Posted in Desopakari

தொழில்நுட்பமும், கிறிஸ்தவமும்

Image result for technology christianity

பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, இன்றைய உலகம் தொழில்நுட்ப உலகின் விரல்களில் அகப்பட்டுக் கிடக்கிறது என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டும்.

“அதிகாலையில் தேவனைத் தேடு” என்பது பழைய மொழி ஆகிவிட்டது. விடிந்தும் விடியாமலும் வாட்ஸப்பின் மீது விரல்கள் தேய்த்தும், ஃபேஸ்புக் மீது முகம் பார்த்தும் தான் இன்றைய பொழுது விடிகிறது !

ரயில் ஸ்னேகம் என்றொரு வார்த்தையே இன்றைக்கு காலாவதியாகிவிட்டது. ‘ரயில்ல என்னப்பா ஸ்நேகம்’ என்று பிள்ளைகள் கேட்கும் நிலமைக்கு வந்து விட்டது நவீன வாழ்க்கை. நான்கு நாட்கள் ஒரே இரயில் பெட்டியில் பயணம் செய்ய நேர்ந்தால் கூட நாலரை இஞ்ச் வெளிச்சத் திரைக்குள் வாழ்க்கை நடத்த நாம் கற்றுக் கொண்டு விட்டோம்.

தொலை தூரத்தில் இருக்கின்ற சொந்தங்களுக்கு டிஜிடல் வணக்கம் வைத்துவிட்டு, அருகில் இருக்கும் சொந்தங்களுக்கு ஒரு புன்னகை கூட வைக்காமல் நகர்ந்து செல்லப் பழகிவிட்டோம்.

நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையெல்லாம் ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு தான். இப்போதெல்லாம் குனிந்த நடை, கூன்கொண்ட பார்வை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் ஏற்படுகின்ற விபத்துகளும் எக்கச் சக்கம்.

தொழில்நுட்பம் உச்சமாய் இருக்கும் காலத்தில் உலகம் அழிந்து விடும் என பலர் சொல்வதுண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. காரணம், தொழில்நுட்பத்தின் உச்சம் எது என்பதை எப்படி நிர்ணயம் செய்வது ?

வேட்டையாடிய மனிதனுக்கு ஈட்டி கிடைத்தது தொழில்நுட்பத்தின் உச்சம்,

ஈட்டியால் குத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தவன் வலைக்கு மாறியது தொழில்நுட்பத்தின் உச்சம்,

குகைகளில் உழன்றவன் கோபுரங்களில் தவழ்ந்தது தொழில்நுட்ப உச்சம். இப்படி தொழில் நுட்பத்தின் உச்சம் என்பது காலம் தோறும் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.

கணினி வந்தபோது இதுவே தொழில்நுட்பத்தின் உச்சம் என்றார்கள், இன்றைக்கு அது தொழில்நுட்பத்தின் முதல் படி என்கிறார்கள். ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் எனப்படும் செயற்கை அறிவை நோக்கி உலகம் படு வேகமாக ஓடுகிறது. நாளைக்கு அதையும் தாண்டி இன்னொன்றைத் தேடி ஓடும்.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இறைவன் எதிர்பார்ப்பது தான். உலகைப் படைத்தவர் இறைவன். மனிதனை தனது சாயலாகப் படைத்தார். தன்னைப் போல் உருவான மனிதன் புதிய படைப்புகளை உருவாக்குவதில் வியப்பு இல்லையே ! உலகை ஆளவும், அதில் வாழவும் தான் மனிதனை இறைவன் படைத்தார். எனவே அவன் ஆளுகை செய்வதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் எந்தக் கணத்தில் அவன் கர்வம் கொள்கிறானோ அப்போது அவனுடைய வீழ்ச்சி அசுர வேகமாய்  இருக்கும். விண்ணக தேவதூதன் கர்வம் கொண்டபோது அவன் பாதாளத்தின் அரக்கனாய் மாறியது போல, தொழில் நுட்பம் படைப்பாளிக்கு கர்வம் தரும்போது அவனுடைய வாழ்க்கை அர்த்தம் இழக்கும்.

பைபிள் தொழில்நுட்பத்தைப் பேசுகிறது. “காயீன் ஒரு நகரை உருவாக்கினான்” ( ஆதி 4:17). தொழில்நுட்பத்தின் துவக்கம் அதுவாக இருக்க வேண்டும்.  பாபேல் கோபுரம் கட்டுமானக் கலையின் உச்சம் தொட்ட நாளாய் இருந்திருக்க வேண்டும். சாலமோனின் காலத்தில் அது பிரமிப்பின் உச்சத்தில் இருந்திருக்கலாம்.

நோவா செய்த பேழை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதை இறைவனே ஆர்கிடெக்ட் ஆக மாறி நோவாவை வழிநடத்துகிறார்.

உசியா மன்னனைப் பற்றி, “அம்பு எய்வதற்கும், பெரிய கற்களை வீசுவதற்கும் திறமை மிக்கோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணைகளை எருசலேமில் செய்து கொத்தளங்கள் மேலும், கோட்டைகளின் மூலைகள் மேலும் அவற்றை நிறுவினான்.” என்கிறது விவிலியம்.

இவையெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் படிகளே. இவையெல்லாம் மனித வரலாற்றின் பதிவுகளே. இவற்றைத் தவிர்க்க முடியாது. இறைவன் விரும்பும் காலம்வரை இந்த வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த வளர்ச்சியை எப்படி நமது ஆன்மீக வாழ்வுக்கான வழியாக மாற்றுகிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

Image result for technology christianity

 1. மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் தொழில்நுட்பம் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரும்பு இயந்திரங்களின் வருகை, இதயங்களை இரும்பாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 1. குடும்ப உறவுகளிடையே உள்ள நெருக்கத்தை தொழில்நுட்பம் களவாடாமல் இருக்க வேண்டும். மாலை நேரங்களில் இயந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் முழுமையான ஓய்வு கொடுத்து குடும்பமாக இணைந்து பேசுவதும், விளையாடுவதுமான நேரங்கள் உருவாக வேண்டும்.

 1. தொழில்நுட்பம் தகவல்களை எளிதில் பெற்றுத் தருகிறது. கிறிஸ்தவ இலக்கியங்கள், விளக்கங்கள் போன்றவை விரல்நுனியில் கிடைக்கின்றன. அதை நமது ஆன்மீக வளர்ச்சிக்காய் பயன்படுத்த வேண்டும். ஆவியின் கனிகளை ருசிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

 1. மென்நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள், சிறுவர்களுக்கு ஊக்குவிக்கலாம். வீடியோ கேம்ஸ் போன்றவற்றிலிருந்து குழந்தைகளை திசைதிருப்பும் முயற்சியாக இது அமையும்.

 1. ஆரோக்கியமான தொலை தொடர்புகள், பகிர்வுகள் போன்றவற்றிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். உலகெங்குமுள்ள கிறிஸ்தவ நண்பர்கள், கிறிஸ்தவ குழுக்கள் போன்றவற்றில் இணைந்து பயன்பெறலாம். “எதைச் செய்தாலும் தேவ மகிமைக்காகவே செய்ய வேண்டும்” எனும் இறை வார்த்தைக்கேற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

 1. சமூகத்திலிருந்தும், குடும்பங்களிலிருந்தும் இவை நம்மைத் தனிமைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே இன்னொரு நபர் அருகில் இருக்கும் போது போனை நோண்டாமல் இருக்கப் பழக வேண்டும்.

 1. இயந்திரங்களின் வருகை மனிதனுக்கு வேலையற்ற சூழலை உருவாக்கும். அத்தகைய சூழல்களில் சக மனிதர்களுக்கு தோள்கொடுப்பதும், உடனிருப்பதும், உதவுவதும் முக்கியமான தேவைகள்.

 1. இயந்திரங்களும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அழிவுக்கான பணியைச் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும். நமது எல்லைக்குட்பட்ட விஷயங்களில் நாம் ஆக்கபூர்வமாய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உறுதி எடுக்க வேண்டும்.

 1. இயந்திர வாழ்க்கை, உடல் உழைப்பை குறைத்து ஆரோக்கியத்தை வலுவிழக்கச் செய்கிறது. இது பல்வேறு உடல் நோய்களுக்கும், மன நோய்களுக்கும் நம்மை இட்டுச் செல்லும். எனவே ஆரோக்கியம் பேணுவதில் கவனம் தேவை.

 1. பாவம் செய்பவன் பாவத்துக்கு அடிமை என்பதைப் போல, தொழில்நுட்பத்தை அதிகமாய்ப் பயன்படுத்துபவர்கள் அதன் அடிமைகளாகிப் போகிறார்கள். நமக்கும் இறைவனுக்கும் இடையேயான உரையாடலையோ, அன்பு உறவையோ தொழில்நுட்பம் எடுத்துக் கொள்ளும் போது அது பாவத்தின் கருவியாக மாறிப் போகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியும், இயந்திரங்களின் விஸ்வரூபமும் நம்மை இறைவனின் அன்பிலிருந்து பிரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈசாக் ஆபிரகாமின் போதையாய் மாறிய காலத்தில் இயேசு அவனைப் பலியிடச் சொன்னார். ஆபிரகாம் ஒத்துக் கொண்டார், விசுவாசத்தின் தந்தையானார்.

தொழில்நுட்பங்கள் நமக்கு போதையாய் மாறும் கணத்தில் இறைவன் அதையும் பலியிடச் சொல்கிறார். நாம் அதை பலியிட்டு இறைவனை பற்றிக் கொள்கிறோமா ? அல்லது இறைவனை விட்டு விட்டு அதைப் பற்றிக் கொள்கிறோமா என்பதை வைத்து நமது விசுவாசத்தை அளவிடலாம்.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம்

இறைவனை மட்டுமே அன்பு செய்வோம்.

*

Desopakari, May 2017

 

Advertisements

4 thoughts on “தொழில்நுட்பமும், கிறிஸ்தவமும்

 1. Excellent points anna. Definitely we should think about it and follow these in order to strengthen our family life and use everything wisely.
  God has given everything for a purpose…may God givs us knowledge to use according to his will.
  Thanks for the wonderful article.

  Like

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s