
காட்சி 1
அப்பா, அம்மா வீட்டில் இருக்கின்றனர்
அப்பா ( போனில் ) : பரவாயில்லைங்க.. இதுல என்ன இருக்கு. நோ பிராப்ளம். ஃபிரியா இருக்கும்போ வீட்டுங்கு வாங்க.
அம்மா : யாருங்க போன்ல ?
அப்பா : குமாரசாமி தான் பேசினாரு. இன்னிக்கு கொஞ்சம் காசு தரேன்னு சொல்லியிருந்தாரு அது கிடைக்கலையாம்.
அம்மா : ஐயோ, பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டணுமே. என்ன பண்றது ?
அப்பா : அதெல்லாம் கடவுள் பாத்துப்பாரு. நீ ஏன் கவலை படறே. முயற்சி மட்டும் நாம பண்ணுவோம், முடிவு அவர் கையில தான் இருக்கு.
அம்மா : எப்படி தான் நீங்க கூலா இருக்கீங்களோ ! எனக்கு பக் பக் ந்னு இருக்கு. பணம் கிடைக்கணும், பீஸ் கட்டணும், அவனை படிக்க வெச்சு ஒரு பெரிய ஆளாக்கணும். அப்ப தான் எனக்கு சந்தோசம்.
அப்பா : படிக்கிறதுலயோ, பெரிய வேலைல இருக்கிறதிலயோ சந்தோசம் கிடையாது. கடவுளோட இருக்கிறதுல தான் நமக்கு சந்தோசம். வேலை நம்மை ஒரு ஆபீஸ்ல தான் சேக்கும். கடவுள் தான்
நம்மை சொர்க்கத்துல சேக்க முடியும்.
அம்மா : சரி, சரி… வீட்லயும் பிரசங்கம் பண்ணாதீங்க. ஊர்ல தான் பிரசங்கம் பண்ணிட்டே திரியறீங்க. அது போதாதா ? என்ன மனுஷனோ !
அப்பா : சரி சரி.. சலிச்சுக்காதே. சந்தோசமா இரு. கவலையா இருக்கிறதனால நாம எதையும் சாதிக்கப் போறதில்லை. அவரோட சித்தம் எதுவோ அது தான் நடக்கும். அதனால அமைதியா இருப்போம்.
( அப்போது ஒருவர் வருகிறார் )
நபர் 1 : ஐயா…
அப்பா : சொல்லுங்கய்யா.. என்ன விஷயம் … ரொம்ப டென்சனா இருக்கீங்க.
நபர் 1 : ஐயா.. என் பையன் திடீரென மயங்கி விழுந்துட்டான். அவனை ஆஸ்பிடல்ல சேக்கணும். கைல நயா பையா இல்ல. நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்.
அம்மா : ஐயோ.. என்ன பண்ண.. எங்க கிட்டயும் சுத்தமா காசே இல்லை. இப்போ தான் பையனோட ஸ்கூல் பீஸ் பற்றி பேசிட்டிருந்தோம்.
அப்பா : சும்மா இரு.. அவரே கஷ்டத்துல இருக்காரு… எப்படியாச்சும் ஹெல்ப் பண்ணணுமே.. என்ன பண்ணலாம்.. ஆங்… உன்னோட அந்த செயினை கொஞ்சம் கழட்டி குடு..அதை வெச்சு அவர் மருத்துவம் பாக்கட்டும்… அப்புறம் வாங்கிக்கலாம்.
அம்மா : ஏங்க தெரிஞ்சு தான் பேசறீங்களா ?…, அது தாலிங்க…
அப்பா : அதுக்கென்ன இப்போ.. நான் தான் இங்கே இருக்கேனே.. அப்புறம் என்ன ? இன்னொன்னு கட்டிக்கலாம்.
அம்மா : நோ..நோ. அதெல்லாம் முடியாது. தாலியைக் கழட்டினா புருஷனுக்கு ஆவாதுன்னு சொல்லுவாங்க.
