மத்தேயு 9 : 32..33
பேச்சிழந்தவர் பேசுதல்
அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
*
மௌனத்தில் விழுந்து கிடக்கும் ஒருவருக்கு, சத்தத்தை அறிமுகம் செய்து வைக்கிறார் இயேசு. அவனுடைய அந்த நிலமைக்குக் காரணம் பேய் ! அந்த நபர் இயேசுவிடம் கொண்டு வரப்படுகிறார். இயேசு அவனைப் பிடித்திருந்த பேயை ஓட்டுகிறார். அப்போது அந்த மனிதர் பேசுகிறார். மக்களுக்கு வியப்பு, ஆனால் மதவாதிகளோ இயேசுவை வழக்கம் போல மட்டம் தட்டுகின்றனர்.
இந்த நற்செய்திப் பகுதி நமக்கு சில சிந்தனைகளைத் தருகிறது !
1. “பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்”. பல்வேறு விதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம். உடல் நிலை சரியில்லாத மக்கள் பலர் இயேசுவிடம் நேரடியாக வருகின்றனர். சிலருக்காக அவரது உறவினர்களோ, நண்பர்களோ வருகின்றனர். சிலரை இயேசு தேடிச் செல்கிறார். இந்த நிகழ்வில், பேச்சிழந்த அந்த நபரை சிலர் கூட்டிக் கொண்டு இயேசுவிடம் வருகின்றனர். காரணம், அவர் பேய் பிடித்தவர். பேய் இயேசுவை சந்திக்க எப்போதுமே விரும்புவதில்லை. காரணம் அவைகளுடைய முடிவு நரகம் என்பதை அவை அறிந்திருந்தன. இயேசுவினால் தங்களுடைய அரசுக்கு ஆபத்து என்பதும் அவற்றுக்குத் தெரியும். இருள் எப்போதுமே ஒளியைத் தேடி வருவதில்லை, காரணம் ஒளியின் முன்னால் இருளுக்கு இடமில்லை.
நமது வாழ்விலும் நாம் சிலரை இயேசுவிடம் கொண்டு வர வேண்டும். அவர்கள் தங்களுடைய பாவ வாழ்க்கையினால் இயேசுவை விட்டுத் தொலைவில் சென்றவர்களாக இருக்கலாம். இயேசுவை அறியாதவர்களாக இருக்கலாம். இயேசுவை நிராகரித்தவர்களாக இருக்கலாம். அவர்களை இயேசுவின் அருகே கொண்டு வருகின்ற பணியை நாம் செய்ய வேண்டும்.
2. “பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்” எனும் பைபிள் வசனம், கொண்டு வந்தவர்கள் யார் என்றோ, அவர்களுடைய பெயர் என்ன என்றோ, எத்தனை பேர் என்றோ எதையும் குறிப்பிடவில்லை. அவர்களுடைய பணி அந்த பேச்சிழந்த நபரை இயேசுவிடம் கொண்டு வருவது மட்டுமே.
நாமும், இயேசுவிடம் ஒரு நபரைக் கொண்டு வரும் போது இதே மனநிலையில் இருக்க வேண்டும். நமது பெயர், புகழ், மரியாதை, லாபம் எதையும் முன்னிலைப்படுத்தவே கூடாது. எப்படி ஒரு தீக்குச்சி திரியை ஏற்றி விட்டு தூரமாய்ப் போய்விடுகிறதோ, அதே போல ஒரு நபரை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்து விட்டு நாம் விலகி விடவேண்டும். அதற்கான பெருமையையோ, கர்வத்தையோ நமது தலையில் சுமத்தக் கூடாது !
3. இயேசுவின் முன்னால் ஒரு நபரைக் கொண்டு வர வேண்டுமெனில், அவர் மீது அதீத அன்பு கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். நமது குழந்தைகள், நமது குடும்பத்தினர், நமது பெற்றோர் ஆகியோர் மீது நாம் இயல்பாகவே அன்பு கொண்டிருப்போம். அவர்களுக்கு தீங்கு எதுவும் நேரக் கூடாது என நினைப்போம். அவர்கள் வழி விலகினால் அவர்களை இயேசுவிடம் கொண்டு வருவோம். இதற்கு ஒரே காரணம் அவர்கள் மீது நாம் காட்டும் அன்பு தான். யார் மீது அதிகம் அன்பு செலுத்துகிறோமோ, அவர்கள் சொர்க்கத்தைக் காணவேண்டும் என்றும் நாம் விரும்புவோம்.
