மத்தேயு 9 : 27.32
இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர்,
“தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன.
இயேசு அவர்களை நோக்கி. “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
***
இயேசு பார்வையற்ற இருவருக்குப் பார்வையளிக்கிறார். அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து அவர்களுடைய இருண்டு போன வாழ்க்கைக்கு ஒளியைக் கொடுக்கிறார் இயேசு. அவர்களோ இறைவனின் கட்டளையை மீறி செயல்படுகின்றனர். இந்த நிகழ்வு ஒரு புதுமை என்பதைத் தாண்டியும் பல விஷயங்களை நமக்கு விளக்குகிறது.
குறிப்பாக, ஒரு திருச்சபை, ஒரு இறை சமுதாயம், ஒரு கூட்டுறவு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த புதுமை விளக்குகிறது.
1. பார்வையற்ற இருவர் இணைந்து பயணிக்கின்றனர். பலவீனம் கொண்ட இருவர் இணையும் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருக்கும் சூழல் உருவாகிறது. ஒரு பார்வையிழந்த மனிதர் மட்டுமே இன்னொரு பார்வையிழந்த மனிதரின் உள்ளத்தின் வலியை உணர முடியும். சகதியில் இறங்காதவர்களுக்கு உழவனின் வலி புரிவதில்லை. மண்புழுவாய் மாறாவிடில் மண்ணோடான வாழ்க்கை வாழ முடியாது. “குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது” என்பது இறை வார்த்தை. ஆனால் குருடன் குருடனை புரிந்து கொள்ள முடியும் என்பதே அனுபவ வாழ்க்கை !
ஒரு திருச்சபை என்பது இப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இணைந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த உறவு வலிமையாய் இருக்கும். நாம் அனைவருமே பலவீனங்களின் பிள்ளைகள் தான். அதை உணர்ந்து கொள்ளும் போது, சகமனிதனை தேற்றவும், அவனுக்குத் தோள்கொடுக்கவும் நமது மனம் தயாராகும்.
2. இருவருடைய இலட்சியமும் ஒன்றாக இருக்கிறது ! அவர்களுடைய இலட்சியம், இருளான வாழ்விலிருந்து வெளியே வந்து வெளிச்சத்தின் பாதைகளில் வீறு நடை போடவேண்டும் என்பதே. இருளுக்குள்ளே வாழ்கின்ற வாழ்க்கை பழகிவிட்டது, இது போதும் என நினைக்காமல் வெளிச்சத்தை அடைய வேண்டும் எனும் இலட்சியத்தோடு இருவரும் பயணிக்கின்றனர்.
நமது திருச்சபைகளும், கூட்டுறவுகளும் பாவத்தின் இருளுக்குள் கிடப்பதை சுகமெனக் கருதாமல் வெளிச்சத்தைத் தேடி அலைகின்ற மனநிலையில் இருக்க வேண்டும். பாவத்தில் புரளும் போது பாவம் பழகிவிடுகிறது. பிறகு தூய்மை தான் பயமுறுத்தும். ஆனால் தூய்மையில் வாழும் போதோ பாவம் நமக்கு பிரியமில்லாததாய் மாறிவிடும். ஒரு திருச்சபை இப்படி வெளிச்சத்தைக் குறிவைத்துச் செயல்படும் ஒத்த சிந்தனையுடைய, ஒரே இலட்சியமுடைய திருச்சபையாய் மிளிர்வதே மிகவும் சிறந்தது.
3. ஒரே மீட்பரைத் தேடும் நிலை. இருவரும் இணைந்து பயணிக்கும் போதும், இருவருக்கும் பார்வை வேண்டும் எனும் இலட்சியம் இருந்த போதும் அவர்கள் எல்லோரிடமும் அதை கேட்கவில்லை. யார் அதைத் தர முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர். எனவே தான் இயேசுவை அவர்கள் பற்றிக் கொண்டனர். இயேசுவால் மட்டுமே தனது இருளான வாழ்க்கைக்கு வெள்ளையடிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள்.
நமது திருச்சபைகளும் ஒரே மீட்பராய் இயேசுவைத் தேடும் சபைகளாக மாறவேண்டும். அதுவும் பாவமெனும் இருட்டை விரட்டி, தூய்மையெனும் ஒளியைப் பற்றிக் கொள்ளும் இலட்சியத்தோடு தேட வேண்டும். இயேசுவால் மட்டுமே பாவத்தின் துருக்களை அகற்றி, வாழ்வின் இருக்கைகளில் நம்மை அமர வைக்க முடியும். இத்தகைய ஒரே நபரை, இயேசுவை, தேடும் சபைகளாய் நமது கூட்டுறவுகள் இருக்க வேண்டியது அவசியம்.
