
கல்வாரி மலை !
சிலுவையின் உச்சியில் ஆணிகளால் அடிக்கப்பட்ட நிலையில், உதிரம் உடலிலிருந்து சொட்டச் சொட்ட வலியின் உச்சியில் இருந்தார் இயேசு. இதோ மரணம் எந்த நேரமும் தன்னை அழைத்துச் செல்லலாம் எனும் சூழல். இறைவனிடம் தன் உயிரைக் கையளிக்க வேண்டிய தருணம். தன்னை அடித்தவர்களை, சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தாயிற்று. அருகில் இன்னொரு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்ளனுக்கு மன்னிப்பை வழங்கியாயிற்று. இப்போது இன்னொரு முக்கியமான பணி இயேசுவின் முன்னால் பாக்கியிருந்தது !
அது தான் அன்னை மரியாள் சார்ந்த பணி. கருவாய் உயிரில் ஏந்தி, மழலையாய் மடியில் தாங்கி, குழந்தையாய் தோளில் தூக்கிய மரியாள் இப்போது தாங்கி நிற்பது வேதனையின் மலையை ! சிலுவையின் உச்சியில் மகன் இருக்கையில் எந்தத் தாய்க்குத் தான் நிலை குலையாமல் இருக்கும். அன்னையும் அப்படியே நின்றார். உயிர் துடித்தாலும், மகனை விட்டு கணநேரமும் விலகியிருக்க மனம் விரும்பவில்லை. அங்கேயே நின்றார்.
அப்போது தான் இயேசுவின் குரல் சிலுவையின் உச்சியிலிருந்து மெதுவாய் ஆனால் தீர்க்கமாய் ஒலித்தது. அன்னையின் அருகில் நின்றிருந்த சீடனை அழைத்தார் இயேசு. அந்த சீடனிடம் தான் திருச்சபையைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். இப்போது இரண்டாவதாய் முக்கியமான ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்.
“இவரே உம் தாய்” !
இயேசு தனது தாயை, திருச்சபையின் முதல் பொறுப்பாளியிடம் ஒப்படைத்தார். மனுக்குலத்தின் அத்தனை கிறிஸ்தவர்களுக்கும் அவர் அன்னையான கணம் அது. அவரை ஏற்றுக் கொள்பவர்களுக்கும், ஏற்றுக் கொள்பவர்களுக்கும். அவரை மறுதலிப்பவர்களுக்கும் அவர் தான் அன்னை !
அந்த அன்னை மரியாதைக்குரியவர். அந்த அன்னை வணக்கத்துக்குரியவர். அந்த அன்னை படிப்பினை நல்குபவர். அவர் கடவுளல்ல ! கடவுளின் அன்னை ! அவர் தெய்வமல்ல, தெய்வத்தின் தாய் ! அந்த அன்னையின் வாழ்க்கையிலிருந்து மதங்களைத் தாண்டியும் நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவற்றில் முக்கியமான பத்து விஷயங்கள் இவை.
1. இறைநம்பிக்கை !
திருமணக் கனவுகளோடு இருந்த இளமைப் பருவம். யோசேப்பு என்பவரோடு மண ஒப்பந்தமும் ஆகியிருந்தது. அந்த நேரத்தில் இறைவனின் தூதர் கபிரியேல் வந்தார். கன்னியான நீர் கடவுளின் மகனை ஏந்தவேண்டும். இது தூய ஆவியின் கனி. ஆண்வாசம் அறியாத தெய்வீக கருத்தரிப்பு என்றார். எந்தப் பெண்ணும் பதறி ஓடும் சூழல் அது. அன்னை மரியாளோ இறை நம்பிக்கையில் உறுதியாய் இருந்தார். ‘அப்படியே ஆகட்டும்’ என தன்னையே அர்ப்பணித்தார் !
இயேசு பிறந்தார். வளர்ந்தார். சிறுவயதில் குடும்பமே உலகமென்று இருந்தவர், பின்னர் உலகமே குடும்பமென வெளியேறினார். நல்வாழ்வின் போதனைகளை நாள்தோறும் அறிவித்துத் திரிந்தார். அற்புதங்கள் செய்தார். பாடுகள் பட்டார். கடைசியில் சிலுவையில் உயிரையும் விட்டார். கடைசி வரை மரியாள், கடவுள் மீதான நம்பிக்கையை தளர விடவில்லை. இறை நம்பிக்கையில் உறுதியாய் நின்றார்.
இறை நம்பிக்கை, நாம் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
2. தாழ்மையின் தாய் !
ஆடம்பரமான பங்களா கிடைத்தால் கடவுளின் அருள் என்போம். அற்புதமான வேலை கிடைத்தால் இறைவனின் கருணை என்போம். ஆனால் அன்னை அப்படியல்ல. தாழ்மையின் தாழ்வாரங்களில் மகிழ்ச்சியோடு பயணித்தவர். அதுவே கடவுளின் அருள் என நம்பி வாழ்ந்தவர்.
