Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

mentrees

இயேசு செய்த புதுமைகள்

பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

மார்க் 8:22..26

அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.

அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார்.

அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

*

இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்புக்குள் அழைத்துச் செல்லும் அனுபவமாக இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இயேசுவிடம் நம்பிக்கையோடு வருகின்ற மக்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட திருப்தியோடு திரும்பிச் செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் இயேசுவின் குணமாக்கும் முறை சீடர்களையும், மக்களையும் வியப்புக்கும் கேள்விகளுக்கும் உள்ளாக்கி விடுகின்றன. “கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? (மார்க் 8:18) ” என சற்று நேரத்திற்கு முன்பு தான் சீடர்களிடம் அவர் கேட்டிருந்தார். இப்போது இந்த அதிசயம் அவர்களுக்கு மறைமுகமாய் சொல்லப்பட்ட பாடமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இயேசு செய்த அற்புதங்கள், நமது வாழ்வில் அற்புதங்களை விளைவிக்க வேண்டுமெனில் அவை கூறும் மறைவான உண்மைகளை நாம் கண்டு கொள்தல் அவசியம். அப்படி மறை உண்மைகளைக் கண்டு கொள்ள நாம் தூய ஆவியானவரின் வெளிப்படுத்துதலை தொடர்ந்து நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த அற்புதமும் நமக்கு பல்வேறு ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுத் தருகிறது.

1. பார்வையற்ற ஒரு நபரை இயேசுவிடம் கொண்டு வந்து அவரைக் குணமாக்க இயேசுவிடம் வேண்டுகின்றனர் நண்பர்கள். ஆன்மீகப் பார்வை இழந்த நண்பர்களை நாம் இயேசு எனும் வெளிச்சத்தின் முன் கொண்டு வரவேண்டிய கடமை உணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்.

அதே போல, ஆன்மீக இருளில் நாம் இருக்கும் போது நம்மை இயேசு எனும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற நண்பர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களைச் சார்ந்தும், அவர்களுக்கு நன்றியுடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். உலக விஷயங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் கொண்டு செல்லும் நண்பர்கள், “பலர்” இருப்பார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டு நம்மை இயேசுவிடம் திரும்பத் திரும்ப அழைத்து வரும் அந்த “சிலர்” மீது நமது கவனமும், சார்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கை சரியான வழியில் தொடர்ந்து நடக்கும்.

2. “உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.( உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.) என்கிறது விவிலியம். நாம் ஆன்மீக வெளிச்சம் விழாத மனிதர்களாக இருக்கிறோம். வேதத்தின் அதிசயங்களைக் காண முடியாமல் நமது கண்கள் அடைபட்டுக் கிடக்கின்றன. அவற்றை இயேசுவின் தொடுதல் மட்டுமே திறக்க முடியும்.

தூய ஆவியின் கரம்பிடித்தலோடு இன்று நமது அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். அப்போது தான் மறை உண்மைகள் நமது கண்களுக்கு மறைவாய் இருக்காமல் வெளிப்படத் துவங்கும். அதற்காக நாம் இயேசுவை நாடி வருபவர்களாக இருக்க வேண்டும்.

3. இயேசு பார்வையற்றவருடைய கரத்தைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். இயேசுவிடம் வருகின்ற நபர்களை அவர் கரம் பிடித்து அழைத்துச் செல்பவராக இருக்கிறார். நம்பிக்கையற்ற கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் செல்கிறார். ‘நீ ஊருக்கு வெளியே வா’ என அவரிடம் இயேசு சொல்லவில்லை. ‘இவரைக் கூட்டி வாருங்கள்’ என சீடர்களிடம் சொல்லவில்லை. அவரைக் கூட்டி வந்த மனிதர்களிடமும் அந்த பொறுப்பை ஒப்படைக்கவில்லை. தானே அவரது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். இது ஒரு அற்புத அனுபவம்.

நாமும் இயேசுவிடம் வரும்போது அவர் நமது கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்பிக்கையற்றோர் கூட்டத்திலிருந்து நம்பிக்கையின் நாட்டுக்கு. கவலையின் கூடாரத்திலிருந்து மகிழ்வின் தோட்டத்துக்கு. அழிவின் உலையிலிருந்து, வாழ்வின் நிலைக்கு. குழப்பத்தின் பிடியிலிருந்து தெளிவின் பாதைக்கு. அவர் நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். அவரை நாடி வரவேண்டியது மட்டுமே நமது வேலை ! இயேசு நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார் எனில் ஒன்று மட்டும் நிச்சயம் ! ஏதோ ஒரு அதிசயத்தை நாம் காணப் போகிறோம் !