அத்தகைய அன்பை நாம் சக மனிதர்களிடம், திருச்சபையிலுள்ள பிற நண்பர்களிடம், சமூகத்திலுள்ள பிற அங்கத்தினர்களிடம், அல்லது முகம் தெரியாத ஒரு நபரிடம் நாம் காட்டுகிறோமா ? யாரையும் இயேசுவிடம் அழைத்து வர நாம் விரும்பவில்லையெனில், அவர்கள் மீது நாம் அதிக அன்பு காட்டவில்லை என்பதே இதன் பொருள்.
4. பேச்சிழந்த நிலை அந்த மனிதருக்கு எப்போது ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், “பேய் பிடித்துப் பேச்சிழந்த” என்கிறது விவிலியம். பேயின் பிடியினால் பேச்சை இழந்து போன நபர் அவர். அவருடைய வாழ்க்கை தொடக்கத்தில் சாதாரண வாழ்க்கையாய் இருந்திருக்கலாம். பேயின் தாக்குதலுக்குப் பின் இப்படி ஒரு ஊனமான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்.
நமது வாழ்க்கையிலும் சாத்தானோ, அல்லது சாத்தான் சார்ந்த உலக விஷயங்களோ நம்மை ஆன்மீக ஊமையாய் மாற்றி விட்டிருக்கலாம். வலுவான ஆன்மீக வாழ்க்கையை அத்தகைய சலனங்கள் ஊமை நிலைக்குத் தள்ளியிருக்கலாம். அந்த நிலையில் இயேசுவிடம் சரணடைந்து நமது குரலை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். உலகப் பேச்சுகளை அதிகம் பேசி, இறைவனோடான உரையாடலை நிறுத்தி விடும் ஊமை நிலை ஆன்மீகத்தில் மிகவும் ஆபத்தானது. அந்த ஊமை நிலையை மாற்ற, அவர் இயேசுவிடம் வரவேண்டும். அல்லது கொண்டு வரப்பட வேண்டும்.
5. பேச்சு என்பது பன்முகத் தன்மை கொண்டது. ஒரு ஆறுதல் வார்த்தை ஒருவரை அமைதிப்படுத்தலாம். ஒரு அன்பான வார்த்தை ஒருவருடைய சோகத்தைத் துடைக்கும் கைக்குட்டையாய் மாறலாம். ஒரு கோபமான வார்த்தை ஒருவருடைய நிம்மதியைக் குழிதோண்டிப் புதைக்கவும் செய்யலாம். நமது வார்த்தைகள் எப்படி இருக்கின்றன ?
பிறருக்கு ஆறுதல் சொல்லாமல், பிறருக்காய் நியாயம் பேசாமல், பிறருடைய வேண்டுதல்களுக்கு பதில் சொல்லாமல் ஊமையாய் திரிகிறோமா ? பிறருடைய தேவைகளில் நமது குரல் அவர்களுக்கு கரம்பிடிக்கும் விரலாக நீள வேண்டும். அத்தகைய ஆன்மீக பேச்சை நாம் வாழ்வில் கொள்ள வேண்டும்.
6. இயேசு பேயை ஓட்டினார் ! இயேசுவிடம் நபரைக் கொண்டுவந்தவர்கள் ஒருவேளை பேய் தான் பிடித்திருக்கிறது என்பதை அறியாமல் கூட இருந்திருக்கலாம். அவர்களுடைய நோக்கம், அவருடைய ஊனம் தீரவேண்டும் என்பது தான். அவர்கள் எதுவும் கேட்கவில்லை. இயேசு எதுவும் பேசவில்லை. அங்கே வித்தியாசமான ஒரு புதுமை நடக்கிறது. கொண்டு வந்தவர்களின் மனம் இயேசுவுக்குத் தெரியும். கொண்டு வரப்பட்டவனின் நிலை இயேசுவுக்குத் தெரியும். என்ன செய்ய வேண்டும் என்பதும் இயேசுவுக்குத் தெரியும். எனவே தான் ஒரு மௌனக் காட்சி போல அந்த நிகழ்வு அரங்கேறுகிறது.
நாமும், இயேசுவிடம் பிறரைக் கொண்டு வரும்போது எந்த நீண்ட விளக்கங்களும் சொல்லத் தேவையில்லை. இயேசு உள்ளத்தை அறிபவர். எதை எப்படிச் செய்யவேண்டும் என்பதில் எப்போதுமே தெளிவாய் இருப்பவர்.
7. இயேசு வேர்களை விசாரிப்பவர். பேச்சிழந்த மனிதனுக்கு அவர் பேச்சை மட்டும் கொடுக்கவில்லை, அவனுக்குள் இருந்த பேயையும் துரத்துகிறார். வேர்கள் பழுதான நபருக்கு, கிளைகளை மட்டும் சரிசெய்யும் பணியை இயேசு எப்போதுமே செய்வதில்லை. ஒரு பிரச்சினையின் உண்மையான காரணம் என்ன என்பதை அவர் கவனிப்பவராக இருக்கிறார்.