அப்பா : அதெல்லாம் முட்டாள் தனமான பேச்சு. இது ஒரு அடையாளம் தான். ஆதாம் ஏவாளுக்கு தாலியா கட்டினாரு ? மனுஷனுக்கு உதவாத தாலி கழுத்துக்கு பாரம்.
அம்மா : தாலி இல்லாம நான் எப்படிங்க வெளியே போறது… என்ன விளாடறீங்களா ?
அப்பா : கடவுள் நமக்கு உயிரை தந்திருக்கிற வரைக்கும் தாலி இல்லாமலும் வெளியே போலாம்.
கடவுள் உயிரை எடுத்துட்டா, தாலி இருந்தாலும் நாம வெளியே போக முடியாது.
நபர் 1 : ஐயா.. அம்மாக்கு புடிக்கலேன்னா வேணாம்ய்யா.. நான் வேணும்ன்னா வேற யாரையாச்சும் கேட்டுப் பாக்கறேன்.
அப்பா : அப்படியெல்லாம் இல்லீங்க. அவங்க என் மனைவி. நாங்க இப்படி ஜாலியா பேசிப்போம், ஆனா அவங்களுக்கு ரொம்ப இளகிய மனசு. பீஸ் கட்டவே கவலைப்படற அவங்க, உயிரைக் காப்பாத்த கவலைப்பட மாட்டாங்களா…என்ன ?
அம்மா : இப்படி பேசிப் பேசியே எல்லாத்தையும் சாதிச்சுடுங்க ( சொல்லிக் கொண்டே தாலியைக் கழற்றிக் கொடுக்கிறார் )
நபர் 1 : ரொம்ப நன்றிங்கம்மா…
அம்மா : சீக்கிரம் திருப்பிக் கொடுத்துடுப்பா..
அப்பா : அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதேப்பா.. பையனை ஹாஸ்பிடல்ல சேத்துடு. நான் சாயங்காலம் வந்து பாக்கறேன்.
நபர் 1 : சரிங்கய்யா.. ( ஓடுகிறார் )
அம்மா : அதெப்படியோ தெரியல.. நீங்க மட்டும் என்ன தான் நடந்தாலும் ஒரு புன்னகையோட இருக்கீங்க. தலையில இடி விழுந்தா கூட சிரிப்பீங்க போல. ( புன்னகைக்கிறார் )
அப்பா : நாம எல்லாம் அப்பாவோட கை பிடிச்சு திருவிழாக்கு போற பிள்ளைங்க மாதிரி. அப்பாவோட கையை புடிச்சிருக்கிற வரைக்கும் கவலையில்லை. கையை விட்டுட்டா தான் பதட்டமாகி அப்பா எங்கேன்னு தேடணும். மறுபடியும் அவரோட கையை புடிக்கணும். கடவுளோட கைல இருக்கிற வரைக்கும் நமக்கு கவலையே இல்லை. எல்லாத்தையும் அவரே பாத்துப்பாரு.
அம்மா : ம்ம்.. ஆயிரம் தான் இருந்தாலும்…. பையனுக்கு ஃபீஸ் தான்…. எப்படி கட்ட போறேனோ !
காட்சி 2
(பையன், அப்பா, அம்மா )
பையன் : அப்பா… அப்பா…
அப்பா : என்னப்பா.. ஒரே சந்தோசமா இருக்கே போல !
பையன் : ஆமாப்பா.. ஒரு சந்தோசமான விஷயம் தான்பா..
அம்மா : சொல்லுடா.. என்னாச்சு ? காலேஜ்ல டிஸ்டிங்ஷன்ல பாசாகிட்டியா ? இல்ல ஏதாச்சும் அவார்ட் வாங்கியிருக்கியா ?
