காட்சி 1
( சில சிறுவர்கள்.. )
சிறுவன் 1 : டேய் சுந்தர்… சுந்தர்… ஸ்கூலுக்கு டைமாச்சுடா… சீக்கிரம் வா…
சிறுவன் 2 : டேய் அவன் மெதுவா தாண்டா வருவான்… கத்தாதே… அவன் அம்மா அவனை ஒரு சாதுவா வளத்து வெச்சிருக்காங்கல்ல… எல்லா சடங்கு சம்பிரதாயமும் முடிச்சு தான் வருவான்.
சிறுவன் 1 : ஆமாமா.. அதான் ஊருக்கே தெரியுமே… காடு வரைக்கும் போய், சாமியாரோட கால்ல விழுந்து, படிக்க வேண்டிய வேதங்களையெல்லாம் படிச்சா தான் அவனுக்கு அவன் அம்மா சோறே போடுவாங்க… ம்ம்ம்…. ஆனா அவனோட அம்மா இறந்தப்புறம் ரொம்ப மாறிட்டான்டா…
சிறுவன் 2 : ஆமாடா.. அவன் ஏழு வயசுலயே நம்ம புனித நூலைப் படிச்சு முடிச்சவனாச்சே… பதினாலு வயசுல வேதத்தை கரைச்சு குடிச்சவனாச்சே..
சிறுவன் 1 : ஆச்சரியம் தான்… என்ன புரியுமோ என்னவோ… எனக்கு பாடபுக்கைப் படிச்சாலே புரிய மாட்டேங்குது. (சிரிக்கிறான் )
சிறுவன் 2 : டேய் சாது… வரியா இல்லையா ? நாங்க கிளம்பவா ..
( வேகமாக வந்து அவர்களோடு இணைகிறான் சுந்தர் )
சாது : ஏண்டா… கத்தறீங்க… இன்னும் டைம் இருக்குல்ல…
சிறுவன் 1 : கொஞ்சம் சீக்கிரம் போனாதான்டா ஜாலியா விளையாடலாம்..
சாது : எங்கடா விளையாட விடறாங்க… பிரேயர் பண்ணு.. பாட்டு பாடு… பைபிள் படின்னு.. இந்த கிறிஸ்டியன் ஸ்கூல்ல படிக்கிற மாதிரி டார்ச்சரே வேற இல்லடா..
சிறுவன் 2 : அதுவும் சரிதான்டா… ஆளுக்கொரு பைபிளை குடுத்து, டெய்லி படிங்கன்னு அட்வைஸ் வேற… தாங்க முடியல.
சிறுவன் 1 : என்னோட புத்த மதத்தைப் பாரு… எவ்ளோ அமைதியான மதம் தெரியுமா ? புத்தர் ராஜ வாழ்க்கையை விட்டு ஓடினாரு, பாதி வழியில, போதி அடியில, அவருக்கு ஞானம் வந்துது. ஆசை தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு கண்டுபிடிச்சாரு. முக்தியடையணும்ன்னா ஆசையை ஒழிச்சு கட்டணும்ன்னு போதிச்சாரு.
சாது : டேய்.. ஆசையை ஒழிக்கணும்ன்னு அவரு ஆசைப்பட்டாரு. அப்படி தானே ? அப்போ அவராலேயே ஆசையை ஒழிக்க முடியல… (நக்கலாக )
( அப்போது இன்னொரு சிறுவன் 3 வந்து சேர்கிறான். )
சிறுவன் 2 : உன் கிட்டே பேசி ஜெயிக்க முடியாதுடா… நீ ஒரு குதர்க்க வாதி.
சிறுவன் 3 : டேய்… என்னோட மதம் என்னான்னு உனக்கே தெரியும். எல்லாம் வல்லவர் அல்லா மட்டும் தான். அவரோட அடியார் மொகமது சொல்றது படி வாழ்றது தான்டா சரியான மார்க்கம். நல்லவனுக்கு சொர்க்கம், கெட்டவனுக்கு நரகம்.. சிம்பிள்.
சாது : கேக்க நல்லா இருக்குடா ? ஆனா வெறும் சட்ட திட்டங்களோட வாழ்றது நல்ல மார்க்கமா ? வன்முறைக்கு நியாயம் கற்பிக்கிறது நல்ல மார்க்கமா ? எனக்கு தெரியல..
