Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 16 : கானானியப் பெண்ணின் மகள் நலமடைதல்

(மாற் 7:24 – 30)

மத்தேயு 15:21..28

Image result for canaanite woman

இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார்.

ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர்.

அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார்.

அவர் மறுமொழியாக , “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

விளக்கம்

தொடர் நற்செய்தி அறிவித்தல், நலமளித்தல் போன்ற நிகழ்வுகளால் சீடர்கள் சோர்வடைகின்றனர். அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்த இயேசு, சுமார் ஐம்பது மைல் தொலைவிலுள்ள பகுதிக்குச் செல்கிறார். அது யூதர்கள் அல்லாத பிற இன மக்கள் வாழும் பகுதி.

அங்கும் இயேசுவின் வருகையை அறிந்து கொள்கின்ற ஒரு பெண் இயேசுவை அணுகி தன் மகளை நலமாக்க விண்ணப்பம் வைக்கிறார். இயேசு அவளுடைய விசுவாசத்தின் ஆழத்தைக் கண்டு வியந்து அவளுடைய மகளுக்கு நலமளிக்கிறார்

இந்த புதுமை நமக்கு சில படிப்பினைகளைச் சொல்லித் தருகிறது.

1. கனானேயப் பெண்ணின் அணுகுமுறை எப்படி செபிக்க வேண்டும் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறது. அவள் முதலில் தனது சமூக, மத, கலாச்சாரக் கட்டமைப்புகளைத் தாண்டி இயேசுவின் முன்னால் வருகிறாள். ஒரு பெண் ஒரு மதகுருவின் முன்னால் நிற்க அந்தக் காலத்தைய சமூகம் அனுமதிக்கவில்லை. ஒரு பிற இன பெண் யூதத் தலைவரின் முன்னால் நிற்பது அதை விட கடினம். தான் வாழ்கின்ற சமூகத்தின் நடுவினிலே அனைத்தையும் மறுதலித்து விட்டு இன்னொரு மத தலைவரை பணிவது மிக மிகக் கடினம். ஆனால் அந்தப் பெண் அனைத்து உலகத் தடைகளையும் மீறி, விண்ணகத் தலைவரின் முன்னால் வருகிறாள்.

நமது வாழ்க்கையில் நாம் இயேசுவைத் தேடும்போது நமது சமூக, மத, மொழி, இன, குடும்ப கட்டுப்பாடுகள் நம்மை கட்டிப் போடுகிறதா ? அனைத்தையும் மீறி, பல இடங்களில் அவமானங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தாலும் இயேசுவின் முன்னால் வருகிறோமா ? அத்தகைய தேடலும், அத்தகைய உறுதியும் நிச்சயம் நமக்குத் தேவை.

2. இயேசுவின் மௌனம் நமது விசுவாசத்தைச் சோதிக்கும் ஆயுதம். அத்தகைய சூழல்களில் உடைந்து விடாத விசுவாசம் கொண்டிருக்க வேண்டியது அத்தியாவசியம். கனானியப் பெண்ணின் கதறலை, இயேசுவின் மௌனம் மௌனமாய் எதிர்கொள்கிறது. கதறலுக்கு மௌனம் ஒரு முரணான பதில். சீடர்களுக்கு அது புரியாத புதிர். ஒரு கதறலை, ஒரு தாயின் கண்ணீர் புலம்பலை இயேசு மௌனத்தால் எதிர்கொள்வதை இப்போது தான் அவர்கள் சந்திக்கின்றனர்.

