தூக்கம் என்பது தற்காலிக மரணம் !
மரணம் என்பது நிரந்தரத் தூக்கம்.
கருவில் ஒரு புள்ளியாய் உருவாகும் போது நமது வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போடப்படுகிறது. கருவறையின் வெப்பத்திலும், தாய்மையின் தெப்பத்திலும் பிணைந்தும், நனைத்தும் வாழ்க்கை நம்மை பூமியின் வீதிகளுக்கு அனுப்பி வைக்கிறது.
பூமியின் புதுமைக்காற்றை நுரையீரலுக்குள் நிரப்பிக் கொண்டு, முதல் அழுகை எனும் வருகைப்பதிவுடன் நமது வாழ்க்கை பூமியில் துவங்குகிறது. நீரோடு இருந்த வாழ்க்கை நிலத்தோடு என மாறிப் போகிறது. உண்மையில் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களின் பட்டியலில் மனிதனும் இருக்க வேண்டும். அவன் நீரில் வாழ்ந்து, நிலத்தில் வாழ வருபவன் தானே !
பூமி நம்மை புன்னகையுடனும், இயற்கை நம்மை பிரமிப்புடனும் வரவேற்கிறது. எனினும் வாழ்க்கை நமது அழுகையைத் தான் முதலில் அங்கீகரிக்கிறது. சிரிப்பை அல்ல !
அறிவியல் ஒரு உடலைப் படைக்கலாம் ! ஆனால் இறைவன் மட்டுமே அதன் உயிர் மூச்சாய் உலவ முடியும். இறைவனின் உயிர்மூச்சே மனிதனை மனிதனாக்குகிறது. அந்த உயிர் மூச்சு விலகி, வெறும் காற்றின் மூலக்கூறுகளோடு முடிந்து போகும் போது மனித நேயம் தொலைந்து விடுகிறது.
பிறக்கும் முன்னே இறைவனிடம் இருக்கிறான் மனிதன் ! ஆன்மாவாக !! இறந்த பின்னும் இறைவனிடம் இருக்க வேண்டும் என்பதற்காக வாழ்கிறான். அதுவே ஆன்மீகத்தின் பாடம். ஆன்மீகத்தின் கதவுகளை இறுகச் சாத்துபவர்களுக்கு உயிர் பூமியிலிருந்து புறப்பட்டு, பூமியில் சங்கமித்து விடுகிறது !
நமக்குள் இறைவன் உலவுகிறார் என்பதை உணர்வதில் துவங்குகிறது மனிதத்தின் பயணம். அந்த இறைவனை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் எனும் முனைவுகளில் தொடர்கிறது அதன் வளர்ச்சி. அந்த இறைவனோடு கலக்க வேண்டும் எனும் முடிவுகளில் அடைகிறது வாழ்வின் முக்தி !
இறைவனை அடைவதன் முதல் படி, மனிதனாய் மனிதனை அடைவது தான் ! அதைத் தாண்டிய ஆன்மீகப் பாடங்கள் இல்லை. இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டவன் மனிதன் என்றால், எந்த ஒரு மனிதனுக்கும் எதிரான வன்முறை இறைவனுக்கு எதிரான நேரடி வன்முறையே. அதை மறுதலிக்கின்ற புனிதநூல்கள் மனித சிந்தனையில் உருவானவை என்பதில் சந்தேகம் இல்லை.
மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற இறைவனே இறங்கி வந்த நிகழ்வுகளையும், இறைவனே அவதாரங்களோடு வந்து ஆதரவளித்த நிகழ்வுகளும் புனித நூல்களின் பக்கங்களெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன
உயிர்மூச்சு என்பதை ஆன்மீக வெளிச்சத்தில் புரிந்து கொள்வது எப்படி ?
1. மூச்சு, உயிரை உயிருடன் வைத்திருக்கும் !
நாம் உயிர்வாழ முதல் தேவையான ஆக்சிஜனை காற்றின் இழைகளிலிருந்து நுரையீரலின் அறைகளுக்கு அனுப்பி வைப்பது மூச்சின் அடிப்படை. அது தான் நம்மை இயங்க வைக்கிறது. அது தான் நம்மை வீழ்ந்து விடாமலும், இறந்து விடாமலும் காப்பாற்றுகிறது !
இறைவனும் அப்படியே. நம்முள் நுழைந்து, நம்முள் கலந்து நம்முள் கரையும் போது நாம் ஆன்மீக ரீதியான மரணத்தில் நுழையாமல் மனிதத்தின் உயிர்ப்புடன் வாழ முடியும்.
2. மூச்சு, அசுத்தங்களை அகற்றுகிறது !
மூச்சு தான் உடலில் தேங்கியிருக்கின்ற அசுத்தங்களை அகற்ற உதவுகிறது என்கிறது மருத்துவம். மூச்சு இல்லாமல் போனால் உடலுக்குள் நச்சுக் காற்று கூடாரம் போட்டுக் குடியிருக்கும். உயிரின் துடிப்பும், உடலின் மிடுக்கும் சடுதியில் உடைந்து விடும்.