4. இயேசு அவருடைய விழிகளில் உமிழ்ந்து அவரைத் தொடுகிறார். இயேசு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக தொடுகிறார். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் குணமாக்குகிறார். அவருடைய வழிகள் நமது வழிகளைப் போல இருப்பதில்லை. ஏன் அவர் அப்படி செய்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தாமல் நாம் உணரவும் முடியாது. ஆனால் அவர் என்ன செய்தாலும் அதற்காக நம்மை முழுமையாய் ஒப்படைப்பதில் இருக்கிறது நமது நம்பிக்கையின் வெளிப்பாடு.

நமது வாழ்க்கையை நாம் முழுமையாய் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். அடுத்த நபருக்கு அவர் அளித்த கொடைகளையோ, நன்மைகளையோ, ஆசீர்வாதங்களையோ அடிப்படையாய் வைத்து அவர் நமக்குச் செய்யப்போகும் நலன்களை சிந்திக்கக் கூடாது. அல்லது, ‘இப்படி கடவுள் செய்வதில்லையே’ என சந்தேகம் கொள்வதும் கூடாது. ஒவ்வொருவரையும் இறைவன் ஒவ்வொரு விதமாய் ஆசீர்வதிப்பார் எனும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம்.

5. ‘ஏதாவது தெரிகிறதா ?’ எனும் இயேசுவின் கேள்வி அவரது தாழ்மையையும், அவரது அன்பையும் எடுத்துக் காட்டுகிறது. ‘தன்னிடம் வல்லமை இல்லை’ என்பதல்ல இயேசுவின் கேள்வியின் பொருள், அந்த வல்லமை உன்னில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமே அது. அவரது வல்லமை நம்மில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வமாய் இருக்கிறார்.

அவரது தொடுதலும் அவரது வல்லமையும் நம்மை ஒரு புதிய அனுபவத்துக்கு கொண்டு செல்லும். அந்த அனுபவத்தை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென இயேசு விரும்புகிறார். இதுவரை காணாத ஆன்மீகத்தின் வெளிச்சத்தை அவரது தொடுதலினால் நாம் கண்டு கொள்கிறோமா ? இதுவரை நம்மை வந்தடையாத உண்மைகள் நம்மை வந்தடைகிறதா ? இருளின் பள்ளத்தாக்கில் கிடந்த நாம், ஒளியில் மேட்டுக்கு ஏறிவந்திருக்கின்றோமா ? இயேசு நம்மிடம் விசாரிப்பவராய் இருக்கிறார்.

6. அந்த மனிதர் முழுமையாய்ப் பார்வையடையவில்லை. அதை அவர் இயேசுவிடம் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். ‘மனிதர்கள் நடக்கும் மரங்களாய் இருக்கிறார்கள்’ என்கிறார் அவர். ஆன்மீக இருட்டிலிருந்து வெளியே வருகின்ற அனுபவம் அலாதியானது. ஆனால் முழுமையான தெளிவான பார்வை கிடைக்கவில்லையேல், இயேசுவிடம் அதை ஒப்புக் கொள்வது மிகவும் முக்கியம். நாம் நமது குறைகளை, பலவீனங்களை, நமது யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் போது பெரிய அதிசயங்கள் நமக்காய் காத்திருக்கும்.

இறைவனின் அருகாமை நமக்கு இறைவார்த்தையின் பொருளையோ, ஆன்மீகத்தின் பாதையையோ மெல்ல மெல்ல காட்டித் தரும். அதை முழுமையாய் தெளிவாய் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

மீட்பு என்பது சட்டென கிடைக்கும் அனுபவம், மீட்பின் வழியில் நடப்பது என்பது தொடர்ச்சியாய் கிடைக்கும் அனுபவம். பாதைக்குக் கீழ் பரவும் வெளிச்சம் போல, ஆன்மீக வெளிச்சத்தின் வழியில் தொடர்ந்து நடந்திட வேண்டும்.

7. இயேசு இரண்டாவது முறையாக அவரது ‘கண்களில்’ தொட்டபோது அவருடைய கண்கள் தெளிவடைய பார்வையை தெளிவாகப் பெற்றுக் கொண்டார். இறைவனின் இரண்டாம் தொடுதல் நமக்கு தெளிவான பார்வையைப் பெற்றுத்தரத் தேவையாகிறது. பல வேளைகளில் நாம் இறைவனின் தொடர் தொடுதலுக்காகக் காத்திருப்பதில்லை. ஒரு முறை கிடைத்த அனுபவத்தோடு திருப்திப்பட்டு விடுகிறோம்.