4. அவர்கள் இயேசுவிடம் தங்கள் தேவையை உரக்கக் கத்தி தெரிவிக்கின்றனர். கூட வருகின்ற மக்கள் என்ன நினைப்பார்கள் என நினைக்கவில்லை. அது கண்ணியமான செயலா, நாகரீக செயலா என்றெல்லாம் யோசிக்கவில்லை. இயேசுவை நோக்கி உரத்த குரல் எழுப்பினர். ‘கேளுங்கள் உங்களுக்குத் தரப்படும்’ என்றார் இயேசு. பார்வையில்லாத மனிதனைப் பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் அவர்கள் வாய்திறந்து கேட்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். தன்மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டு வருகின்ற மக்களை அவர் ஆவலுடன் வரவேற்கிறார்.
திருச்சபை இறைவனை நோக்கி வேண்டும் போதும் இந்த மனநிலையையே கொண்டிருக்க வேண்டும். தேவையை இறைவனிடம் கொண்டு சேர்ப்பதில் அலாதியான ஆர்வமும். பிறர் என்ன நினைப்பார்களோ என சிந்திக்காத மனமும் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உரையாடலை பிறருடைய விருப்பத்துக்காகவோ, வெறுப்புக்காகவோ மாற்றக் கூடாது.
5. அவர்கள் தொடர்ந்து இயேசுவை நோக்கி மன்றாடுகின்றனர். அவர்களுடைய முதல் குரலுக்கு இயேசு பதிலளிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அழைப்பார்களா என சோதிக்கிறார். அவர்களோ அந்த சோதனையில் வெற்றியடைகிறார்கள். சிலருடைய முதல் அழைப்புக்கு பதிலளிக்கும் இயேசு, வேறு சிலருடைய தொடர்ந்த அழைப்புக்கே பதிலளிக்கிறார். இவை இறைவனின் சித்தம். அது ஏன் எதற்கு என்பதைப் பற்றி ஆராயாமல் அவரை நோக்கி தொடர்ந்து மன்றாடவேண்டும்.
ஒரு திருச்சபை தனது இருட்டை மாற்றிக் கொள்ள, தனது ஆன்மீக நிலையை வளப்படுத்திக் கொள்ள, தொடர்ந்து இயேசுவிடம் மன்றாட வேண்டும். ஒருமுறை அழைத்து விட்டு முடங்கி விடுவதல்ல. தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கும் விசுவாசம் வேண்டும். எப்படி ஒரு மழலை தனக்குத் தேவையான பால் கிடைக்கும் வரை வீறிட்டு அழுகிறதோ அந்த மனநிலை நமக்கு வேண்டும்.
6. “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என அந்த இருவரும் இயேசுவை அழைக்கின்றனர். மதத்தின் மீதும், மெசியா எப்படி வருவார் என்பதன் மீதும் பரிச்சயம் கொண்டவர்கள் அவர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இயேசு மெசியா என்பதை அறிந்து கொண்டு அவரைப் பின்பற்றுகின்றனர் அவர்கள். அவர் நலமாக்கும் நல்லவர், அறிவுரை சொல்லும் ஆசான், அன்பான மனிதர், என்பதையெல்லாம் தாண்டி அவர் ஆண்டவர் எனும் அறிவு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
நமது திருச்சபைகளும் இயேசுவே உண்மையான மீட்பர் எனும் விசுவாசத்தின் மீது தான் கட்டப்பட வேண்டும். அந்த ஊக்கம் தான் நம்மை இயேசுவை நோக்கி ஈர்க்க வேண்டும். அப்போது தான் நமது சிந்தனைகள் விண்ணகம் சார்ந்ததாக இருக்கும். அப்போது தான் நாம் உடல் நலத்தை விட ஆன்ம நலத்தை மனதில் கொள்வோம். அப்போது தான் நாம் உடல் இருட்டை விட, ஆன்மீக வெளிச்சத்தில் ஆர்வம் கொள்வோம்.
7. “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என இயேசு கேட்கிறார். அவர்களுடைய விசுவாசத்தைச் சோதிக்கும் இரண்டாம் நிலை இது. அவர்கள் தன்னைத் தொடர்ந்து வந்ததால் அவர்களுடைய விசுவாசத்தின் முதல் நிலையை இயேசு புரிந்து கொள்கிறார். இப்போது வாயால் அறிக்கையிடும் நிலைக்கு அவர்களைக் கொண்டு வருகிறார். அறிக்கையிட்ட போது அவர்கள் அற்புதத்தைக் கண்டார்கள். “அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள்”. இருவரும் ஒரே குரலாக ‘ஆம்’ என சொல்கின்றனர். இதைத் தான் திருச்சபைகளும் செய்ய வேண்டும். ஒரே குரலாய் விசுவாசத்தை வெளிப்படுத்தும் திருச்சபைகள் பேறு பெற்றவை.