நமது விண்ணப்பங்களுக்கு பதிலாக வருகின்ற இறைவனின் மௌனம் நமது விசுவாசத்தை வலுப்படுத்தவும், இறைவன் மீதான நம்பிக்கையையும் உறவையும் ஆழப்படுத்தவும் செய்ய வேண்டும். அது நமது விசுவாசத்தை வலுவிழக்கச் செய்யக் கூடாது. கப்பல் செய்யத் துவங்கிய நோவாவுக்கு அதன் பின் பல நீண்ட ஆண்டுகள் கடவுளின் மௌனம் மட்டுமே பதிலாய் வந்தது. எனினும், அழைப்பையும், விசுவாசத்தையும் அவர் விட்டு விடவில்லை. இன்னும் ஆழமாய்ப் பற்றிக் கொண்டார். இறைவனின் மௌனத்தை விசுவாச வளர்ச்சிக்கான படிக்கட்டாய் எடுத்துக் கொள்ளப் பழகுவோம்.

3. இயேசுவோடு நெருக்கமாய் இருப்பதாய் காட்டிக்கொள்கின்ற ஆன்மீக தலைவர்கள் சில வேளைகளில் நமது விசுவாசத்தை அசைப்பதுண்டு. இயேசுவின் சீடர்கள் கனானேயப் பெண்ணுக்காக இயேசுவிடம் பரிந்து பேசவில்லை. கனானேயப் பெண்ணின் தேவையைத் தீர்த்து வையுங்கள் என விண்ணப்பிக்கவில்லை. ‘கத்திக் கொண்டு வரும்’ தொந்தரவை தீர்க்க மட்டுமே நினைத்தார்கள். நலமளிக்கிறாரா ? இல்லையா என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்சம். மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் ‘நல்லவர்கள்’ எனும் பிம்பம் உடைந்து விடுமோ எனும் கவலை இருந்திருக்கலாம். ‘இரக்கமற்றவர்கள்’ எனும் முத்திரை விழுமோ எனும் பயமும் இருந்திருக்கலாம். ஆனாலும் அந்தப் பெண்ணின் பார்வை இயேசுவின் மீதே இருந்தது, சீடர்களின் மீது அல்ல !

நமது பார்வை எங்கே இருக்கிறது ?. இயேசு மௌனமாய் இருக்கிறார். நமது ஆன்மீகத் தலைவர்கள் நமக்கு ஆறுதலாய் இருக்கவில்லை. நமது விசுவாசத்தில் நாம் பின் வாங்குகிறோமா ? இல்லை நாம் இயேசுவின் மீது வைத்த பார்வையை விலக்காமல் இருக்கிறோமா ?

3. கனானேயப் பெண்ணின் தொடர் வேண்டுதலை, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” எனும் இயேசுவின் பதில் தடுத்து நிறுத்தியது. மூன்றாவது தடங்கல் அவளுடைய செபத்துக்கு நேராய் எழுந்தது. ஆனால் இப்போது அவள் இயேசுவின் முன்னால் வந்து பணிகிறாள். மூன்றாவது தடை அவளை பின்னோக்கிச் செல்ல வைக்கவில்லை, இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட வைக்கிறது ! பின்னால் இருந்தபோது எழுந்த கதறல் ஒலி, இப்போது விண்ணப்பமாய் உருமாறிவிட்டது. இயேசுவை நெருங்க நெருங்க, நமது கதறல் மெல்லிய விண்ணப்பமாய், பணிவான வேண்டுதலாய் மாறிவிடுகிறது.

நாம் இயேசுவை நமது தேவைகளின் கதறலோடு பின் தொடருகிறோம். அவரது மௌனம் நம்மை அலட்டுகிறது, ஆன்மீக தலைவர்களின் பதில் நம்மை சோர்வடையச் செய்கிறது, இயேசுவின் பதில் நம்மை பதற வைக்கிறது ! எனினும் இயேசுவைப் பின் செல்கிறோமா ? இயேசுவின் அன்பை முழுமையாகப் புரிந்து கொள்ளாத அந்த கானானேயப் பெண்ணின் விசுவாசம், புரிந்து கொண்ட நம்மிடம் இருக்கிறதா ?