இரண்டாவது தொடுதல் என்பது இயேசுவின் இயலாமையின் வெளிப்பாடல்ல, அவரது அன்பின் வெளிப்பாடு. “நான் பார்வை பெறவேண்டும்” என இந்த மனிதர் சொல்லவில்லை. அவரது நண்பர்கள் தான் வேண்டுகின்றனர். அவரது விசுவாசத்தின் பலவீனம் அவருக்கு இரண்டாவது தொடுதலில் தேவையை உருவாக்கியிருக்கலாம். நாம் அனைவருமே விசுவாசத் தேவையில் இருக்கிறோம். பல வேளைகளில் தடுமாறுகிறோம். இயேசுவின் இரண்டாம் தொடுதல் நிச்சயம் வேண்டும் எனும் உண்மையை உணர்கிறோமா ?

8. ஊரில் நுழைய வேண்டாம் என இயேசு அவரை அனுப்பி வைக்கிறார். பழைய வாழ்க்கையை விட்டு வெளியே வந்தபின் மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்குள் நுழையும் ஆர்வத்தை நாம் காட்டக் கூடாது. இயேசு நம்மைக் கரம்பிடித்து, நமது வாழ்க்கையில் ஆன்மீகப் பார்வையைக் கொண்டு வந்தபின் மீண்டும் இருட்டுக்குள் வாழ செல்லக் கூடாது என்பதே இயேசு சொன்ன அறிவுரை.

நமது வாழ்க்கை இயேசுவின் தொடுதலுக்கு முன், இயேசுவின் தொடுதலுக்குப் பின் என இரண்டு பிரிவாக இருக்க வேண்டும். தொடுதலுக்குப் பின்னான தூய வாழ்வு, பழைய வாழ்க்கையோடு கலந்து விடாமல் இருக்க வேண்டும். புதிய ரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றி வைப்பது ஆபத்தானது. பழைய ஆடையிலுள்ள கிளிசலில், புதிய ஆடையை ஒட்டுப் போடுதல் பயனளிக்காது. எனவே புது வாழ்க்கை பெற்ற நாம் பழைய பாவத்தின் அழுக்குகளைத் தேடி செல்லக் கூடாது.

9. பார்வையற்ற நபரை இயேசுவிடம் கொண்டு வருகின்ற நபர்கள் அவரைத் தொடுமாறு வேண்டுகின்றனர். இயேசு எப்படி நலமளிக்க வேண்டும் எனும் ஒரு சிந்தனையை அவர்களுடைய மனதில் அவர்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் இயேசுவோ அவருக்கென ஒரு வழியை வைத்திருக்கிறார். இரண்டாவது தொடுதல் தவறல்ல என்பதை சீடர்களுக்கு புரிய வைக்கிறார். முதல் முறையில் எல்லாம் சரியாய் அமைந்து விடவேண்டுமெனும் கட்டாயமில்லை என அவர் புரிய வைக்கிறார்.

நாமும் பல வேளைகளில், ‘இயேசுவே இது எனக்கு வேண்டும், இப்படி வேண்டும்’ என இயேசுவுக்கு கட்டளையிடுகிறோம். அல்லது அவருக்குத் தெரியாதது போல நாம் அவருக்குக் கற்றுக் கொடுக்க முயல்கிறோம். அது தவறான அணுகுமுறை. நமது தேவைகளை இயேசுவிடம் சொல்ல வேண்டும், அதற்கான தீர்வை அவர் பார்த்துக் கொள்வார்.

10. கடைசியாக இயேசு, அந்த மனிதரை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அவருடைய பார்வையின் மகிழ்ச்சியை அவரது குடும்பம் அனுபவிக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். அவரது மகிழ்ச்சி இல்லத்தில் நிரம்ப வேண்டும் என அவர் ஆசிக்கின்றார்.

நமது வாழ்க்கையிலும் நமக்குக் கிடைக்குன்ற ஆன்மீக வெளிச்சங்கள் முதலில் நமது குடும்பத்தினரிடம் ஒளிரப்பட வேண்டும். அவர்களும் இறைவனின் வெளிச்சத்தில் நடக்க வேண்டும். நற்செய்தி முதலில் குடும்பத்தில் பகிரப்பட வேண்டும். குடும்பங்கள் குட்டித் திருச்சபைகளாக உருவாகும் போது தான் சமூகம் அதன் பலனை அனுபவிக்கும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

 

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...