பால்காரன் கிட்டே இன்னும் நாலு நாளைக்கு பால் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க. பேப்பர் காரன் கிட்டே ஒண்ணும் சொல்ல வேண்டாம். நாம் வீட்ல இல்லேங்கற விஷயம் அவனுக்கு தெரிய வேண்டாம் !
மொட்டை மாடில இருக்கிற நாலு தொட்டிச் செடிகளையும் கீழே எடுத்துட்டு வாங்க. அப்படியே மெயின் கேட் பக்கமா அதை வெச்சுடுங்க. வேலைக்காரி கிட்டே டெய்லி காலைல வந்து தண்ணீ ஊத்த சொல்லியிருக்கேன்.
எல்லா சன்னலும் சாத்தியாச்சான்னு ஒரு தடவை செக் பண்ணுங்க. சுவிட்ச் எல்லாம் ஆஃப் பண்ணுங்க. அதுக்காக பிரிட்ஜை ஆஃப் பண்ணி தொலைச்சிடாதீங்க ! வெளிகேட்டை பூட்டும்போ மட்டும் உள்பக்கமா பூட்டுங்க.
டிக்கெட் கைல வெச்சிருக்கீங்க தானே ?
நான் சொல்றதெல்லாம் காதுல விழுதா இல்லையா ? மனைவியின் குரல் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது !
ஊருக்குப் போகவேண்டும் எனும் பரபரப்பு வீடு முழுவதும் பரவிக் கிடந்தது. ஊருக்கு போகும்போ இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமா என்பது மலைப்பாய் இருந்தது ! ஒரு வாரப் பயணம் ! எத்தனை விஷயங்களில் கவனம் !!
ஒவ்வொன்றாய் செய்து கொண்டிருந்தபோது மனதில் சிந்தனை அலைமோதியது !
ஒருவாரம் வீட்டைப் பூட்டி விட்டு இன்னொரு வீட்டுக்குப் போவதற்கே இத்தனை முன்னேற்பாடுகள் செய்கிறோமே ! ஒரேயடியாக இந்த வீட்டைப் பூட்டி விட்டு விண்ணக வீட்டுக்குச் செல்வதற்கு எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் ?
அவற்றையெல்லாம் செய்கிறோமா என்பதை யோசித்துப் பார்த்தால் உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்க வேண்டியிருக்கிறது !
“விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை” என்கிறார் இயேசு !
அந்த வீட்டுக்குச் செல்வதற்கான பயண முன்னேற்பாடுகளாக இயேசு இரண்டு விஷயங்களை வலியுறுத்துகிறார். அனைத்துக்கும் மேலாய் இறைவனை நேசிப்பது, தன்னைப் போல பிறரையும் நேசிப்பது. இந்த இரண்டு விஷயங்களுமே விண்ணகப் பயணத்துக்கான ஏற்பாடுகள்.
இந்த விஷயங்களைச் செய்யாமல், மற்ற விஷயங்களை மட்டுமே செய்து திரிவது என்பது பயணத்துக்கான டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ய முயல்வதைப் போன்றது ! அங்கே நமக்கு அனுமதி மறுக்கப்படும்.
நான் போய் உங்களுக்கென ஒரு இடத்தை ஆயத்தம் செய்கிறேன் என்றார் இயேசு ! அந்த இடத்துக்குப் போக, இந்த உலகில் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்ய நமக்கு குறிப்பிட்ட ஆயுளைக் கொடுத்திருக்கிறார் ! அதை புரிந்து கொள்ளாமலேயே பரபரப்பாய் முடிந்து விடுகிறது நம் வாழ்க்கை.
கடலெனும் மறு வாழ்வின்
ஒரு துளிச் சுவையே இவ்வுலக வாழ்க்கை !
ஒரு துளிச் சுவைக்காக கடலை இழக்கலாமா ?
சிந்திப்போம் ! தயாரிப்புகளை சரியாய் செய்வோம் !