சிறுவன் 3 : அப்போ என்னடா ? உன்னோட கீதை தான் சரியான பாதையா ?
சாது : அதுவும் எனக்கு தெரியலடா… நிறைய குழப்பம் இருக்கு. நிறைய முரண் இருக்கு. கடவுள்களுக்கே ஏகப்பட்ட ஆசைகள், இச்சைகள், வன்முறை, குரோதம் எல்லாம் இருக்கு…
சிறுவன் 2 : அப்போ பேசாம ஸ்கூல்ல சொல்ற மாதிரி கிறிஸ்டியனாயிடு..
சாது : டேய்… உலகத்துல இருக்கிறதுல எனக்கு புடிக்காத மதமே அது தான். ஏதாச்சும் சொன்னே அடிச்சு பல்லு கில்லை பேத்துபுடுவேன். உனக்கு எங்க ‘ஆன்டி கிறிஸ்டியன்’ குரூப் பத்தி தெரியாதா ?
சிறுவன் 2 : அதென்னடா ? ஆண்டி கிரிஸ்டியன் ?
சாது : ஹா..ஹா.. ஸ்கூல் முடிஞ்சதும், நம்ம காட்டுப்பாத ஆலமர மூட்டில வா… அங்க தான் நடக்குது எங்க ஆன்டி கிறிஸ்டியன் கூட்டம். தெரிஞ்சுப்பே…
சிறுவன் : சரிடா. வரேன்… அப்படி என்ன தான் செய்றீங்கன்னு பாக்கறேன்.
காட்சி 2
( சாது மற்றும் நண்பர்கள். ஆன்டி கிறிஸ்டியன் கூட்டம் )
சாது : வாங்கடா… நம்ம ஆன்டி கிறிஸ்டியன் வேலைகளையெல்லாம் இன்னும் அதிகமாக்க நேரம் வந்துச்சு…
ந 1 : கண்டிப்பா… நேற்று இங்கே பைபிளை ஒவ்வொரு பேப்பரா கிழிச்சு கிழிச்சு எரிச்சோம். சிரிச்சோம்… இயேசு உண்மையான கடவுளா இருந்தா நம்மளை காலி பண்ணியிருக்கணும். பண்ணலையே
ந 2 : இனிமே பப்ளிக்கா எரிப்போம். ரோட்டுல போட்டு எரிப்போம்… அப்போ தான் நம்மளைப் பத்தி நாலு பேருக்கு தெரியும்
சாது : எஸ்.. பொது மக்கள் இருக்கிற இடத்துல பைபிளை எரிப்போம். நம்ம மதத்துக்கு எதிரா எவன் வந்தாலும் அழிப்போம்.
ந 1 : அழிப்போம்ன்னா ?
சாது : தெரு முக்கில டெய்லி சாயங்காலம் ஒருத்தன் வந்து பேசுவான்ல,.. இயேசு பற்றி.. அவனை கல்லால அடிப்போம். நாலு பேரை சாத்தினா மொத்த கூட்டமும் சிதறிப் போயிடும்..
ந 2 : சூப்பர் டா… நான் ரெடி..
சாது : முதல்ல சகதியால அடிப்போம்.. ஓடினா தப்பினான்.. இல்லேன்னா கல்லைத் தூக்கி தலையிலேயே எறிவோம்.
ந 1 : ஹா..ஹா.. சூப்பர்… அவங்க வீட்டுக்குள்ள பாம்பு புடிச்சு விடலாம்டா. அதுவும் ஒரு நல்ல ஐடியா…
சாது : கண்டிப்பா அதையும் பண்ணுவோம்… ( சோர்வாக )
ந 2 : ஏண்டா… திடீர்ன்னு டல்லாயிட்டே…
சாது : இல்லடா.. ஒண்ணுமில்லை..
ந2 : நான் உன்னை அடிக்கடி கவனிச்சுட்டு தான் இருக்கேன். பயங்கர வெறியா பேசிட்டிருக்கே.. சட்டுன்னு அமைதியாயிடறே… எதையோ யோசிக்கிறே… என்னாச்சுடா ?
சாது : இல்லடா.. நான் பண்றது தப்பில்லேன்னு தெரியும். ஆனா.. உண்மையான கடவுள் யாருக்கு எனக்கு குழப்பமாவே இருக்கு. ஒருவேளை கடவுளே கிடையாதோ ? கடவுள் இருக்காருன்னா ஏன் நமக்கு அவரு காட்சி தரல ?