பையன் : அதெல்லாம் இல்லம்மா…
அம்மா : ஓ.. அப்போ ஏதாச்சும் நல்ல வேலை கிடைச்சிருக்கா ?
பையன் : அதெல்லாம் சின்ன விஷயம்மா..
அம்மா : அப்போ என்னடா ? ஏதாவது பொண்ணு கிண்ணு பாத்து வெச்சிருக்கியா ? எங்களுக்கு தெரியாம லவ் கிவ் பண்ணினே, காலை உடச்சுபுடுவேன் ஆமா…
பையன் : ஐயோ அம்மா… சும்மா சும்மா ஏதாச்சும் சொல்லிட்டே இருக்காதீங்க.. படிப்பு, மார்க், காலேஜ், வேலை, கல்யாணம்ன்னு
அம்மா : வேற என்னடா சொல்லணும் ?
பையன் : அம்மா .. நான் ஒரு இடத்துக்கு ஊழியத்துக்கு போகப் போறேன்.
அப்பா : பிரைஸ் த லார்ட்… நல்ல முடிவுப்பா…
அம்மா : ஐயோ.. என்னடா சொல்றே.. அதுக்காடா உன்னை இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வெச்சோம்… பீஸ் கட்ட கூட காசில்லாம… ( அம்மா விசும்புகிறார் )
அப்பா : என்னம்மா இது.. பையன் எவ்வளவு சந்தோசமான விஷயம் சொல்லியிருக்கான்… அதுக்கு சந்தோசப்படாம…
அம்மா : ஆமா.. இதுல என்ன சந்தோசம்… உங்களுக்கு தான் எதுக்கெடுத்தாலும் சந்தோசமா இருக்குமே !
அப்பா : கடவுளுக்கான பணி செய்றதுல இருக்கிற சந்தோசமே தனி தான்மா.. நீயும் ஒரு நாள் அதைப் புரிஞ்சுப்பே.
அம்மா : ஆமா…ஆமா.. நீங்க உருப்படாம போனதும் இல்லாம, இப்போ பையனையும் கெடுக்கறீங்க…. எப்படியோ போங்க.. நம்ம தலையெழுத்து. இவனாவது கஞ்சு ஊத்துவான்னு பாத்தா, காதுல ஈயத்தை காய்ச்சி இல்லே ஊத்தறான்…
அப்பா : எல்லாம் கடவுள் பாத்துப்பாரும்மா.. நம்ம தலைமுடியை எண்ணி வெச்சிருக்கிறவரு அவரு, நம்ம எதிர்காலத்தை எண்ணாம இருப்பாரா என்ன ?
அம்மா : ஆ..ஊ..ன்னா இப்படி ஏதாச்சும் சொல்லிடுங்க.
அப்பா : சரிப்பா… ( பையனை நோக்கி ) நீ எங்கே ஊழியம் பண்ண போறே ? காலேஜ்லயா ?
பையன் : இல்லப்பா….
அப்பா : அப்புறம் எங்கேப்பா ? கிராம ஊழியமா ?
பையன் : இல்லப்பா
அப்பா : அப்போ.. மருத்துவமனை, ஜெயில்.. இப்படி எங்கேயாச்சும் ?
பையன் : இல்லேப்பா.. நான் வெளியூர் போறேன்பா…
அப்பா : ஓ… அது தான் உன் அழைப்புன்னா.. தாராளமா போலாம். எந்த இடம்பா ?
பையன் : ச்சாட் ந்னு ஒரு இடம்பா.. ஆப்ரிக்கால…
அப்பா : ( அதிர்ச்சியுடன் ) வாட்… ச்சாட்லயா.. அய்யோ…. அது… அந்த இடம்…
பையன் : தெரியும்பா… உலகத்துலயே அதிகம் கிறிஸ்தவர்கள் கொல்லப்படற ஒரு நாடுப்பா…
அப்பா : அ..அது… உன்னோட அழைப்பு தானா ? நல்லா பிரேயர் பண்ணினியா ?