நமது வாழ்வில் நிகழ்கின்ற நிகழ்வுகளுக்கு நமது பாவங்களோ, நாம் அறியாத ஏதோ சில பிழைகளோ காரணமாய் இருக்கலாம். இயேசுவிடம் நம்மை முழுமையாய் சரணடைகையில் அவர் வெறுமனே நமது பிரச்சினைகளைத் தீர்ப்பவராக மட்டும் இல்லாமல், நமது மீட்புக்கான தடைகளை அகற்றுபவராகவும் இருக்கிறார். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
8. “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என மக்கள் வியப்படைகின்றனர். இயேசுவை ருசிக்கும் மக்களுடைய அனுபவம் எப்போதுமே இப்படித் தான் இருக்கிறது. வியப்பும், சிலிர்ப்பும், மகிழ்வும், பிரமிப்பும் அவர்களுடைய வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே இயேசு செய்த பல அற்புதங்களைக் கண்டவர்கள் கூட அவருடைய புதிய அற்புதங்களில் பிரமிப்படைகிறார்கள்.
நமது வாழ்க்கையிலும் இயேசு பல்வேறு அற்புதங்களைச் செய்து கொண்டே இருக்கிறார். அதற்கான வியப்பும், பிரமிப்பும் நமக்கு எழுவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அந்த வியப்பும், மகிழ்ச்சியும் அத்துடன் நின்று விடாமல் மீட்புக்கான வழியில் இயேசுவின் அருகில் நம்மைக் கொண்டு சேர்க்க வேண்டும். வெறுமனே கைதட்டி வேடிக்கை பார்த்து விட்டுக் கடந்து போவதில் எந்த பயனும் இல்லை. இயேசுவின் அற்புதங்களும், போதனைகளும் பிரமிக்க வேண்டியவையல்ல,பின்பற்ற வேண்டியவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
9. “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என மதவாதிகள் இயேசுவை பழிக்கின்றனர். இயேசுவை சாதாரண மக்கள் அரவணைப்பதும், மதவாதிகள் எதிர்ப்பதும் காலம் காலமாக நிகழ்கின்ற நிகழ்வு தான். இயேசுவை எதிர்த்தவர்கள் ஆபிரகாம் முதல் மலாக்கி வரையிலான அத்தனை தீர்க்கத் தரிசிகளின் வார்த்தைகளையும் அறிந்தவர்கள். மெசியா பற்றிய முன்னறிவிப்புகளை படித்தவர்கள். ஆனால் அவர்களால் இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தேவை அறிவல்ல, மனசு ! என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இயேசு செய்த புதுமையை மறுக்க முடியாதவர்கள், இப்போது இயேசுவை வெறுக்க ஆரம்பிக்கின்றனர்.
நமது வாழ்விலும் ஒவ்வொரு நாளும் இயேசு நமக்குத் தருகின்ற அருளின் நாட்கள். அவற்றில் நடக்கின்ற நிகழ்வுகள் இயேசுவின் கருணையினால் நமக்குக் கிடைக்கும் தருணங்கள். இவற்றை நாம் புரிந்து கொள்கிறோமா ? அல்லது இது இறைவனால் நடப்பதல்ல, நமது திறமையினால் நடப்பது என்றோ, எதேச்சையாய் நடப்பது என்றோ, இயல்பாய் நடப்பது என்றோ எடுத்துக் கொள்கிறோமா ? ஒவ்வொரு நாளின் கிருபைகளையும் தருபவர் இறைவன் என்பதை உணர்ந்து அவருக்கு நன்றி சொல்வது நமது முக்கிய கடமையாய் இருக்கட்டும்.
10. “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்பது போன்ற குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் இயேசு தனது பணியையோ, தனது இயல்பையோ மாற்றிக்கொள்ளவில்லை. அவர் தனது பணியை தொடர்ந்து செய்தார். மக்களுடைய விமர்சனங்களுக்காக தனது தந்தையின் விருப்பத்தை நிராகரிக்கவில்லை.
நமது வாழ்விலும் நமது செயல்களுக்கு எதிரான விமர்சனம் வைப்பவர்கள் எப்போதுமே இருப்பார்கள். குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் ஏராளம் இருப்பார்கள். அவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. நாம் செய்யும் வேலை மனிதநேயம் மிளிர்ந்ததாக, இறைவனுக்கு ஏற்புடையதாக இருந்தால் அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள், அவமானங்கள், கிண்டல்கள் போன்றவை நமது அன்பின் பணிகளுக்கு தடை போடாமல் இருக்க வேண்டும்.
இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.
கருத்தாழமிக்க சிந்தனைகளுக்கான பதிவுகள். மிகச் சிறப்பு
LikeLike