ந 1 : ம்ம்ம்.. கடவுள்ன்னா ‘ ஒரு நம்பிக்கை’ அவ்ளோ தான்டா.. அதுக்கு ஏன் இவ்ளோ ஃபீல் பண்றே.. நாம இந்த கிறிஸ்தவ எதிர்ப்பை மட்டும் இப்போதைக்கு ஃபோக்கஸ் பண்ணுவோம்.
சாது : அதுவும் ஒரு குழப்பமா தான் இருக்கு.. நம்ம ஸ்டீபன் இருக்கான்ல ? ஒரு நாள் நான் கிளாசுக்கு வரும்போ முழங்கால்ல நின்னு செபம் பண்ணிட்டிருந்தான். கண்ணுல கண்ணீர். என்னடா இப்படி செபம் பண்றேன்னு பக்கத்துல போய் பாத்தா, ‘இயேசுவே என் நண்பன் சுந்தர் உண்மையான தெய்வத்தைக் கண்டு கொள்ளணும்’ ந்னு செபிச்சிட்டிருந்தான். எனக்காக ஏண்டா அவன் அழுது அழுது செபம் செய்யணும் ?
காட்சி 3 : அதுக்கு தான் இவ்ளோ ஃபீல் பண்றியா.. இந்த கிறிஸ்டியன்ஸே இப்படித் தான்டா.. ஆ ஊன்னா உடனே முழங்கால்ல நின்னு அழுதுட வேண்டியது.. அதையெல்லாம் விடு.. போவோம்… நம்ம வேலைகளைப் பாப்போம்
( சாது யோசித்தபடியே.. நடக்கிறார் )
காட்சி 3
( இரவு.. சாது இருக்கையில் அமர்ந்திருக்கிறார் )
கடவுளே… நீங்க இருக்கீங்களா இல்லையான்னே எனக்கு தெரியல. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கடவுளை சொல்றாங்க. எல்லாருமே அவங்க கடவுள் தான் உண்மைன்னு அடிச்சு சொல்றாங்க. அவங்களை அடிச்சாலும் அதைத் தான் சொல்றாங்க. ஒரே கேள்விக்கு எப்படி ஆயிரம் விடைகள் இருக்க முடியும் ? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். யார் உண்மையான கடவுள் ? . அதை நான் யார் சொன்னாலும் நம்ப மாட்டேன். யாரு உண்மையான கடவுளோ, அந்த கடவுளே என் முன்னாடி வந்து சொல்லணும். அப்ப தான் நம்புவேன். இல்லேன்னா காலைல நான் ரயில் முன்னாடி குதிச்சு தற்கொலை பண்ணிப்பேன்… இது சத்தியம்..சத்தியம்..சத்தியம்.
( தூங்குகிறார் .. திடீரென ஒளி அறையை நிரப்புகிறது )
திடுக்கிட்டு விழிக்கிறார் சுந்தர்.
சாது : யாரு… யாரு… என்ன திடீர்ன்னு வெளிச்சம் ? ( சட்டென ஓடி வெளியே எட்டிப் பார்க்கிறார் ) என்னது வெளியே இருட்டா இருக்கு.. உள்ளே என்ன வெளிச்சம்.. யாரு ?
குரல் : மகனே…
சாது : ( பதட்டமும் பரவசமுமாக ) யாரது கூப்டறது.. உங்க உருவம் சரியா தெரியல… சிவனா ? விஷ்ணுவா ? கிருஷ்ணாவா… ? புத்தரா… முகம் இவ்ளோ பிரகாசமா இருக்கு
குரல் : நீ.. ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்…
சாது : நான்.. நான் உங்களை துன்பப்படுத்தினேனே… எப்போ ? என்ன ஒரு கை நீளுது… ஐயோ.. கையில ஏதோ காயம்… என்ன காயம் இது ?
குரல் : உனக்காக நான் சிலுவையில் மரித்தேனே.. என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்…
சாது : ஐயோ.. .. இது..இயேசு… இயேசுவே…ஓ..மை..காட் .. நீங்க தான்.. உண்மையான கடவுளா ? ஐயோ… தப்பு பண்ணிட்டேனே… சட்டென முகம் குப்புற விழுகிறார்.
