
(மாற் 6:30 – 44; லூக் 9:10 – 17; யோவா 6:1 – 14)
இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.
இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர்.
இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.
மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர்.
எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.
இயேசு செய்த புதுமைகளில் இந்த புதுமைக்கு ஒரு சிறப்புத் தகுதி உண்டு. மத்தேயு, மார்க், லூக்கா, யோவான், எனும் நான்கு நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ள ஒரே புதுமை இது தான் ! இது அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகியிருக்க வேண்டும்.
திருமுழுக்கு யோவான் படுகொலை செய்யப்படுகிறார். அவருடைய ஆதரவாளர்களும், அவரை தலைவராய் நினைத்தவர்களும் தளர்ந்து போகின்றனர். இன்னொரு புறம் இயேசுவின் சுகமாக்கும் வல்லமையும், போதனைகளும் மக்களை உற்சாகப்படுத்துகின்றன. எனவே திரள் திரளான மக்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்க அவரைப் பின் தொடர்கின்றனர்.
திருமுழுக்கு யோவானின் படுகொலை இயேசுவை மனதளவில் கலக்கமடையச் செய்திருக்க வேண்டும். அவர் தனிமையான இடத்துக்குச் செல்ல விரும்பினார். இயேசு தனிமையான இடத்துக்குச் செல்வது துயருற்று அழவோ, ஒளிந்து கொள்ளவோ அல்ல. தந்தையிடம் செபித்து பணிவாழ்வுக்கான ஊக்கத்தைப் பெற.
அந்த சூழலிலும் தன்னை நோக்கி மக்கள் வந்ததைக் கண்ட இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மக்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. மாலையானது. எல்லோருக்கும் பசி ! சீடர்கள் மக்களுக்குப் பசிக்குமே, இங்கே எதுவும் கிடைக்காதே, அனுப்பி விடுங்கள் என இயேசுவிடம் கூறுகின்றனர்.
போதித்துக் கொண்டிருந்த இயேசுவின் பசி யாருக்கும் தெரியவில்லை. இயேசு அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. நாற்பது நாள் உண்ணா நோன்பு இருக்குமளவுக்கு அவரது மனம் வலிமையாய் இருந்தது.
“நீங்களே உணவு கொடுங்கள்” என்ற இயேசு, அங்கே இருந்த ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆசீர்வதித்து சீடர்களிடம் கொடுக்க, சீடர்கள் பரிமாற, அப்பம் பெருகிக் கொண்டே இருந்தது. மக்கள் அனைவரும் வயிறார உண்டனர். பன்னிரண்டு கூடைகள் நிறைய மீதியும் கிடைத்தது ! இயேசு வெறுமனே நமது தேவைகளை நிறைவேற்றுபவர் மட்டுமல்ல, தேவைக்கு அதிகமாகவே கொடுப்பவர்.
ஐயாயிரம் ஆண்கள் இருந்த கூட்டம் அது. மனைவி குழந்தைகள் என ஏராளமானவர்கள் வந்திருக்கக் கூடும். எப்படியும் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை மக்கள் இருந்திருக்கலாம். அவர்களுக்குப் பசியாற்றியது, ஐந்து அப்பங்களும் இரண்டு மீனும் அல்ல ! இறைவனின் பரிவும், அன்பும்.
தன்னிடமிருந்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் பல்லாயிரம் பேருக்குப் பசியாற்றி, தன் முன்னால் பன்னிரண்டு கூடைகள் நிறைய நிரம்பி வழிந்ததைக் கண்ட அந்த சிறுவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியும், வியப்பும், பரவசமும் இருந்திருக்கும் !!! அதே சிறுவன் செய்த செயலை நாமும் செய்தால், அதே பரவசம் நம்மையும் பற்றிக் கொள்ளலாம்.
இந்த நிகழ்வு நமக்கு பல்வேறு ஆன்மீக சிந்தனைகளைக் கற்றுத் தருகிறது.