இறைவனும் அப்படியே. நமது இதயத்தில் கலந்திருக்கும் பாவத்தின் கறைகளை அகற்றவும், தீமைகளின் துருக்களை விலக்கவும் அவர் உள்ளே உலவிக்கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
3. உள்ளே இருப்பதல்ல, உலவிக் கொண்டே இருப்பது.
நகராமல் இருக்கின்ற நதியில் கொசுக்கள் பிணி விற்கும். அசையாமல் நிற்கும் மேகம் மழைக்கு துணைசெய்யாது ! மூச்சும் அப்படியே உள்ளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பதில் அதனால் எந்த பயனும் இல்லை. அது உள்ளே உலவி வெளியே செல்ல வேண்டும். மீண்டும் உள்ளே நுழைய வேண்டும்.
ஆன்மீகமும் அதுவே ! நமக்கென சேமித்து வைப்பது சுயநலத்தின் சிந்தனை. பிறர்க்கென கொடுத்துப் பழகுவதே ஆன்மீகத்தின் அழகியல். இறைவன் நமக்குள் தருவதை, நாம் பிறருக்குக் கொடுப்பதே இந்த மூச்சுக் காற்று நமக்குச் சொல்லும் இன்னொரு பாடம்.
4. மூளைக்கு பலம், மூச்சு !
நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றின் எண்பது விழுக்காடு மூளைக்குத் தேவைப்படும் என்கிறது அறிவியல். மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க மூச்சு முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தான் யோகா போன்ற சுவாச முறைகள் ஆழமாய் காற்றை உள்ளிழுக்கும் முறையை போதிக்கின்றன. ஆழமாய் காற்றை உள்ளிழுக்கும் போது மூளைக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. மூளை சுறுசுறுப்பாகிறது.
இறைவனையும் ஆழமாய் உள்ளிழுக்கும் போது நமது சிந்தனைகள் தூய்மையடைகின்றன. சுறுசுறுப்பு வந்து நம்மை பிடித்துக் கொள்கிறது. படித்தால் வருவது அறிவு ! இறைவனைப் பிடித்தால் வருவது ஞானம். அந்த ஞானம் கிளர்ந்தெழ இறைவன் நமக்குள் வளர்ந்தெழ வேண்டும்.
5. அணுக்களின் ஆற்றல்
நமது உடலிலுள்ள அணுக்களுக்கு ஆற்றல் அளிப்பது மூச்சுக்காற்று தான். அந்த ஆக்சிஜன் தான் எனர்ஜியாக மாறுகிறது. ஆக்சிஜன் இல்லையேல் அணுக்கள் எனர்ஜியை தயாரிக்க முடியாமல் வலுவிழக்கும். உடல் நிலைகுலையும்.
இறைவனும் அப்படியே. நமக்குத் தேவையான எனர்ஜியைத் தருவது இறைவனே. உலகின் கவலைகள் மலைபோல் நமக்கு முன் வரும்போது நமது அடைக்கலமாய் இருப்பது இறைவன் மட்டுமே. அவரது வார்த்தைகளும், அவரது இயல்பும், அவர் பாதுகாப்பார் எனும் நம்பிக்கையுமே நமக்கு எனர்ஜியாய் மாறுகிறது.
மூச்சு என்பது இறைவன் தந்த கொடை. வங்கியில் பணத்தைப் போடும்போது அதன் வட்டி நமக்கு வரவேண்டும் என விரும்புவோம். இறைவன் நமக்கு உயிரைத் தரும்போது அதன் பயன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்.
அவருக்கு எப்படி நாம் பிறவிப் பயனைச் செலுத்த முடியும். அதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்கு முழுமையான மனதுடன் அன்பு செய்வதே அந்த வழி. மனிதர்களை அன்பு செய்யும் போது நாம் இறைவனை அன்பு செய்பவர்களாகிறோம்.’
ஏழைகளை, இயலாதவர்களை, ஆதரவற்றவர்களை ஏற்றுக் கொள்வது இறைவனையே ஏற்றுக் கொள்வது போல. நமது பெற்றோரை, உறவினர்களை, சார்ந்தோரை அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வது போல.
சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமெனில்
அன்பினால் செய்வதெல்லாம் ஆன்மீகம் ! இறைவன் பெயரால் செய்யாவிட்டாலும் அதை இறைவன் அங்கீகரிக்கிறார்.
வெறுப்பினால் செய்யப்படுவதெல்லாம் அறிவீனம் !. இறைவன் பெயரால் செய்தாலும் இறைவன் அதை மறுதலிக்கிறார்.
மதம் இருப்பது, மனிதனுக்காக !
மனிதன் இருப்பது மதத்துக்காக அல்ல !
உண்மை புரிவோம்,
இறையன்பை மனிதனில் பொழிவோம்.