4. “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” எனும் இயேசுவின் பதில் அந்தக் காலத்தில் பிரபலமாய் இருந்த‌ ஒரு பழமொழி ! இஸ்ரயேல் மக்களுக்காக வந்த மீட்பை பிற இனத்தாருக்குக் கொடுக்கும் காலம் வரவில்லை என்கிறார் இயேசு. நாய்க்குட்டிகளுக்கு உணவைக் கொடுக்க மாட்டேன் என்பதல்ல அதன் பொருள். முதலில் பிள்ளைகள், பிறகு நாய்க்குட்டிகள் எனும் உலக வழக்கையே இயேசு சொன்னார். தனது வருகையின் நோக்கம் இஸ்ரயேலரின் மீட்பு, அதன்பின்பே பிற இனத்தாரின் மீட்பு என்பதையே அவரது பதில் சொன்னது.

கானானேயப் பெண்ணின் விசுவாசம் ‘குழந்தை மீதான பரிதவிப்பா’, ‘இயேசுவின் மீதான பெரும் நம்பிக்கையா ?’ என்பதை உரசிப் பார்த்தது இயேசுவின் கேள்வி. அவள் கோபம் கொள்ளவில்லை அவள் தாழ்மை கொண்டாள். தன்னை ஒரு நாய்க்குட்டியாய் அவள் ஏற்றுக் கொண்டாள். “ஆம் ஐயா” என தனது நிலையை அவள் ஒத்துக் கொண்டாள். இயேசுவை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் அந்தத் தாழ்மை இருக்க வேண்டியது அவசியம். நமது தொடர் வேண்டுதல்கள் தாழ்மையோடு இருக்கின்றனவா ?

5. “தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என கானானேயப் பெண் இயேசுவிடம் சொல்கிறாள். “தாவீதின் மகனே” என அழைத்த பெண், இப்போது உரிமையாளரே என அழைக்கிறார். தன்னை அடிமையாக, நாய்க்குட்டியாக பாவித்துக் கொண்ட அந்த பெண் உரிமையாளரின் கனிவை எதிர்பார்த்து நிற்கிறாள்.

அனைத்திற்கும் உரிமையாளர் இயேசுவே ! அந்த சிந்தனையோடு நாம் இறைவனை நாடுகிறோமா ? அவரது கருணை இருந்தால் எத்தகைய சிக்கலையும் கடந்து விட முடியும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு இயேசுவை அணுகுகிறோமா ?

6. “தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” எனும் பதிலின் வழியாக அந்தப் பெண் இயேசுவிடம் தனக்கு பதில் உடனே வேண்டும் என்கிறாள். “பிள்ளைகள் தின்ற பின்பு மிஞ்சுவது அல்ல, பிள்ளைகள் தின்னும் போதே சிந்துவது” என அவள் கேட்கிறாள். அவளது விசுவாசம் இயேசுவின் உடனடி ஆசீர்வாதம். அதற்காக விடாமல் இயேசுவைப் பற்றிக் கொள்கிறாள், பணிவின் பள்ளத்தாக்கில் தன்னை இட்டுக் கொள்கிறாள்.

நமது வேண்டுதல் பணிவோடும், தொடர்ந்த துணிவோடும் இருக்கிறதா ? நான் அருகதையற்றவன், உமது மேஜையிலிருந்து சிந்தும் துணிக்கைகள் வேண்டும் என சொல்கிறோமா ? “உமது ஆடையின் நுனி போதும், உமது வார்த்தையின் ஒலி போதும்” என விசுவாசத்தைக் காட்டிய மாந்தர்கள் போல நாம் செயல்படுகிறோமா ?

7. அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் , என்கிறார் இயேசு. நாய்க்குட்டியாய் உருவகிக்கப்பட்டவள் விசுவாசத்தின் வலிமையால் ‘அம்மா’ என அழைக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்படுகிறாள். அவளது விருப்பமும் நிறைவேற்றப்படுகிறது. அவளது மகளின் நிலை சீராகிறது. “அந்நேரம்” அவளது மகள் நலம்பெறுகிறாள். இப்போது பந்தியில் சிந்தியதை அல்ல, பரமனின் பந்தியிலேயே ஆசீரைப் பெற்றுக் கொள்கிறாள் அவள்.