1. ஓய்வு கொள்ள நினைக்கும் இயேசு, மக்கள் தன்னைத் தேடி வருகையில் அவர்கள் மீது அன்பு கொள்கிறார். பரிவு கொள்கிறார். தன்னுடைய விருப்பத்தை, தன்னுடைய ஓய்வை, தன்னுடைய தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி வைத்து விட்டு, மக்களுக்காய் அந்த நேரத்தைச் செலவிடுகிறார். தன்னைத் தேடி வரும் மக்களை, ‘நாளைக்கு வாங்க’ என அனுப்பி வைப்பவர் இயேசு அல்ல ! எப்போதெல்லாம் மக்கள் வருகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களுக்குச் செலவிட அவரிடம் நேரம் இருந்தது ! அதுவே சுயநலமற்ற அன்பு !
பிறர் நம்மைத் தேடி வரும்போது நம்முடைய அசௌகரியங்களை விலக்கி வைத்து விட்டு, அவர்களுக்காக நேரம் செலவிட நாம் தயாராக இருக்க வேண்டும்.
2. “ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்”. என சீடர்கள் இயேசுவிடம் சொல்கின்றனர். அதன் காரணம், மக்கள் மீதான சீடர்களின் கரிசனையாகவோ, அவர்களுக்கு நம்மால் உணவு கொடுக்க முடியாதே எனும் யதார்த்தமாகவோ இருக்கலாம். சீடர்கள் மக்களுக்காக பேசியதால், சீடர்கள் மூலமாகவே இயேசு மக்களின் தேவையை நிவர்த்தி செய்கிறார்.
பிறருடைய தேவைகளுக்காக நாம் இயேசுவிடம் வேண்டும் போது, நம்மைக் கொண்டே பிறருடைய துயரை தீர்த்து வைக்க இயேசு கரம் கொடுக்கிறார். பிறருக்காக நாம் தொடர்ந்து இயேசுவிடம் மன்றாட தயாராக வேண்டும்.
3. “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என சீடர்கள் சொன்னார்கள். உண்மையில் அவர்களிடம் அப்பங்கள், மீன்களோடு இயேசுவும் இருந்தார். இயேசு ஒரு இடத்தில் இருக்கும்போது எத்தகைய குறைவுகளும் அபரிமிதமாய் வளர்ச்சியடைந்து விடும். பலவீனத்தில் பலத்தை புகுத்துவது இறைவனின் பணி.
எந்த ஒரு எண்ணுடனும் முடிவிலியை கூட்டும் போது, முடிவிலியே விடையாய் வருவது போல, நம்மிடமிருக்கும் எந்த ஒரு விஷயத்துடனும் இயேசுவை கூட்டும் போது முடிவிலியாய் அது மாறிவிடுகிறது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்துடனும் இயேசுவை இணைத்துக் கொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். அதற்கு இயேசு எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும்.
4. அந்த மாபெரும் கூட்டத்தில் ‘அப்பங்களையும், மீன்களையும்’ வைத்திருந்தவன் ஒரு சின்னப் பையன். ஐயாயிரம் பேர் எனும் கணக்கில் அவன் எண்ணப்படவில்லை. அவனிடம் உணவு இருக்கும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்கவும் முடியாது. அவன் தான் அந்த மாபெரும் கூட்டத்துக்கு உணவு கொடுத்தவனாக மாறிப் போனான் !
வாழ்க்கையில் யாரையும் நாம் குறைவாய் எடை போடவே கூடாது. எதிர்பாராத இடத்திலிருந்து மிகப்பெரிய ஆன்மீக ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கலாம். எந்த ஒரு எளிய மனிதர் மூலமாகவும் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கும் வலிமை இயேசுவுக்கு உண்டு. அவர் எப்போதுமே வலியவர்களை விட எளியவர்களையே தனது பணிக்காய் பயன்படுத்துகிறார்.