பையன் : பண்ணிட்டேன்பா.. ரெண்டு மூணு தடவை கடவுள் கிளியரா பேசிட்டாரு. அங்கே தான் போகணும்ன்னு. இயேசுவை அறியாத மக்கள் எக்கச்சக்கம் இருக்காங்க. அவங்களுக்கு இயேசுவை எடுத்துச் சொல்லணும். அது தான் என்னோட அழைப்பு.
அப்பா : ( கவலையுடன் அங்கும் இங்கும் நடக்கிறார் ) நான் எப்பவுமே இயேசுவை மக்களுக்கு அறிவிக்கிறேன். எல்லோரும் இயேசுவை அறியணும்ன்னு தான் நான் விரும்பறேன். ஆனா. இந்த இடம்….
பையன் : கடவுள் என்னை அங்கேயிருந்து கூப்பிட்டா நான் சந்தோசமா போவேன்பா. கர்த்தருக்குள் சந்தோசமா இருக்கிறது தான் என்னோட பலம். நீங்க சொல்லி குடுத்தது தானேப்பா… நான் ஏன் கவலைப்படணும்.
அம்மா : என்னப்பா.. என்னென்னவோ பேசறீங்க.. அவ்வளவு மோசமான இடமா அது ?
பையன் : சே..சே.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேம்மா… உயிரை கொடுக்கிறதும், எடுக்கிறதும் கடவுள் கைல. அவர் கேட்டா குடுத்துடப் போறோம். அதுல கவலைப்பட என்ன இருக்கு.
அம்மா : உன்னை என்னோட கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கணுங்கறது தான் என்னோட ஆசை.. நீ என்னடான்னா..உயிரு கியிருன்னு பேசிட்டிருக்கே…
பையன் : என்னம்மா இப்படி சொல்றீங்க.. நாம கடவுளோட கண்மணிகள் .. நம்மை யாரும் தொட கடவுள் விட்டுருவாரா என்ன ?
அப்பா : யோபுவோட வாழ்க்கையை பாக்கலையா… எல்லாம் போனப்பவும் “கடவுள் கொடுத்தார், கடவுள் எடுத்தார் அவருக்கே மகிமை உண்டாகுக” ந்னு சொன்னாரு அவரு. எது நடந்தாலும் கடவுளோடு இணைந்து நடக்கணும். அது தான் சந்தோசமான வாழ்க்கை.
பையன் : நீங்க இப்படி தந்த ஊக்கம் தாம்பா என்னை இன்னிக்கு ஊழியம் செய்ய தயாராக்கியிருக்கு.
அப்பா : ம்ம்ம்.. சரிப்பா.. கடவுளோட சித்தம் எதுவோ அதுபடி நடக்கும். நீ நல்லா செபம் பண்ணிட்டு ரெடியாகு. எப்போ கிளம்பறே.. ஏதாச்சும் கொண்டு போணுமா ?
பையன் : சீக்கிரம் போணும்பா… ஒரு சவப்பெட்டி வேணும்பா…
அப்பா : ச..ச..சவப்பெட்டியா ? ஏன் ? எதுக்கு ?
பையன் : அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. அந்த நாட்டுக்கு ஊழியம் செய்ய போறவங்க ஒரு சவப்பெட்டியையும் கையோடு கொண்டு போவாங்க. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். ஒருவேளை நாம கொல்லப்பட்டால் மற்ற ஊழியர்களும், கிறிஸ்தவர்களும் சேர்ந்து நம்மை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய இது உதவியா இருக்கும்.
அம்மா : ( அழுது கொண்டே ) என்னங்க.. பையன் என்னென்னவோ சொல்றான்…
பையன் : என்னம்மா இதுக்குப் போய் அழுதுட்டு… சாவு எங்கே இருந்தாலும் வரும், வாழ்வு இயேசுவோடு இருக்கும் போ மட்டும் தான் வரும். ஒரு வேளை நாம் இறந்து போனா கூட அது இன்னொரு வீட்டுக்குப் போற மாதிரி தானே.. ஏன் கவலைப்படறீங்க..