விசுவாசமே மலைகளை அசைக்கும் ! விசுவாசமே இயேசுவின் இதயத்தையும் அசைக்கும். யூதமக்கள் நிராகரிப்பின் மனதோடு அலைகையில் பிற இனத்தார் விசுவாசத்தின் விழுதுகளைப் பற்றித் திரிந்தது இயேசுவுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. நமது விசுவாசம் எப்படி இருக்கிறது ?

8 ஒரு தாயின் பிரார்த்தனை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை கானானியப் பெண்ணின் பிராத்தனை நமக்கு சொல்லித் தருகிறது. எத்தனை தடைகள் இருந்தாலும், எத்தனை மௌனம் பதிலாய் வந்தாலும், கூட இருக்கும் ஆன்மீகத் தலைவர்கள் தடுத்தாலும், இறைவனே நமக்கு எதிராய் இருப்பதாய்த் தோன்றினாலும் விடாமல் அவரைப் பற்றிக் கொள்ளும் விசுவாசம் இருக்க வேண்டும். மூன்று குணாதிசயங்கள் செபத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். பணிவு, விடாமுயற்சி மற்றும் விசுவாசம். இந்த மூன்றும் இருந்தால் அந்த செபம் இயேசுவால் அங்கீகரிக்கப்படும் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

பல நேரங்களில் நமது செபங்கள் ஒரு கடமையின் வெளிப்பாடாகவோ, நமது மனசாட்சியைத் தடவிக் கொடுக்கும் நிகழ்வுகளாகவோ, குற்ற உணர்ச்சியை அழிக்கும் ஆயுதமாகவோ அமைந்து விடுகிறது. கடமைக்காக பேசும் மகனின் உரையாடல் தந்தையை பிரியப்படுத்துவதில்லை. ஆத்மார்த்த அன்போடு பேசும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். உரிமையோடும், விசுவாசத்தோடும் அவரைத் தொடரும் வலிமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தாழ்மை, தொடர் செபம் மற்றும் ஆழமான விசுவாசம் மூன்றும் நம்மிடம் இருக்கிறதா ?

9 இந்த புதுமையில் இயேசுவே வானிலிருந்து இறங்கி வந்த உணவாகவும் காட்சியளிக்கிறார். இஸ்ரயேல் மக்களுக்காக வந்த மீட்பர், பிற இனத்தாரான நமக்கு மீட்பராகவும் மாறிய நிகழ்ச்சியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இயேசு எனும் உணவு நமக்காக இன்று தரப்பட்டிருக்கிறது. அந்த உணவு பிள்ளைகள் எனும் உரிமையோடு இன்று நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இயேசு எனும் செடியின் கிளைகளாக இருக்கிறோம், பந்தியின் கீழ் நாய்க்குட்டிகளாக அல்ல. நமது வாழ்க்கையும், விசுவாசமும் எப்படி இருக்கிறது என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

10. ஓய்வு தேடிச் சென்ற இயேசு ஓய்வை விட்டு விட்டு மனித நேயப் பணியைச் செய்கிறார். இயேசு எப்போதும் தந்தையோடு செபத்தில் ஒன்றித்திருந்தார். இந்த கானானேயப் பெண்ணின் மகளைக் குணமாக்கும் பொருட்டு தந்தை இயேசுவை இங்கே அனுப்பியிருக்கலாம். தந்தையிடம் பெற்றுக் கொள்வதை மட்டுமே செய்து வந்த இயேசு இங்கும் அதையே நிறைவேற்றுகிறார் எனக் கொள்ளலாம். அதன்பின் உடனே இயேசு அந்த இடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரைக்கு வருகிறார்.

நமது வாழ்க்கையும் எப்போதும் செபத்தில் இறைவனோடு ஒன்றித்திருக்கும் வகையில் அமைய வேண்டும். அப்போது நமது செயல்கள் இறைவனுக்கு பிரியமான வகையில் அமையும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

 

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s