தருவாயில் இருந்தவரை வாழ்வின் வரவேற்பறைக்கு அழைத்து வந்தது. இறைவனின் ஆற்றல் கற்பனைக்கு அப்பாற்பட்டது எனும் நம்பிக்கை மனதில் இருக்கட்டும்.
9. இயேசுவை தேடிச் செல்ல நமக்குத் தகுதி இல்லை என நினைப்பதும், இயேசு நம்மைத் தேடி வரும் போது தகுதியற்றவர் நாம் என நினைப்பதும் தாழ்மையின் அடையாளமாக இருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டியதே. இயேசு பாவிகளையும் நேசித்தவர். அவரை நோக்கி ஓடி வர நமது பாவங்களே காரணமாய் இருக்கலாம், ஏனெனில் அந்தப் பாவங்களிலிருந்து தாம் நமக்கு மீட்பு தேவைப்படுகிறது.
இயேசுவைத் தேடிச் செல்பவர்களாகவும், இயேசு நம்மைத் தேடி வரும்போது எதிர்கொண்டு சென்று வரவேற்பவர்களாகவும் இருப்பதே சரியான வழியாகும்.
10. தான் யாருக்காக இந்த பூமிக்கு வந்தாரோ அந்த மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிற இன மக்கள் அவரை விரைவாக ஏற்றுக் கொள்கின்றனர். “என்னைக் காணாமலேயே விசுவசிப்பவன் பேறுபெற்றவன்” எனும் இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப, அந்த நூற்றுவர் தலைவன் இயேசுவைக் காணாமலேயே அவரை நம்பி பெரும் பேறு பெற்றான்.
அவனது விசுவாசம் அவனை மீட்புக்குள் வழிநடத்தியதா என்பதை விவிலியம் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவனது விசுவாசம் உடல்நலத்தை மட்டுமே சார்ந்திருந்தால், அது முழுமையற்ற விசுவாசம். நமது விசுவாசம் நம்மை மீட்புக்குள் வழிநடத்த வேண்டும். வெறும் உலக செல்வங்களுக்காக மட்டும் கொள்கின்ற விசுவாசம் நம்மை நிலைவாழ்வுக்குள் கொண்டு செல்லாது.
இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.
*