கடவுளை ஈன்றெடுக்க அவருக்குக் கிடைத்தது வைக்கோல்களின் சரசரப்பில், கால்நடைகளின் கழிவுகளில் ஓர் தீவனத் தொட்டி ! மகனுக்கு ஆபத்து என்றறிந்ததும் எகிப்தை நோக்கி ஓட்டம் ! வாழ்க்கை முழுதும் ஓர் ஏழைத் தாயாய் தச்சுத் தொழிலோடு சங்கமம். அன்னை என்றுமே அதை குறையாய் கருதியதில்லை. தாழ்மையாய் வாழ்வதே மேன்மையான வாழ்வு என வாழ்ந்தார்.
தாழ்மை, அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
3. பிறரன்புப் பணி !
அன்னை என்றாலே அன்பு தான். தாயன்பை விடப் பெரிய அன்பு இந்த உலகில் இல்லை. இயேசுவைக் கருத்தாங்கிய சூழலிலும் அவரது அன்பின் இதயம் கனலாகவே இருந்தது. தூரதேசத்தில் அவரது உறவினர் எலிசபெத் என்பவர் கருத்தாங்கியிருந்தார். காடு மலை கடந்து அவரைத் தேடிச் சென்றார் மரியாள். அவரைச் சந்தித்தார். அவரோடு பல மாதங்கள் தங்கி அவருக்குப் பணிவிடை புரிந்தார் !
இயேசுவின் பணிக்காலத் துவக்கத்தில் முதல் புதுமையை துவங்கி வைத்ததும் அன்னை தான். திருமண வீடு ஒன்றில் திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. அன்னையின் இளகிய மனது அதைக் கண்டு கவலையடைந்தது. ‘மகனே இரசம் தீர்ந்து விட்டது’ என இயேசுவிடம் சொன்னார். இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக்கி முதல் புதுமையை அரங்கேற்றினார்.
பிறர் மீதான அன்பும், கரிசனையும் அன்னையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
4. கடின உழைப்பாளி !
மரியாள் சிறுவயது முதலே கடின உழைப்பாளியாக இருந்தார். குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்கின்ற பெண்ணாக அவரது வாழ்க்கை இருந்தது. தச்சுத் தொழிலாளியின் மனைவியாய் வாழ்ந்த அன்னை கணவனுக்குப் பணிந்து அவருடைய பணிகளில் உழைக்கின்ற அன்னையாக இருந்தார். ஆண்டு தோறும், ஆலயத்துக்கு மூன்று நாள் நடைபயணம் சென்று கடவுளைத் தொழும் பெண்ணாக அவருடைய வாழ்க்கை இருந்தது !
இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பது சொகுசான வாழ்க்கை அல்ல. தனது கடமைகளைத் தவறாமல் செய்கின்ற பணி. கடின உழைப்பை பிறருக்காகவும் செய்யத் தயங்காத பணி.
கடின உழைப்பு, அன்னையிடமிருந்து கற்றுக்கொள்ள முடிகிற இன்னொரு பாடம்.
5. மகிழ்ச்சியின் மனம்
மரியாளின் வாழ்க்கை சாதாரண ஒரு தாயின் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் மிகவும் கடினமான வாழ்க்கை. பகட்டான வாழ்க்கை இல்லை. அன்னையை கடைசி காலம் வரை காப்பாற்றும் மகன் இல்லை. வாழ்வின் இடையிலேயே கணவன் இறந்து போயிருக்க வேண்டும். அத்தனை விஷயங்கள் மனதுக்குள் அலையடித்தாலும் அவரது மனம் இறைவனில் மகிழ்ச்சியாகவே இருந்தது. எந்த இடத்திலும் அன்னையின் மகிழ்ச்சிக் குறைவை நாம் காண முடியாது !
தாய்மை நிலையில் இருந்த காலகட்டத்தில் மரியா மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆண்டவரைப் புகழ்ந்து பாடிய பாடல் மிகப்பிரபலம்.
” ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் ” என அந்தப் பாடல் நீள்கிறது.
எந்த சூழலிலும் இறைவனில் மகிழ்ச்சியாய் இருப்பது அன்னையிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.
6. பணியில் குறுக்கிடாதவர் !!
கடவுளின் அன்னை ! ஊரெங்கும் மகன் புதுமை விதைத்துத் திரிந்தார். இறந்தவர்களை உயிர்ப்பித்தார். பசித்தோருக்கு உணவளித்தார். பேய்களை விரட்டினார். நோய்களை மாற்றினார். ஊரெங்கும் அவரைப் பற்றிய பெருமைப் பேச்சுகள் தான். ஆனாலும் அன்னை தனது சுயநல விண்ணப்பத்தோடு ஒரு முறை கூட இயேசுவின் முன்னால் போய் நிற்கவில்லை. மகனைக் காணவேண்டும் எனும் ஆவலில் சென்றதுண்டே தவிர, அவரது ஆசீர்வாதங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என அன்னை சென்றதில்லை.
தனக்கு இடப்பட்ட பணி என்ன ? மகனுக்கு இடப்பட்ட பணி என்ன என்பதை அவர் புரிந்திருந்தார். மகனுடைய பணி வாழ்வில் எள்ளளவும் குறுக்கிடாத மனம் அன்னைக்கு இருந்தது. ‘வளந்தப்புறம் எனக்கு சோறு போடுவேன்னு தானே உன்னை வளத்தேன்’ எனும் உலக அம்மாக்களின் புலம்பல் அன்னையிடம் அறவே இல்லை.