5. சிறுவன் தன்னிடமிருந்த அனைத்தையும் அப்படியே ஒப்படைக்கிறான். தனக்கென எதையும் அவன் வைத்திருக்கவில்லை. சுயநல சிந்தனைகள் ஏதும் அவனிடம் இல்லை. பிறருக்குப் பயன்படுவதற்காக தன்னிடமிருக்கும் அனைத்தையும் இழந்து விடவும் அவன் தயாராய் இருந்தான். எங்கும் அவன் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. அவனுடைய பெயர் எங்கும் குறிப்பிடப்படவும் இல்லை !
நாமும் நம்மிடம் இருக்கும் அனைத்தையும் இறைவனிடம் முழுமையாய் ஒப்படைக்கும் மனம் கொண்டவர்களாக இருக்க வேன்டும். எவையெல்லாம் நாம் இறைவனிடம் ஒப்படைக்கிறோமோ அவையெல்லாம் வளர்ச்சியடைகின்றன. நம்முடைய உலகப் பொருட்களையும், ஆன்மீக தேவைகளையும் முழுமையாய் இறைவனிடம் ஒப்படைத்தால் அது நமக்கும் பிறருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதமாய் மாறிவிடும்.
6. இயேசு அந்த அப்பங்களையும், மீன்களையும் எடுத்து தந்தையைப் போற்றினார். சிறுவன் இயேசுவிடம் ஒப்படைத்ததை, இயேசு தந்தையிடம் ஒப்படைத்தார். பின்னர் அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார்கள். இயேசுவின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பொருள், தந்தையின் ஆசீர்வாதங்களை வாங்கிக் கொண்டு சீடர்களின் கைகளில் திரும்ப வந்தது. இப்போது அது ஒருவருடைய பசி அடக்குவதாக இல்லாமல், பல்லாயிரம் மக்களின் தேவை தீர்க்கும் உணவாக மாறிவிட்டிருந்தது.
நமது வாழ்க்கையில் கிடைக்கின்ற அனைத்து விஷயங்களும் இயேசுவின் கரங்களில் நாம் ஒப்படைத்தபின், அவரது ஆசீரோடு திரும்பக் கிடைத்தால் அது மிக அதிக பயனளிப்பதாக மாறிவிடும். இறைவனின் ஆசீர் பெறாமல் நம்மிடம் இருக்கும் எந்தப் பொருளுமே மிகுந்த பயனளிப்பதில்லை. அனைத்தையும் இறைவனின் ஆசீரோடு பயன்படுத்தும் மனதை நாம் பெற வேண்டும்.
7. இயேசுவின் ஆசீரோடு வந்த அப்பங்கள், சீடர்களின் கைகளில் வந்தபின் தான் அது புதுமையாய் மாறுகிறது. இயேசு ஆசீர்வதித்தபோது அப்பங்கள் பலுகிப் பெருகவில்லை. இயேசு உடைத்த அப்பங்களை சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களின் கைகளில் அவை பெருகத் துவங்கின. சீடர்களின் கையால் அவை பிறருக்கு ஆசீர்வாதமாய் மாறின. சீடர்களின் பகிர்தலால் அவை பன்மடங்கு அதிகரித்தன.
இயேசு நம்மிடம் தருகின்ற பொருட்களை நாம் பகிர்தல் குணத்தோடு அணுக வேண்டும். பிறருக்குப் பகிர்ந்தளிக்க அளிக்க இறைவனின் அருளால் அது மக்களுக்கு ஆசீர்வாதமானதாக மாறிவிடும். இறைவன் தருகின்ற அப்பம், நமது கைகளில் பொத்தி வைக்க அல்ல, பிறருக்குப் பகிர்ந்தளிக்க எனும் சிந்தனை நமக்கு வேண்டும்.