அப்பா : ( பையனை கட்டியணைக்கிறார். ) எது நடந்தாலும் அது கடவுள் விருப்பப்படி தான் நடக்கும். உன்னோட இந்த ஊக்கத்துக்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்றேன். உனக்கு எந்த கெடுதலும் வரக்கூடாதுன்னு செபிக்கிறேன்பா.. ( கண்களைத் துடைத்துக் கொள்கிறார் )
பையன் : அப்பா .. எது நடந்தாலும் அது கடவுளோட விருப்பப்படி ந்னு நினைச்சுக்கோங்க. அவரோடு இருப்பதில் தான் நம்மோட பலம்பா… நான் கிளம்பறேன்பா… டிராவலுக்கான ஏற்பாடுகள் கொஞ்சம் செய்யணும்.
அப்பா : சரிப்பா.. காட் பிளஸ் யூ…
காட்சி 3 :
(பையன், மூன்று நபர்கள் )
( பையன் ஆப்பிர்க்காவில் சுவிசேஷம் அறிவித்துக் கொண்டிருக்கிறான் )
பையன் : ( செபம் ) அன்பான ஆண்டவரே, இந்த ஆப்பிரிக்க நாட்டிலே கடந்த இரண்டு மாத காலமாக உம்மைப் பற்றி அறிவிக்க நீர் தந்த மேலான கிருபைக்காக நன்றி. உம்மைப் பற்றி அறியாத பல மக்களுக்கு உம்மைப் பற்றி சொல்ல எனக்கு நீர் தந்த வாய்ப்பு மேலானது ஆண்டவரே. இன்னும் நிறைய மக்களுக்கு நான் உம்மைப்பற்றி அறிவிக்க எனக்கு உதவி செய்தருளும் ஆண்டவரே. ஆமென்.
( அப்போது மூன்று பேர் உள்ளே வருகிறார்கள் )
ந 1 : ஐயா வணக்கம்.. இங்கே ஸ்டீபன் யாரு ?
பையன் : நான் தான் வாங்க.. உக்காருங்க. என்ன விஷயம்.
ந 2 : சும்மா தான் உங்களைப் பாத்துட்டு போக வந்தோம்.
பையன் : ரொம்ப மகிழ்ச்சி. வாங்க உட்காருங்க.. சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்.
ந 3 : வேண்டாம்..வேண்டாம்… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.
பையன் : சொல்லுங்க… உங்களையெல்லாம் சந்திச்சதுல மகிழ்ச்சி ( புன்னகைக்கிறார் )
ந 1 : ரொம்ப உற்சாகமா இருக்கீங்க…
பையன் : ஆமா… நமக்கு மனசுக்குப் புடிச்ச வேலையைச் செய்யும் போ சந்தோசம் தானா வரும். நேர்மையான பணியைச் செய்யும் போதும் மகிழ்ச்சி தானா வரும். கடவுள் சொன்ன வேலையைச் செய்யும் போதும் மகிழ்ச்சி தானா வரும். நான் செய்றது இது எல்லாம் சேர்ந்தது, அதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
ந 1 : அப்படி என்ன வேலை செய்யறீங்க சார் ?
பையன் : இந்த உலகைப் படைத்து, மக்கள் பாவத்தில் இருப்பதைக் கண்டு கலங்கி, அவர்களை மீட்டு பரலோகம் சேர்க்க, தன்னோட ஒரே மகனாகிய இயேசுவை அனுப்பிய கடவுளின் அன்பைப் பற்றியும். நமக்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்ட இயேசுவைப் பற்றியும். பரலோகம் சேர நமக்கு வழிகாட்டும் பரிசுத்த ஆவியைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துச் சொல்றேன்.