( சட்டென ஒளி அணைகிறது )
காட்சி 4 :
( அதிகாலையிலேயே பரபரப்பாய் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறான்.. முதல் காட்சியில் வந்த ஏதோ ஒரு நண்பனின் வீடு.. அவன் கண்ணைக் கசக்கியபடியே வருகிறான் )
நண்பன் : ( கொட்டாவி விட்டுக்கொண்டே ) என்னடா.. காலங்காத்தால நாலரை மணிக்கே வந்து நிக்கிறே.. ஏதாச்சும் பிரச்சினையா ?
சாது : டேய்.. உன் பைபிளை குடு.. ரொம்ப அவசரம்.
நண்பன் :பைபிளா ?
சாது : ஆமா ஸ்கூல்ல ஏதோ நியூ டெஸ்டமென்ட் ந்னு ஒண்ணு குடுத்தாங்களே..
நண்பன் : என்னடா. .இந்த காலங்காத்தாலயே அதை கிழிச்சு எரிக்க போறியா ?
சாது : இல்லடா.. எடுத்து படிக்க போறேன்.. சீக்கிரம் குடு…
நண்பன் : என்னடா சொல்றே.. உனக்கு என்னாச்சு ?
சாது : டேய்.. நான் கண்டேண்டா. உண்மையான கடவுள் யாருன்னு என் ரெண்டு கண்ணாலயும் கண்டேன். ரெண்டு காதாலயும் அவர் பேசினதை கேட்டேன்டா…
நண்பன் : என்னடா சொல்றே.. யாருடா அது
சாது : இயேசுடா.. நான் ரொம்ப ரொம்ப வெறுத்திட்டிருந்த இயேசு டா.. எனக்கு இப்போ எந்த சந்தேகமும் இல்லை. கடவுள் நிச்சயம் உண்டு. அந்த உண்மையான கடவுள் ஒரே ஒரு ஆள் தான். அது இயேசு தான். அதை அவரே சொல்லிட்டாரு. என்னோட உற்சாகம் தாங்க முடியல.. பைபிள் படிக்கணும் உடனே..
நண்பன் : இரு.. கொண்டு வரேன். ஆனா யார் கிட்டேயும் இப்படி உளறி வைக்காதே. நீ ஏதோ கனவு கண்டிருக்கே. காலைல எல்லாம் சரியாயிடும்… போ…
சாது : கனவில்லடா.. இப்போ தாண்டா நான் முழிச்சிருக்கேன். உண்மை அறிஞ்சிருக்கேன். இனிமே என்னை யாருமே வழி விலக்க முடியாது. இந்த வாழ்க்கை இனிமே இயேசுவுக்கு மட்டும் தான். நான் என் நண்பர்கள் எல்லாருக்குமே சொல்லப் போறேன். ஏன் ஊருக்கே சொல்லப் போறேன். ஊர் என்னடா ஊர்.. உலகத்துக்கே சொல்லப் போறேன். என்னை யாரும் தடுக்க முடியாது.
நண்பன் : ( பைபிளை எடுத்துக் கொண்டு கொடுக்கிறான்.. சாது அதை வாங்கிக்கொண்டு ஓடுகிறார் )
பின் குரல் :
கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய சவுலை, சாவின் சாலையில் சந்தித்து வாழ்வின் நகருக்குள் அனுப்பி வைத்தார் இயேசு. அதே போல, சாதுவையும் பாதி வழியில் சந்தித்து பாதை மாற்றினார். இயேசுவின் தரிசனம் தடுமாறிக் கிடந்த அவர் வாழ்க்கையின் தடத்தையே மாற்றியது. இயேசுவே உண்மை தெய்வம் என அறிந்ததும் தன்னை முழுமையாய் அவருக்கு ஒப்புக் கொடுத்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஊழியராய் மாறினார்.
நாம் இயேசுவே உண்மையான தெய்வம் என்பதை நம்புகிறோமா ?
அதன் பதில் நமது வாழ்க்கையை சாதுவைப் போல இறைவனிடம் ஒப்படைத்தோமா என்பதில் இருக்கிறது.
நமக்கு தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அவருக்கே தருவதில் இருக்கிறது வாழ்க்கைக்கான அர்த்தம்.
சிந்திப்போம், செயல்படுவோம்.
Like this:
Like Loading...