பிறருடைய வாழ்க்கையில் மூக்கை நுழைக்காத மனம், அன்னையிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
7. சுயநலமற்றவர் !
அன்னை மரியாள் சுயநலமற்றவர் என்பதை அவரது வாழ்விலிருந்து மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சூழலிலும் தனது விருப்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு இறைவனுடைய விருப்பத்துக்காகவே அவர் வாழ்ந்தார். திருமணத்துக்கு முன்பே கர்பமானால் ஊராரின் ஏளனம் வருமே என கவலைப்படவில்லை. ஆண்டவரையே சுமந்த அவர், அவமானங்களையும் ஆண்டவருக்காய் சுமக்க ஆயத்தமாகவே இருந்தார்.
இயேசுவுக்கு எத்தனையோ எதிரிகள். சாத்தான்கள் இயேசுவை கடவுள் என அறிக்கையிட, மனிதர்கள் அவரை சாத்தான் என்று வசை பாடினர். எந்த சூழலிலும் அவர் கலங்கவில்லை. பிறருக்காக, பிறருடைய மீட்புக்காக தன்னையும் இணைத்துக் கொண்டார். சுயநல பேச்சை எப்போதுமே முன்னெடுத்துச் செல்லவில்லை. இயேசுவின் கடைசி நிமிடங்களிலும் கூட அவரோடு இருந்து வலி சுமந்தவர்.
சுயநலமற்ற மனம், அன்னையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
8. எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ளல்
அன்னை மரியாவின் வாழ்க்கையில் நடந்தது போல எதிர்பாரா நிகழ்வுகள் யாருடைய வாழ்விலாவது நடந்திருக்குமா என்பதே கேள்விக்குறி தான். ஆனால் அந்த நிகழ்வுகளையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவராக அன்னை இருந்தார். தயாராகும் முன் தாயாரானது ஒரு திடுக்கிடும் நிகழ்வு ! தொழுவத்தில் மகனை ஈன்றது ஒரு எதிர்பாரா நிகழ்வு.
இரவோடு இரவாக எகிப்து நாட்டுக்கு ஓடிப் போக வேண்டிய சூழல். மகனின் பணிகளைக் கண்டு பிரமிக்கும் சூழல். மகனை சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சி. என அன்னையின் வாழ்க்கையில் நடந்தவை எல்லாமே எதிர்பாரா நிகழ்வுகள். அனைத்தையும் இறைவன் மீதான அன்பினால் ஏற்றுக் கொண்டார்.
நமது வாழ்வின் புரியாமைகளை, நம்பிக்கையுடன் எதிர்கொள்தல் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
9. ஒப்பீடுகளற்ற மனநிலை.
நமது வாழ்க்கையில் வருகின்ற பெரும்பாலான பிரச்சினைகளின் காரணம் நமது வாழ்வில் நடக்கின்ற விஷயங்களை பிறருடைய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தான். “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது” ? ” ஊர் உலகத்துல எல்லாரும் நல்லா தானே இருக்கிறாங்க” எனும் மனநிலை.
அன்னை மரியாளின் வாழ்க்கையில் அத்தனைய ஒப்பீடுகளே இருந்ததில்லை. “ஏன் நான் அவமானத்தைச் சுமக்க வேண்டும் ?” என அவர் கேட்டதில்லை. எல்லோரும் இயேசுவின் அற்புதங்களை அனுபவிக்கும் போது, நான் மட்டும் ஏன் வலிகளைச் சுமக்க வேண்டும் என கேட்கவில்லை. எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட சுவாரஸ்யமான வாழ்க்கையை கடவுள் வைத்திருக்கிறார். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார் அன்னை.
ஒப்பீடுகளின்றி நமது வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
10. மன உறுதி !
பெண்கள் மென்மையானவர்கள் என்பார்கள். உண்மையில் பெண்மை தான் வலிமை வாய்ந்தது. ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிரைப் பிரித்தெடுக்க பெண்மையால் மட்டுமே முடியும். தாய்மை வலி முதல், சிலுவையின் தாளா வலி வரை தாங்கியவர் அன்னை மரியாள். அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் மனதில் தாங்கியவர் அன்னை மரியாள்.
நமது வாழ்க்கை எப்போதுமே மலர்களின் மீது தண்ணீர் நகர்வதைப் போல மென்மையாய் இருப்பதில்லை. சில வேளைகளில் சாரலாய், சில வேளைகளில் புயலாய் அது மாற்றம் காட்டும். அவற்றைத் தாங்குகின்ற மன உறுதி தான் நமது வாழ்க்கையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. அனைத்தையும் இறைவனின் அருளோடு தாங்குகின்ற மனம் இருந்தால் வாழ்க்கை வசந்தமாகும்.
எதற்கும் கலங்காத மன உறுதி அன்னையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம்.
*
Thanks : Vettimani, London & Germany
Like this:
Like Loading...