நம்மை நோக்கி இயேசு, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” எனும் கேள்வியை ஒவ்வொரு விஷயத்திலும் கேட்கிறார். அதற்கு நாம் சொல்லும் பதிலைப் பொறுத்து நமது வாழ்க்கை அமைகிறது. எந்த ஒரு சந்திப்பிலும் இரண்டு பாதைகள் பிரியும். இரண்டும் வெவ்வேறு திசைகளில் நம்மைக் கொண்டு சென்று, வெவ்வேறு இடங்களில் சேர்க்கும். நாம் ஆம் என்று சொன்னால் ஆண்டவனின் அருகில், இல்லை என்று சொன்னால் ஆண்டவனற்ற நிலையில் என நமது வாழ்க்கை அமையும். நாம் இறைவனின் கேள்விக்கு ஆம் எனும் பதிலை அளிக்கும் நிலைக்கு வருவதே ஆன்மீகத்தின் ஆழமான விசுவாச நிலை.
8. இயேசு அவர்களுடைய கண்களைத் தொடுகிறார். அவர்களுடைய இருளான வாழ்க்கை, ஒளியை நோக்கி திரும்புகிறது. இயேசுவின் தொடுதல் தான் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். இயேசுவின் தொடுதல் கிடைப்பது ஆன்மீக வாழ்வின் அற்புத அனுபவம்.
ஒரு திருச்சபை இயேசுவின் தொடுதலைத் தேடி வரவேண்டும். இயேசுவின் தொடுதல் இருக்கின்ற திருச்சபைகள் ஆன்மீகத்தில் வெளிச்சம் பெறும். பாவத்தை மன்னிக்கும் அதிகாரமும், அதன் மூலம் வாழ்வைத் தருகின்ற வல்லமையும் இயேசுவின் தொடுதலுக்கு மட்டுமே உண்டு.
9. “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார் இயேசு. விசுவாசம் இயேசுவின் கரங்களிலிருந்து வரங்களைப் பெற்றுத் தருகிறது. விசுவாசம் இல்லாத இடங்களில் இயேசுவின் அற்புதங்கள் நிகழ்வதில்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் சொந்த ஊர் மக்களின் விசுவாசமின்மையால் அவரால் சொந்த ஊரில் அற்புதங்கள் நிகழ்த்த முடியாமல் போனது.
நமது வாழ்க்கையிலும் நாம் பலவற்றைப் பெற்றுக் கொள்கிறோம், சிலவற்றைப் பெறாமல் இருக்கிறோம். பெறாமல் இருக்கின்ற காரியங்களில் நமது விசுவாசக் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். நமது வாழ்வில் சோர்வுகள் வரும்போது நாம் சந்தேகப்படவேண்டியது இறைவனை அல்ல, இறைவன் மீதான நமது விசுவாசத்தை.
10. இயேசு பார்வையடைந்த இருவருக்கும் ஒரே ஒரு கட்டளையைக் கொடுத்தார். ஆனால் என்ன ஒரு துயரம் ! அவர்கள் அதை மீறினார்கள். இயேசு நற்செய்தி அறிவிக்கும் பணியை அந்தக் காலத்தில் எல்லோருக்கும் கொடுக்கவில்லை. சிலரிடம் அமைதி காக்கச் சொன்னார். ஆனால் மக்களோ, தாங்களாகவே அந்த பணியை எடுத்துக் கொண்டனர். இது கடவுளின் வார்த்தையை மீறும் பாவச் செயலன்றி வேறில்லை. அதுவும் இயேசு ‘மிகக் கண்டிப்பாகக்’ கூறிய விண்ணப்பத்தையே அவர்கள் மீறிவிட்டனர்.
பார்வையில்லாமல் இருந்தபோது இயேசுவைத் தேடியவர்கள், பார்வை வந்தபின் இயேசுவை நிராகரிக்கின்றனர். நமது வாழ்க்கையில் துயரங்கள் வரும்போது இயேசுவைத் தேடுபவர்களாகவும், துயரங்கள் விலகியதும் அவரை நிராகரிப்பவர்களுமாய் இருக்கிறோமா ? சிந்திப்போம். கடவுளுடைய வார்த்தைகளை ஒரு மழலையைப் போல அப்படியே ஏற்றுக் கொள்வதே சிறந்தது. அந்த மனநிலையை கொண்டிருப்போம். நமக்கு சரியென செய்வதைச் செய்வதை விட, கடவுளுக்கு தவறென தோன்றுவதை செய்யாமல் இருப்பதே தேவையானது.
இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.