ந 2 : ஓ.. அப்படியா.. அதுல மகிழ்ச்சியடைய என்ன சார் இருக்கு.
பையன் : என்ன இப்படி சொல்லிட்டீங்க.
நமக்கு பரலோகம் நிச்சயம் அது மகிழ்ச்சி இல்லையா ?.
கடவுளை அப்பா என அழைக்கலாம் அது மகிழ்ச்சி இல்லையா ?
நாம் பாவ அடிமைத்தனத்திலிருந்து மீளலாம், அது மகிழ்ச்சி இல்லையா ?
கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார், அது மகிழ்ச்சி இல்லையா ?
இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.
ந 3 : எங்களுக்கு புரியலை சார், கொஞ்சம் புரியும் படியா சொல்றீங்களா ?
பையன் : கடவுள் நம்மை அவருடைய சொந்தக் கரங்களால் உருவாக்கினார், அவரோட கரம் நம்மோடு இருக்கிறது.
நாம் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் போது புதுப் பிறப்பாகிறோம். கடவுளின் பெயர் நம்மோடு இருக்கிறது.
நம்முடைய பிறப்பு ஒரு விபத்து அல்ல. “நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். ” என்கிறது பைபிள். இப்படி கடவுளின் திட்டம் நம்மோடு இருக்கிறது !
அந்தக் கடவுளை நாம ஏற்றுக் கொண்டு பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்பிய பின் கடவுளுக்கு பிரியமான வாழ்க்கை வாழவேண்டும். இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்.
ந 1 : இதைச் சொல்ல தான் நீங்க இந்தியால இருந்து வந்தீங்களா ?
பையன் : ஆமா… சார். இது என்னோட கனவு.
ந 2 : ஏண்டா…டேய்… எங்க நாட்டிலயே வந்து, எங்க தெய்வத்தையே வேண்டாம்ன்னு சொல்லி வேற ஒரு தெய்வத்தைக் கொண்டு வருவே. என்ன தைரியம் உனக்கு.
பையன் : சார்… கொஞ்சம் அமைதியா பேசுங்க.
ந 3 : பேசறதா ? உன்னை பொடி வெச்சு பிடிக்க தான் உன் கூட இவ்ளோ நேரம் பேசினோம். உன்னை கவனிச்சுட்டு தான்டா இருக்கோம்.
பையன் : இதுல பொடி வெச்சு பிடிக்க என்ன இருக்கு ? கடவுளைப் பற்றி பேச நான் ஏன் பயப்படணும் ?
ந 2 : உங்களையெல்லாம் எவ்ளோ அடிச்சாலும், எத்தனை பேரை கொன்னாலும் புத்தி வராதா ?
பையன் : கடவுளோட நற்செய்தியை அறிவிக்க ஏன் பயப்படணும். அது மகிழ்ச்சியான விஷயம் இல்லையா ?
ந 1 : எனக்கு ஒண்ணு மட்டும் புரியவே இல்லை. எவ்ளோ தான் அடிச்சாலும் ஏன்டா சிரிச்சிட்டே சாகறீங்க. அதான் எரிச்சலா இருக்கு.
பையன் : கடவுள் எங்க கூட இருக்கார். அவரு சொல்லாம எங்க உயிரை யாரும் எடுக்க முடியாது. அவரு சொல்லிட்டா நாங்க அவர் கிட்டே தான் போவோம்ங்கற உத்தரவாதம் இருக்கு. அதான் எங்களோட மகிழ்ச்சிக்கு காரணம். அந்த மகிழ்ச்சி தான் எங்களோட பலத்துக்கு ஆதாரம்.
ந 2 : ஆதாரமோ, ஆகாரமோ … இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ ஆகாயத்துல இருப்பே.
பையன் : அது தான் கடவுளோட சித்தம்னா நான் அதுக்கு தயார்.