8. கைகளில் போதுமான உணவு இல்லை, ஆனாலும் மக்களை பந்தியமரச் சொன்னார் இயேசு. அந்த சின்ன கட்டளையை அவர்கள் அப்படியே நிறைவேற்றினார்கள். புதுமையின் கதவுகள் திறக்க, கீழ்ப்படிதலின் செயல்கள் நடைபெற வேண்டும். இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது சின்னச் சின்ன நம்பிக்கைகளை. கடுகளவு விசுவாசத்தை. அதன் வெளிப்பாடான அன்பின் செயல்களை. அதன் பயனாக நாம் அடைவதோ மலையளவு ஆசீர்வாதங்களை.
இயேசு சொன்னார் எனும் காரணத்துக்காக, ஒரு மழலையைப் போல கேள்வி கேட்காமல் கீழ்ப்படியும் மனம் இருந்தால் ஆன்மீகத்தின் உயர்நிலையை நாம் தொட்டு விட்டோம் என்று பொருள். ‘அது அந்தக்கால மக்களுக்கானது’, ‘இது இந்தக்காலத்துக்கு சரி வராது’ என சாக்குப்போக்குகள் சொல்வோமென்றால் விசுவாசத்தின் கடைசிப் படிக்கட்டில் உழல்கிறோம் என்று அர்த்தம்.
9. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மாபெரும் கூட்டம் அது. பாலை நிலம். மன்னாவை பாலை நிலத்தில் பொழிந்த இறைவன், இப்போது பாலை நிலத்தில் அப்பத்தைப் பகிர்ந்தளிக்கிறார். தொலைவில் இருந்தவர்களுக்கு அது வெறும் உணவாய் தெரிந்தது. அருகில் இருந்தவர்களுக்கு மட்டுமே அது ‘இயேசுவின் அற்புதம்’ எனும் உண்மை தெரிந்தது.
இயேசு நமது வாழ்வில் செய்கின்ற அற்புதங்களைக் கண்டு கொள்ள வேண்டுமெனில் நாம் இயேசுவோடு நெருங்கி இருக்க வேண்டும். தொலைவில் இருந்தால் “எப்படியோ நமது தேவைகள் நிறைவேற்றப்பட்டன” என்றே எண்ணுவோம். அருகில் இருந்தால் மட்டுமே “இறைவனின் அருளால் அனைத்தும் நடந்தன” எனும் உண்மை புரியும். எப்போதும் இறைவனோடு நெருங்கி இருக்க வேண்டும். நம்முடைய முதன்மையான நேரங்களை நாம் இயேசுவுக்காய் கொடுத்தால், நமக்கு முதன்மையான இடத்தை அவர் தருவார்.
10. சீடர்களுக்கும் இயேசுவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. ‘நமது வழிகளில்… ‘ நாம் யோசிப்போம். ‘அவர் வழி..’ என தனியே ஒன்று உண்டு என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.
* மக்களை அனுப்பி விடுவோம், என்பது சீடர்களின் குரல்
* மக்களை அமர வையுங்கள், என்பது இயேசுவின் பதில்
* நம்மிடம் உணவு இல்லை, என்பது சீடர்களின் குரல்
* நம்மிடம் தந்தை உண்டு, என்பது இயேசுவின் பதில்.
நம்மிடம் என்ன இல்லை என்பதை சீடர்கள் பார்த்தார்கள். நாம் சிந்திக்காத ஒரு வழியில் இறைவன் செயலாற்ற மாட்டார் என அவர்கள் தப்புக்கணக்கு போட்டார்கள். இயேசுவோ அனைத்தையும் தனது ஆச்சரியமான பாதைகளில் செயல்படுத்தினார்.
நமது வாழ்க்கையில் இறைவன் செயலாற்றுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நமது வழிகளில் அவரை வலுக்கட்டாயமாய் இழுக்கக் கூடாது ! அவருடைய வழிகளில் நாம் அவரைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும்.
இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம். அனைத்தையும் அவரில் ஒப்படைத்து அவரோடு நெருங்கி வாழ்வோம்.
*
Like this:
Like Loading...