ந 1 : சரி.. ஒரே ஒரு சலுகை தரேன். உனக்கு மட்டும். பாக்க சின்ன பையனா இருக்கே. இயேசுவைப் பற்றி நான் சொன்னதெல்லாம் பொய்ன்னு ஊர் மக்கள் கிட்டே நாளைக்கு நீ சொல்லணும். சொல்லிட்டா நீ இந்தியாவுக்கு போயிடலாம். இல்லேன்னா, உன்னோட சாம்பல் கூட இந்த இடத்துல மிஞ்சாது.
பையன் : ஐயா…. நான் இங்கே வரும்போது கொண்டு வந்தது ரெண்டு பொருட்கள் தான். ஒண்ணு வாழ்வு தரும் கடவுளோட வார்த்தைகள். அதான் இந்த பைபிள். இன்னொன்னு வாழ்வு முடிஞ்சா உடலை போட ஒரு சவப்பெட்டி, அதோ அங்கே இருக்கு.
ந 3 : என்ன சொல்றே ? சவப்பெட்டியை இந்தியால இருந்து கொண்டு வந்தியா !!!!
பையன் : ஆமா.. சாக சம்மதிச்சு தான் இங்கே வந்திருக்கேன். நீங்க வாழணும் அதுக்காக நான் சாக தயார். நாம வாழ இயேசு மரித்தார். அவர் தான் எங்க வழிகாட்டி.
ந 1 : இந்த நாயை அடிச்சு துவைங்கடா…
( அடிக்கிறார்கள் )
ந 3 : நாளைக்கு மக்கள் கிட்டே போய் இயேசுவைப் பற்றி சொன்னதெல்லாம் தப்புன்னு சொல்லுவியா ?
பையன் : மாட்டேன்.. முடியவே முடியாது.
ந 1 : ஒரு வாளை எடுத்து ஓங்கி வெட்டுகிறார்
பையன் : இயேசுவே.. என்னை ஏற்றுக் கொள்ளும்…
(விழுந்து விடுகிறார் )
காட்சி 4 :
(அப்பா, அம்மா )
அப்பா : ( போன் அடிக்கிறது எடுக்கிறார் )… என்னது ? எப்போ ? தலையில் அடித்துக் கொள்கிறார்.
அம்மா : என்னங்க ஆச்சு.. ஏன் அழறீங்க
அப்பா : நம்ம பையன்… நம்ம பையன்..
அம்மா : நம்ம பையனுக்கு என்னங்க ஆச்சி.. சொல்லுங்க… ( பதட்டத்துடன் )
அப்பா : கடவுளைப் பத்தி பேசிட்டிருந்தான், இப்போ கடவுள் கூட பேச போயிட்டான்.
அம்மா.. மயங்கி கீழே விழுகிறார்.
சட்டென முழங்கால் படியிட்டு செபிக்கிறார்.
“இயேசுவே.. வழியும், சத்தியமும், ஜீவனும் நீரே. உமது கரத்தில் என் பையனின் ஜீவனை ஏற்றுக் கொள்ளும். எங்கள் துக்கத்தை ஆனந்தமாய் மாற்றும். உமது பிள்ளைகளாகிய நாங்கள். உம்மிலே மகிழ்ச்சியாய் இருப்பதே எங்கள் பலம். எப்போதும் எங்களை பலப்படுத்தும். ஆமென்”
பின் குரல் :
இது கற்பனைக் கதையல்ல. ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் மிஷனரி ஊழியம் செய்யச் செல்பவர்கள் தங்களோடு கூட சவப்பெட்டியையும் சுமந்து செல்கிறார்கள். மரணத்துக்குத் தயாராகச் செல்லும் அவர்களுடைய மனம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கும். அதுவே அவர்களைப் பலப்படுத்தும். அவரில் மகிழ்ச்சியாய் இருப்போம் நமது பலம் அது என உணர்வோம். நன்றி.
Like this:
Like Loading...